அணுவாயூத வல்லமை பொருந்திய நாடாக ஈரான் மாறிவிட்டதா? | தினகரன் வாரமஞ்சரி

அணுவாயூத வல்லமை பொருந்திய நாடாக ஈரான் மாறிவிட்டதா?

ஈரான் - அமெரிக்க உறவு உலக அரசியல் பரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி வருகிறது. உலகளாவிய வர்த்தக போரின் ஓர் அங்கமாக ஈரான் - அமெரிக்க வர்த்தக போர் இராணுவ ரீதியான போருக்கு அடிப்படையாக அமைந்து வருகிறது. இந்த சூழலை விளங்கிக் கொள்வதற்கான வெளிப்பாடே இக்கட்டுரையாகும்.

முதலில் உலகளாவிய ரீதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இஸ்லாமிய எதிர்ப்புவாதி என்றும் அமெரிக்க வர்த்தக மேலாதிக்க வாதத்திற்கான எல்லைகளை வலுப்படுத்துவர் என்றும் பெயர் உடைவராக உள்ளார். மேற்குறித்த இரண்டு உருவாக்கங்களுக்குள்ளும் ஈரான் முக்கியம் பெறும் தேசமாக அமெரிக்காவின் பொருளாதார நலனும் மேற்காசியா மீதான அரசியல் நலனும் ஈரானின் மூலம் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது என்பது மறுக்க முடியாத தகவல் ஆகும். இதனாலேயே இரட்டை இலக்கை அடைவதில் ட்ரம்ப் கரிசனை கொள்வது மட்டுமன்றி ஈரான், சிரியா, ரஷ்யா, சீனா என்ற ஒரு தொடர் இலக்கையும் எதிர்கொள்வதற்கான அரங்கமாக ஈரான் விவகாரத்தை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார். இன்னொரு விதத்தில் ஈரானின் அண்மிய பகுதியில் அமைந்திருக்கும் இஸ்ரேல் பற்றிய அரசியல் இராணுவ இருப்பினை தக்கவைப்பதும் அதனை கையாள திட்டமிடுவதும் ஜனாதிபதி ட்ரம்பின் நகர்வாகும்.

மேற்குறித்த இரட்டை நோக்கங்களை பிரதிபலிக்கும் விதத்திலேயே ட்ரம்பின் ஈரான் மீதான பொருளாதார தடையை புரிந்து கொள்ளமுடியும். எதிர்வரும் நவம்பர் மாதம் அமுலாகும் பொருளாதார தடை ஏற்கனவே ஈரானுக்கு விதித்த பொருளாதார தடைடையவிட மோசமானது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட தடையை மீறி வர்த்தகத்தை மேற்கொள்ளும் எந்த நாடும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தை செய்ய முடியாது எனவும் உலக அமைதியே முக்கியம் என்றும் வேறு எதுவும் அல்ல எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஈரான் - வல்லரசு நாடுகளின் அணுசக்தி திட்டத்தில் ஈரான் மீறிவிட்டது என்ற குற்றச்சாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தே அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இதே சந்தர்ப்பத்தில் ஈரானிய ஜனாதிபதி ஹசைன் ருகாணி குறிப்பிடுகின்ற போது அமெரிக்கா உளவியல் போர் என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றது என்றும் இதற்கான பதிலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்றே ஈரானிய தளபதி அமெரிக்காவின் இராணுவத்தை அழிக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு என்றும் இது உலக யுத்தத்திற்கான அடிப்படையாக அமையும் என்று குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டரம்ப் அணுவாயுத உடன்படிக்கையை ஈரான் மீறிவிட்டது என்றும் உலக அமைதியே தனது நோக்கம் என்றும் குறிப்பிடுகின்ற அதேநேரம் ஈரான் தரப்பிலிருந்தும் அமெரிக்கா மீதான தாக்குதலை முதன்மைப்படுத்துவது மட்டுமன்றி அமெரிக்காவின் ஆயுத தளபாடங்களை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கும் அளவிற்கு ஈரான் வலுவான நாடாக மாறிவிட்டதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாது.

அத்தகைய வலு அணுவாயுத பலமாக மட்டுமே இருக்க முடியும். அப்படியாயின் ஈரான் அணுவாயுதத்தை பரிசோதனை செய்துவிட்டதா? ஏறக்குறைய அணுவாயுதத்தை வைத்திருக்கும் ஒரு நாடே அமெரிக்காவை எச்சரிக்க முடியும். அதுவும் பொருளாதாரத்திலும், இராணுவ வலுவிலும் அமெரிக்காவோடு ஒப்பீடு போது சிறிய நாடான ஈரான் அத்தகைய எச்சரிக்கையை ஒரு போதும் வல்லரசு மீது வெளிப்படுத்த முடியாது. ஆனால் ஈரான் அமெரிக்காவை எச்சரிக்கின்றது என்பது கவனத்திற்குரிய விடயம். சதாம் உசைனினதும், கடாபியனதும் முடிவுகள் ஈரானுக்கு நல்லதொரு அனுபவமாக இருக்கும். இதுமட்டுமன்றி இஸ்ரேல் பல தடவை ஈரான் மீது தாக்கியிருப்பதோடு, ஈரானின் அணுவாயுத மையங்களை தாக்கி அழித்தது என்பதை வெளிப்படையாக அண்மைக்காலத்தில் தெரியப்படுத்தியிருந்தது. தற்போது ஈரான் சிரியாவின் எல்லைக்கூடாக இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

எனவே, இத்தகைய சூழலை வைத்து பார்க்கின்ற போது அணுவாயுத வல்லமையுடைய நாடாக ஈரான் எழுச்சியடைந்துள்ளது என்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் தெரியாதது ஒன்று அல்ல. அதனால் தான் 2015 உடன்படிக்கையிலிருந்து ட்ரம்ப் வெளியேறியிருந்தார்.

