மனிதன் உருவாக்கும் இயந்திரங்கள் மனிதனுக்கே பேரழிவாகும் | தினகரன் வாரமஞ்சரி

மனிதன் உருவாக்கும் இயந்திரங்கள் மனிதனுக்கே பேரழிவாகும்

  • வியட்நாம் உலக  பொருளாதார மாநாடு ஒரு நோக்கு
  • நான்காவது கைத்தொழில் புரட்சியில் ஆசியான் நாடுகளின் எதிர்காலம்

கடந்த வாரத் தொடர்...

நான்காவது கைத்தொழில் புரட்சியின் அபரிமித வளர்ச்சியை நோக்குகின்றபோது அன்று கார்ள் மார்க்ஸ் விடுத்த எச்சரிக்ைகதான் நினைவிற்கு வருகிறது.

"முதலாளித்துவம் தேவைக்குமேல் உற்பத்தி செய்துவிடும். அதன் காரணமாக ஏற்படுகிற நெருக்கடியில் மாட்டிக்கொள்ளும், புதிய வகை உற்பத்தி உறவுகளை உருவாக்கும். புதிதாகப் பல சாதனங்களை உற்பத்தி செய்யும். மௌனமாக இதைப் பார்த்துக்ெகாண்டிருக்கும் பெரும்பான்மை மக்களால், முதலாளித்துவம் தடுத்து நிறுத்தப்படும் வரை இத்தகைய நிகழ்ச்சிகளின் சுற்று மேலும் மேலும் தொடரும்" என்பதுதான் மார்க்ஸின் அந்த எச்சரிக்ைக.

ஓரளவிற்கு இன்று அந்த எச்சரிக்ைக மெய்யாகி வருகின்றது என்பதை நடப்பியல் தொழில்நுட்ப வளர்ச்சி புலப்படுத்தி வருகிறது. ஆனால், முதலாளித்துவம் இல்லாமல் எதிர்காலத்தின் இருப்பு நிலைக்கப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம். மனிதனின் நுண்ணறிவைக் கடந்து இன்று உருவாகியுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மனித வளத்தின் முக்கியத்துவத்தை இல்லாமற்செய்து வருகிறது. இதனால், மனித மூளைக்கும் திறமைக்குமான கேள்வி எழாத நிலை தோற்றம்பெற்றுப் பெருகி வருகிறது. மனிதனுக்கு மனிதன் சேவைகளைப் பெற்றுக்கொடுப்ப தற்கும் தற்போது செயற்கை நுண்ணறிவே பணியாற்றிக்ெகாண்டிருக்கிறது. இயந்திரங்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் மனித வளத்தை அந்நியப்படுத்துவதற்கான ஒரு மறைமுக செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

சரி, இயந்திரங்களுக்கு அறிவூட்டுவதன் நோக்கம்தான் என்ன?

மனிதர்களின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதன் வழியாக நம் கணனிக்குள் ஊடுருவி நம்மைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது. (இப்போதும் நாம் கணனிக்கும் இயந்திரங்களுக்கும் அடிமைபட்டு இருக்கிறோம் என்பது வேறு விடயம்) அதனால், இன்று நம்முடைய அந்தரங்கத்தைப் பேணுவதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு உலகம் மீட்சி பெறுவது என்பதைப் பற்றித்தான் உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) கவனம் செலுத்துகிறது.

மனிதன் உருவாக்குகின்ற இயந்திரம் எவ்வாறு மனிதனுக்ேக அழிவைக்ெகாண்டு வருகிறது! வேலைவாய்ப்பை எவ்வாறு பறிக்கிறது? இவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்ெகாள்வது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் ஒரு மேடைதான் வியட்நாம் பொருளாதார மாநாடு. இந்த மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியிருப்பது அதி முக்கியத்துவமான அம்சமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டு தென்கிழக்காசிய நாடுகளின் வகிபாகம் குறித்து விளக்கியிருக்கிறார்.

