கல்முனை போராட்டம்; தலைமைகளின் பலவீனம் | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை போராட்டம்; தலைமைகளின் பலவீனம்

கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் ஆறிக்கிடந்த ஒரு பிரச்சினை இன்று எரியும் பிரச்சினையாகியிருக்கிறது!

இதற்கு எண்ணெய் ஊற்றியவர்கள் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே எழுந்திருக்கிறது. அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புடன் தொடர்புபட்ட ஒரு பிரச்சினையை இனங்களுக்கிடையிலான ஒரு விடயமாக அவர்கள் மாற்றிவிட்டிருக்கிறார்கள். இதனால், தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகத் தலைமைகள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவம் இன்று கைமாறிப்போயிருக்கிறது என்பதையே கல்முனை கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன.

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆரம்பித்து வைத்த பிராந்திய அரசியல் செல்நெறியில் அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களுக்குப் பாதகமான சூழல் வலுவடைந்து வந்துள்ளதேயொழிய, முஸ்லிம் மக்களே அதிகம் நன்மையடைந்துள்ளார்கள் என்கிறார் கல்முனை அருள்செல்வன். கிழக்குத் தமிழ்மக்கள், தங்களின் அரசியல் தலைமை எல்லாவற்றையும் நிறைவேற்றி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காலத்தைக் கடத்தி ஏமாந்ததுதான் மீதம் என்கிறார் அவர். தந்தை செல்வநாயகம் முஸ்லிம் அரசியலைத் தனித்து முன்னெடுக்குமாறு மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர், தமது சமூகத்தின் அரசியல் கட்டமைப்பை மிக நேர்த்தியாக வழிநடத்திக் கட்டியெழுப்பியிருக்கிறார். இதில், பின்தங்கியது வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் தமிழ் மக்கள் மட்டுமே என்பது அருள்செல்வனின் கருத்து.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு 40ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 30ஆண்டுகளாகின்றன. யுத்தம் முடிவடைந்தும் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இதுவரை தமிழ் மக்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினையையும் தமிழர் தரப்பு அரசியல் தலைமை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை என்பது ஒரு பொதுவான கண்ணோட்டம்.

கிழக்குத் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமன்றிப் புலிகள் இயக்கத்தினரும் அவ்வளவாகக் கணக்கில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாகவே இருந்து வருகிறது. கிழக்கில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தளங்களில்கூடப் பெரிய வளங்கள் இருந்ததில்லை. மரப்பொந்திலும் கற்பாறைகளுக்குள்ளும் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே அவர்கள் நிலைகளைப் பேணிவந்திருக்கிறார்கள். இது பாகுபாடா, ஓரவஞ்சனையா என்ற சந்தேகம் இப்போதும் கிழக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்தபோது இந்தக் கருத்தியல் வலுவாகவே நிலவியது.

இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது கிழக்கிலிருந்து இயங்கும் அதன் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது மக்களையோ ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்கிறார்கள் கிழக்குத் தமிழ் மக்கள். இல்லாவிட்டால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அமர்ந்து ​பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், கல்முனை வடக்குப் பிரதேச செயலக பிரச்சினை இந்தளவிற்கு உச்ச அளவில் இழுபறிபட்டிருக்காது என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

இஃது முற்றிலும் தலைமைகளின் பலவீனத்தையே காட்டுகிறது என்கிறார்கள். இந்தப் பிரதேச செயலகம் எவ்வாறு உருவானது என்பதைப்பற்றிய வரலாற்றினைப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உருவாக்கப்பட்டது எப்படியாக இருந்தாலும் இஃது முற்றிலும் நிர்வாகக் கட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயம். எனவே, முப்பதாண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பிரச்சினையுடன் நிலத்தொடர்பு பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள் கல்முனை தமிழ் அரசியல் பிரமுகர்கள்.

