இக்பால் அலியின் நூல் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

இக்பால் அலியின் நூல் வெளியீடு

கடந்த 2022ஆகஸ்ட் மாதம் 28ல் கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட சிரஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான இக்பால் அலியின் நூல் பல்வேறுபட்ட கோணங்களில் வித்தியாசமான பல அம்சங்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் பின்புற அட்டையில் வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர்களின் நிறப் படங்கள் வரிசையாக  

பிரசுரமானது இந்நூலுக்கு வலுச் சேர்த்திருந்தது. இந்நூலானது லேக் ஹவுஸின் அனுசரணையுடன் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் வெளியிடப்பட்டது. சமூகம் சார்ந்த பணிகளிலும் தன்னார்வ தொண்டிலும் இலங்கையில் முன்னணியில் திகழும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 54வது தேசிய தலைவரான சஹீட் எம் றிஸ்மியின் சுய விபரக்கோவையுடன் தொடங்கி, விடாமுயற்சி இருந்தால் எதனையும் சாதித்துவிடலாம் எனும் அனுபவச் செய்தியை எடுத்தியம்பியுள்ளார். ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அச்சமூகத்தின் ஒற்றுமையேஎன்ற செய்தியை முழு இலங்கைக்குமே பறைசாற்றி கூறுகின்றார்.  

அரசின் சட்ட திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டோம் என்கின்ற வாக்குறுதியை சமூகம் சார்பாக வெளிப்படுத்தி உள்ளார். முதியோரின் தியாகங்களை பின்பற்றி புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட  

வேண்டும் என்ற ஒரு உண்மையும் இங்கு வெளிப்பட்டு உள்ளது.  

 மிகச் சிறந்த சேவை குடிநீர் வழங்குதல் எனும் தலைப்பிலான கட்டுரையின் மூலம் நீர் ஒரு அரிய செல்வம் நீர் வளமுள்ள பிரதேசங்களிலுள்ளவர்கள் அதனை வீண்விரயம் செய்யக்கூடாது என்பதையும் நீர் இன்மையால் உலகம் படும் அவஸ்தையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்காலத் தலைமைகளை உருவாக்கும் பணியை ஒரு பாரிய சமூக வலையமைப்பினைக் கொண்ட ஒரு சமூக சேவை நிறுவனமான வை.எம்.எம்.ஏ.பேரவை செய்து வருகிறது என்பதையும் இங்கு வலியுறுத்தி கூறியுள்ளார். மேலும் இப்பேரவையின் பெண்களுக்கான தனியான பிரிவின் மூலம் பெண்களின் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களும் விதவைகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு சேவைகளும் செய்யப்படுகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.  

 கொரோனா- 19பெருந்தொற்றுக் காலத்தில் வை. எம் எம். ஏ. தலைமையகமும் இதன் நாடளாவிய அங்கத்துவ வை.எம்.எம்.ஏ.க்களும் செய்த பாரிய சேவைகளை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். இன்னும்  

தேசிய பாதுகாப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யும் சிவில் நிறுவனங்களில் வை.எம்.எம்.ஏ பேரவை முன்னணியில் திகழ்கிறது என்கின்ற உண்மைச் செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.  

 விஷேட தேவையுடைய பிள்ளைகளின் ஆளுமையை உயர்த்த உதவிக்கரம் நீட்டுவோம் என்ற   பொது அறைகூவலையும் விடுத்து, அவர்கள் எதிர்கால வாழ்வில் வளம்பெற பலவேலைத் திட்டங்களையும்   ஆரம்பித்துள்ளார்.

மேலும் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நல்ல சூழலை அமைத்து கொடுக்க   வேண்டிய பாரிய பொறுப்பு மற்றும் அவசியம் பற்றி பெற்றோர்களுக்கு பிரயோசனமான ஆலோசனைகளையும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகம் அவ்வப்போது எதிர்நோக்கிய  

பிரச்சினைகளின் போதும், தட்டுத் தடுமாறும் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட்டு சமூகத்தை நேர்வழிப்படுத்தும் நேரிய நோக்கில் சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் பல அறிக்கைகளை இட்டு மக்களை நேரான பாதையில் சிந்தித்து செயற்பட வைத்த பெருமை  

அவருக்கேயுரியது. அவ்வப்போது பத்திரிகைகளில் இடப்பட்ட அறிக்கைகள் சுருக்கமாக இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இவ்விழாவின் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் இங்கு வருகை தந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் உச்சந் தொட்டவர்கள் ஆவார்கள். இந்நிகழ்விற்கு தலைமை வகித்தவர் இலங்கையின் பிரபல சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா (P.C.) ஆவார். பிரதம அதிதி உப வேந்தர் றமீஸ் அபூபக்கர் ஆவார். 

எஸ்.தஸ்தகீர்
கல்முனை குறூப் நிருபர்  

Comments