இலங்கைத் தேசத்தின் இன்றைய ஆபத்தான நிலைமை இதுதான்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைத் தேசத்தின் இன்றைய ஆபத்தான நிலைமை இதுதான்!

இலங்கை தனது வரலாற்றில் முதன் முறையாக பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு தற்போது முகம்கொடுத்துள்ளது. எரிபொருள் மற்றும் சமையல்எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் ஒவ்வொருநாளும் பல்வேறு நம்பிக்கைகளுடன் நீண்ட கியூ வரிசைகளில்காத்திருக்கும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் மோசமாக அதிகரித்துச் செல்கின்றன. உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகம். அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாட வேண்டியுள்ளது.

மக்கள் எதிர்கொள்ளும் இவ்வாறான இன்னல்களைத் தீர்த்து, நாட்டை சரியான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. இருந்தபோதும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது   என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இதனை அரசியல்வாதிகள் பலரால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது.

அதனைப் புரிந்து கொண்டாலும் அரசியல் ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் பலர் போலி வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.

இன்றைய நெருக்கடியில் இருந்து மீள்வதாயின் படிப்படியாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும் என்பதுடன், இதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கம் சார்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 22ஆம் திகதி பிரதமர், அரசின் செயற்பாடுகளை விளக்கியிருந்தார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதே தற்போதைய பிரச்சினையென்றும், இதற்கு சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி 2022ஆம் ஆண்டில் எஞ்சிய மாதங்களுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டமொன்றை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளுக்கும் அரசியல் கட்சிகள் யாவும் அர்ப்பணிப்புடன், அரசியல் இலாபங்களைக் கடந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் ரணில் தனது உரையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

‘நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறுவதற்காகவே பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்’ என தெரிவிக்கப்படுகின்ற விமர்சனத்துக்கும் அவர் பதில் வழங்கியிருந்தார்.

'நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டாரா?' என்று என்னை விமர்சிக்கிறார்கள். எவ்வாறாயினும் நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக பலர் நன்றி கூறுகின்றனர் மேலும் இந்தச் சிக்கல்களை சமாளிக்க எங்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை முன்வைக்க அவர்கள் முன்வந்துள்ளனர்' எனக் கூறியுள்ளார் பிரதமர்.

“எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். நமது பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அதுதான் இன்று நம் முன்பாக உள்ள மிகத் தீவிரமான பிரச்சினை. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இதைச் செய்ய நாம் எதிர்கொள்ளும் அந்நிய கையிருப்பு நெருக்கடியை முதலில் தீர்க்க வேண்டும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 700மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ளது. இதன் விளைவாக உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் எங்களுக்கு எரிபொருளை வழங்கத் தயாராக இல்லை. பணத்துக்கு எரிபொருளைக் கொடுக்கக் கூட தயங்குகிறார்கள்” என்றும் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். 

இலங்கை ஒவ்வொரு முறையும் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கும் போது உதவிக்கரம் நீட்டும் உண்மை நண்பனாக விளங்கும் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பிரதமர் நன்றியுடன் பிரஸ்தாபித்திருந்தார். இலங்கை இதுவரை இந்தியாவிடமிருந்து கடன் திட்டத்தின் கீழ் 4பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. இதற்கும் அப்பால் இலங்கைக்கு மேலும் உதவிகளைச் செய்வது குறித்து ஆராய்வதற்கு இந்திய உயர்மட்டக் குழுவின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா  தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீஅஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வீ. ஆனந்த நாகேஸ்வரன்  மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான  இணைச் செயலாளர்  கார்த்திக் பாண்டே  உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவே இலங்கை வந்திருந்தது.

இந்தக் குழுவினர் கடந்த வியாழக்கிழமை காலை இலங்கை வந்து உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்தி விட்டு மீண்டும் நாடு திரும்பியிருந்தனர். இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்து நாம் விசேடமாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சுனாமிப் பேரலைத் தாக்கம், அதன் பின்னர் கொரோனா தொற்று போன்று பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களில் முதன் முதலில் ஓடிவந்து இலங்கைக்கு நேசக்கரம் நீட்டிய நாடு இந்தியா என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

இந்தியாவின் உதவிகளுக்கு அப்பால் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுக்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விளக்கியிருந்தார். நாட்டை மீட்டெடுப்பதில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதே அரசின் விருப்பமாகும். அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி கூடுதல் கடன் வசதியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம். இதற்காக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கான உடனடி வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

'மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த தீர்வு கிடைத்தால் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் நீங்கள் நாட்டிற்கு ஒரு நடைமுறை மற்றும் மிகவும் சாதகமான திட்டத்தை வைத்திருந்தால் அதை முன்வைக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம். அரசியல் கட்சிகள் விரும்பினால் அவைகளால் முன்வைக்கப்படும் தீர்வுகளை   பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். அவர்களுக்குத் தேவையான இடத்தையும் வாய்ப்பையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' எனவும் பிரதமர் தெரிவித்தார்.

“வருமானம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடலுக்காக இலங்கைக்கு விஜயம் செய்தது. அதற்கான அறிக்கையை எங்களிடம் முன்வைத்தனர். திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான குழு இலங்கை வந்தடைந்ததும் குழுவுடனான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். நாங்கள் ஆரம்ப விவாதங்களை முடித்து விட்டோம், பொது நிதி, நிதி, கடன் நிலைத்தன்மை, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு போன்ற பல்வேறு துறைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னோக்கிச் செல்லும் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்க ஓகஸ்ட் 2022இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படவிருப்பதுடன், நவம்பர் மாதத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கும் அப்பால் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான பல புதிய சட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைப்பது பற்றி பிரதமர் பிரஸ்தாபித்திருந்தார்.  இது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

'உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியக் கடன் வரியின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் இலங்கைச் சந்தைக்கு இருப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் இலங்கை நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்.

நாட்டின் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அனைத்துக் கட்சிப் பிளவுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் விவாதங்களில் பல குழுக்கள் கலந்து கொள்கின்றன என்பதையும் நான் கவனிக்க விரும்புகிறேன்.

நாட்டில் விவசாய பண்ணைகளை நிறுவுவதில் முன்னணியில் இருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை உறுதியளித்துள்ளன. இந்த செயல்முறைக்கு எந்த ஆதரவையும் அரசாங்கத்திடம் கோராமல் இந்தப் பண்ணைகளை அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் குறிப்பிட்டது போல் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பிரதேசங்களை அவரது கட்சி ஏற்கனவே தெரிவு செய்துள்ளது.

இதேவேளை, புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான பாரியளவில் பயன்படுத்தப்படாத காணியை விவசாய தேவைகளுக்காக ஒதுக்குவதற்கும் அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார். திரு. சஜித் பிரேமதாச மற்றும் திரு. அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமது விவசாயத் திட்டங்களுக்காக காணிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இரு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறு உணவுப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரிடமும் தெரிவித்துள்ளேன்' எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டார்.

மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதுடன் தொடர்புபட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கான வழிகள் குறித்தும் பாராளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கும் அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த தனிநபர் சட்டமூலம் குறித்த வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் முன்வைத்திருந்தது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் சட்டமூலத்தில் உரிய மாற்றங்களை உள்ளடக்கியதாக 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என்பது பிரதமரின் கருத்தாக இருந்தது.

சிறிது காலத்துக்கு நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த நேரத்தில் நம் நாட்டைப் பற்றி மட்டும் நினைத்தால் வரவிருக்கும் இந்த பேரழிவிலிருந்து நம் தாய்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சம்யுக்தன்

Comments