'திரிபீடகாபிவந்தனா" வாரம் பிரகடனம்... | தினகரன் வாரமஞ்சரி

'திரிபீடகாபிவந்தனா" வாரம் பிரகடனம்...

புத்த பெருமான் தனது ஞானோதயத்தால் பெற்ற அறிவைக் கொண்டு பிக்குமார்களினதும் இல்லறவாசிகளினதும் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் நெறிப்படுத்திக் கொள்வதற்கான போதனைகளை வழங்கிய காலகட்டம் அது. எழுத்து வடிவம் என்பது ஒரு கலையாகவோ ஒரு தொழிநுட்பமாகவோ வளர்ச்சியடையாதிருந்த காலமாக இருந்ததால் அக்காலத்து பெளத்த போதனைகள் மனப்பாடம் செய்யப்பட்ட வரிகளாக வாய்மொழி மூலமாக போதித்துவரும் தன்மையினைக் கொண்டதாக இருந்தது.

போதி மாதவனின் போதனைகள் அதனை செவிமடுப்போரால் அவரவர் அறிவிற்கு ஏற்ற வகையில் உண்மை என உணரக்கூடியதாகவும் ஏற்கக்கூடியதாகவும் இருப்பின் மாத்திரம் அதை பின்பற்றலாம் என்பதே புத்த பகவானின் வழிகாட்டலாக இருந்தது. ஆகையால் முற்றுமுழுதாக அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட கொள்கையினையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மையையும் ஆதாரமாகக் கொண்டிருந்ததால் பெளத்த தர்மம் என்பது அக்காலம் தொட்டு இக்காலம் வரை பலவந்தமான மத மாற்றத்திற்கு ஒருபோதும் துணை போகவில்லை. ஆகையால் அத்தர்மத்தினை காக்க வேண்டிய செயற்பாடுகளும் எத்தரப்பினரதும் கட்டாயப்படுத்தல்களின்படி முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே வாய்மொழி மூலமாக காக்கப்பட்டு வந்த பெளத்த தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்காக எழுத்துருவத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

பாரத சமுதாயம் இன, மத, சாதி பாகுபாட்டினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள ரீதியாக பெரிதும் புண்பட்டிருந்த பின்னணியில் அவர்கள் அந்த நிலையிலிருந்து விமோசனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சுகபோக அரச வாழ்க்கையை துறந்து இளவரசன் சித்தார்த்தன் மேற்கொண்ட தியானங்களும் உடலையும் உள்ளத்தையும் அதிகபட்சம் சுகபோகங்களுக்கோ துக்க துயரங்களுக்கோ உட்படுத்துவதற்கு பதிலாக எதிலும் எவ்வேளையிலும் திடநிலை வகிப்பதே தமக்கும் அயலவருக்கும் ஆத்ம திருப்தியை பெற்றுத்தர வழிவகுக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து அதனை உலகிற்கு எடுத்துக் கூறியமையே புத்த பகவானின் போதனைகளாக அமைந்திருக்கின்றன. ஆகையால் தாம் அருளிய போதனைகள் கூட தர்க்கத்திற்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை எதிர்பார்த்த புத்த பகவான் ஓரிடத்தில் இப்படி போதித்திருக்கின்றார்.

“உங்களுக்கு இப் போதனைகள் பற்றி சந்தேகம் ஏற்படுவதும் தெளிவற்ற தன்மை ஏற்படுவதும் ஐயப்பாடு ஏற்பாடுவதும் இயல்பே. ஆகையால் போதனைகளைக் கேளுங்கள். ஆயினும் மற்றவர்கள் சொல்வதினாலோ, மரபுவழி வந்ததினாலோ, பொதுமக்கள் அப்படி சொல்கிறார்கள் என்பதினாலோ, எதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். சமய நூல்கள் ஒரு விடயத்தைக் கூறுகின்றது என்பதனாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஒரு விடயம் தர்க்கங்களுக்கோ அல்லது அனுமானங்களுக்கோ பொருத்தமாக அமைகின்றது என்பதால் அதனை ஏற்கவும் வேண்டாம். வெளித்தோற்றம் சரியென தோன்றுவதால் ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம். கற்பனைக்கு விருந்தாக அமைகின்றது என்பதாலோ, உயர்ந்த கருத்தாக இருக்கின்றது என்பதாலோ, எமது குரு கூறிவிட்டார் என்பதாலோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏதேனும் ஒரு விடயம் தீமை அளிப்பதாகவும் தவறானவை எனவும் நீங்களே உணர்ந்தால் மாத்திரம் அவற்றைக் கைவிட்டு விடுங்கள்.” என்பதே புத்த பகவான் அருளிய போதனைகளின் சாராம்சமாகும்.

