சின்ன தேவதை | தினகரன் வாரமஞ்சரி

சின்ன தேவதை

கனகா பஸ்ஸை விட்டிறங்கி பதறியடித்துக்கொண்டு வேக வேகமாய் ஓடி வந்தாள். ஊர் சனங்கள் ஓர் இடத்தில கூடி நின்றார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் அனுதாபத்தின் எச்சங்கள். அது சுந்தரத்தின் வீடு. வீட்டுக்கு முன்னால் தொங்கிய வெள்ளைத் துணி மரண வீட்டிற்கான அடையாளத்தை வெளிப்படுத்தி காற்றில் அமைதியாய் அசைந்துக் கொண்டிருந்தது.  

 'என்ன பெத்த தாயே.... இந்த பாவிய மன்னிக்காம போயிட்டியே.... நா செஞ்ச பாவமெல்லாம் ஓங்... கால சுத்தி ஒண்ண காவு வாங்கிடிச்சேயம்மா.... ஐயோ... நா என்னா பண்ணுவே....' பாவ மன்னிப்பு கோரிய கனகாவின் புலம்பல்கள் சுந்தரத்தை அவள் பக்கமாய் திரும்ப வைத்தது. கனகாவின் பெயருக்கு பின்னால் முதலில் இடம் பிடித்தவன் சுந்தரம். காலப்போக்கில் அப்பெயர் அவர்களின் மூத்த மகள் சிந்துஜாவின் பெயருக்கும் சின்னவன் பிரகாஷின் பெயருக்கும் முன்னால் இட மாற்றம் பெறும் போது சுந்தரம் அறிந்திருக்கவில்லை கனகாவின் பெயருக்கு பின்னால் இன்னொருவனின் பெயர் இடம் பிடிக்கும் என்று. காதல் கண்களை மறைக்கும் என்பார்கள். கனகாவின் அந்த காதல், கணவனையும் கையில் தவழ்ந்தவர்களையும் மறைத்து நின்ற போது சின்னவனுக்கு வயது இரண்டு.  

 கதறி அழுத கனகாவை கை நீட்டி கண்ணீர் துடைத்து விடும் அளவுக்கு சுந்தரம் நிதானமாக இருக்கவில்லை. அவன் விழிகள் பல மாதங்கள் வராத மூத்த மகள் சிந்துஜாவின் வருகைக்காய் காத்துக் கிடந்தது. மேடு பள்ளங்களுக்கு ஈடு கொடுத்து இரைச்சலோடு கடைச் சந்தியில் வந்து நின்ற கருப்பு நிற வாகனம் சுந்தரத்தை வேகமாய் அதனருகில் இழுத்து வரச் செய்தது. வாகனத்தில் வந்திருப்பது சிந்துஜா என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். "அம்மாடி வந்துட்டையா?.... இத்தன மாசத்துல ஒரு நாளு சரி வந்து எங்கள பார்த்துட்டு போக உனக்கு மனசு இல்லாம போயிடிச்சா?..... என்ன விடு. தம்பியும் உனக்கு வேண்டாதவனா போயிட்டானா?.... பரவாயில்ல வா..... இப்பவாச்சும் வீட்டுக்கு வர உனக்கு தோணிச்சே அதுவே இந்த அப்பாவுக்கு போதும்...."  

 படிக்கட்டுகளை தாண்டி வாசல் வரும் வரை அப்பாவின் ஏக்கங்கள் கேள்விகளாக மாறி காற்றோடு கலந்து சிந்துஜாவின் காது வரை எட்டினாலும், அப்பாவின் கேள்விகளுக்கு பதில் தந்தோ அல்லது சிரித்துக் கொண்டோ வாசல் நுழையக் கூடிய சூழ்நிலையில் அவள் இல்லை.  

