பெட்றோல் கியூ | தினகரன் வாரமஞ்சரி

பெட்றோல் கியூ

வீதி மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் பெற்றோருடன் பிள்ளைகள் வீதியின் இரு மருங்குகளிலும் ஓலைப் பாய்களை விரித்து உறங்கிக்கொண்டிருந்தனர். நாஸிம் சுபஹ் தொழுகையை தொழுத பின்னர் மனைவி கொடுத்த தேநீரை அருந்தி விட்டு தனது வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை நோக்கி நடந்தான்.  நாஸிமின்  மோட்டார் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த பையில் பிளாஸ்டிக் போத்தலில் குளிர்ந்த தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

 பையைத் துழாவினான். பிஸ்கட் பெக்கெட் ஒன்றும் பையில் இருந்ததை கவனித்தான். எல்லாம் மனைவி ரபீகாவின் வேலை தான்! ரபீகா நாஸிமை பெற்றோல் வரிசைக்கு அனுப்பி வைத்ததே வீட்டுக்கு தேவையான மளிகைச் சாமான்களை உரிய நேரத்தில் மளிகைக் கடைகளுக்கு சென்று வாங்குவதற்குத்தான்! நாஸிம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின் வரிசையில் நிற்க வேண்டும். வீதியின் வழியே தனது மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டு  நீண்ட கியூ வரிசையில் இணைந்து கொள்ள முயற்சி செய்தான் நாசிம். வீதியின் இரு மருங்குகளிலும் மோட்டார் சைக்கிள்கள் ஆங்காங்கே ஓரங்களில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தூக்கத்தினால்  மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களில் பலர் தம்மை மறந்து ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்தனர்.

கடற்கரை ஓரத்தில் காற்று வாங்கிய வண்ணம் உறங்க வேண்டியவர்கள் எரிபொருளை  நிரப்பிக் கொள்வதற்கு வீதி ஓரங்களில் உறங்கிக் கொள்கின்றனர். நாஸிமுக்கு சிறிய இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை கியூ வில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு  கிட்டியது. பெரிய வெற்றி இலக்கை எட்டிய மலர்ச்சி முகத்தில் தெரிந்தது. பெற்றோலைப் பெற அதிகாலையிலேயே மக்கள் கியூ வரிசையை நாடி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது தான் முந்திக் கொண்ட நிறைவு அவனில் ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ்ந்துள்ள மக்கள் வெள்ளம் கியூ வரிசையில் நுழைவதற்கு பல்வேறு வகையான உத்திகளைக்  கையாளும் காட்சிகளும் நாசிமுக்கு தென்பட்டன.

நாசிம் இணைந்து கொண்ட கியூ வரிசையில் தான் நீல் மானப்பெருமா, துவான் கரீம், சமீர பெர்னாண்டோ ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். கிழக்கு வானில் கதிரவன் உதித்து வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் நாசிம் கியூ வரிசையின் நீளத்தை மனதால் அளந்து கொண்டான். தனக்கு அருகில் கியூ வரிசையில் நின்று கொண்டிருந்த நீல், துவான், சமீர ஆகியோர் நாசிமுடன் புன்முறுவல் பூத்து கதையை ஆரம்பித்தனர். "நாம் எல்லோரும் அதிகாலையிலேயே இங்கு வந்தோம். எமக்கு பெற்றோல் கிடைக்குமா?" என்று சமீர நாசிமிடம் மிகவும் எதிர்பார்ப்புடன் கேட்டான்.

அப்போது நீல் குறுக்கிட்டு" பல்வேறு தடைகளைத் தாண்டியே இங்கு பெற்றோலைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறி தலையை சொரிந்து விட்டான்.

அப்போது அங்கே துவிச்சக்கர வண்டியொன்று கியூ வரிசைக்கு மிக அருகே வந்து நின்றது. நீல் துவிச்சக்கர வண்டியின் அருகில் சென்றான். அது நீலின் மனைவி. நீலின் மனைவி  பொதி செய்யப்பட்ட உணவுப் பொட்டலமொன்றை நீலிடம் கொடுத்தாள். நீல் மூன்று பிள்ளைகளின் தந்தை என சமீர நாசிமிடம் கூறினான். பெற்றோல் வரிசை அசையவே இல்லை. நாசிம் துவானிடம் "நீங்கள் கொஞ்சம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சென்று பாருங்களேன்" என்று மிகவும் ஏக்கத்துடன் கூறினான். துவான் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று அதன் முகாமையாளருடன் பேசிவிட்டு திரும்பி வந்தான்.

