திரியில் தீவைத்தவர்கள் யார்? | தினகரன் வாரமஞ்சரி

திரியில் தீவைத்தவர்கள் யார்?

ஹெட்டிபொல – சிலாபம்​ வன்முறை

கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிபோன்ற ஆலயங்கள் உட்பட நாட்டின் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் நாடு சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதை கடந்த வாரத்துக்கு முன்னைய வாரத்தில் அவதானிக்க முடிந்தது. இந்த அனர்த்தம் உலகுக்கு ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியது அதாவது பொறுமை, அமைதி பேணலில் கத்தோலிக்க மக்கள் எந்தளவு உயர் வானவர்கள் என்பதை வெளிப்படையாகவே காணமுடிந்தது. இதன் மூலம் கத்தோலிக்க மக்கள் உட்பட இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்கள் குறித்தும் இலங்கை, நாடு குறித்தும் உலகளாவிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது.  

இதனையடுத்து கடந்த வாரம் ஆரம்பித்த கையோடு 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனைத்தும் தலைகுப்புற வீழ்ச்சியடைந்தது. ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களும் நாடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. வெண்மையான வானம் கூட கரும்புகையினால் மூடப்பட்ட நிலையை காணமுடிந்தது. ஊரடங்குச் சட்டத்தின் கீழ் அந்த இரவுகளை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர். என்னதான் நடக்கின்றது என்பதை அந்த அப்பாவி மக்களால் புரிந்துகொள்ளமுடியாது போனது. உண்மையில் என்னதான் நடக்கிறது?  

நாட்டில் ஒவ்வோரிடமும்  தீப்பற்றி எரிவதற்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் சக்தி யாது? என்பதை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. நாட்டின் எதிர்காலத்தை சூனியமாக்கும், மக்களின் வாழ்வியலை மோசமாக பாதிக்கும் நிலைக்கு ஒரு போதும் இடமளிக்கப்படக் கூடாது. இதனைத் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதனைச் செய்யும் கடப்பாடு அனைவரிடமே காணப்படுவதை மனதில் கொள்ள வேண்டும். 

கடந்த திங்கட்கிழமை பகல் வேளையில்  ஹெட்டிபொல எங்கும் தீச்சுவாலையாகவே​ காணப்பட்டது. அதுமட்டுமல்ல கக்தி, வாள், பொல்லுகளுடன் ஒரு கூட்டமே அணிதிரண்டு ஹெட்டிபொல கடைத்தொகுதிகள் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டன. 

ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக காணப்பட்ட வர்த்தக நிலையத்தின மீது கூட பொலிஸார் பார்த்திருக்க தாக்குதல் நடத்தினர். அதனைத் தடுக்க பொலிசாரால் முடியாமல் போயிற்று. கலவரக்காரர்கள் பெருமளவாகக் காணப்பட்டதன் காரணமாக பொலிஸார் எதனையும் செய்ய முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டனர். அவசரமாக வெளியிடங்களிலிருந்து பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டே நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது. இதற்குள் அங்கு பல (பில்லியன்) கோடி ரூபா சொத்துக்கள் ஹெட்டிபொலவில் அழித்து நாசமாக்கப்பட்டு விட்டது. சொத்துக்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் வர்த்தக நிறுவனங்கள் உட்பட ஹெட்டிபொல நகரமே குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மக்கள் ஆறுதல்டைந்து காணப்பட்டனர். பேராயரின் ஆலோசனை, வேண்டுகோளுக்கமைய கத்தோலிக்க மக்கள் பொறுமையுடன் செயற்பட்டனர். வன்முறைகளில் ஈடுபடவில்லை. கடைகளை எரிக்கவில்லை. பள்ளிவாசல்களையோ மதவழிபாட்டுத்தலங்களையோ தீ வைத்துக் கொளுத்தவில்லை.  

ஆனால் இம்மாதம் 5ஆம் திகதி விரும்பத்தாக சம்பவம் நீர்கொழும்பு, போறுதொட்ட பிரதேசத்தில் நிகழ்ந்தது. இதன் பின்னால் ஒரு சக்தி செயற்பட்டிருப்பதை நன்கு அவதானிக்க முடிகிறது.  தனிப்பட்ட குரோதமே முறுகலை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வந்த ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டுள்ளார். அவ்வாறு  தூண்டிவிட்ட சக்தி எது என்பது கண்டறியப்பட வேண்டும். இரண்டு நபர்களுக்கிடையிலான முரண்பாட்டை இனக்கலவரமாக மாற்றியமைக்குமளவுக்கு திட்டமிட்டு சதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மணித்துளிகளில் நீர் கொழும்பில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டு பலத்த சேதங்ளை உண்டுபண்ணியுள்ளது. நீர்கொழும்புச் சம்பவம் அடுத்து செல்லக்கந்த பகுதிக்குப்பரவியுள்ளது. அங்கு பல வீடுகள், வாகனங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது. மறுதினம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வருகைதந்து மக்களை பொறுமைகாக்குமாறு மீண்டுமொரு தடவை வேண்டுகோள் விடுத்தார். 

