பசறை பஸ் விபத்து படிப்பினை தருமா? | தினகரன் வாரமஞ்சரி

பசறை பஸ் விபத்து படிப்பினை தருமா?

அம்மாவும் அப்பாவும் ஏன் தூங்கிக்கிட்டே இருக்காங்க..? இது ஒரு குழந்தையின் கேள்வி. சாதாரண குழந்தையா அது இல்லை. பசறை பஸ் விபத்தில் தாயையும் தந்தையையும் பறிகொடுத்து விட்டு பதில் தெரிந்துகொள்ள முடியாத பரிதாபத்துக்குரிய குழந்தை.

கடந்த 20ஆம் திகதி காலை பதுளை செங்கலடி வீதியின் பசறை 13ஆவது மைல்கல் அல்லோல கல்லோலப்படுகிறது. 200 அடி பள்ளம். இரக்கமே இல்லாது விதியின் விளையாட்டு. லுணுகலையிலிருந்து பதுளை வீதிக்கூடாக கொழும்பு நோக்கி பயணித்த அந்தத் தனியார் பஸ் உருள்கிறது. புரண்டு உருண்டு தவிடுப்பொடியாகின்றது. மரண ஓலங்கள். கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிகின்றது. 14 உயிர்கள் பலி. பலருக்கு பலத்த காயம். வாழ்வே மாயம் என்னும் தத்துவத்துக்கு தக்க சம்பவம்.

எதிரே வந்த டிப்பர் வாகனத்துக்கு வழிவிட முனைந்த போதுதான் இந்தப் பரிதாபம் நிகழ்ந்தது. விசாரனைகள் முடிந்து சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸ் தரப்பு அறிவித்து விட்டது. தப்பியோடிய லொறி சாரதியை தேடிப்பித்து சிறையில் அடைத்து விசாரணைவரை கொண்டுபோய் விட்டுள்ளது. இங்கே இன்னுமொரு அவலத்தையும் குறிப்பிடவே வேண்டும். சம்பவம் இடம் பெற்ற பாதை ஒரு இருவழி நெடுஞ்சாலை. இதில் ஒரு வழியோரமாக பாரிய கற்பாறையொன்று உருண்டு வந்து ஓட்டிக் கொண்டிருக்கிறது. ஆறுமாதத்துக்கு முன்பு வந்த பாறை. அதை அகற்ற யாருமே அக்கறை கொள்ளவில்லை. அரச அதிகாரிகளின் அசமந்தம். அட பாறைதான் அப்படியே இருக்கிறது. ஒரு அவதான பலகையாவது வைத்திருக்க வேண்டாமா? ஊகூம் வைக்கவில்லை.

எல்லாம் நடந்து முடிந்த பின்னரே எச்சரிக்கை சமிக்ஞைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. முழுநாட்டையே விநாடிப்பொழுது விறைக்க வைத்த இந்த விபத்து யார் மனதிலாவது உறைத்ததா?

இப்போது போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முதன் முதலாக வாகனங்களின் சக்கரங்களை சோதனையிட ஆரம்பித்துள்ளனர். பாதையில் ஓடுவதற்குப் பக்குவமா? இல்லை, பல நாட்கள் ஒடி தேய்மானம் கண்டவையா? என்று கண்டு பிடிக்கும் முயற்சி. அதுவும் இப்படி.. பாதையோரம் சிறிய ரக வாகனம் ஒன்றின் சக்கரங்களைச் பரிசோதனை செய்து கொண்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு அதிகாரியின் உயிரை காவு கொடுத்தலுடன் ஆரம்பாமாகி இருக்கிறது.

எதிர்த் திசையிலிருந்து அசுர வேகத்தில் வந்த வாகனம் ஒன்று பரிசோதனை செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியையும் அவருக்கு அருகில் நின்ற சிறியரக வாகன உதவியாளர் ஒருவரையும் முட்டிமோதி சாகடிக்கச் செய்துவிட்டது.

அண்மையில் பதுளை நகரில் மற்றுமொரு மனமுருக்கும் சம்பவம். முதல்நாள் ஆரம்பப் பாடசாலைக்குச் சென்ற பாலகனை பின்னால் நகர்த்தப்பட்ட கனரக வாகனமொன்று மோதி பலியெடுத்தது. பசறை விபத்து இடம் பெற்ற மறுதினமே அதே வீதியில் முச்சகரவண்டியொன்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் அந்த இடத்திலேயே அகால மரணம்.

சாரதிகளுக்கு சட்ட விதி முறைகள் உண்டு. அதை பசறை விபத்தின்போது எதிரே வந்த டிப்பர் வாகன சாரதி மதித்து செயற்படவில்லை என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன. உண்மையில் எத்தனை சாரதிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்? வீதி விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளை உள்வாங்கிக் கொள்ளும் நாடாக இலங்கை மாறியுள்ளது. தினம் ஒன்றுக்கு சராசரி 9 பேர் வரை வாகன விபத்தில் பலியாகி வருகிறார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் இதுவொரு சாபக்கேடு. இலங்கையை பொறுத்தவரை மலையகம் அதிக விபத்துக்களை சந்திக்கும் இடமாக காணப்படுகின்றது. இதற்கு புவியியல் அமைவும் ஒரு காரணம். இது சூழ்நிலைகள் உருவாவதை நிர்ணயம் செய்கின்றது. சூழ்நிலைகளைக் கவனமாக கையாளாமையே பசறை பஸ் விபத்து போன்றவை நடக்க ஏதுக்கள். விபத்துக்கள் என்றாலே மனதில் தோன்றுபவர் சாரதியாகவே இருக்கின்றார்.