"நாசிம்! நிறைய மோட்டார் சைக்கிள்கள் கியூ வரிசையில் குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. அவை நேர் வரிசையில் இணைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எமது அனைவரது சைக்கிள்களும் முன்னோக்கி அசையும். எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இதே நிலைமை தான் " என்று துவான் கூறினான்.

இப்போது நீலின் மனைவி கொண்டு வந்த காலைப் பலகாரங்களை சமீர அனைவரிடமும் பகிர்ந்தான். இன, மத, மொழி, சாதி, சமயம், வர்க்கம் என எந்த பேதமும் பெற்றோல் கியூ வரிசையில் இல்லை. "சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் பெற்றோல் கியூ வரிசை தான் " என நாசிம் மனதினுள் எண்ணினான். சமீர எங்கள் அனைவரது மோட்டார் சைக்கிள்களையும் கியூ வரிசையில் நேராக வைத்து சரி செய்தான். சைக்கிள்கள் அசைந்தன. காலை பத்து மணி. நாசிம் தனது பையிலிருந்த பிஸ்கட் பக்கட்டை தனது மோட்டார் சைக்கிளின் ஆசனத்தில் வைத்து பிரித்தான். நான்கு பேரும் பிஸ்கட் பக்கட்டிலிருந்து ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து சாப்பிட்டனர்.

துவான் தனது தண்ணீர் போத்தலின் மூடியைத் திறந்து சமீரவிடம் கொடுத்தான். சமீர ஒரு மிடறு குடித்து விட்டு நாசிமிடம் கொடுத்தான். இவ்வாறாக நான்கு பேரும் ஒவ்வொரு மிடறாக தண்ணீரைக் குடித்து முடித்தனர். தெரியாத இடத்தில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மத்தியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றோம் என நாசிம் உணர்ந்தான். மதிய உணவு யாருக்கும் இல்லை என்ற நிலையில் நால்வரும் கியூ வரிசையில் கால்கள் கடுக்க நின்றனர். மர நிழல்களில் அமர்ந்து கொண்டு தமது பெறுமதிமிக்க நேரத்தையும் அனைவரும் விரயம் செய்து கொண்டிருந்தனர்.

கியூ வரிசையில் தமது மோட்டார் சைக்கிள்களை முன்னோக்கி நகர்த்திய வண்ணம் அனைவரும் செல்கின்றனர்.‌ அப்போது அங்கே துவானின் நண்பன் அத்தாஸ் வந்தான். 

துவானுக்கு சில  குளிர்பான போத்தல்களை அத்தாஸ் கொடுத்தான். துவான் சக நண்பர்களுடன் அதனை பகிர்ந்து குடித்தான். சூரியன் மறைந்து செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எரிபொருள் நிலையம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காட்சியளிக்கின்றது. எமக்கு முன்னால் இருநூறு பேர் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள கியூ வரிசையில் நிற்பதாக கணக்கெடுத்துக் கொண்டனர்.

நீலின் முகத்தைப் பார்த்த நாசிமுக்கு இன்று பெற்றோல் கிடைக்காது என்பதாக உணர்ந்தான். கியூ வரிசை நகர, இருள் சூழ்ந்து கொண்டு வருகின்றது.

இரவு எட்டு மணி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சனநெருக்கம் குறைந்த பாடாக இல்லை. நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார்,

முப்பது பேருக்கு மாத்திரமே பெற்றோல் இருக்கின்றது என உரக்கச் சொன்னார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெற்றோலைப் பெற்றுக் கொள்ள செலவு செய்த நேரம் கானல் நீராகின்றது. நாசிம் நண்பர்களை தேடுகின்றான். நண்பர்கள் அங்கு இல்லை. நாசிம் பேதலித்து போய் நிற்கின்றான். கையை பிசைகின்றான். வாய் புலம்பலுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறுகிறான் நாசிம். வீடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.  நாசிமின் மனைவி றபீக்கா பெற்றோல் கிடைத்ததா? என்ற கேள்வியுடன் ஏறிட்டுப் பார்க்கிறாள்.

நல்ல மனித உள்ளங்களைச்  சந்திக்கும் வாய்ப்பு மட்டும் தான் கிடைத்தது. ஆனால் பெற்றோல் கிடைக்கவில்லை என்று கூறினான் நாசிம். மனைவி றபீக்கா அமைதியானாள்.

நீர்கொழும்பு
ருஸ்மான்

Comments