இந்த நிலையில் தான் சிலதினங்களுக்கு முன்னர் கடந்த ஞாயிறன்று சிலாபம் நகரில் முறுகல் தொடங்கியுள்ளது. சிலாபம் நகரில் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான முஸ்லிம் ஒருவர் தனது பேஸ்புக்கில் ஆத்திரமூட்டப்படக்கூடிய விதத்தில் வார்த்தைகளை பதிவேற்றியுள்ளார். இதனைக் கண்டறிந்த சிலர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். அதனடிப்படையில் அந்த சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் சென்ற போது முன்னதாக ஒரு குழுவினர் அந்த நபர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனை தடுத்து உடனடியாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். 

இந்தச் சம்பவத்தையடுத்து சிலாபம் நகரில் பல இடங்களில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டது. முறுகல் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பிரதேசத்தின் அரசியல்வாதி ஒருவரும் அவரது சகோதரரும் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். 

அன்றைய தினம் வட்டக்கள்ளி ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கிருந்த சிலர் என்னையும் தாக்க முற்பட்டனர் அவர்களை இதற்கு முன்னர் கண்டதே கிடையாது. இந்த பேஸ்புக் விவகாரத்தால் சிலாபம் பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. மோட்டார் சைக்கில்களில் வந்த ஒரு கூட்டம் இந்தக் தாக்குதல்களை மேற்கொண்டடது இதில் சுமார் நூறு பேர் அளவில் பங்கேற்றிருந்தனர். நிலைமை மோசமடைவதை அறிந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்து கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். அவர்களில் இருவர் படையினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். 

பாதுகாப்புத் தரப்பினரால் சிலாபம் சம்பவங்களை கட்டுப்படுத்த முடிந்த போதும் பிங்கிரிய, கிணியம, ஹெட்டிபொல, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல இடங்களிலும் கலவரம் பரவியது. அது ஞாயிற்றுக்கிழமை இரவாகும். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குழு செயற்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழு சிலாபம் ஆரச்சிகட்டுவ பகுதியிலிருந்து இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை நண்பகலாகும் போது ஹெட்டிபொல நகரம் தீவைக்கப்பட்டது. இதனையடுத்து வடமேல் மாகாணம் முழுவதும் கலவரம் வியாபித்தது. உடனடியாக வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தநிலையிலும் நாத்தாண்டிய, தும்மோதர, கொட்டராமுல்ல, தும்மலசூரிய, குளியாப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோசமான நிலைமை ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு பொலிஸாராலோ, படையினாலோ இயலாது போனதால் உடனடியாக மேலதிக பொலிஸாரும், பாதுகாப்புபடையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் வருவதற்குள் நிலைமை எல்லை மீறிச் சென்றுவிட்டது. பாதுகாப்பு தரப்பின் கவனயீனமே நிலைமை மோசமடையக்காரணமாக அமைந்தது.  

பாதுகாப்புப்படையினர் திங்கட்கிழமை பாதுகாப்பை பலப்படுத்தியதன் காரணமாக அன்றிரவு இடம்பெறவிருந்த பேரழிவைத்தடுத்து நிறுத்த முடிந்தது. அன்று இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஞாயிற்றுக்கிழமை இரவு மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம எனும் பிரதேசத்தில் ஒருநபரால் பரப்பப்பட்ட வதந்தி வடமேல் மாகாணம் முழுவதும் பரவியது. தற்கொலை குண்டுதாரியொருவர் குண்டைவெடிக்கச் செய்யத்தயாராகி வருகிறார் என்பதே அந்த வதந்தியாகும்.  

அந்த வதந்தியை பரப்பிய நபர் உடனடியாக அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார். 

அன்றைய இரவில் பல கிராமங்களுக்கும் பயணித்த என்னால் காணமுடிந்த சில காட்சிகள் இன்றும் என் கண்முன் நிழலாடுகின்றன. சின்னஞ் சிறிய குழந்தைகள், நடமாடமுடியாத முதியவர்கள். பெண்கள் அனைவரும் நடுவீதியில் இறங்க பீதிகொண்ட நிலையில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தனர்.

பிரக்ஷாத் பூர்ணமால் ஜயமான்ன

Comments