ஐம்பதாயிரம் பிரதிகளில் வெளியான நடேசய்யரின் நூல் | தினகரன் வாரமஞ்சரி

ஐம்பதாயிரம் பிரதிகளில் வெளியான நடேசய்யரின் நூல்

மலையகத்தின் முதல் தொழிற்சங்கத்தை நிர்மாணித்து, மலையக மக்களின் துயர் களைய  முன்னின்ற கோ.நடேசய்யர் மறைந்து இந்த ஆண்டுடன் 75ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இந்த ஆண்டில் அவர் பற்றி நமக்கு இன்னும் தெரியவராத சில அம்சங்களை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (Indian Labourer’s Rights and Responsibilities) என்ற தலைப்பில் 1928ஆம் ஆண்டில் கொழும்பு, தொழிலாளர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, 30பக்கங்களில் 10சதம் விலையிடப்பட்டு நடேசய்யரின் இந்நூல் வெளியாகியிருக்கிறது. ஆரு.முத்தையா அம்பலத்தால்  154  செட்டித்தெரு, கொழும்பு என்ற முகவரியிலிருந்து இந்நூல் பிரசுரிக்கப்பெற்றிருக்கிறது. முன்னட்டையில்,  கொழும்பு ‘தேசபக்தன்’ பிரதம ஆசிரியர் கோ.நடேசய்யர் M.L.C. என்று நூலாசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘தொழிலாளர்களுக்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி ஒழிக! ஒழிக! ஒழிக!’ என்ற முழக்கங்களும் முன்னட்டையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்நூலில் 50000பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன என்ற முன்னட்டைக் குறிப்பாகும்.

இலங்கையில் ஒரு நூலில் ஐம்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட செய்தி நம்மை வியப்பிலாழ்த்துகிறது. என் நினைவுக்கெட்டிய வகையில் இலங்கையில் ஐம்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட நூல் இந்நூல் ஒன்றேயாகும்.

இந்நூலை வெளியிட்ட ஆரு.முத்தையா அம்பலம் ‘எமது விண்ணப்பம்’ என்ற மகுடத்தில் எழுதியுள்ள வெளியீட்டுரை நம் கவனத்திற்குரியது.

அவர் எழுதுகிறார்:

‘அன்பர்காள்!

இலங்கையில் சுமார் 7 1/2லட்சம் இந்தியத் தொழிலாளர்களிருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களாக வதிகின்றனர். அவர்கள் தங்கள் ‘கடமை’, உரிமை’ இன்னவென்பதை சரிவர தெரிந்து கொள்ளாமல் தங்களை அடக்கியாளும் சயித்தான் ஆட்சியாகிய முதலாளி ஆட்சியின் கீழ் அடங்கி, வெயில் மழையின்றி, பாடுபட்டும் தங்களுக்குப் போதிய உணவும், உடையும், இருக்க வசதியான இல்லமும் சுகாதார செளக்கியங்கள் இன்றியும் மிருகங்கள்போல் நமது சகோதரி, சகோதரர்கள் வாழ்ந்துவருவதை நோக்குங்கால் ஆறறிவு படைத்த எந்த மனிதனும் கண்ணீர் கலங்காமல் இருக்கமாட்டான். அவர்கள் அவ்விதம் தோட்டக்காடுகளில் தங்கள் கடமை உரிமைகளை சரிவர உணராமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டும் போதிய வசதி இல்லாததை நமது பிரதிநிதி கோ.நடேசய்யர் கண்டு மனம் கசிந்து அவர்கள் தங்கள் கடமை உரிமைகளை அறிந்து கொண்டாலன்றி தங்கள் நிலையை சீர்திருத்திக்கொள்ள இயலாதென்பதை நன்கறிந்து ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் ‘ என்னும் நூலை எழுதி உதவியிருக்கிறார்.

இந்த நூல் தொழிலாளர்களுக்கென தெளிவாகவும் சுலபமான நடையிலும் எழுதப்பட்டுள்ளது. சொற்பம் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களும்கூட இதை வாசித்து விஷயங்களை எளிதில் உணர்வான்பொருட்டு சாதாரணமாகப் பேசும்  தமிழிலே எழுதப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கேவலம் மாடுகள் மாதிரி உழைத்தும் அதன் பலனை முதலாளிகளை மூட்டைப்பூச்சிகளைப் போல் உறிஞ்சுவதற்கு விட்டு மிகச் சொற்ப சம்பளம் பெறுகின்றமையால் அவர்களுக்கென இந்த நூலை சொற்ப விலையில் பிரசுரித்திருக்கிறோம். ஆகையால் இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கி   வாசித்து தங்கள் கடமை உரிமை இன்னவென்பதை அறிந்து தொழிலாளர்களை அவமதிக்கும் சயித்தான் ஆட்சிக்கு பயப்படாமல் இருக்கவேண்டியதே  இவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபக மூட்டுகின்றோம்.

