தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டுவோர் | தினகரன் வாரமஞ்சரி

தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டுவோர்

வாழ்க்கையின் லட்சியம் என்னவென என் தந்தையைக் கேட்டால், அவர் தெளிவாகச் சொல்வார்,

நல்லாத் தின்னவேணும். நல்லா குடிக்கவேணும். நல்ல மரியாதையா உடுத்த வேணும். அதுக்கும் மேல அங்கால எழும்பிப் போ எண்டொருவன் சொல்லாத சொந்தமா உள்ள ஒரு திண்ணையாவது வேணும் படுத்துறங்க.

நல்லா கேளுங்கோ அவர் மின்சாரத்தை கேக்கேல்ல. வானொலியைக் கேக்கேல்ல இது ரெண்டும்தான் அப்ப பழக்கத்தில இருந்தது. இப்ப மாதிரி தொல்லைக்காட்சி, செல்பேசி கைக்குள்ள சினிமாத்தியேட்டர் எதுவுமில்லை. ஆனாலும் அவர் நன்றாக குடித்தார். காலையில் ஒரு பால்போட்ட தேநீர் உணவுடன் தினசரி தேன், மாலையில் சுத்தமான கள்ளு அல்லது கல்லோயா கறுத்தப்போத்தல் சாராயம். எப்பவும் மச்சம், மாமிசம், கிடைக்காதபோது, ஒரு கருவாட்டை சுட்டாவது சோற்றில் வைத்தாலே உண்பார். இறுதிவரை உறுதியாகவே வாழ்ந்தவர் கடின உழைப்பாளி. குடிப்பதால் மனிதனுக்கு புற்றுநோய் வரும் என்றால் நம்பவே மாட்டார். உழைப்பவன் தன் களைப்புத்தீர கொஞ்சம் குடித்தால் என்ன? அது அவனுடைய உடலுக்கு தீங்கல்ல, இல்லாட்டி உதை அரசாங்கம் விக்குதோ என்றொரு எதிர்க்கேள்வி போடுவார்.

இதை ஏன் இப்போது நினைக்கிறேன். குடி குடியைக்கெடுக்கும் என்று சொல்கிறோம் ஆனால் இலங்கையில்தான் ஏராளமான குடிவெறியர்கள் இருக்கிறார்கள் எனற உண்மை யாருக்காவது தெரியுமா? நான் எதற்கு இலங்கை முழுவதையும் பற்றி பேசவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரங்களை, தொழில் உபகரணங்களை உறவுகளை இழந்து நின்ற போது, அவர்களுக்கு மனதில் எழும் துயரைப்போக்க ஒரு மருந்து வேண்டும். அந்த அருமருந்து மதுதான். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. உழைக்கும் சிறு தொகை கடனை கட்ட போதவில்லை என்றால், அந்த சிறு தொகையையும் குடித்து விடுவதை தவிர வேறு வழியில்லை. பகல் முழுதும் பட்டினியாக வேலை செய்த நிலை இப்போது இல்லை தொழில் கொள்வோர் மத்தியான உணவை வழங்கும் கடப்பாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மாலையில் கூலியை வாங்கியதும் மதுக்கடையே முதல் செல்லும் இடமாக உள்ளது.

ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் மக்கள் குடிப்பதற்காக மதுக்கடைகளுக்கு செல்வதேயில்லை ஆனாலும் குடிக்கிறார்கள். குடியை வருடக்கணக்கில் வழமையாகக் கொண்டிருந்த ஒருவர் சொல்வதாவது, இப்ப பாரில் சாராயம் சரியில்லை வைக்கோலை ஊறப்போட்ட தண்ணி மாதிரி இருக்கு. வெள்ளைதான் சரக்கு இந்த வெள்ளை என்பது கசிப்பு.

இதற்கு காலத்துக்கு காலம் பெயர் மாறி வந்துள்ளது. போர் நடந்த காலத்தில் கசிப்பு உற்பத்தி மிக மோசமாக வளர்ச்சி கண்டிருந்தது. அன்றைய காலத்தில் அது கிபிர் என்ற பட்டப்பெயரைக் கொண்டிருந்தது.

