நம்பிக்கை ஒளிக்கீற்றாய் பிரதமரின் வடக்கு விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கை ஒளிக்கீற்றாய் பிரதமரின் வடக்கு விஜயம்

யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கின் நான்கு மாவட்டங்களையும் சம காலத்தில் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. கட்சி, பிரதேச பாகுபாடின்றி அனைத்து மக்களினதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

யார் குற்றினாலும் அரிசியானால் சரி என இது தொடர்பில் வடக்கு மக்கள் நேரடியாகவே மனந்திறந்து கூறுகின்றனர். இவ்வளவு காலமும் அத்தனை கோடி ஒதுக்கப்பட்டது இத்தனை பில்லியன் ஒதுக்கப்பட்டது என பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டாலும் இப்போது தான் அபிவிருத்தியை ஓரளவு காண முடிகின்றது என அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கு விஜயம்செய்து பல்வேறு துறை தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், அரசாங்கத்தினால் மேற்படி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அதற்குத் தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

பிரதமர் தலைமையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், வட மாகாண ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இச் சந்தர்ப்பமானது மக்கள் தமது பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் தமது பகுதிக்குத் தேவையான அபிவிருத்திகள் எவை என பலவற்றையும் நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூற சந்தர்ப்பமாகியது. சில பிரச்சினைகள் நேரடியாகவே தீர்க்கப்பட்டதுடன் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பிரதமரால் நேரடியாகவே பொறுப்புக் கொடுக்கப்பட்டமை சிறப்பானது.

அத்துடன் உரிய செயற்திட்டத்திற்குத் தேவைப்படும் பணத்தை அரசாங்கம் வழங்கும் என்ற உறுதிமொழியையும் பிரதமர் வழங்கியதுடன் அத்திட்டங்களை நிறைவுசெய்ய வேண்டிய காலஅவகாசத்தையும் பிரதமர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே அபிவிருத்தியில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து நின்று செயற்படுவதாகக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இம்முறை அபிவிருத்தித் திட்டங்களில் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

பிரதமர் தலைமையில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இம்முறை இடம்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் சில அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதிலும் அவர்களின் பங்களிப்பு இடம்பெற்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதில் கட்சி, அரசியலுக்கு அப்பால் முனைப்புடன் செயற்பட்டு அனைத்து எம்.பிக்களும் அரசியல் பிரமுகர்களும் மக்கள் சார்பில் செயற்படுவதே வரவேற்கத்தக்கது.

அந்த வகையில் இம்முறை பிரதமர் தலைமையிலான நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், தருமலிங்கம் சித்தார்த்தன், எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் பிரதமருடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். பிரதமரோடு இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்கள் அடிக்கல் நாட்டியதையும் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் பிரதமருக்குத் தெளிவாக விளக்கியமையும் குறிப்பிட முடியும். கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் ஸ்ரீதரன் எம்.பி. பாராளுமன்றத்தில் போலவே ‘சக்கைப்போடு’ போட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அரசாங்கம் மாவட்டங்களில் பல செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டங்களை போடுகிறது. அதற்கான நிதியும் வழங்கப்படுகிறது. எனினும் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்தத் திட்டங்களின் செயற்பாடுகளில் எந்தளவு முன்னேற்றம் காணப்படுகிறது. சில திட்டங்கள் இடம்பெறவில்லையென்றால் அல்லது இடையில் தடைப்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணமென்ன? போன்ற கேள்விகளை எழுப்பி அவர் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் துளைத்து எடுத்துவிட்டார். இது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பில் மக்கள் தெளிவு பெறுவதற்கும் வழிவகுப்பது உறுதி.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 9,000 ஏக்கர் பயிர்ச்செய்கைக் காணிக்காக 200 மில்லியன் நிதி பாதிக்கப்பட்டோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாக விவசாய அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.

மேற்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யும் வகையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும் அரைவாசிப் பேருக்கே இதுவரை நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோரின் 9,000ற்கு மேற்பட்டோர் தெருவில் நிற்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

வெள்ளத்தினால் 11,636 ஏக்கர் பல்வகை பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள இம்மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் ஸ்ரீதரன் எம்.பி தெரிவித்தார்.

அத்துடன் 46,000 மேற்பட்ட கால்நடைகளும் அவர்களால் இழக்கப்பட்டுள்ளன. அதற்கும் எந்த நட்டஈடும் இதுவரை அம்மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் அவர்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது வீதிகள் புனரமைப்பு மற்றும் நட்டஈடு வழங்குதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஸ்ரீதரன் எம்.பியும் தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் முறையான தகவல்களை பெற்றுத்தரும்படியும் இதன்போது பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மன்னாரில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் பிரதமர் அருகில் ஆசனத்தில் அமர்ந்திருக்க மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போன அமைச்சர் ரிசாட் பதியுதீன், அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஒரு அமைச்சராக காத்திரமான பதில்களை பெற்றுக்கொடுத்ததையும் மக்களுக்கான திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமருடனும் அதிகாரிகளுடனும் வாதிட்டு உறுதிமொழிகளைப் பெற்றுக்கொடுத்தமையும் சிறப்பு.

இனம், மதம், பிரதேசம், கட்சி எனப் பாராது மாவட்டத்தை முன்னேற்றுவதற்கும், மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அதற்கு அனைத்து மக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்ததைக் காணமுடிந்தது.

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்படும். அது தொடர்பில் கொழும்பில் பாதுகாப்புக் கவுன்சிலில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்னாரில் தெரிவித்தார்.

மன்னாரில் சிலாவத்துறை, முள்ளிக்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் அக்காணிகளை மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளின் அத்துமீறிய பிரவேசத்தால் உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் அத்துடன் கல்பிட்டியூடாக மன்னார் கடற்பரப்பில் இடம்பெறும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பெருள் கடத்தலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இதன்போது பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

நீண்ட காலமாக பேச்சுவார்த்தையாக மட்டுமே இருந்த தலைமன்னார் தமிழகத்துக்கான கப்பல்சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் மன்னாரில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் பிரதமர் உறுதிமொழிகளை வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு செலவு திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி தருமலிங்கம் சித்தார்த்தன் அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தமது திருப்தியை வெளியிட்டதுடன் இது யானைப்பசிக்கு சோளப் பொறி என சிலர் கூறினாலும் உண்மையில் பல வருடங்களாக கல்லையும் தாரையும் காணாத வீதிகள் தற்போது கண்டுள்ள முன்னேற்றம் அபிவிருத்திக்கு சான்றாகிறது என்றும் குறிப்பிட்டார்.

உண்மையில் மேற்படி நான்கு மாவட்டங்களில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டங்கள் மிக பிரயோசனமானவை. மக்களுக்கு நலன் பெற்றுத் தருபவை. வாய்ப்புகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் வடக்கு அபிவிருத்தியில் அதன் இலக்கை அடைவது உறுதி.

மேற்படி அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டங்கள் போன்று அமைந்திருந்தன. பிரதமரும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் நேருக்கு நேர் பேசி வாதிட்டு மேற்கொள்ளும் முடிவுகள் உண்மையில் காத்திரமானவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Comments