கண்ணுக்குத் தெரியாத ரோஜா | தினகரன் வாரமஞ்சரி

கண்ணுக்குத் தெரியாத ரோஜா

கதிரவனின் காலைக் கதிர்கள் அந்த எதிர் மாடிக்கட்டிடத்தின் மீது கீற்றுக்களாக பதிந்து கலை ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தன. ஜன்னலைத் திறந்து அந்த இயற்கை அழகை சற்று ரசித்த நளீரின் கவனத்தைக் கவர்ந்தது அந்த எதிர்மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியின் ஜன்னலில் சாய்ந்திருந்த அந்த அழகிய முகம்.

ஒரு கணம் தன்னை மறந்து அந்த அழகு தேவதையை ரசித்த நளீரின் கண்கள் அவளது கண்களை நேருக்கு நேராக சந்தித்தன. ஒரு கணம் கண்களின் சந்திப்பில் தன்னை மறந்த நளீர் அவள் உடனே ஜன்னலை இழுத்து மூடிவிட்டு மறைந்ததும் தான் சுய உணர்வுக்குத் திரும்பினான்.

நளீர் கொழும்பிற்கு வந்த முதல் நாள் அது. அவனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து நல்லதொரு தனியார் நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் தொழிலில் சேர்ந்த அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தன எனலாம்.

மற்ற பல்கலைக்கழக மாணவர்களைப்போல் காதல் கும்மாளம் என்று எதுவுமே இல்லாமல் தனது இலட்சியமும் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விடாமுயற்சியோடு முன்னேறிய நளீர் தனது தொழிலுக்கு செல்லும் முதல் நாளன்று ஒரு பெரும் உற்சாகத்தோடு இருந்தான். அவனது அந்த உற்சாகத்துக்கு புது மெருகேற்றியது அந்த அழகிய முகம்.

ஒருவரது வாழ்க்கைப் பாதையின் திசையை தீர்மானிக்கும் அம்சங்கள் மூன்று என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் சொல்லுவான் நளீர். ஓன்று ஒருவர் அடையும் கல்வியின் அளவு. இரண்டு அவன் தேர்ந்தெடுக்கும் தொழில். மூன்று அவன் தேர்ந்தெடுக்கும் மனைவி.

அவனைப் பொறுத்தவரை முதல் இரண்டு கட்டங்களையும் வெற்றியாகக் கடந்து விட்டான். அடுத்து இருப்பது திருமணம் மட்டுமே. இதிலும் வெற்றியடைய வேண்டும். வாழ்க்கை எந்த இடைஞ்சல்களும் இல்லாமல் அமைதியாகவும் செல்வச்செழிப்பானதாகவும் அமைய வேண்டும் என்பதே அவனது நோக்கம்.

நடுத்தர குடும்பமாக இருந்தாலும் கஷ்டங்கள் அதிகமற்ற சிறிய குடும்பத்தில் பிறந்த நளீர் தனது இலக்கை அடைவதில் தீவிர இலட்சியவாதி. எனவே அவனது இலட்சியத்தை அடையும் வரை எந்தக் காதல் சலனங்களுக்கும் ஆளாகாமல் கட்டுக்கோப்புடன் நடந்து வந்தான். தான் உண்டு தனது இலட்சியம் உண்டு என்று ஒரே குறிக்கோளுடன் இயங்கிய நளீர் தனது வாழ்க்கை மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் மிகவும் சுயஉறுதியுடன் திகழ்ந்தான்.

கொழும்பில் அமைதியான சூழலில் அமைந்த அந்த மாடியை வாடகைக்கு எடுத்துக் குடியேறிய நளீர் அன்று முதன் முதலில் சந்தித்தது அவளது கண்களைத்தான்.

அவனுக்கே அதிசயமாக இருந்தது அவன் எப்படி தனது கட்டுப்பாட்டை மறந்து அவளது முகத்தைக் கண்டதும் தன்னை இழந்து அவளது முகக் கவர்ச்சியில் கவரப்பட்டு விட்டான் என்று. ஒருவேளை இது தான் காதலா! இந்த புதிய உணர்வு சற்று வித்தியாசமானதாக இருந்தது அவனுக்கு.

முதல் நாள் வேலைக்கு சென்றதும் வேலையின் இடையில் அவனது நினைவுத்திரையில் அவளது முகம் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளது முகம் அவனை ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டது எனலாம்.

