சகல தமிழ்க் கட்சிகளும் கிழக்கில் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சகல தமிழ்க் கட்சிகளும் கிழக்கில் ஒரு குடையின் கீழ் அணி திரள வேண்டும்

கிழக்கு மாகாணசபைக்கு இதுவரையில் தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பது மத்திய அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது என்கிறார் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம்.   தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய பேட்டியின் முழு வடிவம்....  

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்களுக்கு எவ்வாறான அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன? 

பதில்:- கடந்த 40 வருடத்திற்கும் மேலான ஆயுத போராட்டம்  மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும்  போராட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின்  கையாள் போல செயற்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.    

தமிழர்களின் போராட்டம் என்பது ஒரு இனத்திற்கான போராட்டமாக  இருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது முஸ்லிம் பயங்கரவாதிகளினால்  தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் ஆகும்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு  மூன்று முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்  கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுக்களின் இணைத்  தலைவர்களாக மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு முரணாகவும்  இந்த மாவட்டத்தின் இனவிகிதாசாரத்திற்கு முரணாகவும் இந்த நியமனங்கள்  வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தனது அரசியலுக்காக மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்தியை முஸ்லிம்களுக்கு வழங்கி பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ள இந்த  மாவட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களாக தமிழர்களை  நியமிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.  

வட,கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் சில  விடயங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையிருந்தது.  தமிழர்களின் போராட்டம் என்பது ஒரு இனத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்ல.  தமிழர்களின் போராட்டம். தமிழ்த் தேசியத்திற்காகவும் அரச பயங்கரவாத்திற்கு  எதிராகவுமே இருந்தது.  

ஆனால் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்  தமிழ் சமூகத்திற்கு எதிரான போராட்டமாகும். இது தமிழ்ச் சமூகத்திற்கு  எதிரான போராட்டம் என்ற வகையில் எங்களால் ஜீரணிக்க முடியாது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட  நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய சமூகத்திற்கு எதிராக எந்த  வன்முறையினையும் தமிழர்கள் ஈடுபடவில்லை. இதில் தமிழர்கள் மிகவும் தெளிவாக  இருக்கின்றார்கள்.இது தமிழர்களின் பலவீனம் அல்ல.இது தமிழர்களின்  பலம்.நாங்கள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தில் சில  தவறுகள் இருக்கலாம். அதனை நாங்களே சுயவிமர்சனம் செய்துள்ளோம்.  

பயங்கரவாதிகளினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை  தடுப்பதற்கான வாய்ப்புகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்திருக்கின்றது. சில  அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள் அந்த முஸ்லிம் பயங்கரவாத  அமைப்புகளுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்ததாக அறிகிறோம். எனவே அவர்கள்  விசாரணை செய்யப்பட வேண்டும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.  தமிழர்கள் சட்டத்திற்கு மதிப்பளிக்கின்றார்கள். நாங்கள் சட்டத்தினை  மதிக்காதவர்களாக இருந்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து  தமிழர்களும் வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியும். சட்டத்தின் மீதுஇன்னும்  நம்பிக்கை கொண்டுள்ளனர்.  

எதிர்காலத்தில் தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு  மத்திய அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களை  பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள்  வெளிவருகின்றன.  

குண்டுத்தாக்குதலின் பின்னர் வடகிழக்கில் இருந்த நிலைமையில்  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.தேசிய ரீதியான அரசியலில் மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன.இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு சார்பானதாக  இல்லை. இங்குள்ள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழர்களை ஏமாற்றியவர்கள் என்பதை  தமிழ் சமூகமும், தமிழ்மக்கள் நன்கு அறியும்.  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு எதிராக  செயற்படுபவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள். இலங்கை  அரசாங்கத்தினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் பிரதிநிதிகளுக்கு இல்லை.  எதிர்காலத்தில் வட,கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி  செய்யவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகளுக்கு  உள்ளது.  

வடகிழக்கு தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு எப்படி காணப்படுகின்றது.?

பதில்:- வட, கிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிகள் தமிழ் மக்களின்  அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயற்படவேண்டுமே, தவிர மத்திய  அரசாங்கத்தின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய செயற்படுவார்களானால் அவர்கள் தமிழ்  சமூகத்தினால் புறந்தள்ளப்படுவார்கள்.  

றிசாத் பதியூதினுக்கு எதிராக விசாரணைகள்  செய்யப்படவேண்டும், விசாரணைகளின் ஊடாக அவர் குற்றவாளியென கருதப்படும்  பட்சத்தில் அவருக்கு நாட்டினுடைய சட்டக்கோவை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும்.  

