தெல்தோட்டை ஊடக மன்ற ஏற்பாட்டில் அருள்வாக்கி அப்துல் காதிர் நினைவுப் பேருரை | தினகரன் வாரமஞ்சரி

தெல்தோட்டை ஊடக மன்ற ஏற்பாட்டில் அருள்வாக்கி அப்துல் காதிர் நினைவுப் பேருரை

ந்த நாட்டிலே சிறந்ததொரு ஊடக கலாசாரம் காணப்படுகிறதோ அந்த நாடு ஜனநாயக விழுமியங்களைப் பேணக்கூடிய பண்பாடான படித்த சமூக கட்டமைப்பைக் கொண்ட நாடாகத் திகழும். அவ்வாறே சிறந்த ஊடக கலாசாரத்தைப் பேணும் பிரதேசமும் அங்கு வாழும் சமூகமும் கூட விழுமிய சமூகமாக மிளிரும்.

இன்று ஊடகம் சம்பந்தப்படாத எந்தவொரு துறையும் கிடையாது எனுமளவிற்கு ஊடகத்தின் செல்வாக்கு எம் வாழ்வின் சகல துறைகளிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் எமது தெல்தோட்டைப் பிரதேசமும் பல்துறைகளிலும் முன்னணி வகிக்க இந்த ஊடக வகிபாகம் ஆழமாக உணர்த்தப்பட வேண்டியிருக்கிறது.

தெல்தோட்டை ஊடக மன்றம் சிறந்ததொரு ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கோடு உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

 ஊடக அபிவிருத்திப் பிரிவு;

தெல்தோட்டை பிரதேசத்தில் ஊடக கலாசாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதேச பாடசாலைகளில் ஊடகக் கல்வியினை அறிமுகம் செய்து, அதனை அபிவிருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்வது இதன் மூலம்

மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், தெல்தோட்டை பிரதேசத்தின் உண்மைத்தன்மையினை வெளியுலகிற்கு எடுத்துச் செல்வதற்கு களம் அமைத்துக் கொடுப்பதும் இப்பிரிவின் நோக்கமாகும். அதேபோல், அருள்வாக்கி அப்துல் காதிர் கலை, இலக்கியக் கழகம் வருடாந்தம் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் நினைவுப் பேருரையினை நடாத்துவதே இந்த கழகத்தின் பிரதான பொறுப்பாகும்.

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நினைவுப் பேருரையினை நடாத்துவதற்கான நோக்கங்கள் வருமாறு,

 அருள்வாக்கி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இளம் சமூகத்தினரை ஊக்குவித்தல்.

 அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் தொடர்பான பல தகவல்கள் எமது பிரதேசத்தில் இருந்தும் கூட அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான முறையான ஏற்பாடுகள் இல்லை. ஆகவே அதனை நிவர்த்தி செய்தல்.

 அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளை அடுத்த பரம்பரைக்கு எடுத்துச் செல்லல்.

 புலவரை ஜனரஞ்சகப்படுத்தியவர்களை இனங்கண்டு அவர்களை கௌரவித்தல்.

மேலும் ஆய்வுப் பகுதிகளை இனங்கண்டு அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதே இந்த பிரிவின் பிரதான பணியாகும். இங்கு தெல்தோட்டை பிரதேசத்தினை மையமாகக் கொண்ட ஆய்வுப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், ஆய்வுக்கட்டுரைகளை எழுதி அதனை பிரசுரிப்பதற்கு வாய்ப்பளிப்பதும் ஆய்வரங்குகளை ஏற்பாடு செய்வதும் இதன் பிரதான செயற்பாடுகளாகும்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட முறையில் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்ற தெல்தோட்டை ஊடக மன்றமானது தொடர்ந்தும் நன்நோக்கோடு தெல்தோட்டை பிரதேச முன்னேற்றத்துக்காய் உழைத்துக் கொண்டிருக்கின்றது.

தெல்தோட்டையிலுள்ள சமூக நோக்கம் கொண்ட அனைத்து அமைப்புக்களையும், வளங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக தெல்தோட்டையினை சகல விதத்திலும் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக மாற்றுவது எமது அமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். குறிப்பாக ஊடகத்துறை சார் ஆளுமைகளை உருவாக்குவதும் இதன் செயற்பணிகளில் ஒன்றாகும். மேலும், எழுத்து துறையில் சாதிக்க துடிக்கும் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களின் எழுத்தாற்றலை வெளியுலகிற்கு கொண்டு வரும் பணியினையும் இம்மன்றம் மேற்கொண்டு வருகின்றது.

மலை நாட்டின் எழில்மிகு பிரதேசமான தெல்தோட்டை நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, இந்த மண் வரலாற்றில் பல துறைகளில் பல்வேறு ஆளுமைகளையும் ஈன்றெடுத்திருக்கிறது.

அதனால் இந்த வருடத்திற்கான அருள்வாக்கி அப்துல் காதிர் நினைவுப் பேருரையினை 'தெல்தோட்டை – புதியதோர் மாற்றத்தை நோக்கி (எமது வளமே எமது பலம்)' என்ற கருப்பொருளில் நடாத்துவதற்கு மன்றம் தீர்மானித்தது எனலாம்.

சி.எம்.எம்.சுபைர்,  
தலைவர்,  
தெல்தோட்டை ஊடக மன்றம்

Comments