ஔடதங்கள் பாவனைக்கு உகந்தவையா இல்லையா? | தினகரன் வாரமஞ்சரி

ஔடதங்கள் பாவனைக்கு உகந்தவையா இல்லையா?

ஆய்வு செய்ய ஒரு சபை அவசியம்

பரம்பரை சித்த ஆயுர்வேத வைத்தியர் கனகேஸ்வரன் ஜீவானந்தம்

ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு என தனியான ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு   அதற்கென தனியான ஒரு சபை உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் ஆயுர்வேத   மருத்துவத்தையும் சிறந்த முறையில் முன்னேற்ற முடியும் என்கிறார் பரம்பரை   சித்த ஆயுர்வேத வைத்தியரான கனகேஸ்வரன் ஜீவானந்தம். 

இயற்கையாக கிடைக்கூடிய மரம், செடி கொடிகளில் உள்ள மூலிகைகளை பயன்படுத்தி செய்யப்படும் வைத்திய முறையை நாம் ஆயுர்வேத வைத்தியம்  என்போம். இதனை நாம் 'பாட்டி வைத்தியம்' எனக் கூறுவதும் உண்டு.  

இந்த சித்த ஆயுர்வேத மருத்துவம் என்பது எமது முன்னோர்களால்   பயன்படுத்தப்பட்ட மருத்துவமுறையாகும். இவற்றின் வரலாறு மிக நீண்டதாகும்.  

இது வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என ஆரோக்கியமான வழிமுறைகளை   சொல்லித்தரும் சுமார் 3500ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.  

இவற்றில் மூலிகைகளே நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதுடன்   இங்கு பிரதானமாக உணவே மருந்தாகவுள்ளது.  

குறிப்பாக சித்த மருத்துவமானது அகத்தியர் எனும் சித்தரால்   அருளப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. இவ்வாறு சித்தர்களால்   தோற்றுவிக்கப்பட்ட அல்லது அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகவும், சித்தர்கள்  ஆராய்ந்து அதில் வெற்றி பெற்றதால் அதற்கு சித்த மருத்துவம் என பெயர்   வந்ததாகவும் கூறப்படுகின்றது.  

இம்மருத்துவம் தொடர்பான குறிப்புக்கள் ஆதி காலம் தொட்டு  ஓலைச்சுவடிகளிலேயே பொறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வந்துள்ளன.  

அத்துடன் இம் மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களையும் குணமாக்கும்   மூலிகைகள் இந்தியாவின் கொல்லிமலை காட்டில் உள்ளதாகவும் அவற்றை மனிதர்கள்   கைப்பற்றாவண்ணம் சித்தர்களால் பாதுகாப்பு கவசங்கள்   செய்யப்பட்டுள்ளதாகவும் வரலாற்று மரபுவழி கதைகள் உள்ளன.  

இந்நிலையில் இம் மருத்துவமானது எமது நாட்டில் வடக்கில் மிகப் பிரபலமாக   காணப்படுவதுடன் அதனை செய்யும் மருத்துவர்கள் ஒரு பரம்பரை வழிவந்தவர்களாகவே  காணப்படுகின்றார்கள்.  

அந்தவகையில் நாம் இப்போது பார்க்கப்போகும் மருத்துவரும் கடந்த ஒன்பது  தலைமுறையாக இவ் ஆயுர்வேத சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும்   ஒருவரேயாகும்.  

யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத சித்த மருத்துவத்திற்கு பெயர்போன சுதுமலை எனும்  பிரதேசத்தைச் சேர்ந்த கனகேஸ்வரன் ஜீவானந்தம் என்பவருடான உரையாடலையே நாம்  இங்கு தருகின்றோம்.  

இம் மருத்துவத்தின் ஒன்பதாவது தலைமுறையே இவராவர். இவருக்கு முன்பு   எட்டுத் தலைமுறையாக இம் மருத்துவத்தை பரம்பரை பரம்பரையாக   செய்துவருகின்றார்கள். தற்போது இவரும் இவரது மனைவி புவனலோஜினி   ஜீவானந்தமும் இனைந்து இதனை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் ஒரே   பரம்பரையை சேர்ந்த வழிவந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்நிலையில் ஆயுர்வேத சித்த மருத்துவம் தொடர்பாக அவருடன் உரையாடியதை  உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.  

