தீபாவளிப் பரிசு | தினகரன் வாரமஞ்சரி

தீபாவளிப் பரிசு

வவுனியாவிலிருந்து மன்னார் போகும் வழியில் உயிர்த்திராயன் குளம் பதினோரம் கட்டையில் முருங்கன் என்ற ஊர் இருக்கின்றது. நல்ல செல்வச் செழிப்பான கிராமம்.

இரணைமடு குளத்து நீர்ப்பாசனத்தால் விவசாயம் அள்ளி வருமானத்தை கொடுத்து கொண்டிருந்தது. சம்பா, நாடு தவிர சிறுபோக காலத்தில் சோளம், பயறு, உளுந்து, விதைகளை விதைப்பார்கள் விவசாயிகள். குறுகிய கால பயிர். ஆனால் அவையும் விளைச்சல் பெருகி லாபத்தை கொடுக்கும். சாப்பாட்டுக்கு இல்லை என்று யாருமே வாய் திறந்து சொல்ல முடியாத வண்ணம் வளம் கொண்ட பூமி.

ஊர்க்காரர்கள் காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்ததும் திருக்கேதீஸ்வர கோயிலை நோக்கி கும்பிடுவார்கள். அது அந்த சுற்றுப்புற கிராமங்களில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம்.

உயிர்த்திராயகுள மக்களோ கோவிலை நோக்கி கும்பிட்ட கையோடு பூமியையும் வலது கையால் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு அந்த மண், தெய்வத்துக்கு இணையானது. வயதான விவசாயிகள் அந்த மண்ணை எடுத்து நெற்றியில் விபூதி போல பூசிக் கொள்வதும் உண்டு. இதெல்லாம் அந்தக் காலம்.

இந்தக்காலத்துப் பிள்ளைகளோ நவநாகரீக பாதையில் பயணிக்கிறார்கள். மகாவலி கங்கைத் தாயின் தொண்டையே நெருக்குவது போல், இப்பொழுது பல இடங்களில் அணைகளை கட்டி தண்ணீர் வரவை தடுத்து விடுகிறார்கள். பிச்சை போடுவது போல் தண்ணீர் ஒரு பக்கம் திருகோணமலை கடலில் சங்கமிக்கின்றது.

பாதி அனுராதபுரம் வழியாக கிளிநொச்சி, ஆனையிறவு கடலில் சங்கமிக்கின்றது. வடபகுதிக்கு கொண்டு செல்வதற்கு பேச்சுவார்த்தை நடந்த வண்ணம் உள்ளது.

இந்த தண்ணீரை கொண்டு தான் வவுனியா முதல், மன்னார் வரை விவசாயம் செய்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் விவசாயிகள் கமநல உத்தியோகத்தரை நாடி தண்ணீர் பெற்று கொள்ளுகின்றனர். ஊரில் பெரிய செல்வந்தர் தங்கவேல் ஐயா தான். கிட்டத்தட்ட 75ஏக்கர் விவசாய நிலத்தின் சொந்தக்காரர்.

அவர் ஆழ்துளைக் கிணறு போட்டு நிலத்தடி நீரை எடுத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்பவர். கடந்த ஐம்பது ஆண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டதற்காக சிறந்த விவசாயி என்று ஜனாதிபதி விருதும் பெற்றவர். இந்த ஆண்டு நெல்லுக்கு பதிலாக பெரும் பகுதி நிலத்தில் மரக்கறி விவசாயம் செய்துள்ளார்.

பயிர் அமோகமாக வளர்ச்சியடைந்து நல்ல வருமானமும் கிடைத்தது. அவரிடம் வேலை பார்க்கும் அனைவரையும் தன் சொந்தங்கள் போலவே கவனித்துக்கொள்வார். அன்று வெள்ளிக்கிழமை, ஆட்கள் காலையிலேயே வயலில் இறங்கி விட்டார்கள். ஒருபுறம் நாற்பது பேர் பயிரை வெட்டுகிறார்கள். இன்னொரு புறம் முப்பத்தைந்து பேர் நெல்மணிக் கட்டுகளை கட்டி எண்ணி எண்ணி அடுக்குகிறார்கள்.

ராஜாவின் லொறி அவர்கள் அருகில் வந்து நெல் மூட்டைகளை ஏற்றி ஆலைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. தங்கவேலு எட்டு மணிக்கு வந்தார். அவர் உட்கார புளியமரத்தடியில் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டான். "ஐயா வேலை முடிய இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு.