குறிப்பாக, தென் கிழக்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவின் மூலம் எவ்வாறான பலன்களைப் பெற்றுக்ெகாள்வது; அதனை எவ்வாறு நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்வது, என்பது ஆசியான் நாடுகளின் கரிசனை.

'ஆசியான்' Association of South East Asian Nations.

1967ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஓர் அமைப்பு. சரியாக ஓகஸ்ட் மாதம் எட்டாந்திகதி.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இணைந்தே இந்த ஆசியான் அமைப்பை முதன்முதலில் உருவாக்கின.

இதில் சிங்கப்பூரின் முக்கிய அமைச்சரும் பின்னாளில் பிரதிப் பிரதமராகவும் விளங்கிய சின்னத்தம்பி இராஜரட்ணம், இந்தோனேசியாவின் மூன்றாவது ஜனாதிபதியும் சிரேஷ்ட இராஜதந்திரியும் வெளிவிவகார அமைச்சராகவுமிருந்த ஆதம் மாலிக், பிலிப்பைன்ஸின் சட்டத்தரணியும் ஊடகவியலாளருமான நாசிஸோ ரெமோஸ், மலேசியாவின் இரண்டாவது பிரதமராகவிருந்த அப்துல் ரசாக் ஹுசேன், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சராகவும் பிரதிப் பிரதமராகவுமிருந்த தனட் கோமன் ஆகிய ஐந்து நிபுணர்களே தீர்க்கதரிசனத்துடன் இந்த அமைப்பை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள். இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரிலேயே இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்திருக்கிறது.

எனினும், இந்த அமைப்பின் தேவையுணர்ந்து 2010இல் மேலும் ஐந்து நாடுகள் இதில் இணைந்துகொண்டன. புரூனை, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியன்மார் ஆகிய நாடுகளே அவை. பிராந்தியத்தில் ஏற்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு முகங்கொடுத்துத் தத்தமது நாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தப் பத்து நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியானின் ஐம்பதாவது ஆண்டு விழாவின்போது இனங்காணப்பட்ட பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாகவே நான்காவது கைத்தொழில் புரட்சி பற்றிக் காத்திரமாக ஆராய்வதற்கு வியட்நாம் உலகப் பொருளாதார மாநாட்டில் வழிபிறந்தது.

இந்த மாநாட்டிற்கு இணைத் தலைமை வகித்த ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச திட்டங்களுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஆன் பிறிஜ்ஜிட் அல்பிரக்ஸ்ரன், மலேசியாவின் சிஐஎம்பீ ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் நசிர் ரஸாக், இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யாணி இந்திரவத்தி, ஹொங்கொங் தொழில் நிபுணர் கெவின் ஸ்னீடர், தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் கேங் யூங் வா, வியட்நாம் தகவல் தொடர்பு, தொடர்பாடல் பதில் அமைச்சர் குயென் மான் ஹுங் முக்கியமான அறிக்ைககளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

ஆசியாவின் எதிர்காலம் பெண்கள்

நான்காவது கைத்தொழில் புரட்சிக்கு ஏற்றவாறு டிஜிற்றல் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் வடிவமைப்பது பற்றிய தமது ஆலோசனைகளை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆசியான் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த உலக பொருளாதார மாநாட்டை வியட்நாமில் நடத்தியமை சிறப்பம்சம் என்றே கருதப்படுகிறது.

பல தசாப்த கால யுத்தப்பிடியில் இருந்து மீண்டெழுந்துள்ள வியட்நாம், படிப்படியாக பொருளாதாரத்திலும் மீட்சி பெற்று வருகின்றமை பிராந்தியத்தின் நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளுக்கும் ஓர் முன்மாதிரியாகும்.