 மூன்று முடிச்சு போட்டுக் கொண்டவள் முடிச்சை அவிழ்த்து விட்டு போன பின்பு தாய்ப்பாசம் தந்தைப் பாசம் இரண்டையும் ஒன்றாய் கலந்து பக்குவமாய் இரு பிள்ளைகளுக்கும் பகிர வேண்டிய நிர்ப்பந்தம் சுந்தரத்தை நான்கு வருடங்கள் வரை வரையரை இன்றி கடக்கவைத்தது. தனது ஆசைகளுக்கு அணை போட்டவன் கூலித் தொழில். வீடு பிள்ளைகள் நல்ல தகப்பன் என்று தனக்குத் தானே கீறிக் கொண்டான் ஒரு வட்டம்.  

 'அப்பா... அம்மா என்னைக்கு வரும்'... சின்னவன் கேட்க. 'இந்த வருசம் வாரேன்னு சொன்னிச்சீ'... 'போன வருஷமும் இதையே தான் சொன்னீங்க அம்மா வரலையே....' வார்த்தைகளால் அப்பாவோடு அடம் பிடித்தவனை அடக்க நினைத்தாள் அக்கா. "என்னா நீ... யாருகிட்ட வாயிக்கு வாய் பேசுர... அவரு நம்ம அப்பா மறந்துட்டியா.....நீ சொன்ன உடனேயே அம்மா பஸ் ஏறி வந்து நிற்கிறதுக்கு டுபாய் என்ன டவுன்லயா இருக்கு...." சின்னவன் அம்மாவை தேடும் போதெல்லாம் அவள் வெளிநாட்டில் இருப்பதாக உண்மையை மறைத்து ஆறுதல் படுத்துவது அக்காவின் ஆளுமை. அம்மாவின் நினைவுகள் சின்னவனின் உறக்கத்தை உதறிவிட்டிருந்தது. அவன் வழைமை போலவே தேம்பிக் கொண்டிருந்தான். சிந்துஜாவின் கண்களும் லேசாய் கசிந்தன. சின்னவனை மடியில் இழுத்துப் போட்டுக் கொண்டாள். 'பெத்த ஆத்தா போலிருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை' என்ற வரிகளை சுமந்த கருப்பு நிலா பாடல் பாடி சின்னவனை தாலாட்டும் போது அந்த தாலாட்டில் கண்மயங்கி அப்பாவும் உறங்கிப் போகும்போது அவளின் பதினான்கு வயதும் அவளை பார்த்து பொறாமை பட்டிருக்கக் கூடும்.  

 பாடசாலை விடுமுறை காலம் என்பதால் சின்னவனுக்கு ஆறுதலுக்காக அம்மம்மா வீடு போவதாக முடிவு. முண்டியடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். அம்மம்மாவின் உபசரிப்பும் அரவணைப்பும் பிள்ளைகள் இருவரையும் இரவு வரை புழுதியில் புரள வைத்தது. 'அம்மாடி...அம்மாடியோ...' அம்மம்மாவின் குரல் கேட்டு அடுப்பங்கரை வரை ஓடி வந்தாள் சிந்துஜா. 

 விளையாண்டது போதும் தண்ணீ ஆறிப் போறதுக்குள்ள ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க.... அதுக்கு முன்னாடி இந்தா இத உங்க அப்பாவுக்கு குடுத்துட்டு வா... அம்மம்மா எதையோ நீட்ட,  

இது என்னாது....' "ம்..... மருந்து தண்ணீ.... ஒங்க மாமே கொடுக்க சொல்லி குடுத்துட்டு போனிச் சு...." அம்மம்மா பதில் சொல்ல. "மருந்து தண்ணீயா?.... சாராயம்னு எழுதியிருக்கு.. கருமம்.... கருமம். இந்த கருமத்த எல்லாம் எங்க அப்பா என்னைக்கு குடிச்சிருக்கு..." சிந்துஜா சிலிர்த்துக் கொள்ள.  

