கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான் | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான்

சிங்களக் கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன். நான் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் அவ்வியக்கத்தின் பலம் குறைந்தது என்பதே உண்மை. விலகிய பின்னர் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக மாத்திரமே களமுனைக்குச்

சென்றிருந்தேன்

 

உலகிலே மிகவும் பலம் வாய்ந்த போராட்ட அமைப்பாக ஒரு காலத்தில் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. அதனுடன் தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாறும் முற்றுப்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவராகவும், கிழக்கு மாகாணத்தின் புலிகள் இயக்க பொறுப்பாளராகவும் இருந்த முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி.

 

- கடந்த காலத்தில் மக்கள் வாக்களிப்பதற்கும், தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் பயந்து, பயந்து செயற்பட்டிருந்தார்கள். ஆனால் அந்த நிலைமை மாறி தற்போது சுதந்திரமாக வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர்களும், பெண்களுமாக முன்வரும் நிலைமை உருவாகியுள்ளது இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

- கடந்த 30 வருடகாலமாக இங்கு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்காலத்தில் அரசியல் மயப்படுத்தலைத் தடுத்ததும் போராட்ட இயக்கங்கள்தான். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது இரண்டாவது தடவையாக உள்ளூராட்சி மன்றத்தேர்தல் வருகின்றது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டில் சிறந்த சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது மக்கள் கட்டம் கட்டமாக அரசியல் மயப்பட்டுக் கொண்டும் தங்களது அரசியல் உரிமையைப் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றார்கள். இவ்விடயத்தை நான் வரவேற்கின்றேன். இது இன்னும் வலுப்பெறவேண்டும்.

வாக்குரிமை என்பது பெறுமதியானது, ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாக்களிக்கும் வீதம் குறைவாகத்தான் உள்ளது. வாக்களிப்பை சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் சிறந்த முறையில் பயன்படுத்துகின்றார்கள். எனவே தமிழ் மக்கள் வாக்களிக்கின்ற வீதத்தைக் கூட்ட வேண்டும். இந்நிலையில் இளைஞர்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வருவதை நான் வரவேற்கின்றேன்.

-

இலங்கையில் உள்ள தேசியக் கட்சியில் பிரதான பதவி வகித்த நீங்கள் தனிக்கட்சி அமைக்கக் காரணம் என்ன?

இது முக்கியமானதொரு கேள்வி. கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான் தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பார்த்தோம். உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான். தொப்பிகலைப் பிரதேசத்தில் வைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், இது வெளியுலகத்திற்குத் தெரியவருகின்றது. இந்நிலையில் அயர்லாந்தில் இருக்கின்ற முறைபோன்று ஒரு அமைப்பை ஏன் நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாது என எனது நண்பரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான காலஞ்சென்ற தராகி எனப்படும் சிவராம் என்னிடம் கேட்டார். அவரது கோரிக்கை ஆலோசனை செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஆலோசித்து எமக்குரிய அரசியல் பிரதிநிதிகளாக இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்றுதான் அதை உருவாக்கினோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாகத்தான் இயங்கியது. ஆனால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டதன் பிற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளில் பாரிய மாற்றங்களும், அவர்களின் போக்குகளிலும் மாற்றங்களும் காணப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் போட்டிகள், பொறாமைகள், காரணமாக அக்கூட்டமைப்பை இன்னும் பதிவு செய்யவில்லை.

நான் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருந்தாலும் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தேசியக் கட்சியில் நான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை. சிங்களக் கட்சியில் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமல்ல. அதனை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன். அவ்வாறு மக்களிடம் வாக்குக் கேட்பதாயின் தமிழ் கட்சி ஒன்று அமைத்து அதனுாடாகத்தான் வரவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் என்ற வாய்ப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தித் தந்தார். அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு அதிகளவு அபிவிருத்தியைச் செய்தேன், மக்களுக்கு அதிகளவு பாதுகாப்பையும் வழங்கினேன். இந்நிலையில்தான் கடந்த வருடம் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தோம்.

ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாகச் சிதறிப் போவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் விலகிவிட்டனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்னொரு கோணத்திலிருக்கின்றார். சம்பந்தன் ஐயாவுக்கும் வயது போய்விட்டது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக்திற்கு ஒரு உறுதியான கட்சி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கின்ற கட்சியை ஆரம்பித்துள்ளோம்.

எமது கட்சியின் நோக்கங்களாக முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கில் யுத்ததினால் கணவனை இழந்த ஏறத்தாள 80,000 விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும். தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

சிங்களத் தலைவர்களுடன் எமக்குப் பிரச்சினைகள் இல்லை, ஆனால் சில முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியக் குணங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இவ்விடயத்தில் நான் அப்பாவி முஸ்லிம் மக்களைக் குறை கூறவில்லை, இனத்துவேசமாகவும் நான் கருத்துக் கூறவில்லை. ஆனால் சில முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு, கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று நாடாளுமன்றத்திலே அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். இதற்கு சம்பந்தன் ஐயாவோ, மட்டக்களப்பு மாவட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. இவ்வாறு ஒரு தலைவர் கூறுகின்றபோது அதனை நாம் முறியடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. கடந்த கிழக்கு மாகாண சபையில் வெறும் 7 ஆசனங்களை எடுத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தை நாம் ஆட்டிப்படைத்தோம் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இதுபோன்ற செயற்பாடுகளை நாங்கள் தடுக்க வேண்டும்.

