ஆசிரியர் தலையங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிரியர் தலையங்கம்

பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்று வந்த சமயத்தில் பிரதமராக ரணில் பதவியேற்கலாம் என்ற தகவல் முகிழ்ந்தது. அவர் பதவி ஏற்றதும், ராஜபக்‌ஷ குடும்பத்தைக் காப்பாற்றுபவர் என்றுதான் முன்னரேயே சொல்லி விட்டோமே என்று பல அரசியல்வாதிகள் அடித்துச் சொன்னார்கள். சரி, அவர் இச் சமயத்தில் இப்பதவியை ஏற்காது விட்டிருந்தால் வேறொருவர் வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தபோது அந்த எதிர்ப்பு மங்கிப் போனது. பிரதமர் பதவி என்பது ரோஜா மலர்ப்படுக்கையாக இருக்கலாம். ஆனால் அது முள்படுக்கையான பின்னர் அதை விரும்பி ஏற்க ஒருவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்! இதை உணர்ந்த பின்னர் இந்தப் புதிய அரசுக்கு - அவர் குடும்பத்தை காப்பவரா இல்லையா என்பதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு - ஆதரவு அளிப்பதே உண்மையான தேச பக்தி என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் இன்று உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது.

கட்சிகள் மத்தியில் கொள்கை வேறுபாடுகளும், தனி மனித வெறுப்பு, விருப்புகளும் இருக்கலாம். ஆனால் தேசிய பேரிடர் ஒன்றின்போது கட்சி அரசியலை மூட்டை கட்டிவைத்து விட்டு தேசிய நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பதே உண்மையான அரசியல்வாதிகளின் கடமையாக இருக்க வேண்டும். தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை தற்காலிகமானது.

இந்த அரசும் தற்காலிகமானது. இந்த பிரதமர் பதவியும் தற்காலிகமானதே. நாட்டை தூக்கி நிறுத்தி பயணப்பாதையில் மீண்டும் பயணிக்கச் செய்யும் ஒரு கடினமான முயற்சியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஈடுபட்டுள்ளார். இவருக்கு தற்போது உதவுவதை அல்லது இக்கடினமான பணியில் தோள் கொடுப்பதை குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சி என்றும் அரசின் இழந்த செல்வாக்கை கட்டி எழுப்பும் சதி முயற்சி என்றும் விஷமத்தனமாக விளக்கமளிப்பது ஒரு மட்டமான அரசியலாகவே பார்க்கப்பட வேண்டும்.

இது நாட்டுக்காக கை கொடுக்க வேண்டிய தருணம். கட்சி அரசியல் செல்வாக்கை கட்டிக் காக்கும் தருணம் அல்ல. அந்த வகையில் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏனையோர் உதாரணமாகக் கொள்ள வேண்டும். அவர்கள் தாம் கட்சியைத் துறக்கவில்லை. மக்களுக்கான அரசியல்வாதி என்ற வகையில் இக்கட்டான சூழலில் அரசுக்கு கை கொடுக்கவே அமைச்சு பொறுப்புகளை ஏற்றோம் என்று தெரிவித்துள்ளனர். நாட்டுக்காக உழைப்பதுதானே அரசியல்வாதியின் பணி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன் நிலைப்பாட்டைக் கை விட்டு அமைச்சு பொறுப்புகளை ஏற்க முன்வரவேண்டும். இந்த அமைச்சு பொறுப்புகளை ஏற்போருக்கு சம்பளம், சலுகைகள் கிடையாது என பிரதமர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனவே இது ஒரு மக்கள் சேவை என்பது வெளிப்படையானது. எனவே இணைவோர் தியாகிகளாகவே பின்னர் பாக்கர்ப்படுவார்கள். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்பது வேறு அதே ஆதரவை உத்தியோகபூர்வமாகவும் தன் திறமை,அனுபவத்தை பயன்படுத்தியும் நேரடியாகத் தருவது என்பதுவேறு. சுமந்திரன், மனோ கணேசன், சி.வி. விக்னேஸ்வரன், ரிஸாத் பதியுதீன் போன்றோர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

