மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதே தெய்வ நம்பிக்கைதான் | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதே தெய்வ நம்பிக்கைதான்

தமிழ்க் கவி பேசுகின்றார் 

 உலகில் தெய்வம் உண்டு என்பாரும் கடவுளா? அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பாரும் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதேபோல நாம் வழிபடுவதே தெய்வம் மற்றதெல்லாம் தெய்வமல்ல என்று வாதிடுவோரும் உண்டு.

எது எப்படியாயினும், அல்லல் நிறைந்த மனித வாழ்க்கையின் ஆதார சுருதியே இறை நம்பிக்கைதான். சாதாரணமாக ஒரு பந்தற்காலைப் பிடித்துக்கொண்டு தட்டாமாலை சுற்றும் குழந்தை கீழே விழுவதில்லை. அதுவே தனியாக எதையும் பிடித்துக்கொள்ளாமல் தட்டாமாலை சுற்றினால் அது தலைசுற்றிக் கீழே விழுவது நிச்சயம். இந்த பந்தற்காலைப் போன்றதே தெய்வ நம்பிக்கை. இந்துசமயிகள் ஒவ்வொரு கிரகம் மாறும்போதும் பரிகாரம் செய்யவோ, சாந்தி செய்யவோ ஆலயங்களை முற்றுகையிடுகிறாாகள். அதே கிரகமாற்றம் கிறிஸ்தவரையோ இஸ்லாமியரையோ எதுவும் செய்வதில்லையல்லவா? ஆனால் அவர்களிடம் இதேபோல வேறு நம்பிக்கைகள் இருக்கும்.

அண்மையில் குருப்பெயர்ச்சி வரப்போகிறதே அது எந்த ராசிக்கு நல்லது எந்த ராசிக்கு கெட்டது என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். அதற்கு மற்றவர் ராசியில எதுவுமில்லை. யாருக்கு நல்லம் யாருக்கு கூடாது என்று கேள்? என்றான். இருவருமாக ஒரு அறிஞரிடம் போய் கேட்டார்கள். அவர் சிரித்து விட்டு சொன்னார். யாருக்கு நல்லதோ யாருக்கு கெட்டதோ ஒட்டு மொத்த ஐயாமாருக்கே நல்லது என்றார்.

மெய்தான் மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதே தெய்வ நம்பிக்கைதான். அதனால்தான் இன்றைய உலகில் சாதாரண மக்களும் ஆன்மீகத்திலும் தியானம், பிராணாயாமம் என பயிற்சிகளிலும் தமது மனங்களை ஆற்றுப்படுத்த பழகி வருகின்றனர். மனதை போரின் அழுத்தத்தின்போதும், தாங்கொணா நோய்களில் விழும்போதும், கடன்சுமை, எதிரிகள், வறுமை என பல்வகைப்பட்ட துயரங்கள் சூழும் போதும் இறைவனிடம் முறையிடவும் வழிபாடு செய்து மனதை ஆற்றுப்படுத்தவும் முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கையின் ஆதாரமே கடவுள் நம்பிக்கைதான்.

எந்த மனச்சிக்கல் வந்தாலும் கோவிலுக்குப் போய் நேர்த்தி வைப்பதும் வேண்டுதல் செய்வதும், பொங்கல் வழிபாடு என்றும் காவடி உடல் பிரதட்சணம் என தமது உடலை வருத்தியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும் வழக்கம். இதன் பின்னணியில் அவர்களது மனம் ஆசுவாசப்படுகிறது. தெய்வம் தம்மை அரவணைத்திருப்பதாக அவர்களது மனம் ஆறுதலடைகிறது.

பண்டைக்காலத்திலும் மக்கள் இந்தவகையில் வழிபாடுகளை இயற்றியே வந்துள்ளனர். ஊர் ஒன்று கூடி பெரிய பாத்திரங்களில் ஒன்றாக சமைத்து தாம் வேட்டையில் கொண்டுவந்த விலங்குகளை தானியங்களை படையல் செய்து ஆடிப்பாடி வழிபாடு செய்து மகிழ்ந்தனர். இதன் பின்னணியில் ஒன்றுகூடல், ஒன்றாக சமைத்து உண்ணல், ஆடல்பாடல் என் மனச்சுமைகளை அகற்றும் பெருவிழாவாக அந்த நாள் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

காலம் மாறியது எமது காலத்தில்தான். கோவில்களில் ஊரவர்களே பூசை செய்த காலத்தில், பெரிய பானையில் ஒன்றாக பொங்கல்வைத்து படையல் வைத்தால் கடவுளுக்கு முன்னால் மோதகக்குவியல், வடைமாலை, பொங்கல் கடலைசுண்டல் அவல் குழையல் பஞ்சாமிர்தம். என அறுசுவை உணவும் குவியலாக படைத்து அனைவரும் பகிர்ந்து கூடி உண்ட நாட்கள் என்னெதிரே காணாமல் போனது.

