கலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி

கலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை

கலாநிதி சுக்ரியின் மறைவு இந்த நாட்டு முஸ்லிம் சமூக கல்வி மேம்பாட்டில் பாரியதொரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காகவே அன்னார் அர்ப்பணித்திருக்கிறார். எந்த ஒரு காரியத்திலும் அவசரப்படாமல் தடுமாறாமல் மிக அமைதியுடனும் பொறுமையுடனும் செயற்படுவதில் அவரை மிகைத்தவர் எவருமில்லை என்று என்னால் உறுதியாக கூறமுடியும். இந்த நாட்டில் இஸ்லாமிய கலாசார பாரம்பரியங்களையும் அரபு மொழி துறையையும் உள்ளடக்கிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது கலாநிதி சுக்ரியின் நீண்ட கால கனவாகும் அவரது கனவு என்றாவது ஒருநாள் நனவாகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் காணப்பட்டார்.

பேருவளை ஜாமியா நளீமியா காலா பீடத்தை முழுமையான இஸ்லாமிய பல்கலைக் கழகமாக மாற்றுவதன் மூலம் இது சாத்தியப்படும் முடியும் என்று அவர் எதிர்பார்த்தார். கடந்த காலத்தில் அதற்கான சில பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இடை நடுவில் முயற்சி தேக்கம் கண்டு விட்டது.

உண்மையிலேயே கலாநிதி சுக்ரி அவர்கள் பன்முக ஆளுமை கொண்ட மனிதர் என்பதில் எந்தவித மறுப்பும் கிடையாது அவரைப் பற்றிய முழுமையான வரலாறு எப்போதோ எழுதப்படவேண்டியது என்பதை பல தடவைகள் அஷ்ஷேக் ஏ.சி அகார் முஹம்மத் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு முழுமையான ஆவணமாக அவரது வாழ்க்கை பதியப்பட வேண்டும். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தென் இலங்கை கரையோரத்தின் மாத்தறை மண்ணில் 1940 ஜூன் 24ஆம் திகதி பிறந்த கலாநிதி சுக்ரி சிறிய வயதிலேயே சிறந்த ஆற்றல்களைக் கொண்டிருந்ததாக பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதில் சிறிய வயதிலேயே ஆளுமை கொண்டவராக இருந்துள்ளார். அன்னாரது பணிகளை பாடசாலை ஆசிரியர்கள் கூட மெச்சிப் பாராட்டினர்.

 கலாநிதி சுக்ரி அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையுடன் கூடியதாக தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட மனிதராக மாற்றிக் கொண்டவராவார். சகவாழ்வு மத நல்லிணக்கத்தின் அவசியத்தை சின்ன வயதிலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளார். முஸ்லிமாக இருக்கலாம் மாற்றுமத சகோதரர்கள் ஆக இருக்கலாம் அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் ஒழுங்காகவும் நெருங்கிப் பழகி சகலரதும் மனங்களையும் வென்றெடுத்த ஒரு மகானாக கலாநிதி சுக்ரியை நான் பார்க்கின்றேன். அன்னாரது பள்ளி வாழ்க்கையின் போது அவர் பௌத்த கிறிஸ்தவ மாணவர்களுடன் இணைந்து கற்கும் வாய்ப்பு இதற்கு வழி வகுத்தது.

சமாதான சக வாழ்வுக்காக தனது பல்கலை பல்கலைக்கழகத்திலும் முன்னின்று செயற்பட்டார் சகல இன மத மாணவர்களுடன் இணைந்து மத நல்லிணக்கத்திற்காக செயற்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஏனைய மத சகோதரர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் உரித்தானவராக அமைந்தார் மாத்தரை சென் தோமஸ் கல்லூரியில் கற்ற போது அங்கு கற்பித்த கந்தையா மாஸ்டர் என்ற ஆசிரியர் சுப்ரியை அடையாளம் கண்டு வாசிக்க தூண்டினார். அதுவே அவரை எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியது அதனை உரிய முறையில் கையாண்டு அதன் காரணமாக பிற்காலத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறந்த எழுத்தாளராகவும் எழுந்தார்.

ஆங்கிலம் தமிழ் அரபு சிங்களம் உட்பட பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அந்த ஆற்றல்கள் அவரது முன்னேற்றத்திற்குப் பெரும் துணையாக நின்றன. தனது சமுதாயப் பணிகளுக்கு இந்த மொழி ஆற்றல் அவருக்கு பெரும் கைகொடுத்து உதவியது சமூக விழிப்புணர்வுக்காக இந்த ஆற்றல்களை பயன்படுத்திக்கொண்டார்.

கொழும்பில் நடைபெறுகின்ற பல்வேறு வைபவங்களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வதற்கு வருவது வழக்கம் அந்த சந்தர்ப்பங்களில் அவரது உரையை செவிமடுப்பதற்காக நான் அங்கு செல்வேன். அவருடன் பேசுவதற்கு அவை வாய்ப்பை ஏற்படுத்தியது. ஊடகப் பணி நிமித்தம் சில முக்கிய மாநாடுகளில் பங்கேற்க சென்ற சமயங்களில் என்னை அடையாளம் கண்டு நிறையவே கலந்துரையாடியுள்ளார். அவரால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் அறிவுரைகள் எனது எழுத்துப் பணியைப் பட்டை தீட்டிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

இன்று அந்த நல்ல மனிதர் முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்விமான் நாட்டில் பரந்துபட்டு வாழும் நலீமிகளின் பேராசான் எம்முடன் இல்லை. புனிதமான ரமலான் மாதத்தில் அன்னாரை வல்ல அல்லாஹ் தன்பக்கம் அழைத்துக் கொண்டு விட்டான். அன்னார் முன்னெடுத்த பல பணிகள் தொடர்ந்து முன்கொண்டு செல்ல வேண்டும். ஜாமியா நளீமியா வுக்கு இதில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. நிச்சயம் விரைவில் ஜாமியா நளீமியா இந்த நாட்டில் இஸ்லாமிய பல்கலைக் கழகமாக தலை நிமிர வேண்டும். அன்னாரது கனவு நனவாக வேண்டும். அதற்கான பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும்.

அது ஒன்றே நாம் மர்ஹும் கலாநிதி சுக்ரி அவர்களுக்கு செய்யக்கூடிய நன்றிக் கடனாகும். வல்ல நாயன் மர்ஹும் கலாநிதி சுக்ரி கலாநிதி சுக்ரி அவர்களுக்கு பிர்தவ்ஸ் எனும் சுவன பூஞ்சோலைக்கு உரித்து உடையவராக ஆக்குவானாக.

எம்.ஏ.எம். நிலாம்

Comments