வைரவரால் பழிதீர்க்கப்பட்ட மாந்திரிகன் | தினகரன் வாரமஞ்சரி

வைரவரால் பழிதீர்க்கப்பட்ட மாந்திரிகன்

கண்டி இராசதானியின் அண்மைக்கால சம்பவங்கள் பற்றி மன்னனுடன் உரையாட வேண்டுமென கிரென்வில் எண்ணியிருந்தபோதும் பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் கிளறுவதால் மன்னனும் ராணிமாரும் மனக் கிலேசம் கொள்வர் என்ற தயக்கம் காரணமாக அத்தகைய பேச்சுகளை ஆரம்பிக்க கப்டன் விரும்பவில்லை.

ஒரு நாள் கப்பல் மேல் தளத்தில் கப்டனுடன் மன்னர் இருந்தபோது,

தன்னை வழியனுப்புவதற்கு துறைமுகத்திற்கு ஆளுநர் பிறவுன்றிக் சமூகமளிக்காமை குறித்து இரண்டாவது தடவையாகவும் மன்னன் வினா எழுப்ப ஆரம்பித்தான். இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அதிகாரம் தனக்கில்லையென மன்னனிடம் தெளிவு படுத்தினார் வில்லியம் கிரென்வில்.

மீண்டும் அமைதி நிலவியது. மௌனம் கலைந்த மன்னன், தன்னால் வெளியிட வேண்டிய மிக முக்கியமான விடயமொன்று உள்ளதாகவும் அது பற்றி வெளியிடும் வரையிலும் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாதெனவும் கப்பல் தலைவனிடம் தெரிவித்தான். மனதுக்குள் ஒரு பாரிய சுமையை தாங்கிக்கொண்டிருப்பதாகவும் சலிப்புடன் பகன்றான் மன்னன் இராஜசிங்கன்.

அரண்மனையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்வதற்கு முன்னர் மறைத்து வைத்த பெறுமதிவாய்ந்த பொக்கிஷங்களை எஹலபொல கவர்ந்துவிடலாமென்ற ஐயம் மன்னனை ஆட்கொண்டிருந்தது.

ஆளுர் கப்பல்துறைக்கு வந்திருந்தால் அது பற்றி விபரங்களை தெரிவித்திருக்கலாம் எனவும் தனது அன்புக்குப் பாத்திரமான அமைச்சர் மொல்லிகொடையைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டியிருந்தால் அவனிடம் மறைத்து வைக்கப்பட்ட தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொக்கிஷங்களை பற்றி தெரிவித்திருக்கலாமென்ற ஆதங்கள் கடற்பயணத்தின் பெரும்பகுதியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் போதும் மன்னனைக் குடைந்து கொண்டிருந்தது.

இதை செவிமடுத்த கப்டன், அப்பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை தம்மிடம் தெரிவிக்குமாறும் அதனை ஆளுனர் பிறவுன்றிக்கிடம் தாம் தெரிவிப்பதாகவும் பதிலளித்தான். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மொழி பெயர்ப்பாளர்களை இராஜசிங்கன் முறைத்துப் பார்க்கவும் அவர்கள் வெடவெடத்துப் போயினரென கிரன்வில் குறிப்பிட்டுள்ளார். விநாடிகள் கழித்து அவ்விடயங்கள் பற்றி கப்பல் தலைவனிடம் தெரிவிக்க முடியாதென மன்னன் சைகை மூலம் தெரிவித்தான்.

தொடர்ந்து சோகமான முகத்தோடு காணப்பட்ட மன்னனிடம் அதற்கான காரணத்தை மொழி பெயர்ப்பாளர்கள் வினவினர். தன்னால் கொலை செய்யப்பட்டவர்கள் மாத்திரமன்றி அவசர தீர்ப்பு காரணமாக உயிர் இழந்தவர்களும் இருந்தனரென குறிப்பிட்ட இராஜசிங்கன்; கிவுல்கெதர மொஹட்டால என்னும் மாந்திரீகனைப் பற்றியும் கூறினான்.

கிவுல் கெதர மொஹட்டால எனப்படும் மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியத்தில் கைதேர்ந்தவன் பற்றி ரம்புக்கன ஹெல சரத் ராஜகருணா ‘முத்துஹர’ சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கண்டி இராசதானியில் பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகக் கலையில் சிறந்து விளங்கிய கிவுல்கெதர மொஹட்டால அரச சேவையில் பணியாற்றி வந்தவன், அவன் தினசரி அரண்மனையில் பணிபுரிவதற்காக அதிகாலைப் பொழுதில் தமது வீட்டிலிருந்து வருவது வழக்கம், அவ்வாறு அவன் வந்து கொண்டிருக்கும் போது ஒருநாள்; வைரவர் மலை (பகிரவ கந்த) யடிவாரத்தில் பாதையை வழிமறித்தவாறு பிரமாண்டமான ஓர் உருவம் கால்களை விரித்து வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்ததாம். (பகிரவ கந்த எனப்படும் மலை; கண்டி குவின்ஸ் ஹோட்டலில் நின்று பார்க்கும்போது மிகத்தெளிவாக உயர்ந்து நிற்பதைக் காணலாம். இங்குதான் ஆண்டுதோறும் நரபலி பூஜைகளும் இடம்பெற்றுவந்தன. தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்த நரபலியை முடிவுக்குக் கொண்டு வந்து அப்பாவிப் பெண்களின் உயிர்கள் பலியாவதை நிறுத்தியவன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனே என்பது குறிப்பிடத்தக்கது.)

