இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் தலைமைகள் | தினகரன் வாரமஞ்சரி

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் தலைமைகள்

இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறக்கூடிய சக்தி எனவும் புகழாரம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காணும் விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினது ஆதரவை பெற்றுக்கொள்வதில் தமிழ் தலைமைகள் மிகவும் முனைப்பாக செயற்பட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள இலங்கை அரசியல் தலைமையை சரிவர கையாண்டு, தமிழர் தரப்பு நியாயங்களை அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறி நியாயமான ஒரு தீர்வினை வழங்க கூடிய சக்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் இலங்கைத் தமிழரது பிரச்சினை தீர்வு எட்டாக்கனியாகி விடும் எனவும் இலங்கை தமிழ் தலைமைகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளன.

இன்றைய இலங்கையின் தலைமைக்கு தமிழர் தரப்பில் பிரச்சினைகளை எடுத்துக் கூறக்கூடிய ஒரே ஒரு சக்தியாக இந்திய அரசாங்கத்தினை, அதிலும் இன்றைய பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய அரசாங்கத்தினை தமிழ் தரப்பு நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுடன் இதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளை இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் அவ்வப்போது நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கான நல்லெண்ண சமிக்ஞையை இந்திய அரசாங்கம் இலங்கை தமிழ் தலைமைகளுக்கு அவ்வப்போது காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் தீர்வு விடயத்தில் நல்லதொரு தீர்வினை கண்டுவிட வேண்டும் என்று தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் வடக்கில் கட்சி பேதமின்றி கூடிய அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புதுடில்லியில் தனது மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்க தலைமைகளுடன் இருநாட்டு நல்லுறவு நட்புடன் தொடர வேண்டும் என்பதில் இந்திய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வரும் அதேவேளை இலங்கையில் மிக நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த இலங்கை அரசாங்கங்கள் தவறி விட்டதனால் இலங்கை தமிழருக்கு இந்தியாவே ஆதரவாக இருந்து வந்த வரலாறு காணப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் அவ்வப்போது ஆதரவு கோரி வருவதன் காரணமாக இந்திய அரசாங்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றது.

குறிப்பாக நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய உதவியாக வடக்கே பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தி அதனை வடிவமைத்துக் கொடுத்தமையை தமிழ்த் தரப்புகள் வரவேற்றுள்ளன. அதேபோன்று வடக்கில் 40,000 வீட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வருகின்றமையை தமிழ் மக்கள் சார்பில் தமிழ் அரசியல் தலைமைகள் வரவேற்றுள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு முன்னைய காலங்களைவிட பல உதவிகளை குறிப்பாக மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதும், தேவையான வைத்திய சாலை மற்றும் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் இலங்கை தமிழ் தலைமைகள் வரவேற்றுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு இன்று நாடு பூராகவும் சுகாதார சேவையில் உள்ள அம்புலன்ஸ் வசதித் திட்டங்கள் வடக்கு கிழக்கில் மற்றும் மலையகப் பகுதிகளில் பேருதவியாக இருந்து வருவதையும் தமிழ் தலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியான வேண்டுகோள்களின் காரணமாக மோடி தலைமையிலான இன்றைய அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை காணும் என நம்பிக்கை இலங்கை தமிழ் தலைமைகளுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் எந்த ஒரு வெளிநாடும் தலையிட முடியாது எனும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு இருந்து வருகின்ற போதிலும், இந்தியாவின் தலையீட்டை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டாது எனும் நம்பிக்கை இலங்கை தமிழ்த் தரப்பிற்கு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Comments