அன்பர்களே, இவ்விலங்கையில் 7 1/2லட்சம் தொழிலாளர்களிருக்கின்றீர்கள். உங்கள் எல்லோருடைய கைகளிலும் ஒவ்வொரு புஸ்தகம் இருக்கவேண்டுமென்ற கருத்துடன் குறைந்த விலைக்கு தனிப்பிரதி சதம் 10, புஸ்தகம் 100க்கு விலை ரூ .7-0-0க்கு விற்க ஏற்பாடு செய்துள்ளோம். முதற்பதிப்பு புஸ்தகம் ஐம்பதினாயிரந்தான் தற்பொழுது வெளியிட நேர்ந்தது. பாக்கி 7லட்சம் புஸ்தகமும் விரைவில் வெளிவந்து உங்களுக்கு ஆதரவளிக்கும்படி எல்லாம்வல்ல இறைவனைத் துதிக்கின்றேன். 

ஐம்பதினாயிரம் பிரதிகொண்ட இந்நூலை அச்சிட்டு  வெளியிடுவதற்கு எனக்குப்பலவகையிலும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்திய கல்லுப்பட்டி ஸ்ரீமான் ப.ராம. பழனியப்ப செட்டியாரின் உதவியை என்றும் மறக்கற்பாலதன்று.

தங்கள் ஊழியன்

ஆரு.முத்தையா அம்பலம்’ என்று கோட்டூர் 20.5.28திகதியிட்டு தன் வெளியீட்டுரையை  நிறைவு செய்கிறார் முத்தையா அம்பலம்

மலையகத் தொழிலாளர்கள்மீது இவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் பரிதாப உணர்வையும், அம்மக்களின் துயர் போக்க தொடுவான எல்லை வரை போகமுயன்ற லட்சிய வேகத்தைப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. ஒவ்வொரு தொழிலாளியின் கையிலும் ஒரு நூல் இருக்கவேண்டும் என்று இவர்கள்  ஆசைப்பட்டிருக்கிறார். ஐம்பதாயிரம் பிரதிகள் அல்ல, ஏழு லட்சம் பிரதிகளை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள் என்றால் மலைப்புத் தட்டுகிறது.

இந்நூலின் முன்னுரையில் நடேசய்யர் பின்வருமாறு கூறுகிறார்:

‘இலங்கை இந்தியத் தொழிலாளர்களைப்பற்றி  இந்தியாவும் இலங்கையும் பல சட்டங்கள் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்களைச் சேர்க்கும் முறை, அந்நிய நாடுகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபிறகு அவர்களது உரிமைகளைக் காப்பதற்கான காரியங்கள் முதலியவற்றைப்பற்றியது இந்தியச் சட்டம்.

தொழிலாளர்கள் இலங்கை வந்து சேர்ந்தது முதல் இந்தியாவிற்கு திரும்பிப் போகும் வரையில் அவர்களைப் பற்றிய சட்டம் இலங்கையில் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறும் எல்லாத் தொழிலாளர்களுக்குமே பொருத்தமுடையது இந்தியச் சட்டம்.இலங்கையில் செய்யப்பட்ட சட்டம் தோட்டம், ரோட்டு முதலிய வேலைகளில் அவர்கள் இலங்கையில் அமர்ந்திருக்கும் வரையிலுமே பொருத்தமுடையதாகும்.

இந்திய கவர்ன்மெண்டாரால் ஸ்தூலமாகக் குறிக்கப்பட்ட கொள்கைகளைத் தழுவியே, தங்கள் நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வரப்படும் தொழிலாளர்களைப்பற்றிச் சட்டங்கள் பிறநாட்டார் செய்யலாம். அக்கொள்கைகளுக்கு மாறாக எந்த நாடாவது சட்டங்கள் செய்யுமாகில், அந்த நாட்டிற்குத் தொழிலாளர்கள் அழைத்துப் போகாதபடி தடுக்க உரிமையுண்டு.