உலகப் பொருளாதாரத்தின் ஒரு கேந்திர மையமாக இன்று ஆசியா திகழ்ந்துகொண்டிருக்கிறது. 1980 காலப்பகுதிக்குப் பின்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவித்திருக்கிறது. எனினும், அதனை இன்னமும் மெருகேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. காலநிலை மாற்றம், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்ைக அதிகரித்துச் செல்கின்றமை, பால்நிலை சமத்துவமின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆசிய அபிவிருத்தியின் தரவுகளின்படி பிராந்தியத்தில் உள்ள பெண்களில் அரைவாசிப்பேருக்கும் குறைவானோரே வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

ஆனால், எண்பது சதமான ஆண்கள் தொழில் புரிகின்றனர் என்கிறார் இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யாணி இந்திரவத்தி. அதிலும் ஆண்களைவிட 25% குறைவான சம்பளமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மூன்றில் ஒரு பெண்ணே முகாமைத்துவ பணிகளில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இஃது உலகப் பொருளாதாரப் பின்னடைவாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசியாவின் பொருளாதாரத்தை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு பெண்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பெண்களுக்காகவும் யுவதிகளுக்காகவும் ஆசிய பிராந்தியம் முதலீட்டைச் செய்ய வேண்டும் என்பது ஸ்ரீ முல்யாணி இந்திரவத்தியின் கருத்தாக உள்ளது. இதற்கு வர்த்தக சமூகம், அரசாங்கம், சிவில் சமூகத்தின் பங்கு அளப்பரியதாகும். ஆசியாவின் எதிர்காலம் பெண்கள் என்கிறார் அவர்.

விடுதலை, சுதந்திரம், மகிழ்ச்சி

உலகப் பொருளாதார மாநாட்டிற்கு அனுசரணை வழங்கிய வியட்நாமின் பொருளாதாரம் கணிசமான அளவு முன்னேற்றமடைந்திருந்தாலும், அஃது இன்னமும் தனது பொருளாதார நிலையை உலக மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பாரிய சவாலை எதிர்நோக்கியே இருக்கிறது. எனினும், அந்நாட்டு மக்களின் இலக்காகவுள்ள விடுதலை, சுதந்திரம், மகிழ்ச்சி என்பவற்றை வியட்நாமிய அரசு நிறைவேற்றியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

வியட்நாம் மக்கள் தமக்கான நாட்டில் தங்களின் தனித்துவத்துடனும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் முகத்தில் ஒளிரும் செழிப்பின் வனப்பு தெளிவாகப் புரிய வைக்கிறது.

உலகப் பொருளாதாரத்தில் டொலர் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும் வியட்நாம் மக்கள் தங்களுடைய நாணயத்தில் நாணயமாகத் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துகின்றார்கள். அரசியல் அடிப்படையில் சமவுரிமைக் குடியரசாகத் திகழும் வியட்நாம், 90.3 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. சனத்தொகையின் அடிப்படையில் உலகில் 13ஆவது இடத்திலும் ஆசியாவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802இல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் 1945இல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1976இல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது. இந்த ஹனோய் நகரத்தில்தான் கடந்த 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்றது.

கி.பி. 938இல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்குத் தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு, வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் ஜப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர்.

அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.

வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது.

2000ஆம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு, 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது.

இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக பொருளாதார மன்றத்தில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை வியட்நாம் இன்னமும் எதிர்கொண்டுள்ளது. நடந்து முடிந்த உலகப் பொருளாதார மாநாட்டினைத் தொடர்ந்து இந்தச் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதற்குப் பிராந்திய நாடுகளுடன் இணைந்து வியட்நாம் பயணிக்கவிருக்கிறது.

வியட்நாமின் தற்போதைய நிலவரத்தின்படி, என்னதான் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டாலும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள், மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறார்கள். பொது வாழ்வில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

என்றாலும், உழைப்பைப் பொறுத்தவரை ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழில்துறையை நடத்தி வருகின்றனர். கூலி வேலை செய்கின்றனர். விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சாமானிய பணியாளரின் மாதச் சம்பளம் நாற்பது இலட்சம் டொங்காகவும் ஓர் உத்தியோகத்தரின் மாதச் சம்பளம் சுமார் ஒரு ​கோடி டொங் வரையும் காணப்படுகிறது. (ஓர் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 23,901 வியட்நாம் டொங்) இன்னும் வரும்

விசு கருணாநிதி

 

Comments