கிழக்கு மாகாணசபைக்கு இதுவரையில் தேர்தல் நடாத்தப்படாமல்  இருப்பது மத்திய அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கினை  வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசாங்கம் மாகாணசபை தேர்தலை  நடாத்துவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.  

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய  மூன்று மாவட்டங்களுக்கும் மத்திய அரசும், மாகாணசபையும் வேலைத் திட்டங்களை  மேற்கொண்டபோது, தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் கடந்த காலத்தில்  புறக்கணிக்கப்பட்டு வந்தன. கடந்த காலத்தைப் போல் 2019இல் இருந்து  புறக்கணிக்கப்படக் கூடாது.  

அரசுக்குரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் போது வறுமை,  விகிதாசாரம், சனத்தொகை, காணியின் பரப்பளவு என்பன கவனத்தில் கொள்ளப்பட  வேண்டும். இவை பார்க்கப்படாததால் வாகரை, கிரான், செங்கலடியில் ஒரு பகுதி,  வவணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசங்கள் இன்னும் வறுமையில்  உள்ளன. இங்குள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர்.   

தற்போது வழங்கப்படும் நியமனத்தின் போதும் திறமையும்,  இனவிகிதாசாரமும் பார்க்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்திலும், மத்திய  அரசிலும், திறமையும், சிரேஸ்ட விகிதாதசாரம் பார்க்கப்பட வேண்டும்.  

புதிய பிரதேச செயலகம் உருவாக்குவது பற்றி பேசுவோமானால், 1989ம்  ஆண்டு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகம் இன்றுகூட அதிகாரங்கள் இல்லாமல்  இருப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணம்.  

கல்வி வலயங்கள் உருவாக்குதல் தொடர்பாக பார்ப்போனால், இதில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள், தங்களுக்கான கல்வி வலயத்தை கடந்த  காலத்தில் பிரித்து விட்டார்கள். இனிமேல் தமிழர்களாகிய நாங்கள் தமிழ்  பாடசாலைகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய வலயங்கள் உருவாக்க வேண்டும்.  

உள்ளூராட்சி சபைகள் உருவாக்குதல், 14பிரதேச செயலகத்திற்கும்  14 உள்ளூராட்சி சபைகள் இருக்க வேண்டும். கிரான், வாழைச்சேனை,  வாகரைபகுதிகளிலுள்ள காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதற்காக 12 உள்ளூராட்சி  சபைகளே இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கிரானுக்குரிய உள்ளூராட்சி சபைகள்  உருவாக்கப்பட  வேண்டும். புதியஅரச அலுவலகங்கள் திறத்தல், இது தொடர்பாக  மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் முஸ்லிம் பகுதிகளுக்குரிய  அலுவலகங்கள் முஸ்லிம் பகுதிக்கும், தமிழ் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள்  தமிழ் பகுதிகளிலும் திறக்கப்பட வேண்டும்.  

முப்படையினருக்கும், பொலிசாருக்கும் முகாம்கள் அமைத்தல்:   இனிமேல் முஸ்லிம் கிராமங்களில் முகாம் அமைக்கப்படுவதைத் தவிர்த்து  தமிழ்பகுதிகளில் மட்டும் முகாம் அமைப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.   

முப்படைகளுக்கும், பொலிசாருக்கும் ஆட்களை திரட்டுவதில்  தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு மத்திய அரசு விகிதாசார ரீதியாக  பொலிசாரை நியமிக்க வேண்டும்.  

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள்  தாம் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பொதுவான முடிவுகளை ஏற்று தனது  கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டும். பாடசாலையின் பொதுவான முடிவுகளுக்கு  மறுப்பு தெரிவிக்கக் கூடாது  

தமிழ் பிரதேசங்களில் அரச நிருவாகங்களில் வேலை செய்கின்ற  முஸ்லிம்களுக்கு கலாசார விடயங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை  இந்து, கிறிஸ்தவ, பௌத்த மதங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா?  காணி வழங்குவது தொடர்பாக பிரதேச மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவில்  முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும்.  

அமைச்சுக்களின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச, மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில்  அபிவிருத்தியில் கூட தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் பாதிப்படக்  கூடியவாறு செயற்பாடுகள் நடந்து வந்தன.  

குறிப்பாக, முஸ்லிம் அமைச்சர்கள் அரசுடன் இணைந்து அரசின் நிதி  ஓதுக்கீட்டு கொள்கைகளுக்கு அப்பால் சென்று தேர்தலின் போது வாக்குகளைப்  பெற்றுக் கொள்ளும் வகையில் நிதிஒதுக்கீடு செய்து கொள்கிறார்கள். குறிப்பாக,  கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று  (செங்கலடியில் ஒரு பகுதி), மண்முனை மேற்கு (வவுணதீவு), மண்முனை தென்மேற்கு  (பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி) போன்ற பிரதேசசெயலாளர்  பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்களுக்கான நிதிஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில்  மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருபது வருடங்களுக்கு மேல் இருந்து  வருகின்றன. இப்பிரதேசத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது.  