கேள்வி : இன்றைய காலத்தில் ஆயு ர்வேத மருத்துவத் துறையின் வளர்ச்சி   எவ்வாறுள்ளது ? மக்கள் இம் மருத்துவத்தை நாடுகின்ற தன்மை உள்ளதா ?  

பதில் : இம்மருத்துவத்தை மக்கள் நம்புகின்றார்கள். ஆனால் இம்மருத்துவத்திற்குரிய மூலப்பொருட்களை பெற்றுத்தருவதற்குரிய முயற்சிகளை   யாரும் மேற்கொள்ளவில்லை. மருந்து தயாரிக்கின்ற மூலிகைகள், சில தாதுப்   பொருட்கள் என்பன வெளிநாட்டிலிருந்தே கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அவை  இறக்குமதி செய்யப்படுவதில்லை.  

கேள்வி : அவ்வாறு இறக்குமதி செய்யப்படாமைக்கான காரணம் என்ன ?  

பதில் :  வைத்தியர்களது சோம்பேறித் தனமே இதற்கு காரணம். ஆயுர்வேத  வைத்தியர்கள் மருந்துகளை வீட்டில் தயாரிப்பதில்லை. கடைகளில் உள்ள   மருந்துகளையே வாங்கிப் பயன்படுத்துகின்றனர். எனவே மருந்து தயாரிப்பதற்கான   மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது நட்டம் என்பதால் அதற்கான அனுமதிகளை   பெற்றிருந்தவர்கள் கூட இறக்குமதியினை இப்போது கைவிட்டுவிட்டார்கள்.  

ஒரு சிலரே இறக்குமதிகளை மேற்கொள்வதால் நாம் அதிக விலைகொடுத்தே வாங்க வேண்டிய தேவையும் உள்ளது. சில தட்டுப்பாடான மருந்துகளை இந்தியாவில்   இருந்து வியாபாரிகள் கொண்டுவந்து அதிக விலைக்கு விற்கின்றார்கள்.  

கேள்வி : சித்த வைத்தியத்துக்கும் ஆயுர்வேத வைத்தியத்திற்கும் இடையிலான   வித்தியாசம் என்ன?  

பதில் : ஆயுர்வேத மருத்துவத்தை நன்றாக கற்றுணர்ந்து அதனை செயற்படுத்துவதன்  மூலமே சித்த மருந்துகளை செய்யலாம். சித்த மருத்துவம் என்பது 'இந்து   இரசாயனவியல்'. அங்கு சேர்மானங்கள் கடவுளின் பெயராலேயே இருக்கும். இது  வெறு யாருக்கும் தெரியாது. அதனை அறியாதவர்கள் அதில் நஞ்சிருப்பதாக  கூறுகின்றார்கள். உலக முழுவதும் இத்தகைய கருத்துக்களே காணப்படுகின்றது.  

இந்தியாவிலும் இலங்கையிலும் மாத்திரமே இவ் வைத்தியமுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது.  

யாழ்ப்பாணத்தில் அதிகமாக சித்த மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றது.  

தென்னிலங்கையிலேயே ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது.  

யாழ்ப்பாணத்துக்கு விஷேடமாக சித்த மருத்துவமே உள்ளது.  

கேள்வி : ஆயுர்வேத வைத்தியதுறையை பொறுத்தவரையில் இந்தியாவில் அதற்கென   தனியான அமைச்சுக்கள் உள்ளது. இந் நிலையில் அதனை அபிவிருத்தி செய்வதற்கு   இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் போல எமது நாட்டிலும்  முன்னெடுக்கப்படுகின்றதா?  

பதில் : இங்கு சுகாதார அமைச்சுக்கு கீழே இதுவும் ஒரு அலகாவுள்ளது. ஆனால்  இந்தியாவில் மிகச் சிறப்பாக செயற்படுகின்றார்கள். அங்கு ஆயுர்வேத   மருத்துவத்தை நிருபித்துகாட்டக்கூடிய ஆய்வுகூட வசதிகள் உண்டு. ஆனால்   இங்கு அவ்வாறான வசதிகள் எதுவும் இல்லை.  

கேள்வி : இம் மருத்துவதுறையை வளர்த்தெடுப்பதற்கு எமது நாட்டிலுள்ள சாவால்கள் என்ன?  