 "ரொம்பவும் பீத்திக்காத... நீ பொறக்குறதுக்கு முன்னாடி ஒங்க அப்பன் இத குடிச்சிட்டு நாலு காலுல தான் ஊந்து வரும்.... மவராசன். பாவம் எப்ப நீ பொறந்தையோ அப்பவே தல புள்ள தாய் மாதிரி. குடிச்சா குடும்பத்துக்கு ஆகாதுன்னு கும்புடு போட்டது...ஏ.. வயித்துலையும் வந்து பொறந்து தொலைச்சாலே ஒருத்தி! கூறு கெட்ட ஜென்மம்..... ஓடுகாலி... அந்த மனுசன நிம்மதியாவா இருக்க விட்டா... என்னைக்காவது ஏ.. கண்ணுல மாட்டுனா.... அப்படியே அவ கழுத்த...." பாதியில் நிறுத்தி பெருமூச்சு விட்டாள். 

"நாட்டு கோழிக் கறி வச்சிருக்கேன்னு சொல்லு. இத குடிச்சா நெறய சோறு சரி சாப்பிடுவது..... பாவம்....." உணவும் பரிமாறப்பட்டு உறக்கத்துக்கும் தயாரானார்கள் ..... நள்ளிரவு ஆனது... பாதி உறக்கத்தில் கதவு தட்டும் சத்தம் சுந்தரத்தின் காது வரை எட்ட அசதியோடு எழும்ப நினைக்கும் முன் அவன் மாமியாரினால் கதவு திறக்கப்பட்டது.  

 அரை மணித்தியாலத்துக்கு மேலாக மாமியார் யாரிடம் ஆவேசமாக கத்துகிறார் ? வந்திருப்பது யாராக இருக்குமென சுந்தரத்தை ஊகிக்க வைத்தது. கதவருகே வந்தவன். வந்திருப்பது கனகாதான் என்று புரிந்து கொண்டான். அவள் கரம் பிடித்துக் கொண்டு போனவனும், கூடவே அவர்கள் கரம் பிடித்துக் கொண்டு வந்தவனுமாய் மூவர் வெளியில் நின்றிருந்தார்கள்.  

 'பாவி மகளே! எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு ஏ.. வீட்டுவாசல் வந்து நிக்குற? ஒன்ன நா எப்பவோ தல முழுகிட்டேன் மரியாத கொறய முந்தி இங்க இருந்து போயிரு.... சுந்தரத்தின் மாமியார் கரித்துக் கொட்டினாள். கனகாவின் அம்மாவின் நிலைபாடு இப்படி இருக்க. வந்தவள் அவள் பங்கிற்கு அவளின் பாடுகளையும் கண்ணீரோடு கொட்டித் தீர்க்கவே செய்தாள்.  

 "இப்ப என்னா பண்ண சொல்லுற? புத்திகெட்டு போய் தீண்ட தகாதவளா ஆகிட்டேன். இப்ப ஓ.. காலுலையும் அந்த மனுஷன் காலுலையும் விழ கூட தகுதி இல்ல எனக்கு. விழுந்தா மட்டும் நா செஞ்சது எல்லாம் இல்லாமல் போயிருமா? பரவாயில்ல நா செஞ்ச பிழைக்கு யார குத்தம் சொல்லுறது. வாசல்ல கொஞ்சம் எடம் தா... காலங்காத்தால யாரு கண்ணுலையும் காணமா போயிருரோம்..." கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுத்தமாக சொன்னவள் சில வினாடிகள் மௌனத்துக்கு பின் மீண்டும் குரல் கொடுத்தாள் "அம்மா..." "சீ....அம்மானு கூப்பிடாத என்ன... ஒனக்கு அந்த அருகத இல்ல..." பட்டென்று அம்மா பதில் சொல்ல இடைவிடாது அம்மாவை ஏறெடுத்தாள். "கடைசியா எனக்கு ஒரே ஒரு உதவி செய்வியா?" கனகாவின் அம்மா மெளனித்தாள். "சாப்புடுறதுக்கு ஏதாச்சும் இருந்தா தருவீயா? எங்க ரெண்டு பேருக்கும் இல்லாட்டி பரவாயில்ல ஏ.. புள்ளைக்கு மட்டும்... புள்ள சாப்புட்டு ரெண்டுநாளாச்சி..." ஏக்கத்தோடு கனகா கேட்கவே. பெற்ற வயிறு மனமிரங்காமலா போய்விடும். வேகமாய் உள்ளே ஓடியவள் மிகுதி இருந்தவற்றை இரு தட்டுகளுக்கு பரிமாறி வாசல் வரும் போது தான் சுந்தரத்தை அவதானித்தாள்.  