வானம் வேறு கருகரு என்று இருக்கிறது. முடிந்த அளவு கதிர் அறுத்து ஏற்றி அனுப்பிவிடனும்" என்றான் சுப்பிரமணி. வெற்றிலை பாக்கு புகையிலை வாய் நிறைய போட்டுக் கொண்டார் தங்கவேலு. அப்போது தூரத்தில் மோட்டார் சைக்கிள் சத்தம். சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தார். டிரைவர் ரவி. மேலே போட்டிருந்த துண்டால் முகத்து வியர்வையை துடைத்துக் கொண்டார் . வாங்க என்ன இந்த பக்கம் என்று தங்கவேலு ஐயா கேட்க ஏதோ சொல்லிக்கொண்டே ரவியும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். குடிப்பதற்கு தான் கொண்டு வந்த செம்பு தண்ணீர் எடுத்து நீட்டினார் தங்கவேலு. பாதி செம்பை காலி செய்து விட்டு எப்படி அண்ணே இருக்கீங்க என்று விசாரித்தான் ரவி டைவர். "பிரச்சினை இன்னும் தீரலையா? வீட்டில் உங்க சம்சாரம் உங்க வழிக்கு வரமாட்டேங்குறாங்களா?" என்று கேட்டார்.

ஆமாய்யா, அவ என்னைக்கு என் பேச்சை கேட்டாள்? என் மகனைத்தான் அவளின் அண்ணன் மகளுக்கு கொடுக்கணும் என்று ஒத்தக்காலில் நிற்கிறாள். இவ அண்ணன் மகள் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டாள்.

அவனுக்கு கட்டி வைத்தா நல்லா இருக்குமா? பார்க்கவும் கன்னங்கரேலென்று கரிக்கட்டி மாதிரி கலரு. நாகரிகமா பழகவும் தெரியாது. இவனை கொண்டு போய் கொழும்பில் இருக்கும் என் ஒன்றுவிட்ட தங்கச்சி மகளுக்கு கட்டி வைத்தா நல்லா இருக்கும். ஏதோ அண்ணனுடைய சொத்து பூரா ஒரே மகளுக்கு வந்து சேரனும் என்று பாக்குறாளே தவிர, வேற எதையும் பார்க்க மாட்டேன் என்கிறாள். என் தங்கச்சி மகளை வெளியூரில் கோலேஜ்ல டாக்டருக்கு படிக்க வைத்திருக்கிறாள். செக்க செவேல் என்று நல்ல கலர்.

அம்மன் கோயிலில் விக்கிரகம் மாதிரி லட்சணமான முகம். அந்த பெண்ணை மகனுக்கு கட்டி வைக்கலாம் என்றால் கேட்க மாட்டேங்கிறா. ஏதாவது நம்ம சத்தமா பேசினா சாமி வந்தது போல கத்தி குதிக்கிறாடா? என்ன செய்வது தெரியலையே. என்று குடும்ப விடயத்தை சொல்லி முடித்தார் தங்கவேலு.

உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்த ரவி, ஆண்டவன் கருணையால் எல்லாம் சரியா நடக்கும் அண்ணே. நான் மன்னார் டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன். அங்கே செல்வராசன் ஒரு நாளைக்கு லொறிவேணும்னு சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அப்படியே களப்பிலிருந்து கால் நடையாக வீட்டுக்கு வந்து கயிற்றுக் கட்டிலில் சாய்ந்த தங்கவேலு ஏதோ சத்தம் கேட்டு வலது பக்கம் திரும்பினார். யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி தன் மகன் சரவணன் பக்கத்தில் இருக்கிற அம்மன் கோயிலில் நுழைவதை பார்த்தார்.

எனது ஓன்றுவிட்ட தங்கையும் மகளும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அதேபோல தங்கையின் மகளும் கோயிலுக்குள் நுழைவது தெரிந்தது. சந்தேகப்பட்ட தங்கவேல் மெதுவாக எழுந்து கோவிலுக்குள் நுழைந்தார். தன் மகனினதும் தன் தங்கையின் மகளினதும் கண்களில் படாமல் கோயிலில் இருக்கும் நவக்கிர பீடம் அருகில் ஒளிந்துகொண்டார் .

நாளைக்கு காலையில 5மணிக்கு கோல் டெக்ஸி ஏற்பாடு செய்திருக்கிறேன். மெயின் ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திடுவான் செந்தூரன். அங்கே போய் அங்கேயே மாலை மாத்தி தாலி கட்டி சாப்பாடு எல்லாம் முடிச்சிட்டு... என்று மகன் பேசிக்கொண்டதை காதார கேட்டார் தங்கவேலு.

அவர்கள் கோயிலிருந்து வெளியே போவதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டார் . அப்பாடா தன் மகன் தன் தங்கை மகளுடன் ஊரை விட்டு போய் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தீபாவளிக்கு இன்னமும் ஒரு கிழமைதான் இருக்கின்றது. தனது மகன் இந்தத் தீபாவளிக்கு தனக்கு அளிக்கவிருக்கும் மிகப் பெரிய பரிசாக அவர் இத்திருமணத்தைக் கருதினார்.

