நூலறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

நூலறிமுகம்

'ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவாற்றல் இருப்பது போன்று எந்த வொரு மக்கள் கூட்டத்திற்கும் தமது வரலாறு குறித்த நினைவாற்றல் அவசியமானது. நிகழ்காலத் தவறுகளைக் களைவதற்கும் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கும் கடந்த கால வரலாறுகள் துணைபுரியக்கூடியன. உலகில் எத்தனையோ பேர் பல்வேறு காரணங்களுக்காக நினைவுகூரப்படுகின்றனர். ஆனால் நம் சமுதாயத்திற்கு பங்காற்றி எம்மைவிட்டு பிரிந்து சென்றவர்களை காலப் போக்கில் நாம் மறந்து விடுகின்றோம். அவர்களது பணிகளைப் பெரும்பாலும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. அவர்களது சேவைகள், விபரங்களை அவர்களது குடும்பத்தார் கூட நினைத்துப் பார்ப்பதுமில்லை, தேடிப் பார்ப்பதுமில்லை. அவற்றைத் தேடி அறிந்து ஆவணப்படுத்த முயற்சிப்பதுமில்லை. இவை அனைத்தும் இந்நூலை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது நான் நேரடியாகக் கண்ட உண்மைகள்'.

'ஆனால் நமது முன்னோடிகள் பலர் எத்தகைய உலக இலாபங்களையும் எதிர்பாராமல் அறிவுத்துறைக்கும் சமயத் துறைக்கும் அரசியல் பொருளாதாரத் துறைகளுக்கும் தம்மை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளனர். அவர்களது அர்ப்பணிப்புகளைப் பின்னைய சமுதாயத்தவர்கள் பின்பற்ற வேண்டும். அவர்களது வாழ்வும் வாக்கும் எதிர்காலப் பரம்பரைகளுக்கு பாடமாக அமைய வேண்டும். விளக்கின் வேலை இருளைப் போக்குவது மட்டுமல்ல இன்னொரு விளக்கை ஏற்றி வைப்பதும் தான் என்பதற்கேற்ப சமகாலமும் எதிர்காலமும் இம்முன்னோடிகளுக்கு கடமைப்பட்டுள்ளது.

நமது சமூகத்தில் பல ஆளுமைகள் இலை மறை காய்களாய் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். ஒரு மனிதனின் தகுதியை அம்மனிதனின் செல்வம், செல்வாக்கு, வசீகரத் தோற்றம் என்பவற்றைக் கொண்டு மதிப்பிட முடியாது. ஒவ்வொருவரது நடத்தைகளும் அவர்கள் புரிகின்ற சேவைகளும் அவர்களை மனிதப் புனிதர்களாக மேலோங்கச் செய்கின்றன. அதனால் இம்மண்ணை விட்டு பிரிந்துவிட்ட சேவையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிகச் சுருக்கமாகத் தந்துள்ளேன். இதற்கு மேல் விரிவாக எழுத எனது வயதும் நேரமும் பொருளாதாரமும் இடம்தருவதாக இல்லை. அதனால் இப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு எனது இளம் தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுகின்றேன்'.

இவ்வாறு இந்நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் நூலாசிரியை குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் இன்றைய காலத்தை வெளிச்சமிட்டு காட்டும் கருத்துகள் இவை. நமது ஆளுமைகளின் பணிகள், சேவைகளை எண்ணிப் பார்ப்பதானது எதிர்காலத்தைத் திட்டமிட்டு முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும்.

அந்த வகையில் இந்நாட்டின் சமூகம், சமயம், பொருளாதாரம், கல்வி, அரசியல், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் பங்களித்த நமது ஆளுமைகளை நூலாசிரியர் இந்நூலில் தொகுத்து ஆவணப்படுத்தி இருக்கின்றார். இதுவொரு வரலாற்று சாதனையும் அழியாத்தடம் பதித்த காரியமும் ஆகும். 143ஆளுமைகள் தொடர்பான விபரங்களை அவர்கள் பங்களித்த துறைகள் வாரியாக உள்ளடக்கியுள்ளது இந்நூல். இவ்வாறான நூலை தொகுப்பதற்கு அவர்களது விபரங்களையும் தகவல்களையும் திரட்டுவது என்பது எவ்வளவு தூரம் சவாலாக அமைந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அதேநேரம் இன்றைய பொருளாதார சூழலில் 568பக்கங்களைக் கொண்டதாக இந்நூலை ஆவணப்படுத்தி இருப்பதும் ஒரு இமாலயச் சாதனையேயாகும்.

கொரோணா நோயினால் உயிரிழ்ந்த நூலாசிரியையின் சகோதரர் இப்றாஹீம் ரஹ்மத்துல்லா ஸித்தீக் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலுக்கு பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் கௌரவ கலாநிதி எம்.ஐ.எம். அமீன், கலாநிதி ரவூப் செய்ன், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ். அப்துல் பாரி, நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் ஆகியோர் அணிந்துரைகளையும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம். இஸட் அஹ்மட் முனவ்வர், கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத் தலைவி திலகா பெரேரா, கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் தமிழ் பிரிவு முன்னாள் தலைவர் என்.எம்.எம். றெஸீன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் கலாபூஷணம் எஸ். ஐ நாகூர்கனி கவி வாழ்த்தையும் வழங்கியுள்ளனர்.

இந்நாட்டின் சமூக, சமய, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களித்த நமது முன்னோர்களை ஆவண ரீதியாக அறிந்து கொள்ளவென நீண்ட காலமாக இருந்து வந்த இடைவெளியை நீக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. எவரும் படித்து பயன்பெறக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்நூல் இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்று ஆவணம் என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார்

Comments