பின்னர் அதன் தயாரிப்பில் வரும் பொருளைக் கொண்டு வெட்டிரும்பு என்றும் அழைக்கப்பட்டது. கசிப்பு சாதாரண சாராயம் போலல்லாது விரைவில் மனிதரின் சிறுநீரகத்தை தின்று தீர்க்கிறது. அடிப்படையில் கிராம வாசிகள் தமது சிறுநீரகம் அழிந்து கொண்டு போவதை அறிவதில்லை. அவர்கள் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் அயலிலுள்ள கடையில் விற்கும் பனடோலையே மருந்தாகக் கொள்கின்றனர். பனடோல் என்பதும் இப்போது சிலருக்கு ஒரு போதைப்பழக்கம்தான். அலுப்பு நீங்க மாத்திரை போடுவதும் அலுப்பு நீங்க குடிப்பதும் எவ்வளவு பேதமை.

முன்னர் பல போராளிகளிடையே இந்தப்பழக்கம் இருந்தது. எப்போதும் அவர்களுடைய ரவைக்கூட்டில் வலி நிவாரணிகள் இருக்கும் கேட்டால் தாங்கள் தினமும் அதை பாவிப்பதாக கூறுவார்கள். ஆனால் விரைவிலேயே ஏதாவது ஒரு களத்தில் அவர்கள் சாவடைந்து போவார்கள். அன்றாடம் தாம் செய்யும் வேலைக்களைப்பை போக்கவே அவர்கள் பனடோலில் தஞ்சமடைவர். இப்போது அதுவே கிராமிய சில நகர மக்களிடையேயும் வழமையாகி விட்டது.

கசிப்பை உற்பத்தி செய்வோருக்கான கூலிகளாக வேலை செய்யப்போய் உற்பத்தி முறைகளை கற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே பெரிய செலவில்லாமல்.

தாமே தமக்குத் தேவையான கசிப்பை உற்பத்தி செய்து சுடச்சுட அருந்துகிறார்கள். கசிப்பு உற்பத்தி பெருமளவு நடந்தாலும் அதை தடுக்கும் நடவடிக்கை போதவில்லை. அல்லது இயலவில்லை. என்று கூறலாமா? ஒரு கசிப்பு மொத்த உற்பத்தியாளன் தனக்கு பொருட்களை விநியோகிக்க சாதாரண மிதிவண்டிக்கூலிகளையே அமர்த்துகிறான். அடுப்பிலும் நெருப்பிலும் வடிப்பதிலும் ஈடுபடுபவர் வெறும் உள்ளாடையுடன்தான் வேலை செய்வார். காவலரின் அசுமாத்தம் கண்டால் அவர்கள் ஓடிவிட அது வசதியாகிறது.

ஒரு போதும் இவர்களை கிராமவாசிகள் காட்டிக் கொடுக்கப்போவதில்லை. காரணம் அவர்களுடைய வாழ்வாதார கூலித் தொழிலே இங்குதான் உள்ளது.

உற்பத்தியின் முடிவில் மொத்தமாக விற்பனை நடைபெறுவதில்லை. இறுதி நுகர்வாளனுக்கு விற்பனை செய்வது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளார்கள். அவர்கள் அகப்பட்டுவிட்டால்கூட நீதிமன்றில் அழுது குழறி தமது வறுமையை சொல்லி புலம்பி தமது அபராதத் தொகையை குறைக்க விளைகிறார்கள். அப்படித்தான் ஒரு தொகை அபராதமாகிவிட்டால்கூட, வயிற்றுப் பசிக்காகவே கசிப்பு விற்றேன் என்று அழுத பெண்கள். அன்று மாலையே அபராதத்தொகையை கட்டிவிட்டு வெளியே போய் விடுவதுடன் தொழிலை தொடர்கின்றனர்.

அதாவது அவர்களுடைய முதலாளிகள் அவர்களை மீட்டுவிடுகிறார்கள். இவர்கள் தமக்கான சவக்குழிகளை தாமே வெட்டுகிறார்கள் என்பதை அறியாமலே தாம் தமது வாழ்க்கைக்கே ஆதாரமாமாக இதை செய்வதாக கூறுவதை என்னென்பது.

Comments