"பச்ச புள்ளையோடு பசிக்கிதுன்னு வந்து நிக்கிறா!..." உளறினாள் கனகாவின் அம்மா.  

 "ஒரு மணி ஆக போவுது வெளியில வச்சா சாப்பாடு போட போறீங்க..." சுந்தரம் உள்ளே அழைக்கும் படி சாடையாய் சொல்ல மாமியாருக்கு புரிந்தது. வீடு நுழையும் போது தான் கனகாவிற்கு அவளின் முதல் கணவன் சுந்தரமும் வீட்டினுள் இருப்பது தெரிய வந்தது. தயங்கிப் போனவள் தன் பிள்ளைக்குள் முகத்தை மறைத்துக் கொண்டாள். தலைகுனிந்த படி பிள்ளையின் பசியாற்றிக் கொண்டிருந்தாள். அம்மாவின் புலம்பல்களுக்கு குறைவில்லாதிருந்தது.  

 "இப்ப என்னாத்துக்கு கத்தி ஊர கூட்டுறீங்க. சத்தம் கேட்டு புள்ளைங்க எழும்பிட் டா.... எழும்பி இவனுங்கள பார்த்துட்டா நல்லாவா இருக்கும்! வந்தவ தனியா வந்திருந்தா அம்மா வந்துருக்குன்னு ஆசையா தட்டி எழுப்பி சரி விடலாம்....."  

 மேகம் முட்டும் அளவு கோபம் வந்தும் மெதுவாகவும் சின்னவனின் ஏக்கங்கங்களையும் மறைத்தும் சுந்தரம் குரல் கொடுத்தான். "காலங்காத்தால எங்க போய் தொலைய போரானுங்கலாம்....எங்கையும் போகத் தேவையில்ல.... நா புள்ளைங்கள கூட்டிக்கிட்டு ஊருக்கு போறேன்... இவனுங்கல கொஞ்ச நாளைக்கு இங்கயே குப்ப கொட்டிக்க சொல்லுங்க...வந்து நிக்கிற லெச்சணம்... வெரட்டி விடவா மனசு வருது' சுந்தரம் தொடர முன், "வயசுக்கு வந்த புள்ளைய கூட்டிக்கிட்டு நடு சாமத்துல எங்க போவ போறீங்க...?" மாமியாரின் கேள்வி "இப்ப இல்ல.... ஐந்து மணி பஸ்சுல அதுவரைக்கும் புள்ளைங்க கண்ணுல படாம இருக்க சொல்லுங்க..." 

 சுந்தரம் கட்டிய தங்க தாலிக்கொடி தரம் குறைந்து மங்கிப் போன மஞ்சல் கயிராய் மாறி கனகாவின் கழுத்தில் தொங்கியது. அவளின் வறுமை நிலைமையை சுந்தரத்திற்கு உணர்த்தியது. அவன் பரிதாபப்படுவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டான்.  