பதில் : ஔடதங்களை தயாரிக்கும் போது அது மனித பாவனைக்கு உகந்ததா இல்லையா   என ஆய்வு செய்வதற்கு என ஒரு சபை இருக்க வேண்டும். எமது நாட்டில் அவ்வாறான   கபை இல்லை. அதற்கு காரணம் ஆயுர்வேதத்திற்கு என்று தனியான பல்கலைக்கழகம்   இல்லை. அவ்வாறு தனியான பல்கலைக்கழகம் இருக்குமானால் அதற்கு என்று தனியான   சபை இருக்கும். அதனூடாக எமது மருந்துகளை ஆய்வு செய்ய முடியும்.  

எனவே இங்கு அவ்வாறான ஒன்று இல்லாத நிலையில் ஆயுர்வேத மருந்துகள்  தயாரிக்கப்படும் போது அவை தொடர்பாக ஆய்வுசெய்யும் குழுவில் அதிகம்   இருப்பது ஆங்கில மருத்துவத்துறையினரே, எனவே அவர்கள் எமது மருத்துவம்   தொடர்பாக அதிக கவனம் எடுக்கமாட்டார்கள். அவர்கள் எமது மூலக்கூறுகளில்   நஞ்சுத் தன்மை உள்ளது என்பார்கள்.  

எமக்கான சபை இருக்குமானால் அதனை ஏற்று அதனை ஆய்வுக்கு அனுப்புவார்கள். எனெனில் ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு நச்சுத் தன்மையிருக்கும். அதனை  

சுத்தி செய்துதான் நாம் மருந்தை தயாரிக்கின்றோம். அது பின்னர் மருத்தாக வருகின்றதா அல்லது நஞ்சாக வருகின்றதா என ஆய்வு செய்வதற்கு ஆய்வுகூட   வசதிகள் இல்லை. மருத்துவத்திற்கு தேவையான மூலிகைகளை பெற்றுக்கொள்ள   முடியாமல் உள்ளது.   

கேள்வி : நீங்கள் கூறுவது போன்று அனைத்து மூலிகைகளிலும் நஞ்சுத் தன்மையிருக்கிறதா?  

பதில் : ஆம். ஆனால் அது உயிர்கொல்லியல்ல. அதாவது அம் மூலிகையின் அலர்சியை   ஏற்படுத்த கூடிய, வேறொரு பக்க விளைவை ஏற்படுத்த கூடிய தன்மையிருக்கும்.   ஆனால் அவற்றை இல்லாமல் செய்துதான் மருந்தை உருவாக்கின்றோம். எனவே அவ்வாறு  மருந்தை உருவாக்கிய பின்னர் அது சரியா என்பதை ஆய்வு செய்ய ஆய்வுகூடம்  தேவை.  

கேள்வி : உங்களது பார்வையில் ஆயுர்வேத மருத்துவ துறை சிறந்ததா அல்லது   ஆங்கில மருத்துவ துறை சிறந்ததா ?  

பதில் : எமது மருத்துவத்தில் உணவே மருந்து. ஆனால் அதில் இரசாயனங்களே  மருந்தாக உள்ளது. அது நேரடியாக பாதிப்பை உண்டாக்கிவிடும். ஆயுர்வேதத்தில்   பாதிப்பு இல்லை என்று கூறமுடியாது. அதற்காக அப் பாதிப்பு பாராதுரமானதாக  இல்லை.  

இம் மருந்துகள் ஒவ்வொன்றையும் தயாரித்த பின்னர் நானே அதனை உண்டு   பரீட்சித்து பார்க்கின்றேன். 26வருடங்களா நான் இதனை செய்து வருகின்றேன்.  

இது வரை எனக்கு எதுவும் ஆகவில்லை.   ஆயுர்வேத்தை நன்கு கற்றுணர்ந்த பின்னர் சித்த மருத்துவத்தை செய்தால்   அதில் பிழையிருக்காது. அதனை ஒரு குருவே சொல்லித்தர வேண்டும்.   தாதுப்பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.  

கேள்வி : மூலிகைகளை நீங்களே பயிரிடுகின்றீர்களா ?  

பதில் : இல்லை. தேடித் தான் பெறுகின்றேன்.  

கேள்வி : அரசாங்கம் மூலிகை தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்கின்றதே ?  