மாலை வீடு திரும்பிய நளீர் ஜன்னலைத் திறந்து எதிர் மாடியினை நோக்கினான். ஜன்னல் மூடியே இருந்தது. ஜன்னல் திறக்காதா என்ற ஏக்கத்தோடு மீண்டும் மீண்டும் தனது ஜன்னல் அருகே வந்து வந்து தேடிய அவனது கண்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவே இருந்தது.

அடுத்த நாள் காலை நளீர் ஜன்னலை திறக்கவும் அவனது முகம் மகிழச்சியில் ஆழ்ந்தது. அந்த அழகிய முகம் ஜன்னலில் உதயமாகியது. அவன் அவளை பார்ப்பதை உணர்ந்தவள் போல் முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு தன் வீட்டின் உள்ளே சட்டென்று சென்று விட்டாள்.

நாள் தோறும் அரங்கேறும் நாடகம் போல தினமும் அவன் அவளைப்பார்ப்பதும் அவள் சட்டென்று உள்ளே செல்வதுமாக இது தொடர்ந்தது. இனம் புரியாத உணர்வில் இனம் தெரியாத அந்த உயிரைத் தேட ஆரம்பித்தது அவனது இதயம்.

நாட்கள் செல்ல செல்ல நளீரின் மனதில் அவள் படிப்படியாக பதிய ஆரம்பித்தாள். அவளைப் பார்த்து கண்ணோடு கண் சேர்வதில் இருக்கும் அந்த சந்தோஷத்தை அவனால் இழக்க முடியவில்லை. இப்படி கண்ணோடு கண்ணாக ஆரமபித்த அந்த தொடர்ப்பு மாதங்கள் சில தொடர்ந்த பின்னர் புன்னகை பறிமாறலாக வளர்ந்தது. எனினும் அதற்கு மேலாக அவளைப்பற்றி எதையும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவனுக்கு இருக்கவில்லை.

ஊருக்குப் புதியவனான நளீருக்கு நண்பர்களோ தெரிந்தவர்களோ ஒருவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. எனவே அவளைப்பற்றி விசாரித்து தெரிந்துக் கொள்ளும் வழி கிடைக்கவில்லை. அதே நேரம் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தேவை மடடும் எப்படியோ வந்து விட்டது.

ஏனென்றால் அவனது வீட்டில் அவனுக்கு பெண்பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்கள். எனவே ஒரு முடிவெடுக்க வேண்டிய காலத்தின் தேவையை நளீரால் உணர முடிந்தது.

தனது மனதைக் கவர்ந்த அவளது கைபிடிக்க தீர்மானித்தான் நளீர். அவனைப் போலவே அவளும் அவனை விரும்புகிறாள் என்பதில் சந்தேகமேயில்லை. அவளது கண்களிலே தெரிந்த கனிவும் அவள் புன்னகையில் இருந்த உணர்வும் அவளும் அவனை விரும்புகிறாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அவனை நம்ப வைத்தன. எப்படி அவளை அணுகுவது! எப்படி அவளிடம் தனது காதலை எடுத்துச் சொல்லலாம். நளீருக்கு வழி தெரியவே இல்லை.

உதவிக்கு யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே என ஏங்கினான். எவரிடமும் சொல்லக்கூடிய விடயமா இது! அப்படியே சொன்னாலும் தனது சுய கௌரவத்துக்கு பாதகம் விளையாமல் சொல்ல வேண்டுமே!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது அந்தக் கண்களின் காதல். அதற்கு ஒரு யதார்த்த உறவைக் கொடுக்க அவனது மனம் துடித்தது.

அந்த மாடிவீட்டுத் தொகுதியில் வாழ்பவர்கள் எல்லோருமே வசதியானவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தக் குடியிருப்பில் வாழ்வதென்பது சாதாரண மனிதர்கள் நினைத்தும் பார்க்க முடியாது. அதனால் நிச்சயமாக அவளும் நல்ல வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவளாகத் தான் இருக்க வேண்டும்.

அதனால் அவளை திருமணம் செய்வதில் அவனது இலட்சியத்துக்கு எந்த இடைஞ்சலோ இடையூறோ ஏற்படாது என்பது நளீரின் கணிப்பு. ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஒரு இடத்தில் திருமணம் செய்து விட்டார்கள் என்றால்! நளீரின் மனதில் அந்த சிந்தனை வந்ததும் அவனுக்குள் ஒரு பதட்டமும் தோன்றியது. எனவே இனி சற்றும் தாமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தான் நளீர்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை தனது மாடிக் கட்டிடத்தின் வெளியே வந்து எதிர் மாடி வழியாக போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரையும் நிதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் நளீர்.

