உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒபரா வின்பிரே மேகன் உரையாடல் | தினகரன் வாரமஞ்சரி

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒபரா வின்பிரே மேகன் உரையாடல்

சம்பிரதாயங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். அதன் காரணமாக அழிந்து போகும் உயிர்களும் ஏராளம். அவ்வாறான மனித உயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒருவருமில்லை. அமைதியாக பொறுத்திருப்பது அல்லது அமைதியாகவே மரணித்துப் போவது மாத்திரமேயாகும். என்றாலும் சில நேரம் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சம்பிரதாயங்கள் காரணமாக அழிந்து போன உயிர்களுக்கான இழப்பீட்டை அதே பரம்பரையிலிருந்து வேறொருவர் என்றாவது ஒருநாள் பெற்றுக் கொள்ளக்கூடும்.

அண்மையில் உலகையே உலுக்கிய ஒப்ரா வின்பிரேயுடனான மேகன், இளவரசர் ஹரி ஆகியோரது உரையாடலையும் அவ்வாறான மதிப்பீட்டிற்கு உட்படுத்த முடியும். எனினும் உண்மையிலேயே இளவரசர் ஹரி, மேகனுடன் அவர் நடாத்திய அந்த உரையாடலை சில தலைப்புக்களில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒபரா வின்பிரே எப்படியேனும் உலகினது கவனத்தை ஈர்க்கக் கூடிய உரையாடல்களை நடாத்துவதற்கு ஆற்றல் பெற்றுள்ள ஒரு ஊடகவியலாளராகும்.

பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் முழு உலகினதும் கவனத்தையும் பெற்றிருந்த பல தகவல்களுடனான அரச குடும்பத்தின்  முன்னாள் அங்கத்தவர்களான ஹரி மற்றும் மேகனுடன் மேற்கொண்ட உரையாடல் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. அந்த உரையாடலை உலகம் முழுவதிலும் மக்கள் தமது அனைத்து வேலைகளையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தார்கள். அதில் மேகன் மற்றும் ஹரி கூறிய விடயங்கள், வெளிப்படுத்திய அனேக விடயங்கள் மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒபரா  மேகன் மற்றும் ஹரி ஆகியோருடனான உரையாடலுக்குள் நுழைந்ததும் கூட அரச குடும்பத்தில் அவர்களது வாழ்க்கை தொடர்பான தகவல்களை வெளியில்  கொண்டுவரும் நோக்கில்தான் என்பது தெளிவானதாகும்.

தான் அரச குடும்பத்தில் இணைந்ததன் பின்னர் தான் பல்வேறு அவமதிப்புக்களுக்கு உள்ளானதாகவும், ஒரு தடவை தான் தற்கொலை செய்து கொள்வதற்கும் நினைத்ததாக மேகன் கூறியுள்ளார்.

தான் ஒரு பிரித்தானியர் அல்லாததால் தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடாத்தியதாகவும், தனக்குப் பிறக்கும் குழந்தையின் நிறம் என்னவாக இருக்கும் என அரச குடும்பத்தின் அங்கத்தவர் ஒருவர் ஒரு தடவை சந்தேகம் தெரிவித்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

திருமண நிகழ்வுக்கு முன்னர் இளவரசி கேட் உங்களை அழ வைத்தார் என்று பரவும் வதந்திகள் உண்மையானவையா என ஒபரா கேட்ட கேள்விக்கு, அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்றும் மேகன் பதிலளித்துள்ளார். எனினும் உலகிற்கு காட்டுவதற்காக நடாத்தப்பட்ட திருமண விழாவுக்கு நான்கு தினங்களுக்கு முன்னர் தானும், ஹரியும் சிறிய தேவாலயம் ஒன்றில் உண்மையாகவே திருமணம் செய்து கொண்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்தினுள் ஏனைய அனைத்து அங்கத்தவர்களைப் போல தான் பொறியில் சிக்கிய வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருப்பதாக இளவரசர் ஹரி இந்த உரையாடலில்  கூறினார். அந்தப் பொறி என்ன என ஒபரா கேட்டபோது, அது நடைமுறைகளால் ஏற்படுத்தப்பட்ட பொறி என்றும், தான் மாத்திரமின்றி அரச குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களும் அந்தப் பொறியில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் இளவரசர் ஹரி பதிலளித்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரும் அதில் அடங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இளவரசர் ஹரி  தனது தாயார் இளவரசி டயானா மீது மிகவும் அன்பு கொண்டவர்.

தனது தாயாரின் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டமை  தொடர்பில் தனது தந்தைக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் இளவரசர் ஹரியிடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்த நேர்காணலில் அரச குடும்பத்தின் அங்கத்தவராக அரச குடும்பத்தை குற்றம்சாட்டியுள்ளார்.