இப்படியொரு சபை உருவாகிவிட்டால், முஸ்லிம்களின் பெரும்பான்மை குறைந்துவிடும்; ஆதலால், நிலத்தொடர்பற்ற விதத்தில் இதனை உருவாக்க கூடாது என்பது பிராந்திய முஸ்லிம் தரப்புப் பிரதிநிதிகளின் கருத்து. இந்தக் கருத்தை மதித்து அவர்களின் தேசிய தலைமை அதற்கேற்றவாறு செயற்படுகிறது. ஆனால், தமிழ் மக்களின் தலைமையோ, தமது பிராந்திய பிரதிநிதியின் கருத்தை உள்வாங்குவதும் இல்லை; குறைந்தபட்சம் செவிமடுப்பதும் இல்லை என்கிறார்கள்.

இரு தரப்புத் தலைமைத்துவங்களும் என்னவோ தேசிய பிரச்சினையில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளதாகக் காண்பித்துக்கொண்டு, தமது மக்களின் பிரச்சினையின் தாற்பரியத்தை உணராதவர்களாக இருக்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள் இளைஞர்கள்.

இதன் காரணமாகத்தான் இன்று தேரர்கள் முன்வந்து பிரச்சினைக்குத் தலைமை தாங்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொதுசனத்தின் அபிப்பிராயம். இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், தமிழரோ, முஸ்லிம்களோ இன்று தங்களின் அரசியல் தலைமைத்துவத்தைவிடவும் மதத் தலைமைத்துவத்தின் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், அரசியல் தலைவர்களால் செய்ய முடியாததை நேற்று (22) மதத் தலைவர்கள் சென்று சாதித்திருக்கிறார்கள். பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரின் வாக்குறுதியை நம்பி, உண்ணாவிரதத்தின் போக்கினை மாற்றிக்கொள்வதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலைமையானது இப்போது தலைமைத்துவங்கள் கைமாறியும் கைமீறியும் சென்றுவிட்டன என்பதையே உணர்த்துகின்றது.

உண்மையில், இந்த விடயத்தில் நிலத்தொடர்பின்மை என்ற பிரச்சனையோ அல்லது எல்லை மீள் நிர்ணயம் என்ற சிக்கலோ இல்லை. இது வீணான ஒரு புதுச்சிக்கலை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் கருத்து என்கிறார் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன். அவரின் விளக்கத்தின்படி,

உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவின் நிலத்தொடர்போடு கூடிய வரையறுக்கப்பெற்ற தெளிவான எல்லைகள் வருமாறு,

வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லை (பெரியநீலாவணைக் கிராமம்)

தெற்கு : கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதி

கிழக்கு: வங்காள விரி குடாக் கடல்

மேற்கு : கிட்டங்கி வாவி

மேற்கூறப்பெற்றவாறு எல்லைகள் வரையறுக்கப்பெற்ற நிலப்பரப்புக்குள் கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் உள்ளடங்குகின்றன.

அப்படியாயின் இதில் நிலத்தொடர்பின்மை, எல்லைகள் மீள் நிர்ணயம் என்ற சிக்கல்கள் எழத்தேவையில்லை. 1989ம் ஆண்டிலிருந்து தமிழர்கள் விடுத்துவரும் இக்கோரிக்கையின் நிறைவேற்றத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான அல்லது இக் கோரிக்கையைத் தமிழர்களுக்குப் பாராபட்சமான முறையிலே நிறைவேற்றி வைப்பதற்கான தந்திரோபாயமோ என சிந்திக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

"முன்பு நிர்வாக அலகுகளாக இருந்த பிரிவுக் காரியாதிகாரி முறைமை (D.R.O'S Division) க்குப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பெற்றபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் "கரவாகுப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு" எனும் ஒற்றை நிர்வாக அலகாக உருவாக்கப்பெற்று இந்த ஒற்றை நிர்வாக அலகுக்குள் சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் அடங்கியிருந்தன.