அந்த மாடிக்கு செல்லும் நுழைவாயிலில் நுழைந்த ஒரு முதியவரை அவன் உற்று நோக்கினான். அந்த மனிதர்தான் அந்த ஜன்னலில் தெரியும் அந்த அழகிய தேவதையின் தந்தையாக இருக்க வேண்டும்.

அவரைத் தொடர்ந்து சென்ற நளீர் அவர் ஏறிய லிப்டிலேயே ஏறிக்கொண்டான். இலக்கம் நான்கு மின்னியதும் அவர் லிப்டில் இருந்து இறங்குகையில் தனது ஊகம் சரியென்று உணர்ந்தவனாக அவரைப் பின் தொடர்ந்தான் நளீர். அவனைத் திரும்பிப்பார்த்த அவர் ஆச்சியத்தோடு கேட்டார். “நீங்க யாரைப் பார்க்க வேண்டும”?.

அப்பொழுது தான் நளீர் உணர்ந்தான் அந்தந்த மாடிவீடுகளுக்கு எதிராக நிற்கும் வண்ணம் தான் லிப்ட் சேவை அமைந்துள்ளது என்று.

இந்த எதிர்பார்க்காத திருப்பத்தால் சற்று நிலைக்குழைந்திருந்த நளீர் தன்னை ஓரளவு சீர் செய்துக் கொண்டு அமைதியாகக் கூறினான் : “உங்களோடு கொஞ்சம் பேசலாமா”.

“வாங்க உள்ளே போய் பேசலாம்,நீங்கள் இந்த குடியிருப்புக்கு புதிது போல"எந்த ஊர்” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் முதியவர்.

“நான் மட்டக்களப்பு! ஆனால் இப்போது இங்கே கொழும்பில் தான் தொழில் பார்க்கிறேன்.” என்று தன்னைப்பற்றிக் கூறிய நளீர் அந்த வரவேற்பறையை ஒருகணம் நோட்டமிட்டான்.

“கொஞ்சம் இருங்க. அமைதியாக பேசலாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் அந்த மனிதர்.

நளீரின் கண்கள் அந்த வரவேற்பறையை சுற்றி ஆராய்ந்தன. கலைவடிவமாக அமைந்திருந்தது அந்த வரவேற்பறை. எந்த இடத்தில் எது இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அது இருக்கும் வண்ணம் நன்கு சீராக வைக்கப்பட்டிருந்தன.

சுவரில் இருந்த ஒரு நெஞ்சளவிலான குடும்பப்படம். அதில் அந்த மனிதர் அவரது மனைவி மகன் ஆகியோரோடு இருந்தது அந்த தேவதைதான்.

“தம்பி என்ன சாப்பிடுறீங்க?கொபி? டீ? என்ன சாப்பிடுறீங்க” என்று அன்போடு விசாரித்தார் அந்த மனிதர்.

“ நோ புரப்ளம் சார்!”

“வீட்டுக்கு முதல் முறையாக வந்திருக்கிறீங்க, கட்டாயம் ஏதாவது குடிக்கணும்” என்று உள்ளே சென்று தேனீரோடு திரும்பினார் அவர்.

தேனீரைக் கையில் ஏந்திய நளீர் அதனை சற்று பருகியவனாக தொடரலானான் : “சார் உங்கட வரவேற்பறை ரொம்ப அழகா கலையாக இருக்கு. இன்டீரியர் டிசைனர் யாராவது அலங்காரப் படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்”

அவன் சொல்லி முடிக்கவில்லை. அவர் மனம்விட்டு சிரித்தவாறு கூறினார்: “நோ நோ,இதுக்கெல்லாம் எதுக்கு இண்டீரியர் டிசைனர் எல்லாம் எனது மகளின் கைவண்ணம் தான்”

நளீரின் உள்மனம் பெருமிதம் அடைந்தது. அவன் மனதைப் கொள்ளைக் கொண்ட தேவதை வெறும் அழகி மட்டுமல்ல. அவள் ஒரு திறமைமிக்க கலையுணர்வு கொண்ட பெண் என்பதை நினைத்ததும் பெரும் பூரிப்பாகவும் இருந்தது. அவளை மனைவியாக அடைவதில் அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.