தான் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதை அடுத்து தனது தந்தையான இளவரசர் சார்ள்ஸ் தனது தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் அளிக்கவில்லை என்றும் இளவரசர் ஹரி கூறியுள்ளார். ஒபரா அவரது தந்தை பற்றி கேள்வி கேட்ட சந்தர்ப்பத்தில் சட்டென்று பதில் கூறாது ஹரி, சிறிது நேரம் மௌனமாக இருந்துள்ளார். பின்னர் உண்மையிலேயே தனது தந்தை தன்னை கைவிட்டு விட்டார் என்ற உணர்வு தோன்றியதாக பதில் கூறியுள்ளார்.

எனினும் தனக்கும், பிரித்தானியாவின் ராணி யான தனது பாட்டிக்கும் இடையில் சிறந்த உறவு நீடிப்பதாகவும் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

தனது சகோதரருக்கும் தனக்கும் இடையிலான உறவு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தான் தனது சகோதரர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள போதிலும் தாம் இருவரும் இரு வேறு பாதைகளில் பயணிப்பதாகவும் கூறியுள்ளார். தனக்கும் மேகனுக்கும் பிறக்கும் குழந்தையின் இனம் தொடர்பில் அரச குடும்பத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என ஒபரா கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஹரி, அது தொடர்பில் இடம்பெற்ற விடயங்களை தான் உலகிற்கு வெளிப்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தான் அரச குடும்பத்திலிருந்து வெளியேறிதன் பின்னர் தனக்கு அரச குடும்பத்திலிருந்து கிடைக்கும் நிதி நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் தான் முன்னரே எண்ணியிருந்ததாகவும் தெரிவித்த இளவரசர் ஹரி, இது தொடர்பில் மேகன் தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்.

இளவரசர் ஹரி, சாதாரண குடும்பத்தில் பிறந்த, விவாகரத்து பெற்ற மேகனைத் திருமணம் செய்து கொண்டதை பெரும்பாலான பிரித்தானியர்கள் அங்கீகரிக்காத போதிலும் உலகின் அனேக நாடுகளின் மக்கள் அவரு க்கு ஆதரவைத் தெரிவித்தது அவர் அரச குடு ம்ப சம்பிரதாயங்களை விட்டு விலகியதனாலாகும்.

பின்னர் இளவரசர் ஹரி மேகனுடன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கை  மேற்கொண்டனர். இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றதன் பின்னர் டயானாவும் கூட தொடர்ந்தும் அரச குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக இருக்கவில்லை. எனினும் மேகனைத் திருமணம் செய்து கொள்வதற்கு இளவரசர் ஹரிக்கு அரச குடும்பத்தின் அனுமதி கிடைத்தது என்பதை மறந்து விட முடியாது. இதன் போது அரச குடும்பம் கடந்த கால அனுபவங்களின் ஊடகவோ ஏதேனும் நெகிழ்வுத்தன்மையினை கடைபிடித்துள்ளது என்பது தெளிவானதாகும். திருமண மண்டபத்திற்கு மேகனை அழைத்து வந்ததும் இளவரசர் சார்ள்ஸ்தான் என்பதை இளவரசர் ஹரி மறந்து போனது கவலைக்குரிய விடயமாகும். அந்நேரமே இளவரசர் ஹரி பிரித்தானிய அரச குடும்பத்தின் அத்திவாரத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டார்.

தமது மாளிகையின் மீது கல்லெறிவது என்பது எந்தளவுக்கு தார்மீகமானது என்பதை இளவரசர் ஹரி சிந்திக்கவில்லை என்பது தெளிவான விடயமாகும். 

இவ்வாறான உரையாடல்களைச் சமூகத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் ஊடக நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தமது வருமானத்தை உயர்த்திக் கொள்வதை மாத்திரமேயாகும். சில நேரம் இவ்வாறான உரையாடலில் பங்குபற்றியதற்காக ஹரி, மேகன் தம்பதியினருக்கு பெருமளவு பணம் கிடைத்திருக்கவும் கூடும். இந்த உரையாடலை ஒளிபரப்பியதன் மூலம் அதனை தயாரித்த சீ.பீ.எஸ் பிரைம் டைம்  நிறுவனத்திற்காக ஹார்போ தயாரிப்பாளர்கள் எந்தளவு இலாபத்தை பெற்றுள்ளார்கள் என்ற விடயம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. என்றாலும் உலகம் முழுவதும் இந்த உரையாடல் பிரபல்யம் அடைந்துள்ளது என்பது மட்டும் நிஜமாகும்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருடனான உரையாடலின் போது, தாம் மற்றொரு குழந்தையை எதிர்பார்ப்பதாகவும், அதுவொருபெண் குழந்தை  என்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். உண்மையிலேயே அவர்கள் இருவரும் மிகவும் அன்புடன் வாழ்க்கை நடாத்தும் தம்பதியினர் என்பது தெளிவானதாகும்.

சில நேரம் அரச குடும்பத்தினால் தனது தாய்க்கு இடம்பெற்ற அநீதி, தனது தந்தையினால் தனது தாய்க்கு ஏற்பட்ட  அநீதிகள் தொடர்பான தாக்கம் இளவரசர் ஹரியினுள் இருக்கவும் கூடும்.

டிரோனி வேவலகே
தமிழில்: எம்.எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments