மலையகம் என்னும் உணர்வுக்கு எழுத்தாற்றலால் உருவம் கொடுத்த தெளிவத்தை ஜோசப் | தினகரன் வாரமஞ்சரி

மலையகம் என்னும் உணர்வுக்கு எழுத்தாற்றலால் உருவம் கொடுத்த தெளிவத்தை ஜோசப்

மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்களுள் ஒருவர் தெளிவத்தை ஜோசப். மலையக இலக்கிய வளர்ச்சி என்பது தெளிவத்தை ஜோசப்பின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகவே விளங்குகிறது. மலையக இலக்கியத்தின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், திரைப்படத்துறை, தொலைக்காட்சி போன்ற பல்வேறு துறைகளிலும் அவரது பங்களிப்பின் பதிவுகள் உள்ளன. சிறுகதைத்துறையில் முன்வரிசையில் வைத்து எண்ணக்கூடிய ஓர் எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் திகழ்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் துரை மனோகரன். (ஞானம் மே 120தெளிவத்தை ஜோசப் பவள மலர்)  

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஹாலிஎல்லைக்கு அருகேயுள்ள ஊவாக்கட்டவளை என்கிற தேயிலைத் தோட்டத்தில், ஆசிரியராகப் பணிபுரிந்த தங்கசாமி சந்தனசாமிப் பிள்ளைக்கும் பரிபூரணத்திற்கும் 16.02.1934இல் மகனாகப் பிறந்தார்.

ஜோசப் தனது ஆரம்பக்கல்வியை தோட்டப் பாடசாலையில் கற்றபின், தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் இரண்டுவருடகாலம் கற்று, இலங்கை திரும்பி பதுளையில் உள்ள புனித பீட்ஸ் கல்லூரியில் சாதாரணதரம்வரை கற்றவர்.  

1956இல் தெளிவத்தைத் தோட்டத்தில் இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அக்காலகட்டத்தில் தனது இருப்பிடத்தின் பெயரைத் தனது பெயருடன் இணைத்து தெளிவத்தை ஜோசப் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.  

பிந்திய ஐம்பதுகளில் தமிழக சஞ்சிகையான உமாவில் 'வாழைப்பழத்தோல் என்ற இவரது முதற்கதை வெளியாகியது.  

1964இல் இவர் கொழும்பு வந்து ஸ்டார் டொபி நிறுவனத்தில் பிரதம கணக்காளராக இணைந்து பணியாற்றினார்.  

1963இல் மலையக எழுத்தாளர் மன்றம் நடத்திய முதலாவது சிறுகதைப் போட்டியில் பாட்டி சொன்ன கதை என்னும் சிறுகதைக்கும் 1964இல் நடத்திய இரண்டாவது போட்டியில் பழம் விழுந்தது என்னும் சிறுகதைக்கும் முதற் பரிசில்கள் பெற்றுக்கொண்டார்.  

கண்டியில் இருந்து வெளிவந்த மலைமுரசு என்ற பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரது நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை முதற்பரிசைத் தட்டிக் கொண்டது.

1979இல் இக்கதையின் தலைப்பைக் கொண்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இச்சிறுகதைத் தொகுதி 1979இல் அரச சாஹித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.  

இனவிவகார அமைச்சு மும்மொழிகளில் நடத்திய சிறுகதைப் போட்டியில் தமிழ்மூலம் படைப்புக்கான சிறுகதைப் போட்டியில் இவர் 1998இல் முதற்பரிசு பெற்றார். எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது இரண்டாவது தொகுப்பான தெளிவத்தைஜோசப் சிறுகதைகள் பாக்யா வெளியீடாக வெளிவந்து 2013இன் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது. மீன்கள் என்று மகுடத்தில் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.   1980க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் புதிதாக எழுத வருபவர்களை உற்சாகப்படுத்தும் பணியிலும் இவர் ஈடுபடத் தொடங்கி வாரம் ஒரு சிறுகதை விருந்து என்னும் பகுதியை தினகரன் வாரமஞ்சரியில் எழுதினார். இரு நூறுக்கும் அதிகமான சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகஞ் செய்தார்.  

இவரது முதலாவது நாவல் காதலினால் அல்ல என்னும் தலைப்பில் மித்திரனில் 1967இல் தொடராக வெளிவந்தது. காலங்கள் சாவதில்லை என்ற நாவல் வீரகேசரியில் தொடராக வந்து பின்னர் வீரகேசரிப் பிரசுரமாக 1974இல் வெளிவந்தது. மாறுதல்கள் என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார். நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் என்ற மற்றுமொரு தொடர்கதை தினகரன் வாரமஞ்சரியில் 1996இல் வெளியாகியது.  

இவரது பாலாயி என்ற குறுநாவல் கதம்பம் தீபாவளி மலரில் 1967ஆம் ஆண்டு வெளிவந்தது. ஞாயிறு வந்தது என்னும் குறுநாவல் 1966கலைமகளில் வெளிவந்தது. மனம் வெளுக்க என்ற குறுநாவல் தினகரனில் வெளிவந்தது. இந்த மூன்று குறுநாவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக 1997இல் வெளிவந்தது.  