அந்த சந்தோஷத்தில் மெல்ல நடந்து வந்து கட்டிலில் படுத்துக் கொண்டார். அவர் தன் மனைவியை எண்ணினார் . உன்னை ஏமாத்தி , நம்ப மவனே தன் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டான்டி என் தங்கை மக தான் மணப்பெண். யாருமே இல்லாம அவங்க கல்யாணம் நடக்கப்போகுது.

அறிவுகெட்ட பொண்டாட்டியே நல்லா ஏமாந்து போகப் போறே என்று சந்தோசம் தாங்காமல் தனக்குள் என்னென்னமோ சொல்லிக் கொண்டார். வாய் நிறைய வெற்றிலை போட்டு யோசித்துக் கொண்டு இருந்த அவர், ஜன்னல் வழியாக மகன் அறையை எட்டி பார்த்தார்.

அவன் தன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அம்மா சாப்பிட அழைத்ததும் அவன் வெளியே வந்தான். அவனுக்கு தெரியாமல் 25000ரூபாய் பணத்தை அவன் பெட்டியில் வைத்துவிட்டார்.

கல்யாணம் கட்டப் போறவன் செலவுக்கு ஆகட்டுமே என்று கணக்கு போட்டுக் கொண்டார். சமையல் அறையில் மகனுக்கு சோறு போட்டுக் கொடுத்த மனைவியைப் பார்த்து மகனுக்கு நல்லா சோறு போடு.

நாளை காலையில அவனுக்கும் என் தங்கை மகளுக்கும் கல்யாணம். முடிந்த பிறகு உன் மனக்கோட்டை எல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்று எகத்தாளமாகச் சிரித்தார். பின் அயர்ச்சியில் தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை ஒன்றுமே அறியாதவர் போல் காலை கடனை முடித்துவிட்டு களத்து மேட்டுக்கு போய் வீட்டுக்கு வந்து கட்டில் அமர்ந்த பொழுது, மணி இரண்டு இருக்கும். தன் தங்கை மகள் வீட்டுக்கு வெளியே அந்தப் பக்கமாகப் போவதைப் பார்த்தார்.

அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. மணப்பெண் தன் மகனின் தாலியை ஏற்க வேண்டியவ இங்கு என்ன செய்கிறா என்று நினைத்தார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை அவளை அழைத்து என் மகனை நீ கூட்டிட்டு போகலையா? என்று கேட்டார்.

"என்ன மாமா உளறீங்க?" என்று மருமகள் கேட்க முதல் நாள் அவர்கள் கோயிலில் பேசியதை ஒளிந்து கேட்ட விவரத்தை தங்கவேலு சொன்னதும் அதுவா உங்க மகனுக்கும் பக்கத்து கிராமத்து சுந்தரேசன் மகள் கமலாவுக்கும் ரொம்ப நாள் சினேகிதமாம். அவளை கல்யாணம் கட்டிக்கப் போறதா உங்கள் மகன் சொன்னார்.

நல்லூரில் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்படியே அவளையும் கூட்டிக்கிட்டு வந்துடுவேன் என்றார். அதுக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்யுமாறு கேட்டார். அதைத்தான் செய்தேன்.

இந்த நேரம் அவங்க கல்யாணம் முடிஞ்சுருக்கும் என்றாள். அதிர்ந்து போன தங்கவேலு உனக்கும் அவனுக்கும் மிகச் சரியான நேரத்துல கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நான் நினைச்சேன் என்றார்.

எனக்கும் அவருக்குமா நல்லா சொன்னீங்க மாமா சொந்தம் என்று உங்க வீட்டுக்கு வந்தா கல்யாணமே பண்ணி வைச்சிருவீங்களா என்றாள் அவள்.

அவருக்கும் பக்கத்து கிராம சுந்தரேசன் மகள் கமலாவுக்கும் ரெண்டு வருஷமா காதலாம்.

சரவணன் என்கிட்ட சொன்னதால நான் அவங்களுக்கு உதவி பண்ணினேன். அவ்வளவுதான் மாமா என்றாள். அப்போது "என்னங்க நம்ம பையன் நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு எவளையோ கல்யாணம் கட்டிக்கிட்டானா? என்று அழுதபடி ஓடி வந்தாள் அவரது மனைவி. அவளது குரலைக் கேட்டு கூனி குறுகிப் போனார் தங்கவேல். தான் எண்ணிய தீபாவளிப் பரிசு இதுதானா என்று வேதனை தாளாது அழலானார்.

பொன் பத்மநாதன்

Comments