வீதிப் பாதுகாப்பு பற்றி யாருமே அலட்டிக் கொள்வது இல்லை. சாரதிகள் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள் பொதுவாக அதிக வேகம் என்பது ஆபத்தில் கொண்டு போய் விடுகின்றது. இதே போல பாதசாரிகளும் பக்குவமாக பயணிப்பது குறைவு. சாரதிகளைப் போலவே அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வது, நினைத்த இடத்தில் பாதையைக் கடக்க முனைவது என்று எச்சரிக்கை உணர்வே இல்லை. மது பாவனை, கவனம் இன்மை, வாகனத்தில் பயணிப்பவர்கள் பற்றிய கரிசனை இல்லாமை, அநுபவம் இன்மை, அதிக வேகம், எதிர்வரும் வாகனம் பற்றிய முன்னெச்சரிக்கை உணர்வு எதுவும் இல்லாத சாரதிகளாலேயே அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

2013 இல் தீபாவளி தினத்துக்கு முதல் நாள் பண்டாரவளை பூனாகலை வீதியில் பஸ் பள்ளத்தில் விழுந்ததனால் பல அப்பாவித் தொழிலாளர்கள் அவலச்சாவு. அலைபேசியில் கதைத்துக் கொண்டே வாகனத்தைச் செலுத்திய சாரதியின் கவனயீனமே காரணம். சில வாகன ஓட்டுனர்கள் பாதசாரிகளை எதிரிகள் போலவே எடைபோட்டு கண்மண் தெரியாமல் வாகனம் செலுத்துவதைக் காணலாம் இவ்வாறான நேரத்தில் பாதசாரிகளின் சிறு பதற்றம் கூட பாதகமான விளைவுகளை உண்டாக்கிவிடும். வளைவுகளைக் கடப்பதில் கவனம் எடுக்காமை, போட்டி போட்டுக் கொண்டு வாகனம் செலுத்தல், போக்குவரத்துக் குறியீடுகளை புறக்கணித்தல் என்பன சாரதிகளின் பலவீனம். ஓய்வின்றி வாகனம் ஓட்டுவதும் ஆபத்தில் மாட்டிவிடும்.

இது போலவே காலநிலையைக் கணக்கில் எடுக்காமல் கண்டபடி கதைப் பேசிக் கொண்டு வாகனத்தை செலுத்தும் போக்கும் பாதகத்தை உண்டாக்கும். மலையகத்தின் பல பகுதிகள் காலை அந்தி நேரங்களில் பனி மூட்டமாகவே காணப்படும். இவ்வாறான வேளைகளில் வாகனத்தைச் செலுத்துவது சிரமமாகவே இருக்கும். மலைகத்தின் பல பாதைகள் இன்னும் அபிவிருத்திச் செய்யப்பட்டாமலே காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி முச்சக்கர வண்டி, இரு சக்கரவண்டி, சிறு ரக வாகனங்கள், வேன்கள் விபத்துக்குள்ளாகின்றன. கரடுமுரடான தோட்டப் பாதைகளில் நோயாளிகளைக் காவிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் விபத்தை எதிர்நோக்கின்து.

தோட்டபாதைகளைத் தோட்ட நிர்வாகங்களே அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்னும் நிலை இன்று இல்லை. பிரதேச சபைகளால் இவற்றை அபிவிருத்தி செய்ய முடியும். மேடு பள்ளம், குன்று குழி என்று ஆபத்தானதாகவே பல தோட்டபாதைகள் இன்னும் இருப்பது குறிப்பிடத்தகது. மலையகத்தில் அதிகமான இளைஞர்கள் சாரதிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் வேகமாக வாகனத்தைச் செலுத்துவதை விநோதமாக எண்ணுகின்றார்கள். அதிக வேகம் காரணமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றது. இலங்கையைப் பொருத்தவரை வீதி விபத்துகள் சம்பந்தமான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டே உள்ளன. ஆனால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன. வீதிப்பாதுகாப்புக் குறித்ததான விழிப்புணர்வு சாரதிகளுக்கு மிகமிக அவசியம். பெரும்பாலான விபத்துக்களுக்கு சாரதிகளின் அசிரத்தையே அடிப்படைக் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. தவிர உளவியல் ரீதியில் பாதிக்கப்படாதவர்களாக சாரதிகள் கடமையில் ஈடுபடுவது முக்கியம்.

மனோ ரீதியில் குழப்பமடைந்த நிலையில் நிதானமாக வாகனம் செலுத்த முடியாது. வாகனத்தைச் செலுத்தும்போது மது அருந்தியிருப்பது ஆபத்தானது. அத்துடன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டே அலைபேசியையும் பாவிப்பதால் கவனம் சிதறிப் போக இடமுண்டு. உரிய இடத்தை அடைவதில் அவசரம் காட்டுதல் வாகனத்தை முந்திச் செல்லும் முனைப்பு வாகனத்தைக் கட்டுப்படுத்துவதில் சவாலை உண்டாக்கும்.

பன். பாலா

Comments