இச் சட்டங்கள் பெரும்பான்மையும் தமிழில் பிரசுரிக்கப்படாதவை. பிரசுரிக்கப்பட்ட சிலவும் சாதாரண படிப்புள்ளவர் அறிந்து கொள்ளக் கூடாதவையாயிருந்தன.

தொழிலாளரோ ஏழைகள்; படிப்பில்லாதவர்கள்; கடமை, உரிமை ஆகிய இரண்டுண்டென்பதையும் அறியார். அந்தந்த சமயங்களில் சிறிது உபகாரம் செய்வோரையும், அதிகமாய்ப் பொய் சொல்வோரையும் நம்பியே தம் காலத்தைக் கழித்து வருகின்றார்கள். பெரும்பான்மையானவர்களும் இந்துக்களானபடியால் பூர்வஜன்மத்தில் செய்த பாபத்தால் கஷ்டப்படுவதாக எண்ணித் தமது மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள்.

மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் எவ்விதம் நடந்து வருகிறார்கள்  என்பதி அறிய இவனுக்கு வசதியே இல்லை. அறியாமை இருளில் அகப்பட்டு தடுமாறி அலைகிறான்.இவர்களுக்குப் புத்துயிர் உண்டாக்குவது மிகவும் சிரமமான வேலை. அதற்கு எவ்வளவோ விரோதிகளிருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு  உதவி செய்ய முன்வருவோர்க்குத் தொல்லைகள் அதிகம் ஏற்படும்.

‘தொழிலாளர்களே! ஒவ்வொரு இடத்திலும் தொழிற் சங்கங்களைக் கூட்டுங்கள். அதுவே உங்களுக்குச் சஞ்சீவி போன்றது’ என்கிறார் நடேசய்யர்.

‘பெரியகங்காணிமார்களுக்கு வேலை ஒரு தோட்டத்தில் போய்விட்டால் வேறு தோட்டத்தில் கிடைப்பது சிரமம். ஆனால், நெற்றி

வியர்வை நிலத்தில் விழ வேலை செய்யும் உங்களுக்கு யாதொரு பயனுமில்லை. உங்களுக்குள்ள மண்வெட்டியும் அலவாங்கும் எந்தத் தோட்டத்திலும் கிடைக்கும்.நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.’ என்று தொழிலாளர்களுக்கு உரமூட்டுகிறார்.

காலையில் எழுந்திருப்பதும், பகலில் வேலை செய்து, மாலையில் குடி புகுதலுமே உங்கள் வாழ்க்கையின் முடிவென்பதை பெரிய மேதாவிகளாய் வரக்கூடியவர்களும் உங்களிடையே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் முயற்சியே காரணம். ஒற்றுமையே சாதனம். ஒன்றுபட்டால் நீங்கள் வாழ்வீர்கள். அது நீங்கிவிட்டால் நீங்கள் வீழ்வீர்கள். இது ஓர் எச்சரிக்கை’ என்று இந்நூலில் கூறுகிறார் நடேசய்யர்.

எத்தனை மணிக்கு கப்பலில் சேர்ப்பார்கள், மன்னார் ஸ்டேசனில் தண்ணீர் கொடுப்பார்கள்,இரவு ஆகாரம் ரொட்டி, கொஞ்சம் சீனி, வாழைப்பழம் , காலை  6மணிக்கு பொல்காவலை வந்துவிடும் என்று நுட்பமான விபரங்களைச் சேகரித்துத் தொகுத்துத் தருவதில் தனது ஆற்றலை நிறுவி இருக்கிறார் நடேசய்யர்.  ஆனால், இந்த நூல் தொடர்பாக நடேசய்யர் நீதிமன்றம் ஏற வேண்டிவந்தது துரதிர்ஷ்டமானது.

1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  3ஆம் திகதி தொடரப்பட்ட இந்த வழக்கு 1929ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

‘வழக்கில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள புத்தகங்கள்,  நாம் விசாரித்ததில் ,

‘இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும்’ என்று தெரிகிறது. தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்யப்புகுந்ததில் ஆசிரியருக்கே இடுக்கண் விளைந்தது விசனகரமானது’ என்று ‘இலங்கை இந்தியன்’ பத்திரிகை குறிப்பெழுதி இருந்தது.

மு.நித்தியானந்தன்,
லண்டன்

Comments