 ஏற்கனவே விழுந்த இடியிலிருந்து அவன் மீண்டு வரும் முன் அதே இடி அவன் மீது மீண்டும் விழ அது அவன் உடலையும் உள்ளத்தையும் ஆட்டிப் படைக்கவே செய்தது. அடிக்கடி அவன் உடல் நலம் இழக்கவே அது பிள்ளைக ளின் மூவேளை உணவை இரு வேளைக்கு மாற்றியது. இடையில் வந்த கொரோனா பெருந்தொற்று அதில் ஒரு வேளைக்கு உலை வைத்தது அவர்களின் நிம்மதியையும் சேர்த்து. அங்கும் இங்குமாய் ஓடி பிள்ளைகளின் பசிக்காய் பாடுபட்டவன் அவன் பசிக்கு பச்சைத் தண்ணீரை துணைதேடி நிற்கவே அது சிந்துஜாவின் பாதையை மாற்றியது. ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பிப் போயிருந்தாள். மூன்று நாட்கள் சுந்தரத்தின் தேடுதலுக்கும் கண்ணீருக்கும் சிந்துஜாவின் பாட புத்தகத்தில் நடுவில் சொறுகியிருந்த வெள்ளை ஏடு சிறிது ஆறுதலை கொடுத்தது. அப்பாவின் சுமையை அவள் சுமக்க தயாரானது அப்போது தான் அப்பாவிற்கு தெரியும்.  

 "அப்பா சொல்லாம போனதுக்கு மன்னிச்சிருங்க.... எனக்கு தெரியும் சொன்னா நீங்க அனுப்பவா போறீங்க. எத்தன நளைக்கு தான் நீங்க கஷ்டப்படுறத பார்த்துக்கிட்டு இருக்கிறது..... ஒண்ணா நம்பர் லயத்துல சீத்தா அக்கா வேல செய்யுர வீட்டுக்கு பக்கத்து வீடாம். ஒரு மாசம் சம்பளத்த அனுப்பியிருக்காங்க அது என்னோட ஸ்கூல் பேக்ல இருக்கு.

வீட்டுக்கு தேவையானத வாங்கி எடுங்க.... தம்பிக்கு ருசியா எதாச்சும் சமைச்சி கொடுங்க...அவனுக்கு அம்மா இல்லாத கொரய நாமத்தான் தீக்கணும். என்ன பத்தி கவல படாதிங்க பெத்த புள்ள மாதிரி பாத்துக்குவங்களாம். ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா லீவு தருவாங்களாம் அப்ப வீட்டுக்கு வந்துட்டுட்டு போறேன். தம்பிய கேட்டதா சொல்லுங்க....' மத்தது எல்லாம் வரும்போது பேசுவோம்." 

 கடிதத்தை படித்த அப்பா ஆரம்பத்தில் அதை ஏற்காவிட்டாலும் நாட்பட அது அவனுக்கு பழகிப் போனது. மாதம் ஒரு முறை சம்பள பணம் வந்து சேர்ந்தது. இரு மாதங்களுக்ளு ஒரு முறை வீடு வந்து போனாள். சிறிய தொலை பேசி ஒன்றும் வாங்கிக் கொடுத்திருந்தாள். நேரம் கிடைக்கும் போது அழைப்பு. இரு வருடங்களில் வீடு மகிழ்ச்சியால் நிறைகுடம் ஆனது.  

 இறுதியாய் வீடு வந்தவளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம், அப்பாவுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. அவள் வழமையாய் இருக்கவில்லை. அப்பாவின் கேள்விகளுக்கும் வெறும் மௌனம் மட்டும் பதிலானது. காலம் செல்ல செல்ல அவளின் வருகை தொலைவாகிப் போனது. சம்பள பணம் மாதம் மறக்காது வந்து சேரும். அவள் வருகை இல்லாத பணம் மட்டும் வந்து சேர்ந்தும் என்ன பலன். சுந்தரம் மகளின் நினைவுகளோடு உறக்கம் தொலைத்தான். சின்னவன் அம்மாவோடு சேர்த்து அக்காவின் வருகையையும் கேட்டு அப்பாவோடு அடம் பிடிக்க துவங்கினான்.  

