வசனம் எழுதாமல் போதையில் கிடந்த வசனகர்த்தா நவரட்ணம் | தினகரன் வாரமஞ்சரி

வசனம் எழுதாமல் போதையில் கிடந்த வசனகர்த்தா நவரட்ணம்

“அவன் ஜுனைதீன் எழுதின ஸ்கிரிப்ட இவர் கொண்டு போய் எவன்கிட்டயோ கொடுத்திருக்கிறாரு. இன்னைக்கு ஜுனைதீன விட்டா இங்க தமிழ் படத்துக்கு கத வசனம் எழுத எவன் இருக்கிறான்?” என அதிருப்தியான குரலில் ஜவாஹர் சொல்வது என் காதுகளில் விழுந்தது.

“அது தானே! அதுவும் பிலிம் கோப்பரேசன் அங்கீகாரம் கிடைத்த ஸ்கிரிப்ட்! என்னா ரகு, ஒங்களுக்கு மூளை சரியில்லையா?” என டீன் குமார் சொல்லி நகைப்பதும் எனக்கு கேட்டது.

“கதைய என்கிட்ட சொல்லுங்க நான் எழுதித் தாரேன்!” என்றார் உதவி இயக்குனர் பீ. எஸ். நாகலிங்கம்.

“கிழிப்பீங்க!. ஜுனைதீனுக்கு குழி வெட்டிட்டுத் தான் நீங்க இங்க வந்திருக்கிறீங்க. அடுத்து யாருக்கு குழி வெட்டப் பார்கிறீங்க? ஒங்களுக்கு முடியுமா ஐசே ஜுனைதீனோட ஸ்கிரிப்ட் எழுத?” என்றார், ஆத்திரமாக ஜவாஹர்.

“அது சரி!” என்றார் நடிகர் எஸ். என். தனரத்னம்,

“என்னா நேத்து ஜுனைதீன் கிட்ட வாங்கினது பத்தாதா?” என்றார் நாகலிங்கம்.

“நாகா! இனி நீங்க அதப்பத்தி பேசாதீங்க. அத நெனைச்சு ஜுனைதீன் ரொம்ப வேதனையில இருக்கிறார். ரகு! இன்னைக்கும் பார்த்துட்டு அந்த ஆள் வைத்திருக்கும் எழுதி ஸ்கிரிப்டயாவது வாங்கி எடுப்போம்” என்றார்.

“இன்னைக்கு இல்ல, இப்பவே போங்க!” என்றார், ஜவாஹர்.

“அது தான் சரி! ரகு! எழும்புங்க. வாங்க போவோம்” என்றார், டீன் குமார். “வாங்க ரகு போவோம்” என்றார் தனரத்னம்.

“அப்படி ஏதாவது செய்யுங்க!” என்றார் கபூர்.

“இப்படி சும்மா இருக்க ஏலாது” என்றார் வில்பிரட் வில்வா.

டீன் குமார், தனரத்னம், ஜவாஹர் மூவரும் ரகுநாதனுடன் யாழ் நகர் மத்தியிலுள்ள குமரன் இன் ஹோட்டலுக்கு நவரட்ணத்தைச் சந்திக்க விரைந்தனர்.

நான் குளித்து விட்டு வந்த போது, குமரன் இன் ஹோட்டலுக்கு நவரட்ணத்தைச் சந்திக்க சென்ற குழு போன வேகத்திலேயே திரும்பியிருந்தது. அவர்கள் பேசுவது என் காதுகளில் விழுந்தது.

குழு சென்ற போது அறைக்குள்ளிருந்த நவரட்ணம் சென்றவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார். பின் ஹோட்டல் மேனேஜரிடமுள்ள மாற்றுச் சாவியை எடுத்து அறையைத் திறந்து படக் குழு உள்ளே நுழைந்த போது நவரட்ணம் நல்ல குடி போதையில் நடப்பது என்ன என்றே தெரியாமல் கட்டிலில் கிடந்துள்ளார்.

ஸ்கிரிப்டை எடுத்து பார்த்தால் ஓம் என்பதைத் தவிர வேறு எதுவுமே எழுதாமல் வெறும் போதையிலேயே ஐந்து நாட்களைக் கடத்தியிருப்பது தெரிந்தது. என்னுடைய ஸ்கிரிப்டையும் காணவில்லையாம். அன்றே நவரட்ணத்தை அறையை விட்டு வெளியேற்றும்படிக கூறி அது வரையிலான ஹோட்டல் காசைக் கட்டி விட்டு வந்துள்ளார், ரகுநாதன்.

அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து மௌனமாக நின்றேன்.

நடு ஆற்றில் கவிழ்ந்த படகிலுள்ளவர்கள் தத்தளிப்பதைப் போல் ரகுநாதனும் ஏனையவர்களும் செய்வதறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

ரகுநாதனுக்கு இது போதாது!என உள்ளூர சந்தோஷத்துடன் இருந்த நான், விடியலில் கொழும்புக்கு போக ரகுநாதனிடம் கேட்காமல் வேறு யாரிடம் ஐம்பது ரூபாய் வாங்கலாம் என்ற சிந்தனையுடன் நான் இருந்தேன்.

இரவும் வந்தது.

பகல் ஜவாஹர் பணம் வைத்திருப்பதைக் கண்டேன். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுவோம் என்ற முடிவுடன் ரகசியமாக ஜவாஹரிடம் ஐம்பது ரூபா கேட்போம் என்று தருணம் வரும் வரை அறையில் காத்திருந்தேன்.

எதிர்பராமல் என் அறைக்குள் நுழைந்தார் ஜவாஹர்.

“என்ன உம்மா (தனக்கு மிகவும் பிடித்தவர்களுடன் ஜவாஹர் பேசும் போது உம்மா என்று அழைப்பது வழக்கம்) இன்னும் படுக்கல்லையா. என்ன யோசின? ” என அன்புடன் என்னைக் கேட்டார்.

“நான் காலையில கொழும்புக்கு போறேன். எனக்கொரு அம்பது ரூவா தாங்க. கொழும்புல வச்சு தர்ரேன்”

“இந்தாங்க அம்பது ரூவா!” ஐம்பது ரூபாயைத் தந்த ஜவாஹர், “நீங்க கொழும்புக்கு போக வேணாம்” என்றார். நான் வியப்புடன் அவரை ஏறிட்டு பார்த்தேன்.

(தொடரும்)

Comments