இந்த சூழலில் தன் மீதான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் விதத்தில் சில முன் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஈரான் அமெரிக்காவின் பொருளாதார தடையினால் அமெரிக்கா டொலர்களை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிக்களை எதிர்கொள்கின்றது. இதேபோன்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் சில பொருட்கள் மீதும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சில பொருட்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஏனைய வல்லரசு நாடுகளின் ஒப்புதல் இன்றி ட்ரம்ப் தன்னிச்சையான தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் ஈரான் ஐரோப்பிய நாடுகளோடு நெருக்கமான உறவை பேண திட்டமிட்டு வருவதோடு ரஷ்யா, சீனாவுடன் அதிக பொருளாதார பரிமாற்றத்தினை மேற்கொள்ள ஈரான் முனைகின்றது.

கடந்து முடிந்த வாரத்தில் ஈரான் தனது அந்நிய செலாவானி திட்டத்தினை தளர்த்தியிருந்தது. இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது வரியில்லாத அளவற்ற தளர்ச்சி மூலம் தங்கத்தையும் அந்நிய நாட்டு நாணயங்களையும் இறக்குமதி செய்ய ஈரான் அனுமதி அளித்தது. இதன் மூலம் 20 சதவீதம் வலிமையினை ஈரானின் பொருளாதாரம் அடைந்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று ஈரானின் முக்கிய ஏற்றுமதியான கச்சாய் எண்ணெய் உலகில் உள்ள பல நாடுகளோடு உடன்பாடு செய்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. தடை ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்னர் அவ்வகை உடன்படிக்கைகளை நிறைவு செய்ய ஈடுபட்டுவருகிறது.

இதேசந்தர்ப்பத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் திறந்த பொருளாதார உரையாடலுக்கு தயராகி வருகின்றது. எனவே, ஈரான் தன் மீதான பொருளாதார தடையை எதிர்கொள்வதற்கு தயாராகியிருப்பதோடு அமெரிக்காவுடனான உறவை கையாளுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்த மறுகணம் ஈரானிய ஜனாதிபதி இஸ்லாமிய குடியரசாகிய ஈரான் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளது என்றும் அமெரிக்காவின் உளவியல் போரை எதிர்கொள்ளவும் ஈரானியரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தமுனையும் அமெரிக்காவின் நோக்கங்களை முறியடிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எத்தகைய நிபந்தனையும் இல்லை என்றும் அமெரிக்க அரசாங்கம் தயாராக இருந்தால் நேர்மையாக இருந்தால் ஈரான் இப்போதும் பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கு தயராக உள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு இரு தலைவர்களும் ஆரம்பித்து இருக்கும் உளவியல் ரீதியான எச்சரிக்கைகள் மேற்காசிய அரசியல் பரப்பில் அமெரிக்காவின் கொள்ளை பொறுத்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய குடியரசான ஈரான் 1979 இலிருந்து அமெரிக்கா மீது சவால்விடும் அரசாக காணப்படுகின்றது. தாராள பொருளாதாரத்தையும் ஜனநாயக ரீதியான ஆட்சி மாற்றத்தையும் இராணுவ ரீதியான உறுதிப்பாட்டையும் கொண்டிருக்கும் ஈரான் இஸ்ரேல் மூலமான எதிர்ப்பினை எதிர்கொள்கின்றது என்ற மனோநிலையை பிரதிபலிக்கின்றது. அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் அவ்வாறான அரசியல் விருப்புக்களினுடனேயே ஈரானை கையாள முனைகின்றார். வடகொரியா மீது எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தினாரோ அதேபோன்றே ஈரான் தொடர்பான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். அவரது ட்விட்டர் பக்கம் பலவீனமான சொல்லாடால்களை கொண்டுள்ளது. அது மட்டுமன்றி உணர்ச்சி வசமான எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒன்றாகவுள்ளது. ஆனால் இறுதியில் அவ்வகை உரையாடலுக்கு தலைகீழான முடிவுகளை நோக்கி நகருகின்ற ஒரு தலைவராக விளங்குகின்றார். இவரது ட்விட்டர் பக்கம் ட்விட்டர் அரசியல் என்று (twitter politics) அழைக்கும் அளவிற்கு அமெரிக்க அரசியலில் தந்திரோபாயத்தை பலவீனப்படுத்தியுள்ளது.

எனவே, ஈரான் - அமெரிக்க விவகாரம் நீடித்த பகைபுலத்தை ஏற்படுத்தினாலும் பிராந்திய தளத்தில் ஈரான் வலுவான சக்தியாகவே விளங்குகின்றது. அதற்கு அடிப்படை காரணம் அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஈரானுடன் இசைந்து மேற்காசிய அரசியலில் தமக்கான நலன்களை அடைவதில் போட்டியிடுகின்றன. இத்தகைய போட்டி அமெரிக்காவின் பொருளாதார தடையை பலவீனப்படுத்தும் என்றே பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே அமெரிக்க பொருளாதார தடை என்பது ஈரானை பாதிக்கும் என்பதைவிட ஈரானின் அணுவாயுத பலத்தை இத்தகைய நடைமுறைகள் உறுதிப்படுத்துவதாகவே அமையும்.

 

 

Comments