கல்முனைத் தமிழர்களைப் பொறுத்த வரை இந்த ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏற்படுத்தப்பெற்ற காலத்திலிருந்தே இதனைக் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாக கொண்டு இரண்டு நிர்வாக அலகுகளாக (உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகப்) பிரித்து கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது கிராமங்களை உள்ளடக்கிய தெற்குப்பகுதியை கரவாகு தெற்கு அல்லது கல்முனைத் தெற்கு எனும் பெயரில் முஸ்லீம் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் (100%முஸ்லீம்) கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியை கரவாகு வடக்கு அல்லது கல்முனை வடக்கு எனும் பெயரில் தமிழ் பெரும்பான்மை அலகாகவும் (தமிழர்கள்,முஸ்லீம்கள், சிங்களவர்கள் உள்ளடக்கியது) ஆக்கித்தரும்படி அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடமும் அரசாங்க உயர் அதிகாரிகளிடமும் தமிழர்தம் அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக்கூட்டணியிடமும் (தற்போது தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பின்னர் பிரதேச செயலகப் பிரிவுகளாக தரமுயர்த்தபெற்றன அல்லது பெயர் மாற்றப்பெற்றன.

இது விடயமாக முன்னாள் உள்ளுர் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண, முன்னாள் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரர் . கே. டபிள்யூ. தேவநாயகம் , பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரங்கநாயகி பத்மநாதன் ஆகியோர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் விளைவாக 12.04.1989தனியான தமிழ் பெரும்பான்மை உதவி அரசாங்கப் பிரிவு உப அலுவலகமாகத் திறக்கப்பெற்றும் பின்னர் 28.07.1993இல் அமைச்சரவை தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பெற்ற 28உப அலுவலகங்களுள் கல்முனைத் தமிழ் பிரிவும் அதாவது கல்முனை வடக்கு (தமிழ்)உள்ளடக்கப்பட்டது.

ஆனால், நாடளாவிய ரீதியில் தரமுயர்த்தப்பெற்ற 28உப அலுவலகங்களுள் கல்முனை தமிழ் பிரிவு தவிர்ந்த ஏனைய 27உப அலுவலகங்களும் நிறைவேற்றப்பெற்ற சமகாலத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகளினால் குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாமனிதர் எம். எச் . எம் அஸ்ரப் அவர்களின் அரசியல் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் பிரிவு நிறைவேற்றப்பெறாமல் பின்னர் வந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் விருப்பமின்மை காரணமாக இன்று வரை உப அலுவலகமாகவே வெறுமனே கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் எனும் பெயர்ப்பலகை மட்டும் மாட்டிக் கொண்டு இயங்கி வருகின்றது என்று கூறுகிறார் கோபாலகிருஷ்ணன்.

கடந்த முப்பது வருட காலமாகக் கல்முனைத் தமிழ்ப்பிரிவு விடயம் கிடப்பில் போடப்பட்ட சமகாலத்தில், முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப் பெற்று புதிதாகத் தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை இறக்காமம் பிரிவும், அதேபோல் கரவாகு (கல்முனை ) உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்மபட்டு புதிதாக தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை சாய்ந்தமருதுப் பிரிவும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளின் முயற்சியாலும் செல்வாக்கினாலும் ஏற்படுத்தப்பட்டன. இவை அவர்களது தேவை. இதைக் குறைகூறத் தேவையில்லை.

இவை தேவை கருதியும் மக்களின் அபிலாஷை கருதியும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போது, கல்முனைப் பிரதேசத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையான கல்முனைத் தமிழ்ப்பிரிவை தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தத் தடை ஏன்? என்பது அவரது கேள்வி.

எனவே, உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரிவின் உருவாக்கம் அல்லது தரமுயர்த்தல் என்பது புதிதாக எடுத்த கோரிக்கை அல்ல என்பதுடன் இதனை நிறைவேற்றி வைப்பதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ அல்லது எல்லைகள் மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எதுவுமில்லை. இவை வேண்டுமென்றே இழுத்தடிப்பதற்காக அல்லது கல்முனைத் தமிழர்களுக்குப் பாதகமான வகையிலே நிறைவேற்றி வைப்பதற்காகச் செயற்படும் சக்திகளின் தந்திரோபாயம்.

