புத்துயிர் பெறும் மயிலிட்டி துறைமுகம் | தினகரன் வாரமஞ்சரி

புத்துயிர் பெறும் மயிலிட்டி துறைமுகம்

205 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி தள்ளப்பட்ட எமது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பல வாய்ப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அன்று தனி மனித விருப்பு வெறுப்பே நம் நாட்டு அரசியல் என்றிருந்த நிலை மாறி மற்றவரின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் மதித்தே முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இன்றைய அரச தலைமைத்துவத்திடம் இருப்பதே அதற்கு காரணமாகும். அதனாலேயே பல தசாப்தங்களாக கனவாக இருந்துவந்த பல விடயங்கள் இன்று நனவாகி வருகின்றன என்பதையும் தமிழ் சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இந்த சிந்தனை மாற்றத்திலேயே தங்கியிருக்கின்றது.

கடல் வளம் என்பது ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடையாகும். ஒரு தீவு என்றவகையில் எமது நாட்டைச் சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருப்பது நம்மவர்களின் பாக்கியமே. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு பிரதேசங்கள்நாட்டின் மொத்த கடல் பரப்பில் பெரும் பகுதியினைக் கொண்டிருப்பதால் தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் நமது நாட்டிற்கும் வடபகுதி மீனவச் சமூகத்திற்கும் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பினை செய்து வந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்நாட்டு போர் காரணமாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட இழப்பு மிகப் பாரியதாகும். அதனாலேயே மயிலிட்டியை வாழ்வாதார தளமாகக் கொண்டிருந்தோர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததிலிருந்து அத்துறைமுகத்தினை மீண்டும் மக்கள் பாவனைக்காக பெற்றுத்தருமாறு கோரி பல சாத்வீகப் போராட்டங்களையும் சட்டரீதியிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்கள். ஆயினும் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 வரை இடம்பெற்ற அவ்வனைத்து முயற்சிகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்தன.

இப் பின்னணியிலேயே 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் மீனவ சமுதாயத்தின் அக்கோரிக்கையை பொறுப்புக்கூறும் தரப்பினர் செவிமடுக்கின்ற நிலை ஏற்பட்டது.

பலாலி விமான நிலையம், பாதுகாப்பு படையினரின் முக்கிய முகாம்கள் ஆகியன அமைந்திருக்கும் இப்பகுதியை விடுவிப்பதென்பது இலகுவானதாக இல்லாத பின்னணியிலும் அம்மக்களின் உருக்கமான வேண்டுகோளை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுரைக்கு அமையவே 2017 ஜூலை மாதம் மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலமும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது.

27 ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மீண்டும் திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமை தமிழ் சமூகம் அண்மைக்காலத்தில் அடைந்த பெறுமதிமிக்க அடைவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அன்று நம் நாட்டின் மீன் உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கிய அதாவது மொத்த தேசிய மீன் உற்பத்தியில் மூன்றிலொரு பங்கினைக் கொண்டிருந்த இந்த மீன்பிடித் துறைமுகம் இன்று மீண்டும் பழைய நிலையை எட்டக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி வாய்ப்பு இப்போது மீண்டும் எமது நாட்டுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் பின்னணியில் அச்சந்தர்ப்பத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்தினால் அது வடபுல தமிழ் சமூகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுப்பதாகவே அமையும்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உடுத்திய உடையுடன் வசித்த இடத்தை விட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியேற நேர்ந்த மக்களுக்கு இப்போது மீண்டும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த அரிய வாய்ப்பானது நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தின் தீர்மானங்களை செயற்படுத்த பாதுகாப்பு தரப்பு இணங்கியதன் விளைவே ஆகும். இந்த இரு தரப்பின் மத்தியிலும் தமிழ் மக்கள் உருவாக்கப்போகும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நில விடுவிப்பிற்கான வழி பிறக்கும்.

யுத்த காலத்தில் தம் வசமாக்கிக் கொள்ளப்பட்ட, நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு பாதகமாக அமையாத பொதுமக்களின் நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கும் அதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் வாழவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டுவருகின்ற, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களின் புனர்வாழ்வு பொறுப்பை ஏற்றிருந்த படை அதிகாரி யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வருகின்றமை, அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சாதகமான பலனாக அமைந்திருக்கும் பின்னணியிலேயே மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை 205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசு முனைந்திருக்கின்றது.

கடந்த கால போர் காரணமாக மயிலிட்டி துறைமுகத்தின் இறங்குதுறை, ஐஸ் களஞ்சியசாலை, மசகு எண்ணெய் களஞ்சியம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளும் முற்றாக சேதமுற்றிருப்பதனால் அவற்றை புனரமைப்பு செய்வதுடன் இப் பணிகளின் முதற்கட்டமாக தற்போதைய துறைமுகத்தை ஆழப்படுத்துதல், 80 மீற்றர் நீளமாக துறைமுக மேடையை அமைத்தல், வலை தயாரிக்கும் மண்டபம், தகவல் பரிமாற்ற மையம், எரிபொருள் வழங்கும் நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவ சங்கக் கட்டடம், மலசலகூட வசதிகள், நீர் மற்றும் மின்சார வசதி, சமிக்ஞை கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்படவிருக்கின்றன. அதன் இரண்டாம் கட்டமாக தற்போது இருக்கின்ற துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்தல், மீன் ஏல விற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் முகாமைத்துவ கட்டடம், நிர்வாகக் கட்டடம், மின் பிறப்பாக்கிகள், கதிரியக்க கட்டுப்பாட்டுப் பிரிவு, சிற்றுண்டிச்சாலை, அலுவலகர் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதி புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

இந் நிர்மாணப் பணிகளின் போது அரச மற்றும் படைத் தரப்பினருடன் இத்துறைமுகத்தின் பயனாளிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மீண்டும் மயிலிட்டி துறைமுகத்தை இலங்கை மீன்பிடித்துறையின் ஒரு முக்கிய கேந்திர நிலையமாக மாற்றியமைக்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் மயிலிட்டி துறைமுகத்தை அண்மித்த வளலாய், காங்கேசன்துறை, கணேசன்குளம், ஊறணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.

 

ரவி ரத்னவேல்

Comments