பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்தில் | தினகரன் வாரமஞ்சரி

பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்தில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஒன்றரை தசாப்தத்திற்கு பின் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி 12 ஆண்டுகளில் தனது மோசமான தரநிலையை பதிவு செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி முடிவடைந்த பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு பின் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பிஃபா உலகத் தரவரிசை கடந்த (16) புதுப்பிக்கப்பட்டது. இதில் உலகக் கிண்ணத்தில் சோபித்த அணிகள் அதிரடி முன்னேற்றங்கள் கண்டிருப்பதோடு அந்த தொடரில் ஏமாற்றம் தந்த அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதில் குரோஷியாவை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஆறு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் அணி பிஃபா தரவரிசையில் கடந்த 16 ஆண்டுகளின் பின்னரே முதலிடத்திற்கு வந்துள்ளது.

பிரான்ஸ் இதற்கு முன்னர் கடைசியாக 2002 ஆம் ஆண்டு மே மாதமே பிஃபா தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது.

எனினும் பிரான்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கும் பெல்ஜியத்தை விடவும் மூன்று தரநிலை புள்ளிகளே குறைவாக உள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வரை முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்த பெல்ஜியம் அணி ஒரு இடம் உயர்ந்தே இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதனால் உலகக் கிண்ண போட்டியின் காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோற்ற நெய்மாரின் பிரேசில் அணி தரவரிசையில் ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்தை பிடித்தது. பிரேசில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஃபா தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு சரிவது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோஷிய அணி அதிரடியாக 16 இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்திற்கு வந்துள்ளது. இது குரோஷியாவின் சிறந்த தரநிலையாகும். இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு 4 ஆவது இடத்திற்கு முன்னேறியதை குரோஷியா தற்போது சமப்படுத்தியுள்ளது.

இது தவிர உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து 6 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும் காலிறுதி வரை வந்த உருகுவே 9 இடங்கள் முன்னேறி 5 ஆவது இடத்தையும், சுவீடன் 11 இடங்கள் ஏற்றம் கண்டு 13 ஆவது இடத்தையும் பிடித்தன.

அதேபோன்று இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகத் தாழ்வான தரவரிசை இடத்துடன் களமிறங்கி காலிறுதி வரை முன்னேறிய போட்டியை நடத்திய ரஷ்யா 21 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் 70 ஆவது இடத்தில் இருந்த அந்த அணி தற்போது 49 ஆவது இடத்திற்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பிஃபா தரவரிசையில் அதிக இடங்கள் முன்னேற்றம் கண்ட அணியாகவும் ரஷ்யா இடம்பெற்றுள்ளது.

மறுபுறம் இம்முறை உலகக் கிண்ணத்தில் மோசமாக ஆடிய அணிகள் அதற்கு ஏற்ப தரவரிசையிலும் மோசமான பெறுபேற்றை பெற்றுள்ளது. முக்கியமாக கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பிஃபா தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த ஜேர்மனி முதல் பத்து இடங்களில் இருந்து வெளியே தள்ளப்பட்டுள்ளது.

நடப்புச் சம்பியனாக 2018 உலகக் கிண்ண போட்டியில் களமிறங்கிய ஜேர்மனி ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றம் கண்டது. இதனால் புதுப்பிக்கப்பட்ட பிஃபா தரவரிசையில் 14 இடங்கள் சரிந்து 15 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

ஜேர்மனி அணி 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிஃபா தரவரிசையில் 22 ஆவது இடத்திற்கு சரிந்ததன் பின் அந்த அணி அதிக பின்னடைவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

Comments