மேலும், முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசப் பிரிவு என்பது 100%முஸ்லிம்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை. அதேபோல் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவு என்பது 100%தமிழர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை.

தற்போது நடைமுறையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வட்டிவெளி, குண்டுமடு, தாமரைக்குளம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஊறணி,கனகர் கிராமம், கோமாரி, சங்கமன்கண்டி போன்ற தமிழ்க் கிராமங்கள் அடங்கியுள்ளன.

அதேபோல், முஸ்லிம் பெரும்பான்மை அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க் கிராமம் அடங்கியுள்ளது. அதேபோல் நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் பழந்தமிழ்க் கிராமம் அடங்கியுள்ளது.

அதேபோல், முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வீரமுனை, மல்வத்தை, கலைதி நகர் புதுநகர், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு போன்ற தமிழ்க்கிராமங்கள் அடங்கியுள்ளன.

மறுதலையாக தமிழ்ப் பெரும்பான்மை காரைதீவுப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. தமிழ்ப் பெரும்பான்மை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கணிசமான முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவு 2001இல் ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசம் முஸ்லிம் பெரும்பான்மைச் சம்மாந்துறைப் பிரதேசப் பிரிவின் கீழேதான் நிர்வகிக்கப்பட்டது. 1989இலிருந்து பார்த்தாலும் கடந்த 30வருடமாக முஸ்லிம் பெரும்பான்மைக் கரவாகுப் பிரதேச செயலகப் பிரிவின் ஆளுகையின் கீழேதான் கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு, கிட்டங்கி, பெரிய நீலாவணை வாழ் தமிழர்கள் இருந்தனர். ஆனாலும், கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்கென தனியானதொரு தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகை கடந்த 30வருடகாலமாக அவர்கள் கோரி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்டதே என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணராவிட்டாலும் கூட முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, உத்தேச கல்முனைத் தமிழ்ப் பிரிவின் கீழ் கல்முனை நகர், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை வாழ் முஸ்லிம்கள் கணிசமான அளவில் அமைவது தவறற்றதும் தவிர்க்க முடியாததுமாகும். கரவாகு (கல்முனை) பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சாய்ந்தமருது தனியான பிரதேச செயலகப் பிரிவாக உருவானது நியாயம் என்றால், சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இறக்காமமும், நாவிதன்வெளியும் தனியான பிரதேச செயலகப் பிரிவுகளாக உருவானது நியாயம் என்றால், தற்போது நடைமுறையிலுள்ள கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து அதன் வட பகுதி தனியான பிரதேச செயலகப் பிரிவாக (கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு) உருவாவதும் நியாயம்தானே. இதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ எல்லை மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எழ நியாயமில்லை! என்று அடித்துச் சொல்கிறார் அவர்.

பொதுவாக நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்று பார்த்தாலும் உலக அரசியலை நோக்கும்போது பல்வேறு நாடுகளில் இந்த நிலத்தொடர்பற்ற நிர்வாக முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஓர் இனத்தின், சமூகத்தின் சமய, கலாசார விழுமியங்களைப் பேணுவதுடன் அரசுடன் ஒத்தியங்கும் ஒரு நிர்வாக முறைமையாக இந்த நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகுகள் உள்ளன.

ஆகவே, இல்லாதவொன்றை இருப்பதாகச் சொல்வதால், மேலும் சிக்கல் நிலையே தோற்றம்பெறும். கல்முனை பிரச்சினை என்பது இரண்டு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினை அல்லவென்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்பதே புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில், இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்துவிட்டால், தீர்வு காணவேண்டிய அவசியமே இருக்காது என்ற உள்நோக்கச் சிந்தனையாளர்களின் போக்கினைப் புரிந்துகொண்டவர்களாகத் தமிழ் முஸ்லிம் தலைமைகள் அக்கறையெடுத்துச் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

விசு கருணாநிதி 

Comments