பெளத்த போதனைகள் இத்தகைய அஹிம்சை வடிவத்தைக் கொண்டிருந்த போதிலும் உலக அளவில் ஏற்பட்டு இந்தியாவை தாக்கிய பல போர்கள் காரணமாக பெளத்த தர்மத்தின் நீடித்த நிலைப்புக்கு எதிரான பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்தப் பின்னணியிலேயே அசோக சக்கரவர்த்தியினால் மகிந்த தேரரை தூதராகக் கொண்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெளத்த தர்மத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டு பெளத்த தேரர்களின் முதன்மை பொறுப்பாக அமைந்தது.

ஆரம்ப காலத்தில் இந்த பெளத்த தர்மத்தினை வாய்மொழி மூலமாக பாதுகாத்து வந்த போதிலும் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பஞ்சமானது பெளத்த பிக்குகளின் உயிருக்கு சவாலாக அமைந்ததால் அதுவரை மனப்பாடத்தில் வாய்மொழி மூலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பெளத்த தர்மத்தை நூல் வடிவத்தில் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அதற்கமையவே புத்த பகவானின் போதனைகளை ஓலைச்சுவடிகளில் எழுதும் பணி மாத்தளை அலுவிகாரையில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. பதப்படுத்தப்பட்ட பனையோலைகளில் கூரிய எழுத்தாணியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக செதுக்குவதன் மூலமே இப் பெளத்த போதனைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப் பணி மிகுந்த சிரத்தையுடனும் பொறுமையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே புத்த பகவான் அருளிய போதனைகள் 'திரிபீடகம்' என்ற பெயரில் இன்று ஒரு பெளத்த பொக்கி‘மாக எஞ்சியிருக்கின்றது. அதனை உள்நாட்டு ரீதியில் தான்தோன்றித்தனமாக திரிபுபடுத்துவதை தவிர்த்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத் திரிபீடகம் உலகவாழ் பெளத்த மக்களின் பொது சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே தற்போது அதனை உலக பெளத்த மரபுரிமையாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தியோகபூர்வ கோரிக்கையினை யுனெஸ்கோ நிறுவனத்திடம் முன்மொழிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இம் முன்மொழிவினை யுனெஸ்கோவின் உலக ஞாபக (Memory of the world) தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு முன்மொழிவதற்கும் பல தகைமைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க நிபந்தனைகள், சாட்சிகள், நினைவுகள் ஆகியன திரிபீடகத்தில் காணப்படுகின்றன. உலக ஞாபகமாக பிரகடனப்படுத்துவதற்கு சர்வகால தன்மை, புதுவித கண்டுபிடிப்பு, முத்திக்கான வழிகாட்டல், அதற்கான முதன்மையான ஒரேயொரு படைப்பாக இருக்கின்றமை, உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றமை, கலாசாரம், முக்கிய நிகழ்வுகள், மனிதர்கள், கலாசார பின்புலம், மனித நடத்தை, சமூக, கலாசார, அரசியல், முக்கிய மனிதர்கள், இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், மானிட விஞ்ஞானம், கலை, விளையாட்டு ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது பல விடயங்களோ அதனுள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது திரிபீடகத்தினை உலக ஞாபகம் எனும் தலைப்பின் கீழ் மரபுரிமையாக முன்மொழிவதற்கு தேவையான அனைத்து தகைமைகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஆகையால் தேரவாத பெளத்தத்தை பேணிப் பாதுகாத்து அதற்கமைய செயற்படும் ஒரு நாடு என்ற வகையில் திரிபீடகத்தினை உலக ஞாபகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது எமது பொறுப்பாகும். திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதன் மூலம் புத்த பகவானின் போதனைகளை உலக மக்களின் தர்ம போதனைகளாக பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி உலகவாழ் பெளத்த மக்களின் பாராட்டுக்குரிய விடயமாகவே அமைந்துள்ளது.

அந்த வகையில் இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பெளத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவினை அனைத்து பெளத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் யுனெஸ்கோ அமைப்பிற்கு சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் முப்பிரிவுகளினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலில் மார்ச் 23 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 16 முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதி “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து இவ்வாரம் முழுவதும் பல்வேறு சமய நிகழ்வுகளையும் வேலைத்திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளதோடு, அவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள் மற்றும் பெருந்தெருக்களில் பெளத்த கொடியினை காட்சிப்படுத்துமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த புனித திரிபீடக வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள விகாரைகளில் ஒலி புூஜைகள், புனித தந்தங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகள், பொலிஸ் பிரிவு மட்டத்தில்் அன்னதான நிகழ்வுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விகாரைகளில் அறநெறி பாடசாலை கட்டிட நிர்மாணம், பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மையப்படுத்திய சமய நிகழ்வுகள், திரிபீடக தர்மபோதனைகள் ஆகியன அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை விகாரைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதி நாளான மார்ச் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறும் தேசிய மகோற்சவத்துடன் “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் நிறைவுபெறவுள்ளது. போதி மாதவனின் தூய பெளத்த போதனைகளை உலக மக்களின் பொக்கிஷமாக பாதுகாப்பதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த உன்னத முயற்சி வெற்றியடைய பொதுமக்களின் ஒத்துழைப்பே இன்றியமையாததாகும்.

 

 

Comments