Comments

ஒரு வர்த்தக நிறுவனமாகட்டும் அல்லது வாங்கியாகட்டும், அங்கே பணி புரிபவர்கள் அனைவருமே தத்தமது பணிகளில் தேர்ந்தவர்களாக இருந்தாலும் நிர்வாகங்கள் சிலரைத்தான் அடையாளம் கண்டு அவர்களிடம் முக்கிய விடயங்களை பொறுப்புக் கொடுக்கும் அல்லது முடிவெடுக்கச் சொல்லும், ஏனெனில் அவர்கள் தமது துறைகளை மட்டுமன்றி ஏனைய துறைகளின் நெளிவு சுழிவுகளையும் நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய ஒரு பண்பை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவதானிக்கலாம். அவரது பணியாற்றும் முறை அலாதியானது. வெளிப்பூச்சியின்றி தெளிவாக தன் கருத்தை சொல்லக் கூடியவர். காரியத்தில் கண்ணாக இருப்பவர். மற்றவர்கள் தயங்கும் இடங்களில் இலாவகமாக புகுந்து புறப்படக் கூடியவர். இல்லையேல், தனியாளாக, அதுவும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தவரால், சரியான அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் பிரதமராகுவது சாத்தியப்பட்டிருக்காது. இதை சூழ்ச்சி என்றும் சிலர் அழைக்கலாம். ஆனால் நன்மை பயக்கக் கூடிய அரசியல் சூழ்ச்சி என்றைக்குமே வரவேற்கத்தக்கதாகவே இருந்திருக்கிறது. தனியொருவராக முன்வந்து நான் இப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால்விடுவதோடு தான் ஏற்கனவே கூறிவந்த உபாயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு

24மணித்தியாலங்களுக்குள் தயாராகி விட்டதை சூழ்ச்சி என்றால் அது சூழ்ச்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

இலங்கையின் கடந்த நூறாண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்ததே இல்லை. இதற்கு கொவிட் தொற்று மட்டும் காரணமல்ல. நீண்டகாலமாக கைகொள்ளப்பட்டு வந்த கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியலால் விளைந்த சேதங்களின், அரசியலை ஒரு வர்த்தகமாகப் பார்த்ததன் விளைவுகளின் மொத்த உருவமாகவே இப் பொருளாதார நெருக்கடியை கருத வேண்டும். தற்போது மீளாய்வு செய்வதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்த ஆபத்தில் இருந்து விடுபடுவதே முதலும் முக்கியமுமாகும்.அதற்கு அனைவரும் தயாரா? என்பதே கேள்வியாகும்.

ஒரு நாள் வாழ்க்கையை முன்னெடுப்பதே பெரும் பிரச்சினையாகியுள்ள இச் சமயத்தில் நாட்டைத் தூக்கி நிறுத்துவோம் என்ற கோஷத்துடன் முன்வந்திருப்போருக்கு கைகொடுப்பதா அல்லது அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியபடி அதில் குளிர்காய்ந்து மகிழ்வதா என்பதை அனைத்து பொறுப்புணர்வு கொண்ட மனிதர்களும், அரசியல்வாதிகளும் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அயல்நாட்டு தூதுவர்கள் அவரைச் சந்தித்து நிலைமைகள் குறித்து விரிவாக பேசியுள்ளனர். பிரதமரின் செய்தியை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்கு அந்நாட்டுத் தூதுவர் சென்றுள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் ஜே. ஆர். காலத்தில் பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது. அதேபோன்ற ஒரு உதவி வழங்கும் நாடுகளின் சம்மேளனத்தைக் கூட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வரும் இந் நடவடிக்கைகளின் விளைவாக டொலர் ஒரு ஸ்திரத்தையும், பங்கு சந்தை ஒரு ஸ்திர நிலையையும் உடனடி பச்சை

சமிக்ஞைகளாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒரு தற்காலிக சமிக்ஞை என்றாலும் கூட, புதிய அரசின் மீதான உலகளாவிய நம்பிக்கையை மற்றும் வர்த்தக உலகின் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இச் சந்தர்ப்பத்தில் புதிய அரசின் செயற்பாடுகளுக்கு உதவும், ஊக்கமளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த உறுப்பினர்கள் பிரதமருடன் அணிசேர வேண்டியது அவசியம். ஏனெனில் இது கட்சி அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல. பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு கைகொடுக்க வேண்டிய காலம். பிரதமர் ரணில் எதைச் செய்வதில் ஈடுபட்டுள்ளாரோ அதற்கு கரம் கொடுப்பதே உண்மையான தேசப்பற்றாகும்.

Comments