சர்வதேச சவாலை முறியடிப்பதில் அணிதிரளும் அரசியல் சக்திகள் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச சவாலை முறியடிப்பதில் அணிதிரளும் அரசியல் சக்திகள்

சர்வதேச சவாலை முறியடிப்பதில் அணிதிரளும் அரசியல் சக்திகள் இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் சவால் மிக்க வருடமாக அமைந்த 2020ஆம் ஆண்டு நிறைவடைந்து, புதுப்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் புதிய ஆண்டு மலர்ந்துள்ளது. கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான தொற்றுநோய் பாதிப்பினால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இலங்கை விதிவிலக்காக அமையவில்லை.

இவ்வாறான நிலையில் பிறந்திருக்கும் புதிய வருடம் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்துக்கும் மேலும் சவால் மிக்கதாக அமையப் போகிறது. குறிப்பாக இலங்கைக்கு பல தரப்புகளில் புதிய ஆண்டு சவாலாக அமையும் என்றே கூற வேண்டும். உள்ளக ரீதியான சவால்கள் மற்றும் சர்வதேச ரீதியான சவால்களுக்கும் இலங்கை அரசாங்கம் முகங் கொடுக்க வேண்டியதாக இருக்கப் போகின்றது என்பதே அவதானிகளின் கருத்தாகும்.

இதிலும் விசேடமாகக் குறிப்பிட்டுக் கூறுவதாயின் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை கையில் எடுப்பதற்கு சர்வதேசத்தின் சில தரப்புக்கள் முயற்சிப்பதால், அவற்றை முறியடிப்பதற்கான சவால் இலங்கை அரசுக்குக் காணப்படுகிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றமை அல்லது அவை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றமையாகும்.

குறிப்பாக தற்போதைய பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலப் பகுதியில் அடிக்கடி இவ்விடயம் அரசியல் களங்களில் அதிகம் பேசுபொருளாக அமைந்தது. எனினும், 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்க காலப் பகுதியில் ஜெனீவா விவகாரம் பாரியளவில் அலட்டிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

மனித உரிமை நிலைமைகளை சீர் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கம் முன்னர் ஏற்றுக் கொண்ட விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நல்லாட்சி அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
பொறுப்புக் கூறல் விடயத்தில் கலப்பு முறையில் அன்றி உள்ளகப் பொறிமுறையொன்றில் விசாரணைகளை நடத்துவற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்ததற்கு அமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் என்பன அமைக்கப்பட்டன. ஒரு சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குரிய அரசியல் சூழல் அக்காலப் பகுதியில் நிலவவில்லை.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. ஆரம்பம் முதலே நல்லாட்சி அரசாங்கம் ஜெனீவாவில் இலங்கையைக் காட்டிக் கொடுத்து விட்டது என விமர்சித்து வரும் புதிய அரசாங்கமும் அரசுக்கு ஆதரவான தரப்பினரும் இலங்கையின் இறைமையில் எந்தவொரு சர்வதேச சக்தியும் தமது பலத்தினைப் பிரயோகிக்க முடியாது எனக் கூறி வருகின்றன.

அது மாத்திரமன்றி, இலங்கையின் முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட பிரேரணையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச சவாலை முறியடிப்பதில் அரசுக்கு ஆதரவாக தேசியவாத அரசியல் சக்திகள் அணிதிரண்டு வருவதனால் இலங்கை அந்தச் சவாலை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கு பின்னிற்கப் போவதில்லை என்பது உண்மை.

இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் அடிபணிந்து செல்லப் போவதில்லையென்றும், தேவை ஏற்பட்டால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிக் கொள்வதற்கும் பின்னிற்கப் போவதில்லையெனவும் அரச தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் புதிய பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழர் தரப்பின் சார்பில் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆகியோரைச் சந்தித்து இது பற்றிய கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகவும், வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்து வாழ் தமிழர் அமைப்புக்களும் இது விடயத்தில் முனைப்புக் காட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வழமையாக மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடர் என்றால் பெப்ரவரி மாதத்திலேயே இந்த விடயம் சூடுபிடிக்கத் தொடங்கும். எனினும், இம்முறை அது டிசம்பர் மாதத்திலேயே பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று புதிய பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளேயாகும்.

யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகள் எந்தளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன என்பதற்கான விடை இதுவரை தெளிவாக இல்லை. அதுமாத்திரமன்றி சர்வதேச நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமையும் போது தமது பிடியை தளர்த்துவதும், தமக்கு சார்பான அரசாங்கமொன்று அமையாதவிடத்து அதன் மீது தமது பிடியை இறுக்குவதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.

பூகோள ரீதியாக இலங்கையின் அமைவிடம் மற்றும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்பனவும் இவ்விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றன. வெறுமனே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்துவிட வேண்டும் என்பதில் சர்வதேசம் அதீத அக்கறை கொண்டுதான் தமது காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது என்று கூறி விட முடியாது.

தற்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இலங்கை மாத்திரமன்றி அனைத்து உலக நாடுகளும் கொவிட்19 தொற்று நோயின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படக் கூடிய தீர்மானத்தின் வாயிலாக ஏற்படுகின்ற நெருக்கடிகள் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விடயமும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.

சர்வதேச நாடுகள் தமது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை மீதான பிடியை இறுக்குவதற்கு முயற்சித்தால் பொருளாதார ரீதியில் அது எவ்வாறான தாக்கத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதற்கும் விடை தேடப்பட வேண்டும். தொற்றுநோய் சூழலால் ஏற்கனவே வாழ்வாதாரம் வெகுவாக இழக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கள் இழக்கப்பட்டு அன்றாட சீவியத்தை முன்னெடுத்துச் செல்ல பலர் திணறிக் கொண்டிருக்கின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

இந்தப் பின்னணியில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏதாவது பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலோ அல்லது இலங்கையின் பிடியை இறுக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச நாடுகளினால் நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்டாலோ நாட்டு மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படக் கூடிய சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டியுள்ளது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. தமிழர்களின் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆயினும், உரிமைப் பிரச்சினைக்கு சமாந்தரமாக வாழ்வாதாரப் பிரச்சினைக்குரிய தீர்வுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழர் தரப்பில் செயற்படக் கூடிய அரசியல்வாதிகள் வெறுமனே மக்களின் உரிமை என்ற விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளாது, களயதார்த்தத்தையும் புரிந்து கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும். மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் முழுமையான தீர்வைப் பெற்றுத் தரும் என்பது நூறுவீதம் சாத்தியமற்றது என்பதை கடந்த கால அனுபவங்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளன.

எனவே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் உரிமைப் பிரச்சினைகளையும் ஒருங்கே தீர்ப்பதற்கான வழிகள் பற்றி சிந்தித்து செயற்படுவது நீண்ட காலமாக தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு விமோசனமாக அமையும்.

பி.ஹர்ஷன்

Comments