தேசிய இலக்கியப் பேரவையும் தமிழ்நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து 1995இல் நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல் என்ற படைப்பு இரண்டாவது பரிசு பெற்றது. இக்குறுநாவல் பின்னர் நூலுருவம் பெற்றது.  

இவரது, நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983என்ற நாவல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதினைப் பெற்றுக்கொண்டது.  

ஈழத்து சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர்கோன் பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்.  

இவரது மலையகச் சிறுகதை வரலாறு 2000ஆம் ஆண்டில் வெளிவந்து இவரை ஒரு சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது.

இந்த ஆய்வுநூல் அவ்வாண்டின் தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் பெற்றுக்கொண்டது.  

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கியமும் சிற்றிதழ்களும் என்ற ஆய்வு இவரது மற்றுமொரு ஆய்வு முயற்சியாகும்.  

துரைவி பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்து இவர் வெளிக்கொணர்ந்த 33சிறுகதைகள் அடங்கிய மலையகச் சிறுகதைகள்|, 55சிறுகதைகள் அடங்கிய உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரண்டு தொகுப்புகளும் மலையக இலக்கி யத்திற்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். துரைவி தினகரன் சிறுகதைகள், சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் என்னும் நூல்களை தொகுத்து பதிப்பிக்க வழிசமைத்தார்.  

இவர் சிறுகதைகள், நாவல், விமர்சனம், இலக்கியக் கட்டுரைகள், தொலைக் காட்சி நாடகம், வானொலி நாடகம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துச் செயற்பட்டார். இலங்கையில் உருவான புதிய காற்று திரைப்படக் கதை வசனம் இவரது கைவண்ணமாகும்.  

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், பேராதனை, யாழ்ப்பாணம், சப்ரகமுவ பல்கலைக் கழகங்களிலும் இவரது படைப்புகளைக் குறித்து உயர் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்கள்.  

தெளிவத்தை ஜோசப் 2003இல் கனடாவில் இருந்து வரும் காலம் சஞ்சிகையின் நினைவரங்கொன்றில் சொற்பொழிவாற்ற அழைப்புக் கிடைத்துச் சென்றுவந்தார். அவ்வேளை இலண்டன் பத்மநாப ஐயருடன் தங்கியிருந்து சில இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 2009இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டுக்கு முருகபூபதியின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டார். திரும்பிவரும்போது சிங்கப்பூரிலும் தங்கி சில இலக்கியக் கூட்டங்களில் பங்குபற்றினார். 2003இல் காலச்சுவடு நடத்திய தமிழ் இனி மாநாட்டிலும் கலந்துகொண்டார்.  

தலைநகர் கொழும்பில் மலையக எழுத்தாளர் மன்றம் உருவாக முன்னின்று உழைத்தவர் ஜோசப். அம்மன்றத்தின் தலைவராக வெகுகாலம் பணிபுரிந்துள்ளார். தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பணிபுரிந்துள்ளார்.   ஜோசப், பிலோமினா, திரேசா, சியாமளா, ரமேஷ், ரவீந்திரன், ஜேயார் ஆகிய புனைபெயர்களில் இலக்கியத் தகவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  

இவரது மனைவியின் பெயர் பிலோமினா. ஜோசப் தம்பதியினருக்கு திரேசா, தோமஸ் ரமேஷ், திருமதி ரவீந்திரன், தெக்ளா சியாமளா ஆகியோர் பிள்ளைகளாவர்.  

இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.  

மூன்று தடவை சாகித்திய விருது பெற்ற இவர், சம்பந்தன் விருது, கம்பன் கழக விருது, தேசிய ஒற்றுமைக்கான விருது, கொடகே தேசிய சாஹித்திய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலாசார அமைச்சின் தேசநேத்ரு விருது, மத்திய மாகாண, மேல்மாகாண இலக்கிய சாதனையாளர் விருது, தமிழியல் வித்தகர் விருது, பேராதனைப் பல்கலைக்கழக இலக்கிய விருது(2007), இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கிய தமிழ்மணி| (1992) இலக்கியச் செம்மல்| (1993)விருதுகள், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது (2008) கலாபூஷணம்| விருது(1996), தமிழ்நாடு விஷ்ணுபுர விருது(2003) உட்படப் பல விருதுகள் பெற்றுள்ளார்.  

மல்லிகை சஞ்சிகை இவரைக் கௌரவிக்கும் முகமாக இவரது படத்தை அட்டையில் பொறித்து கட்டுரையும் வெளியிட்டது. ஞானம் சஞ்சிகை இவரது பணிகளைப் பாராட்டுமுகமாக இவரது பவளவிழாவை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 16-.05.-2010இல் கொண்டாடியது. பவளவிழாச் சிறப்பிதழையும் வெளியிட்டது. அத்தோடு இவரது தொடர் நேர்காணலை ஞானம் சஞ்சிகையின் 23இதழ்களில் தொடராக வெளியிட்டுக் கௌரவித்தது.  

இலங்கை அரசின் அதியுயர் விருதான சாஹித்திய ரத்னா விருது 2014இல் இவருக்கு வழங்கப் பெற்றது.  

Comments