இந்தியா – இலங்கை நட்புறவு | தினகரன் வாரமஞ்சரி

இந்தியா – இலங்கை நட்புறவு

இலங்கை பண்டைக்காலம் தொட்டே அயலவரான இந்தியாவோடு சமூக, பொருளாதார, அரசியல் தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளமை நாம் நன்றாக அறிந்த விடயமாகும். தற்போது கூட எமது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இந்திய அரசு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டு வருகிறது. எனவே எமது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை பலப்படுத்தும் நோக்கில் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்ட மக்களது நலன்கருதி பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் இந்திய அரசின் ஒத்துழைப்போடு நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பாரிய சேவை பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறவுள்ளது. தலைக்கு நிழல் பெற்றுக்கொடுப்பதன் மூலம் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு 4000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடொன்றின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்காக இந்திய அரசாங்கம் ரூபா 9,50,000 ரூபா பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு குறித்த தோட்ட கம்பனியினால் ரூபா 30,000மும் பயனாளியினால் ரூபா 20,000மும் நிதிப் பங்களிப்பாக வழங்கப்பட உள்ளது. இந்த வீடுகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், வீதிக் கட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளித்து இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேபோன்று சுற்றுச்சூழல், அடிப்படை சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு இக்கருத்திட்டத்தின் ஊடாக விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை இனம் காணும் நடவடிக்கைகள் அமைச்சு, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் மற்றும் குறித்த தோட்டக் கம்பனியுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் குறித்த காணிகளுக்குப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

நுவரெலியா டன்சினன் தோட்டதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 வீடுகளைக் கொண்ட புதிய கிராமம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங்க் சிந்து மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இந்திய பிதமர் நரேந்திர மோடி இவ்வைபவத்தின் நிமித்தம் அந்நாட்டிலிருந்து ஆற்றும் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் முதலாம் கட்டத்தின் கீழ் நுவரெலிய டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளும், பொதுவான தோட்டத்தில் 350 வீடுகளும், கண்டி ஹெல்பொட தோட்டத்தில் 100 வீடுகளும் பதுனை லெஜர் தோட்டத்தில் 150 வீடுகளும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் முதலாம் கட்டத்திலான 4000 வீடுகளின் கீழ் நிர்மாணிக்கப்பட வேண்டிய வீடுகளின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. இந்திய அரசின் உதவியின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ள இந்த 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே இருந்த பொறுப்புமிக்கவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகவே இவ்வளவு காலம் தாமதமாகி உள்ளது.

என்றாலும் அமைச்சர் பழனி திகாம்பரம் தம் அமைச்சு பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து இந்நாட்டு இந்திய உயர் ஸ்தானிகராலய உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இதன் நிர்மாணப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2017மே 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். அவ்வேளையில் இந்த அமைச்சின் மூலம் ஹட்டன் நோர்வூட் விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இவ் உரையில் இந்தியப் பிரதமர் குறிப்பிடுகையில், “இந்நாட்டு பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் 10,000 வீடுகளை தமது அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கும்” என்றார்.

அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகளும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பயன்மிக்க வேலைத்திட்டமாக இக்கருத்திட்டத்தைக் குறிப்பிட முடியும். இதன் நிமித்தம் இந்திய அரசின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள பாரிய ஒத்துழைப்பின் மூலம் அதனை ஒழுங்குமுறையாகவும் பலமாகவும் செயற்படுத்துவதற்கு முடிந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை நல்கும் உழைப்பாளர்கள் வசிக்கும் மலைநாட்டுக்கு இவ்வாறான கருத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.

“இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் தோட்ட பகுதி மக்களுக்கென 4000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளன. அந்த வீடொன்றின் பெறுமதி ரூபா ஒரு மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.”

 

 

Comments