இதேவேளை காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர்  பிரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வருடாவருடம் நிதிஓதுக்கீடு  செய்யப்பட்டு வருகிறது. கேள்வி கேட்கும் பட்சத்தில் அமைச்சுக்கான நிதி  அமைச்சு அனுமதியுடன் அபிவிருத்தி வேலைகள் செய்யப்படுகின்றன. வருடந்தோறும்  கிராம சேவையாளர் பகுதிகளுக்கு மென்மேலும் ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை.  

வறுமைப் பகுதிகள் இருக்க வறுமை அற்ற கிராம சேவையாளர்  பிரிவிற்கு நிதி ஓதுக்கீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும். புதிதாக  மத்தியஅரசினால் நியமிக்கப்படப் போகும் அமைச்சர்கள் குறிப்பாக, மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படப்போகும் அமைச்சர்கள் ஒருபக்கச் சார்பாக  கொள்கைக்கு முறணாக நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி, நியமனங்கள், வழங்கும்  பட்சத்தில் அவர்களை தமிழர்களுக்குரிய அமைச்சர்களாக தமிழர்கள்  ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கான எதிர்ப்பை மிக விரைவில் தெரிவிக்க  இருக்கின்றோம்.  

கிழக்கு மாகாண அரசியலில் தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?

பதில்:- தமிழ்த் தேசியத்தின்  நலனுக்காகவும்,தமிழ்மக்களின்இருப்புக்காகவும், தமிழ் பிரதிநிதித்தவத்தை  பாதுகாப்பதற்காக தமிழ் கட்சிகளும் நலன்விரும்பிகளும் தேர்தலில் ஓரணியில்  திரள வேண்டியது காலத்தின்கட்டாயமாகும்.  

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் சரி,பிழை என்பவற்றுக்கு அப்பால்  தமிழர் ஒருவரே முதலமைச்சராக வர முடியும். ஆனால் கிழக்கின் அரசியல்  களநிலவரம் வேறு. தமிழர்கள் பல கோணங்களில் பிரிந்து நின்று போட்டியிடும்  பட்சத்தில் குறிப்பிட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதோடு,மாற்றுச்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் இலகுவான முறையில் கிழக்கு மாகாணத்தின்  முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.  

இந்த யதார்த்த நிலையை அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளும்,  பிரதிநிதிகளும் உணர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக,  கிழக்கு மாகாணசபையின் நிருவாகத்திற்கு கட்டுப்பட்டமாவட்டங்களான திருகோணமலை,  மட்டக்களப்பு, அம்பாறை மூன்று மாவட்டங்களிலும்மூன்று இன மக்களையும்  உள்ளடக்கிய தமிழர்கள் 40வீதம், முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம்  இவ் விகிதாசாரத்தின் வாக்காளர்கள் வாக்களிக்கும் விகிதத்திற்கு ஏற்றவாறு 37  பிரதிநிதிகள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.  

அண்ணளவாக, இதில் 09சிங்களம், 13தமிழ், 15முஸ்லிம்  பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதோடு, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்  40வீதமான விகிதாசாரத்தில், 20வீதம் விகிதார அடிப்படையிலேயே வாக்களிப்பதால்  தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடைகிறது. இவைமட்டுமின்றி கட்சிகள்  பிரிந்துதேர்தல்களில் போட்டியிடும் பட்சத்தில் இன்னும் ஒருசில தமிழ்  பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதோடு, இன்னும் சிலர்  தேசியக்கட்சிகளில்போட்டியிடும் பட்சத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம்  ஏனைய சமூகத்தவர்களுக்கு சென்று விடும்.  