“ஓ உண்மையிலேயா! உங்கட மகள் ரொம்ப கலைஉணர்வு நிறைந்தவங்க என்று நினைக்கிறேன்” என்று அவன் சொன்னதும் அந்த மனிதரின் குரலில் விரக்தி எதிரொலித்தது.

“எல்லா திறமையும் அழகும் இருந்தும் என்ன பயன் தம்பி, அவளால் மற்ற பெண்கள் போல சமூகத்தில் பழக முடியாதவளாக இருக்கிறாளே” என்று மனம் நொந்து சொன்னார்.

நளீருக்குப் புரியவில்லை. அவன் அவரை கேள்விக்குறியோடு பார்க்கவும் அந்த வீட்டின் கதவு மின்விசை அடிக்கவும் சரியாக இருந்தது.

அவர் கதவை திறக்கவும் உள்ளே ஒரு சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு ஒரு பெண் வரவும் சரியாக இருந்தது. அந்தச் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. ஜன்னலில் தெரிந்த அதே முகம். அதே கண்கள்.

அவனால் ஒருகணம் நிதானமாக இருக்க முடியவில்லை.

யாரைப்பற்றி இத்தனை மாதங்களாக கற்பனையில் மிதந்துக்கொண்டிருந்தானோ அதே அழகிய பெண்தான் இப்போது அவன் முன்னால் கால்களை இழந்த முடமாக சக்கர நாற்காலியில் இருந்தாள்.

அவளது கண்கள் ஒருகணம் அவனது கண்களை சந்தித்தன. அதில் எந்த சலனமுமில்லை. அதே கனிவான பார்வை. மின்னல் போல தோன்றி மறைந்த அதே புன்னகை. சட்டென்று அவள் உள்ளே மறைந்தாள்.

நீண்ட கனவிலிருந்து விழித்தெழும்பியது போல அவன் தன் சுயஉணர்வுக்கு வந்தான்.

அவனை ஆட்டிப்படைத்த காதல் உணர்வுகள் பெரும் வெயிலில் வேகமாக மறையும் பனித்துளிகள் போல எங்கோ மங்கி மறைந்தன.

வாழ்க்கையின் முதல் இரண்டு கட்டங்களையும் வெற்றியாகத் தாண்டியது போல இந்த திருமண விடயமும் சீராக அமைய வேண்டும் என்று அவனது சுயஅறிவு அவனுக்குக் கட்டளையிட்டது.

அப்படியென்றால் அவனுள் எழுந்த அந்தக் காதல்! ஓ அதுவா,அது அவனைப் பொறுத்த மட்டிலும் அவனைப்போன்ற நவீனகால இலட்சியவாதிகளைப் பொறுத்த மட்டிலும் வெறும் தப்புக்கணக்குத் தான்.

“என்ன ஆழமாக யோசிக்கிறீங்க! நீங்க வந்த விடயத்தை சொல்லவே இல்லையே என்று வினவினார் அந்த மனிதர்.

“நான் உங்கள் மகளை மனதார காதலித்தேன். அவளையே திருமணமும் செய்ய விரும்புகிறேன். அவள் முடமாக இருந்தாள் என்ன நான் அவளைக் காப்பாற்றுவேன்’ என்று திடமாகச் சொல்ல அவன் என்ன கடந்தகால இலக்கியங்களில் வரும் கதாநாயகனா என்ன!

நவீன இலட்சியவாதி! அவனது குறிக்கோள் எல்லாம் அவனது முன்னேற்றம் மட்டுமே. எனவே தந்திரமாக அந்த மனிதரிடம் சொன்னான் “சார் எனக்கு இங்கே யாரையும் தெரியாது. எனவே ஒரு ரிபரன்சுக்கு உங்கட பெயர் விபரங்களை தர முடியுமா!”

“ஓ இது என்ன பெரிய விசயம். இந்தாங்க என்னுடைய விசிடிங் கார்ட். தாராளமாக யாருக்கும் கொடுங்க”

“நன்றி சார்! இதோ என்னுடைய கார்ட்” என்று தன்னுடைய கார்டையும் கொடுத்த அவன் அவரிடம் இருந்து விடை பெற்றான்.

அதன் பின் , அந்த ஜன்னலை அவன் பார்க்கவேயில்லை. அவனைப் பொறுத்த வரை காதல் ஒரு தப்புக்கணக்கு.

அவளைப் புரிந்து கொள்ளும் இதயம் அவனிடம் இல்லை.

எஸ்.எஸ்.இசட்.கான்

Comments