பொள்ளாச்சி பாலியல் கொடூரம்யாரிடம் நியாயம் கேட்பது ? | தினகரன் வாரமஞ்சரி

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்யாரிடம் நியாயம் கேட்பது ?

  • பெண்கள் தொடர்பான பாரம்பரிய வளர்ப்பு முறையும் கற்பிதங்களும் மாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை விவாதமாக மாற வேண்டும்

“என்னை விட்டு விடுங்கண்ணா, தயவுசெய்து என்னை விட்டு விடுங்கண்ணா” என்று கதறும் பதின்ம வயதுப் பெண்ணின் மங்கலான உருவம் கொண்ட வீடியோவொன்று அண்மையில் இணையதளங்களில் வைரலாகப் பரவியது. தற்போது பரபரப்பாகப் பேசப்படும் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தின் மூலம் இதுதான். காதலன் என்று நம்பி வந்தவனிடமும் அவனது சகாக்களிடமும் அந்த அபலைப்பெண்ணின் கதறல் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மஹாபாரதத்தில் திரெளபதையை அவளது கணவனான தருமனே சூதாட்டத்தில் பகடையாக வைத்து ஆடுகின்றான். ஆட்டத்தில் திரெளபதையை அவன் இழந்துவிடவே கெளரவர்கள் அவளைத் துகிலுரிகின்றனர். அவள் கிருஷ்ணரை வேண்ட, துகிலுரியப்பட, உரியப்பட தொடர்ச்சியாக சேலைகளை கிருஷ்ணர் வழங்கியவாறே ஆபத்பாந்தவனாக அவளைக் காப்பாற்றுகின்றார்.

இவ்வளவும் ஏன், எங்களது தமிழ் சினிமாவில் கூட எந்தவொரு மூலையில் ஒரு பெண்ணோ அல்லது நாயகியோ துன்புறுத்தப்பட்டாலோ பலாத்காரம் செய்யப்பட்டாலோ, படத்தின் நாயகன் எங்கிருந்தோ ஆபத்பாந்தவனாக தோன்றி காப்பாற்றிவிடுவதோடு துன்புறுத்தும் கூட்டத்தையே துவம்சம் செய்தும் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்த பொள்ளாச்சி வீடியோவில் அதுவெல்லாம் நடக்கவில்லை. அவளது கதறல்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட, அவள் அந்தப் பாவிகளின் இச்சைக்குப் பலியாகிறாள். இதைக் காட்டும் அந்த மங்கலான வீடியோவைப் பார்த்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விடுகின்றது. அந்த வீடியோவைப் பார்க்கும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் பல இரவுகள் உறக்கமின்றித் தவிப்பது நிச்சயம். அத்துணை குரூரமானது அது!

பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்ணொருத்தி பேஸ்புக் ஊடாக அவளுக்குக் கிடைத்த காதலனின் கோரிக்கைக்கு அமைய அவனைச் சந்திக்கச் செல்கின்றாள். காதலனான சபரிராஜன், அவளை ஓரிடத்துக்கு வருமாறு அழைத்து, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரினுள் அவளை ஏறச் சொல்கிறான். காரில் அவள் ஏறியதும் அவனது சகாக்கள் மூவரும் அக்காரினுள் ஏறுகின்றனர். காதலனும் அவனது சகாக்களுமாக அவளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகின்றனர். அதனை வீடியோவும் எடுக்கின்றனர். அந்த வீடியோதான் வைரலாகப் பரவி வருகின்றது. தங்களது தேவை முடிந்ததும் அவளை காரில் இருந்து இறக்கிவிட்டும் விடுகின்றனர்.

அத்தோடு அவர்கள் அடங்கிவிடவில்லை. அந்த வீடியோவை வைத்தே அவளை அவர்கள் மிரட்டவும் தொடங்கினர். வேறுவழியின்றி நடந்தவை அனைத்தையும் தனது அண்ணனிடம் முறையிடுகிறாள் அவள். தனது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அவர்களைத் தேடிச்சென்று தாக்கிய அவளது அண்ணன் அவர்களது தொலைபேசிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீடியோக்களையும் கைப்பற்றியதோடு பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்கிறான். அதனை அடுத்தே பொள்ளாச்சி விவகாரம் பூதாகரமானதாய் வெடிக்கிறது.

விசாரணைகளையடுத்து பொலிசார், சந்தேக நபர்களான சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். ஆனாலும் பிரதான சந்தேக நபரான திருநாவுக்கரசை பொலிஸாரால் இலகுவில் பிடிக்க முடியவில்லை. இறுதியில் அவனையும் பொலிஸார் கைதுசெய்தனர். விசாரணைகளின் போது அவர்கள் அவ்வாறு பல பெண்களை காதலிக்கும் போர்வையில் ஏமாற்றி, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்திருப்பதும் தெரியவந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் தாங்களும் அவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொலிஸில் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தபோது அவை எவையும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

இந்நால்வரும் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இதனுடன் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யபட்டதாகவும் ஆளும் அ.தி.முகவின் உறுப்பினர் ஒருவருக்கும் இச்சம்பவங்களுடன் தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. சாராயக் கடையொன்றின் உரிமையாளரான நாகராஜன் எனும் அ.தி.மு.க உறுப்பினர் ஒருவருக்கும் பொள்ளாச்சியில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகிய போதும் அது தொடர்பில் தமிழக காவல்துறை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாகராஜன் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினரேயன்றி தற்போதைய அங்கத்தரவரல்ல என்பதை மறுத்துரைப்பதில் அ.தி.மு.க காட்டிய ஆர்வத்தை, அவரைக் கைதுசெய்வதிலோ இனிமேல் இவ்வாறான சம்பவங்களோ, பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களோ இடம்பெற மாட்டாது என்பதற்கான உறுதிமொழியை வழங்குவதிலோ தமிழக அரசு காண்பிக்கவில்லை என்பதை கமல்ஹாசன் ஒரு குற்றச்சாட்டாகவே தமிழக முதல்வர்மீது வைத்திருக்கிறார்.

நிர்பயாவின் மீதான கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு நீதி கோரி இடம்பெற்ற பாரிய போராட்டங்களையடுத்தே குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அதேபோல பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பட்ட பகுதிகளிலும் இக்கும்பலால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதிகோரிப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சியில் காமுகர் குழுவொன்றினால் துஷ்பிரயோகத்துக்கு ஆளான பெண்களுக்கு நீதிவேண்டும் இப்போராட்டங்களை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தடியடிப் பிரயோகம் செய்தும் அடக்குவதிலேயே தமிழக காவல்துறை மும்முரமாக உள்ளது. அதுமாத்திரமல்ல, இவ்வாறான துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தாலும் கூட அவரது அடையாளம் வெளிப்படுத்தப்படக்கூடாதென்றே இந்தியச் சட்டம் சொல்கின்றது. அவ்வாறிருந்தும் புகாரளித்த பெண்ணின்பெயர் மாத்திரமல்ல அவர் படிக்கும் கல்லூரியின் பெயரும் பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தவறுதலாக அப்பெயர்கள் சொல்லப்பட்டுவிட்டதாக இலகுவாக அவர்களால் சொல்லி தப்பிக்கவும் முடிந்திருக்கின்றது. ஆபாச வீடியோக்கள் பொலிசார் வசமே இருக்குமனால் வீடியோக்கள் யாரால் வெளியடப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

அண்மைய பெள்ளாச்சி சம்பவங்கள் குறித்து கருத்துக்கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் மிகச் சரியாக சொல்லியிருக்கிறார். பெண்ணைத் தலைவியாகக் கொள்ளும் ஒரு கட்சியின் ஆட்சியின் போது இடம்பெறும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை கண்டுகொள்ளாமல் அரசு மெளனம் சாதிப்பதை அவர் சாடியுள்ளார். இரண்டு பெண் பிள்ளகைளின் தந்தையாக தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அரசு என்ன உத்தரவாதத்தை தரப்போகின்றதெனவும் அவர் அறச் சீற்றம் கொள்கின்றார்.

பொள்ளாச்சி சம்பவங்களில் அரசு துரிதமாகச் செயற்பட்டு குற்றவாளிகள் அனைவரையின் சட்டத்தின் பிடியில் நிறுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாதென்ற உறுதிமொழியையாவது தந்திருக்க வேண்டும். மாறாக தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் எல்லாக்கட்சிகளும் மெல்வதற்கான அவலாகவே பொள்ளாச்சி சம்பவங்கள் இருக்கப்போகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவ்வாறில்லாவிட்டாலும் கூட ஆண்மயப்பட்ட அதிகார மையங்களில் தங்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கெதிராக பெண் சட்ட நிவாரணம் தேடுவதென்பது மிகவும் கடினமானதே. அனேமாக பெண்மீதான துஷ்பிரயோகங்கள் எல்லாம், அரசியல் மற்றும் பணச் செல்வாக்கை பக்க பலமகக்கொண்டவை. இவற்றோடு முட்டிமோதி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்டிய உதாரணங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகவே உள்ளன.

அதற்காக துஷ்பிரயோகங்களுக்கெதிராக பெண்கள் போராடிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. மாறாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆண்கள் இலகுவில் தப்பித்துக்கொள்ளக் கூடியதாக இருப்பதுதான் மீண்டும் மீண்டும் எந்தவித அச்சமுமின்றி பெண்ணை துஷ்பிரயோகிக்கும் தைரியத்தை ஆண்களுக்கு வழங்குகின்றது என்பதுதான் இங்கு விளங்கிக்கொள்ளப்பட வேண்டியது.

ஆணுக்கு நிகரானவளாகவே பெண் இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமை என்பன மறுக்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட அதிகளவிலான உடல்., உள ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆட்படவேண்டிய நிலையில்தான் தற்போது பெண் இருக்கின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நிர்பயாவின் மீதான பாலியன் வன்கொடுமையின் பின்னர் இந்தியாவில் பெண்கள் துஷ்பிரயோகிக்கப்படவில்லையா? அல்லது துஷ்பிரயோகிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிட்டியதா? அவ்வாறானால் பொள்ளாச்சி சம்பவங்கள் ஏன் இடம்பெற்றன? போன்ற கேள்விகள் எங்கள் முகத்தில் அறைகின்றன.

இது இந்தியாவில் தானே என்று நாங்கள் வாளாவிருந்துவிட முடியாது. எங்களிடமும், கிரிஷாந்தி, கோணேஸ்வரி, வித்தியா, சேயா என்று நீண்டுசெல்லும் பட்டியலொன்று இருக்கின்றது. இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரியவந்த உதாரணங்கள். சொல்லாமல் குடும்பமானம், கெளரவம் கருதி மறைக்கபட்டவை எண்ணுக்கணக்கற்றிருக்கலாம்.

அவ்வாறானால் பெண்களை எவ்வாறு பாதுகாக்கலாம்்?

பொள்ளாச்சி சம்பவத்தில், தனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகத்தை முறையிட்ட பெண்ணாகட்டும், அந்த காமுகர் கும்பலால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற ஏனைய பெண்களாகட்டும் காதலன் என்றோ நண்பன் என்றோ அவர்கள் நம்பியவர்களாலேயே துஷ்பிரயோகிக்கப்பட்டுள்ளனர். காமுகனொருவனை தனது உயிர்க்காதலன் என்று ஒரு பெண் எவ்வாறு நம்பத் தலைப்படுகின்றாள்?

பொதுவாகவே பெண்கள் ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவே அவர்களுக்கு சிறு வயது முதற்கொண்டே சொல்லித் தரப்படுகின்றது. நீ அவனுக்காக தியாகங்கள் செய்யச்செய்ய அவன் உன்னைப் பாதுகாப்பான் என்று சொல்லியே பெண் வளர்க்கப்படுகின்றாள். அதனால் யாரிடம் நான் மனதைப் பறிகொடுக்கிறேனோ அவனிடம் நான் எதனை வேண்டுமானாலும் இழக்கலாம் என்ற மனநிலக்கு பெண் தள்ளப்படுகின்றாள். இது கலாசாரம் பெண்ணுக்கு ஏற்படுத்திவிட்டிருக்கும் சுமை. இயல்பாகவே பெண்ணின் மொழிக்கான மையம் மூளையில் ஆணிலும் பார்க்கப் பெரிதாகவே இருக்கின்றது. அதனால் பெண் கல்வியில் ஜெயிக்கிறாள். ஆனால் ஆண்களுடனான உறவில் அவள் இலகுவில் தோற்றுப்போகிறாள். அதனால் ஆண்களுடன பேசுவது பெண்களுக்கு அனேகமாக உவப்பானதாக இருக்கின்றது, அதனாலேயே பெண்கள் இலகுவில் காதலில் விழுந்து விடுகின்றனர். காதலில் விழுந்தாலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தன்னால் சமாளித்தக்கொள்ள முடியும் என்றும், அந்தக் காதல் உறவில் இருந்து தான் விடுபட முடியும் என்றும் அவள் உறுதியாக நம்புகிறாள் என்கிறார் தமிழக மனநல நிபுணர் மருத்துவர் ஷாலினி. தங்கள் மீதான இந்த அதீத நம்பிக்கையிலேயே பெண்கள் அனேகம்பேர் பிரச்சினைகளுக்குள் சிக்குகின்றனர். எனவே தங்களிடமுள்ள இந்த பலவீனங்களை பெண்கள் உணரவேண்டும் அப்போதுதான் எச்சரிக்கையாயிருக்க முடியும் என்கிறார் அவர்.

நியாயமாக நடக்ககூடிய எந்த ஆணும் பெண்ணிடம் தேவையற்று கதைக்க மாட்டான். அவ்வறில்லாமல் எந்தவொரு ஆணும் பெண்ணிடம் அவசியமின்றி காலை முதல் இரவு வரை பேசுகின்றான் என்றால் அல்லது, குறுஞ் செய்தி அனுப்புகின்றான் என்றால் அவனில் ஏதோ கோளாறு இருக்கின்றதென்பதையே பெண்கள் அடையாளம் காண வேண்டும். அவன் தனக்காகவே வாழ்கின்றான் என எண்ணுவது பெண்களின் முதலாவது தவறு. முட்டாள்த்தனம். காரணமில்லாமல் எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசமாட்டான். அதுதான் ஆணின் உளவியல் என்கிறார் ஷாலினி.

எனவே காதலனாய் இருந்தாலும் கூட தேவையற்று அவன் கதைக்கின்றான் என்றால், தனது காதலியின் உடலை வர்ணித்து அல்லது அவளது அந்தரங்கங்களை படம் படிக்க ஆர்வம் காட்டுகிறான் என்றால் அவன் குறித்து பெண் எச்சரிக்கையாயிருக்க வேண்டியது அவசியம் என்கிறார் அவர். ஒரு ஆண் அழகாக, இனிக்க இனிக்க பேசினால், பெண்ணுக்குள் எச்சரிக்கை மணியடிக்கவேண்டுமே தவிர இனிக்க இனிக்கப் பேசும் அபூர்வமான ஆணை கண்டுபிடித்துவிட்டதாக குதூகலிக்கக்கூடாது. அதுமாத்திரமல்ல எப்போது அவன் அந்தரங்கமாக, செக்ஸ் போன்ற விடயங்களை உரையாட ஆரம்பிக்கின்றானோ அப்போது அவனைப் பற்றிய அடுத்த எச்சரிக்கை மணி பெண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றும் எச்சரிக்கின்றார்.

பொதுவாகவே சமூகத்தில் நடக்கும் எந்தத் தவறானாலும் பெண்ணுக்குத்தான் அறிவுரைக் வழங்கப்படுவது காலம்காலமாக பேணப்படும் மரபு. அந்த வகையில் அமைந்ததல்ல ஷாலினியின் அறிவுரை. இவ்வாறு பெண்களுக்கு அறிவுரை கூறும் அதேவேளை ஆண்குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் பிள்ளைகளை மதிக்கக் கற்றுக்கொடுத்து, பெண்ணும் அவனுக்கு சமனானவள்தான் என்ற உணர்வை சிறுபராயத்தில் இருந்தே பெற்றோர் விதைப்பார்களானால் அனேக துஷ்பிரயோகங்களைத் தவிர்த்துவிடலாம் என்கிறார் இம் மனநல மருத்துவர்.

பெண்களை துஷ்பிரயோகிக்கும் ஆண்கள் சிறுவயதில் தமது வக்கிர எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுவயது முதலே தான் செய்யும் தவறான காரியங்கள் தொடர்பில் கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சியே இல்லாதவன் பின்னாளில் இவ்வாறான குற்றச்செயல்களில் இறங்கலாம்.

சிறுவயதில் பிராணிகளை குருரமாகத் தண்டிப்பவன், பாடசாலையில் கொஞ்ச நேரமேனும் ஓரிடத்தில் இருக்கமுடியாத ஆண்குழந்தை வளர்ந்ததும் சமூக விரோத செயல்களில் எளிதாக ஈடுபடுகின்றான்.

இந்த மாதிரியான ஆண்கள் ஒன்றுசேரும்போது பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.எனவே சிறுபராயத்திலேயே அவர்களது பிரச்சினைகளை இனம் கண்டு அவர்களை மனோ ரீதியான சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறுகின்றார்.

துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றவுடன் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதிலும், அரசிடம் நியாயம் கோரி போராடுவதிலும் பார்க்க, எங்கள் எதிர்கால சந்ததியினரை எவ்வாறு குரூர எண்ணங்களற்ற பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் பெற்றோர் சிந்திக்க வேண்டும்.


பெண்களுக்கு சாதகமற்ற சமூக  அமைப்பில் உரிமைகள் சாத்தியமா?

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது பொள்ளாச்சி சம்பவம் வெடித்திருப்பதால்தான் தி.மு.க இதை கையில் எடுத்துக் கொண்டது என்றும் கனிமொழி தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். அரசு மீது பழிபோடுவதில் தி.மு.க முனைப்பாக இருப்பதால்தான் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க அரசு விசாரணைகளை தீவிரப்படுத்துவதில் மெத்தனம் காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறானால் இரு சாராருமே பெண் பாலியல் துன்புறுத்தல் அல்லது பெண்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. பொதுவாகவே பணக்காரர்களுக்கு அதிகாரம் கைவரப்பெற்ற அரசியல்வாதிகளும் பெண்களை உலகெங்கும் கிள்ளுக்கீரையாகவே கருதுகின்றனர். இதெல்லாம் சின்ன விஷயம் அவர்களுக்கு. மன்னர் காலத்தில் ஒரு நாட்டைக் கைப்பற்றியதும் பெண்கள் சிறை பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர் அல்லது அந்தபுறங்களில் விடப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நன்கு படித்த பெண்களும் அலுவலக வைபவங்களில் டீ போடும், சமைக்கும், கேக் வெட்டி பரிமாறும் வேலைகளைச் செய்யும்படி ஆண்களால் நட்பு ரீதியாகத் தூண்டப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆண்களின் பொதுப் பார்வையில் முதலில் பெண் ஒரு போகப் பொருள். இரண்டாவதாக வேலைக்காரி. இதற்குப் பின்னரே ஏனையவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பன்னீர் செல்வம் இது பற்றி பேசும் போது ரொம்பவே எளிதாகத்தான் இதை எடுத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. தேர்ந்த நடிகர்களான இந்த அரசியல்வாதிகள் கூட பெண்கள் விஷயத்தில் நடிக்க மறந்து விடுகின்றனர்.

இலங்கையிலும் பெண்களுக்கான நேர்முகத் தேர்வுகள் ரெஸ்ட் ஹவுசுகளில் நடத்தப்பட்டு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக ஒரு செய்தி உள்ளது. பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் தமது தேர்வுகளில் பிரகாசிப்போமா இல்லையா என்ற அவநம்பிக்கையில் தவிக்கும் போது அவர்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கும் பேராசிரியர்கள் இலங்கையில் உள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாமியார்மார் துணிச்சலாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட வைப்பது எது தெரியுமா? வெளியே தெரிந்தால் ஐயோ மானம் போய்விடுமே என்ற அந்தக் கலாசாரம் சார்ந்த பெண்களின் அச்சம்தான். பொள்ளாச்சி விவகாரத்திலும் இதுவரை ஒரு பெண்தான் முன் வந்து சாட்சியம் அளித்துள்ளார். ஏனைய பாதிக்கப்பட்ட பெண்களும் வெளியே வந்து குற்றவாளிகளை நோக்கி கைகாட்டுங்கள் என பல பெண் அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும், சமூகத்தின் மீதான அந்த அச்சமே அவர்களைத் தடுக்கிறது.

பிரச்சினை இதுதான். ஆண்களுக்கு வாய்ப்பானதும் பெண்களுக்கு மிகவும் பாதகமானதுமான ஒரு சமூக கட்டமைப்பை வைத்துக் கொண்டு, ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் சமயங்களை வைத்துக் கொண்டு எப்படி பெண்களை காப்பாற்றுவது? திருடனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு கொள்ளை போய்விட்டதாகக் குமுறுவது மாதிரித்தான் இதுவும்!

Comments