கடந்த கால மாகாணசபைத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக 35வீதம்  தொடக்கம் 55 வீதத்திற்கு உட்பட்ட தமிழ் வாக்காளர்களே 1989ம் ஆண்டு,  2008ம்ஆண்டு, 2012ம் ஆண்டு மாகாணசபை தேர்தல்களில் வாக்களித்தனர்.இந்த  நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் மாகாணசபை ஊடாக, செயற்படுத்தப்படும்  செயற்திட்டங்கள் தொடர்பாக கட்சித் தலைமைகள் கடந்த காலங்களில் அக்கறை  காட்டியதில்லை. காரணம், புதியதொரு தீர்வுத் திட்டத்தை நோக்கிகட்சித்  தலைமைகள் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதால் அக்கறை காட்டவில்லை.  அதுமட்டுமின்றி பல தலைமைகள் மாகாணசபை முறைமைகளை ஏற்றுக் கொள்வதுமில்லை.இதன்  காரணமாக இக் காலகட்டங்களில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சராகவும்,  மாகாணசபையின் அமைச்சராகவும் தெரிவு செய்யப்படும் ஏனைய சமூகபிரதிநிதிகள்  சுகாதாரத்துறை, உள்ளூராட்சி, நகரஅபிவிருத்தி, நீர்பாசனம், காணிகள், புதிய  நியமனங்கள், பதவி உயர்வுகள், கல்வி அலுவலகங்கள், பிரதேச செயலகம், குடிநீர்   போன்ற இன்னும் பல வேலைகளில் மத்திய அரசின் உடந்தையுடன் சில அமைச்சர்கள்  கடந்த காலங்களில் மிகவும் மோசமான முறையில் கிழக்கு மாகாணத்தில்  தமிழர்களுக்கு துரோகம் விளைவித்தது வரலாறாகும்.  

மாகாணசபையைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நிதி  அதிகமாக ஒதுக்கப்பட வேண்டும். மாகாணசபையை அதிகாரம் உள்ளதாக மாற்றுவதற்கு  செயற் திட்டங்கள் தீட்ட வேண்டும், நியதிச்சட்டங்கள், உபவிதிகள்  உருவாக்கப்பட வேண்டும், மத்திய, மாகாண அரசுக்கிடையில் உள்ள முரண்பாடுகளைக்  கண்டறிய வேண்டும், விகிதாசாரங்களா? திறமைகளா? தொடர்பான விடயங்கள், வறுமையை  முன்னோக்கிய நிதி ஓதுக்கீடு, மாகாண ஆளனி தொடர்பான மீள்பரிசீலனை, மத்திய  அரசினால் கபளீகரம் செய்யப்படுகின்ற வரிஅறவீடு, வழங்கப்பட்ட அதிகாரத்தை  அமுல்படுத்துதல், போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக அக்கறை செலுத்தாமல்  புதிய தீர்வுத் திட்டம் தொடர்பாக அக்கறை செலுத்தியதால் கிழக்கு மாகாணத்தின்  அரசியல் அதிகாரத்தை தமிழர்களாகிய நாங்கள் பலவீனமாக பயன்படுத்தியதே  உண்மையாகும். இதனை மாற்றியமைக்க கிழக்குத் தமிழ் கட்சிகள், புத்திஜீவிகள்  முனைப்புடன் செயற்படவேண்டும்.  

மாகாண சபையில் இருந்து கொண்டு அங்குள்ள அதிகாரத்தைப்  பயன்படுத்தி மத்தியிலும், மாகாணத்திலும் பல வேலைதிட்டங்களை செயற்படுத்த  முடியும். எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரத்தை  பெற்றுக் கொண்டு அதை விருப்பத்துடன் தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி  செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதிகளை அதிகரிக்க வைக்க  வேண்டும்.ஒரு சின்னத்தின் கீழ் பிரதிநிதிகளை அதிகமாக பெற்றுக் கொள்வதன்  ஊடாகவே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அரசியல் அதிகாரத்தை  கைப்பற்றி தமிழர் ஒருவரை முதலமைச்சராக கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு

வருவதற்கு தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு கிழக்கு மாகாணத்தில்  செயல்படுகின்ற மக்கள் நலன்சார்ந்த அமைப்புக்களுடனும் குறிப்பாக. அரசியற்  கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தமிழ்  ஈழமக்கள் விடுதலைக் கழகம், தமிழ் ஈழவிடுதலை இயக்கம், இலங்கை  தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழவர் புரட்சிகர ஜனநாயக  முன்னணி, தமிழ்மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை  தமிழ்காங்கிரஸ், தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு, தமிழர் சமூக  ஜனநாயகக்கட்சி போன்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டுதொடர்பாக பேசி  உடன்பாட்டுக்கு வருவது நல்லது.  

வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் தலைமை தாங்குவதால் இவ்விடயத்தில்  கிழக்கின் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வழிவகை செய்வார்கள் என  கிழக்கு வாழ் மக்கள் நம்புகின்றார்கள். எமது கிழக்கு வாழ் தமிழ் மக்களின்  எண்ணங்கள், அபிலாசைகள் ஏராளம் உண்டு. இவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின்  யாவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டியது அவசியமாகும். மாற்றுச்  சமூகத்திடம் கையேந்தி வாழ்வதற்கு தமிழ்மக்கள் தயாரில்லை. தமிழ் மக்களை  கிழக்கில் கௌரவமாக வாழவைப்பதற்கு நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். 

நேர்காணல்: க.விஜயரெத்தினம்

Comments