நடப்பது எதுவென்று சுந்தரத்திற்கும் புரிய வில்லை. இது இப்படியே பல மாதங்கள் கடந்தது. பல மாதங்களுக்கு பிறகு இன்று தான் சிந்துஜா வீடு நுழைந்திருந்தாள். இல்லை...இல்லை நுழைக்கப்பட்டிருந்தாள்.  

"ஏ... கஷ்டத்த எல்லாம் நீ ஏறக்கிகிட்டு போனீயே!.... தம்பிக்கு அம்மாவா இருப்பேன்னும் சொன்னீயே! இப்ப இந்த கோலத்துல வந்து நிற்கிறீயே....இத நா எப்படி தாங்கிக்க போறேனோ..." சிந்துஜா சவப்பெட்டிக்குள் அடைக்கலமாகி வீடு தேடி வரவே அப்பாவின் அழுகை சத்தம் அந்த லயக் காம்பிராவையே அதிரச்செய்தது. வேலை பார்க்கும் வீட்டில் தடுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த அடி. மரணத்துக்கான காரணம். செய்தி பரவியிருந்தது. கூடி இருந்தவர்களும் பல காரணங்களை அவர்களுக்கு ஏற்றால் போல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என முணுமுணுக்கவே செய்தனர்.  

 மழைநீரில் நனையாதிருக்க தண்ணீர் குவளையில் தஞ்சம் கொண்ட உப்புக் கல்லின் கதையாகி போனது சிந்துஜாவின் கனவுகள். பல மணித்தியாளங்கள் ஒப்பாரி ஓலங்களுக்கு குறைவில்லாமலிருந்தது.  

இடையில் பொலிஸ் சீருடையில் வந்த சில அதிகாரிகள் உடலை அடக்கம் செய்வதற்கான சில விதிகளை கூறினார்கள். அதில் தமிழ் தெரிந்த ஒரு அதிகாரி சுந்தரத்தை அழைத்து அடுத்தவாரம் கொழும்பு நீதிமன்றில் மகளின் மரணதிற்கான வழக்கிற்கு சாட்சியாக அவனும் போக வேண்டி வரும் என்றார். 

 'வழக்கெல்லாம் வேணாங்க ஐயா.. அவங்க பெரிய காசுக்காரங்க.. பண்ணுறத எல்லாம் பண்ணீட்டு ஏ.. மக மேல பழிய போட்டு பேசுவாங்க. அத கேக்குற அளவுக்கு எங்களுக்கு தெம்பு இல்லைங்க. காலையிலேயே ரெண்டு பேரூ வந்தானுங்க. ஏதோ கடதாசி. என்ன எழுதியிருந் திச்சினு கூட தெரியலைங்க. கை நாட்டு போடு போட்ட கை நெறய காசு தாரேனும் சொன்னானுங்க.... நாங்க இல்லாதவங்க தான் ஐயா...

ஆனா எங்களுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிகிட்ட ஏ... பொண்ணவிட காசு பெருசாங்க... வெரட்டி அனுப்பீட்டேங்க....படு பாவீங்க என்னா பாடு படுத்துனானுங்களோ தெரியலையே...ஏ தங்கத்த....' சுந்தரம் கண்ணீர் மல்க பேசி முடிக்க முனைந்தாலும்.

வந்த அதிகாரி எதை எதையோ எடுத்துச் சொல்லி அவனை சம்மதிக்க வைக்க முயற்சித்தும் பலன் கிட்டவில்லை.  

 'போதும்டா சாமீ...போதும்.... உசுரோட இல்லாட்டியும் பொணமா சரி ஏ பொண்ண ஏங்கிட்ட முழுசா கொண்டு வந்து கொடுத்தீங்களே.... அது வரைக்கும் போதும்..... மண்ணுக்குள்ள இருந்தாலும் இந்த ஊருல இந்த வீட்டுக்கு பக்கத்துல தானே இருக்கான்னு எங்க மனச நாங்க தேத்திக்குறோம்

பா.விஜயபல்லவன்

Comments