பதில் : எல்லோரும் மூலிகை தோட்டம் என்பதை ஆரம்பித்துவிட்டு ஒரு சில   கன்றுகளை மாத்திரம் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மூலிகை தோட்டம்   என்றால் அதிகமாக தேவைப்படுகின்ற மூலிகையை ஏக்கர் கணக்கில் பயிரிட  வேண்டும். அதனை விடுத்து ஒரு கன்றை கண்காட்சிக்கு நட்டு வைத்துவிட்டு  அதனை மூலிகை தோட்டம் என்று கூறமுடியாது.  

இதற்கு நாம் முன்னர் கூறியது போல எமது மருத்துவர்களும் காரணம்.  

மருந்துகளை கடைகளில் வாங்குகின்றார்கள். எனவே வியாபாரிகளும் அதனை   வியாபாரமாக்கிவிட்டார்கள். பச்சை பெட்டியில் வருவதெல்லாம் ஆயுர்வேத மருந்துகள் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் அவற்றில் பலவற்றில்   இரசாயன கலப்புக்கள் உள்ளது. எங்களிடம் ஒரு நோய்க்கு இது தான் மருந்து  என்றில்லை. உதாரணமாக காய்ச்சலுக்கு கொடுப்பதையும் தடிமனுக்கு கொடுப்போம்.  

இந்த நோய்க்கு இது தான் மருந்து என்றில்லை.   எனவே ஆயுர்வேத மருத்துவத்திற்குரிய மூலப்பொருட்களை  அரசாங்கமோ அல்லது   வடக்கு மாகாண சபையோ பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள   வேண்டும்.  

கேள்வி : பெரும் வியாதிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்துள்ளதா ?  

பதில் : ஆம். இருதயம், சிறுநீரகம் தொடர்பானது எல்லாம் பெரும் வியாதிகளே. அவற்றுக்கும் எம்மிடம் மருந்துள்ளது.  

கேள்வி : ஆயுர்வேத வைத்தியத்திலும் பார்க்கில் ஆங்கில மருத்துவத்தில்   நோய்கள் விரைவாக குணமாகின்றது என்ற நிலை உள்ளதே. இது ஆயுர்வேத   மருத்துவத்துக்கு சாத்தியமானதா ?  

பதில் : எதுவுமே உடனே நடப்பதில்லை. எந்த நோயும் தீடிர்ரென்று குணமாகாது.  ஆனால் அந்நோய் இருப்பதை தெரியாமல் செய்ய முடியும். உதாரணமாக தலை   வலிக்கிறது என்றால் அவ்வாறு தலைவலி இருப்பதை மூளைக்கு தெரியாமல் செய்ய   முடியும். ஆனால் தலையில் வலி இருக்கும். அதன் உணர்வு மூளைக்கு தெரியாமல்   மறைக்கப்பட்டிருக்கும்.  

ஆயுர்வேதத்தில் படிபடிப்யாகவே நோய் குணமடையும். சராசரியாக எமது மருந்து  மூன்று நாட்களின் பின்னரேயே தனது தொழிற்பாட்டை ஆரம்பிக்கும். காலில்   வலியென இன்று வந்துவிட்டு மறுநாளே நடந்துபோக முடியாது.  

கேள்வி  : கஞ்சா போதைப்பொருளை ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்க முடியும்   என கூறுகின்றார்களே அது உண்மையா? அவை எந்த நோய்களுக்கு மருந்தாக   பயன்படுத்தப்படுகிறது?.  

பதில் : கஞ்சா, அபின் போன்றவை மாற்ற முடியாத நோய்களுக்கே  பயன்படுத்தப்படுகின்றது. அதற்காக கஞ்சா வைத்திருக்க முடியாது. அதற்கான  அனுமதி இல்லை. அபின் வைத்திருக் முடியும். வைத்தியர்கள் கஞ்சாவினை   பயிரிட்டால் முன்னர் பிடிக்கமாட்டார்கள். பிரச்சினை இல்லை ஆனால் இப்போது கஞ்சாவினை போதைப்   பொருளாக பயன்படுத்த தொடங்கிய பின்னர் அதனை வைத்தியர்களும் பயிரிடுவதற்கு   தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் பயிரிட்டு அதனை வழங்குவதற்கு   தீர்மானித்திருந்த போதும் அது பின்னர் நடமுறைப்படுத்தப்படவில்லை.

ரி. விரூஷன்

 

Comments