வழியை மறித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் அப்பெரிய உருவத்தின் கால்களுக்கடியில் குனிந்தவாரே பயணிக்க வேண்டிய நிலை கிவுல்கெதர மொஹட்டாலவுக்கு ஏற்பட்டது. மாந்திரீகராகிய அவன் அமர்ந்திருப்பது வைரவர் மலையில் காவல் புரியும் வைரவர் என்பதால் அதன் காலடியில் குனிந்து​போக விரும்பவில்லை. எனவே அவர் திரும்பி வந்த வழியே தமது வீட்டுக்குச் சென்றான். தாம் எத்தனை தடவைகள் வழி விடுமாறு கூறியும் அதனை பொருட்படுத்தாத அக்காவல் தெய்வத்தின் மீது ஆத்திரம் கொண்ட மொஹட்டால வீட்டுக்குள் தமது பூஜையறையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கலானான். சில விநாடிகளில் வைரவரின் உடல் முழுதும் எரிச்சலும் நோவும் ஏற்படவே செய்வதறியாது அரண்மனை ஏகியதாகவும், அங்கு மன்னன் ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனிடம் கிவுல்கெதர மொஹட்டால மேற்கொண்டுள்ள மந்திர உச்சாடனங்களை நிறுத்துமாறு முறையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனை செவிமடுத்த மன்னன் உடனடியாக மொஹட்டாலவுக்கு தகவல் அனுப்பி மந்திர உச்சாடனத்தை நிறுத்திய பின்னர் வைரவர் எரிச்சல் அகன்று மலையேறியதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் மொஹட்டால மீது ஆத்திரம் கொண்ட வைரவர் மாந்திரீகரை பழிவாங்க திடசங்கப்பம் பூண்டதாம். அதற்காக கையாண்ட வழி; மன்னன் இல்லாத சந்தர்ப்பத்தில் இரவு வேளைகளில் மொஹட்டாவின் உருவத்தையொத்த வேடம் தரித்து அரசனின் துணைவிமாரின் அறைகள் பக்கமாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாம்.

இக்காட்சியை தொடர்ந்து சில தினங்களாக அவதானித்த அரசியரின் சயன அறைக் காவலர்களாகிய அரவாணிகள், மன்னனிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மன்னன் கிவுல்கெதர மொஹட்டாலவைச் சிரச்சேதம் செய்தான்.

மொஹட்டாலவின் மரணத்தின் பின்னரும் வைரவரின் இவ்விரவுநேர நடமாட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து நிகழும் இச்சம்பவம் பற்றி மன்னனுக்கு காவலர்கள் அறியத் தந்தனர். இந்த விவகாரத்தில் ஏதோ சூழ்ச்சியிருப்பதாக உணர்ந்த மன்னன் இராஜசிங்கன்; புரோகிதர்களை அணுகி இது பற்றி விசாரித்தபோது, மொஹட்டால மீது ஆத்திரம் கொண்ட வைரவரின் சூழ்ச்சியாக இது இருக்கலாமெனத் தெரிவிக்கவே, மன்னன் தாம் அவசரப்பட்டு மரண தண்டனையை வழங்கியதாக வேதனையுற்றான் மொஹட்டாலவின் புதல்வனை அரண்மனைக்கு அழைத்து பெறுமதியான சொத்துக்கள அவனுக்கு வழங்கியதோடு அவ்விளைஞனை அரச சேவையிலும் இணைத்துக் கொண்டான்.

இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கண்டி இராசதானிக்கும் சீதாவக்கை இராச்சியத்திற்கும் உட்பட்டிருந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை நிலவி வருகின்றது.

‘செங்கண்டன்’ என்னும் அந்தணன் காலம் முதல் கண்டியில் இத்தகைய தெய்வீகமான அல்லது மாந்திரீகத் தன்மை கொண்ட பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன.

பெப்ரவரி மாதம் 14ம் திகதி காலையிலும் மன்னனும் மனைவியருக்கும் கப்பலின் மேல் தளத்திற்கு வந்தனர்.

வாரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக் கப்பல் பயணத்தின் முடிவாக நாடொன்றின் கரை தெரிகின்றதாவென்னும் ஆவல் கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.

தம்மைக்காண ஆளுநர் பிறவுன்றிக் துறைமுகத்திற்கு வராதிருந்தமை குறித்து மன்னன் இராஜசிங்கன் மூன்றாவது முறையாகவும் கப்பல் தலைவனிடம் கவலையை வெளியிட்டான். தாம் மறைத்து வைத்த மிகப்பெறுமதியான பொக்கிஷங்களை எஹலபொல கவர்ந்துவிடுவானென்ற சந்தேகம் அவனை ஆட்கொண்டிருந்தது.

அது பற்றி விபரங்களை தமக்கு வழங்க முடியுமானால் மதராஸ் சென்றவுடன் அது பற்றி இலங்கையின் ஆளுநருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிரென்வில் உறுதியளித்த போதும் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனிடமிருந்து எவ்வித பதிலும் வெளிவரவில்லை.

மொழிபெயர்ப்பாளர்களின் முன்னிலையில் மேற்கண்ட பொக்கிஷங்கள் குறித்து அரசன் பேச விரும்பவில்லையென்பதை கிரென்வில் உணர்ந்து கொண்டான். தமக்கு மலபார் மொழியறிவு இருக்குமாயின் நேரடியாகவே மன்னனிடமிருந்து தகவல்களை அறிந்து கொண்டிருக்கலாமென தான் சிந்தித்ததாக கப்டன் தமது குறிப்புகளில் தெரிவித்துள்ளான்.

 சி.கே. முருகேசு

Comments