பூசை செய்த ஊர்ப்பூசாரிகளிடமிருந்து கோவில் தெய்வங்கள் பறிக்கப்பட்டது. தமிழையே வாய்மொழியாக வைத்து வழிபாடு செய்த தெய்வங்களுக்கு தமிழ் புரியவில்லை சமஸ்கிருதமே தேவபாசையாகிவிட்டது. பொங்கல் பூசை புனஸ்காரமெல்லாம் குடிமக்கள் செய்தால் அவற்றை தெய்வத்துக்கு அருகில் கொண்டு செல்ல முடியாது. அவை தீட்டு என ஒது க்கப்பட்டது. தமது உழைப்பையும் பணத்தையும்போட்டு அவர்கள் உருவாக்கிய கோவிலுக்குள் அவர்கள் செல்வது தடுக்கப்பட்டது.

போகட்டும் விட்டுவிடலாம். புதிய புதிய தினங்கள் ஒமங்கள் மன்னர்கால நடைமுறைகளை ஒட்டியதாக அறிமுகமானது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த நடைமுறைகள் வழக்கொழிந்து போயிற்று. தெய்வங்களுக்கும் பெயர்மாற்றம் வழிபாடு செய்பவர்களுக்கே தெரியாமல் மாறி வருகிறது. அந்தவகையில் வண்ணான்குளம் முத்துமாரி அரசர் பதி கண்ணகியாகவும் வற்றாப்பளை கண்ணகி ராஜராஜேஸ்வரியாகவும் மாறிவிட்டனர். இன்னும்பல.

இனியென்ன சித்திரை பிறந்துவிட்டது. சித்திராபூரணையோடு, தொடங்கி வைகாசி விசாகம், என்று தொடர்ந்து ஊரிலுள்ள சந்து பொந்துகளில் உள்ள கோயில்களும்கூட திருவிழாக்காணும் காலம். இந்த திருவிழாக்களில் எல்லாம் பொிய அளவில் மக்களுடைய உழைப்பு பணமாகவும் பொருளாகவும் சேரப்போகிறது. பெருமளவில் இந்தப்பணம் பூசை செய்யும் ஐயர்மாரிடமும் போகும். இவைதவிர இந்த விழாக்களில் மகுடம்கட்டி நடாத்துபவர் ஊர்ப்பெரியவராக மாறிவிடுவார். மதகுருமார்களுக்கு மரியாதை செய்யத்தான் வேண்டும் ஏனென்றால் அவர்கள் வேதமோதி வெண்ணூல் பூண்டு எமக்காகவே தமது நாட்களை அர்ப்பணிப்பவர். அவர்களுக்கு செய்யும் வரிசை வம்மைகள் தெய்வத்துக்கே செய்வதாகும் என்கிறார்கள்.

எல்லாக் கோவில்களிலும் எல்லாத் திருவிழாக்களிலும் மகேஸ்வர பூசை எனப்படும் அன்னதானம் இடம்பெறுகிறது. ஏழைகள், மூன்று வேளை உணவை முழுமையாக பெறமுடியாதவர்கள் இந்த நாட்களில் வயிறார உண்ணமுடிகிறது என்பது வரவேற்கக் கூடியதுதான். ஆனால் உண்மையில் ஏழைகள்தான் உண்கிறார்களா? பண்டைக்கால மக்கள்போல ஒன்றுகூடி உண்ணும் சடங்காகவே இதைக் கொள்ளலாம். என்ன? அன்று ஆண்டவனுக்கு ஆரவாரமாக கூடிச்சமைத்து படையல்செய்து பங்கிட்டு உண்டவர்கள், இன்று தமது பொருட்களை வைத்து, சம்பளத்துக்கு ஆள் வைத்து சமைத்த சமையலை கடவுளுக்கு முன்னால் படைக்காமல், பலிபீடத்திற்கு அப்பால் வைத்து படைத்துவிட்டு அன்னதானம் என்ற பெயரில் சாப்பிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அதுவே தமக்கு விதிக்கப்பட்டதாகவும் கருதிக்கொண்டு மகிழ்கிறார்கள். ஏனிப்படி மாறிப்போனார்கள்.

எங்கள் கிராமங்களில் ஏன் மக்கள் ஒன்று கூடுகிறார்களில்லை. முன்னர் போல கூடிப்பேசி நல்ல காரியங்களில் பங்கேற்கிறார்களில்லை. ஆலயங்களில்தானே கலை வளர்ந்தது. இப்போது ஏன் கோவில்களில் ஆடல்பாடல்களை புறந்தள்ளினார்கள் விடிய விடிய கூத்தும் பாட்டும் அரங்கேறிய எங்கள் கோவில்களில் விடியவிடிய சமஸ்கிருத மந்திரங்களே ஒலிப்பதன் காரணம் என்ன புதிய வழிபாட்டுமுறைகளை தென்னிந்தியாவிலிருந்து பதியனிட்டு வளர்க்கின்றபோது எமது மக்களுக்கு தமது பாரம்பரிய முறைகளைக் கைவிடவேண்டிய நிலை ஏன் வந்தது.

தெய்வ நம்பிக்கை மட்டும் இல்லாது போயிருந்தால் எமது மக்கள் பட்ட துயரங்களுக்கு அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு தெருவில் அலைந்திருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளை இந்த நம்பிக்கைகளை தமக்கு சாதகமாக்கி பணம்பண்ணும் பக்திவேசம் போடும் வியாபாரிகளிடம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். மக்கள் மாறவேண்டும் பக்திவேசம் போடும் வியாபாரிகளிடம் எச்சரிக்கை வேண்டும்.

Comments