கிழக்கில் 11 ஆசனங்களை வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் கேட்கின்ற நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறாகும்.

தேசியம், தேசியம் எனக் கதைத்துக் கொண்டு தேசியத்தையே முஸ்லிம் ஏகாதிபத்தியத்திற்கு விற்றவர்கள்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகத்தான் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினேன். இலங்கை பூராகவும் உள்ள தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற கட்சியாகவும், அபிவிருத்தியை மேலோங்கச் செய்கின்ற கட்சியாகவும் இது வளரும்.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவியில் தற்போதும் இருக்கின்றீர்களா?

அந்த உபதலைவர் பதவியைத் தூக்கியெறிந்து விட்டுத்தான் நான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்திருந்தால் நல்ல சுகபோக வாழ்க்கையும், வசதி வாய்ப்புக்களுடனும் இருக்கலாம். ஆனால் அது எனது நோக்கமல்ல. 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கூட்ட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும்.

-

மிகவும் சக்தி வாய்ந்ததும் பலம் வாய்ந்த அமைப்பாகவும் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உடைப்பதற்கு முக்கிய சூத்திரதாரியாக நீங்கள்தான் இருந்ததாக பல ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் உலவுகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன?

இது தவறான கருத்தாகும், உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததற்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் அவ்வியக்கத்தின் பலம் குறைந்தது என்பது உண்மை.

அமெரிக்காவிலிருந்த பாரிய கட்டடத்தை ஒசாமா பின்லேடன் தாக்கியழித்த பின்னர் உலகத்தில் எந்தப் பயங்கரவாத இயக்கமும் இருக்கக்கூடாது என சர்வதேசம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டது.

அந்த அழிவிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் முயற்சி எடுத்தேன்.

அதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகின் போக்ேகாடு ஒத்துப்போகாததே புலிகள் அழிந்ததற்குரிய உண்மைக் காரணமாகும். மாறாக கருணா அம்மானோ, இலங்கை இராணுவமோ அழித்தது என்று கூற முடியாது. சர்வதேசமே சேர்ந்து விடுதலைப் புலிகளை அழித்ததுதான் உண்மையான விடயம். இதனைப் புரிந்து கொள்ளாமல்தான் பல தவறான கருத்துக்கள் வருகின்றன.

நோர்வே, ஒஸ்லோவில் வைத்து சமஷ்டி முறையிலான தீர்வுபற்றி பரிசீலிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு நான் தூண்டியது உண்மை. விடுதலைப் புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கமும், இலங்கை அரசின் பக்கமிருந்து ஜீ.எல்.பீரிஸும் கையெழுத்திட்டார்கள். இதையும் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது ஒரு தவறான முடிவென என்னை பிரபாகரன் குற்றஞ்சாட்டினார். இதன் காரணமாக நான் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டதுதான் உண்மை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுத்தேன் என்பது ஒரு தவறான விடயமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய பின்னர் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுவதற்காக மாத்திரம் ஒரு தடவை களமுனைக்குச் சென்றிருந்தேன்.

 

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது நீங்களும். உங்களுடைய புதிய கட்சியும் முதன் முதல் இந்த தேர்தலைச் சந்திக்கப் போகின்றீர்கள். இந்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் இத்தேர்தலை எவ்வாறு நோக்குகின்றார்கள்?

இது ஒரு முக்கியமான தேர்தல். இலங்கையில் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைத்தேர்தல் முறைகள் உள்ளன. உள்ளூராட்சி என்பது முக்கியமானதாகும். நாட்டின் அபிவிருத்திக்கு உள்ளூராட்சி சபைகள் இயங்க வேண்டும். மாகாண சபையையும், பாராளுமன்றத்தையும் இணைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றந்தான். தற்போதைய புதிய சட்டத்தின் கீழ் வட்டாரத்திற்கு ஒரு மந்திரியை நாம் உருவாக்க வேண்டும். அவரூடாகத்தான் அப்பகுதி மக்கள் அனைத்து நன்மை தீமைகளையும் அணுகப்போகின்றார்கள். இதனைச் செய்யக் கூடிய கட்சி எது என்று மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

ஒரு மலசலம்கூட கட்டிக்கொடுக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இந்நிலையில், அவர்களின் கட்சி பிரதேச சபையில் போட்டியிட்டு எவற்றைச் செய்யப்போகின்றார்கள்?

நான் மக்கள் மத்தியில் சும்மா தேர்தல் கேட்டு வரவில்லை, மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலை, மண்முனைப் பாலம், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை, மாவட்டத்தின் மின்சாரத் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளேன். 35,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கினேன். பாடசாலைகளின் அபிவிருத்தி, குடிநீர் வசதி என பாரிய அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். இவ்வாறானவற்றைச் செய்து காட்டிவிட்டுத்தான் தற்போது மக்களிடத்தில் தேர்தலில் குதித்துள்ளோம். தற்போதும் அதே அதிகாரம் எங்களுக்கு இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருடனும் எமக்கு நெருக்கம் இருக்கின்றன. இதனால் சாதிக்க கூடியவர்களின் பின்னால்தான் மக்கள் வரவேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தையல் இயந்திரம் சின்னத்தில் நாம் களமிறங்கியுள்ளோம். இதில் எமது கட்சியை வெல்ல வைக்க வேண்டும். ஏனெனில் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நான் மாத்திரம்தான் மட்டக்களப்பில் வேலை செய்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரைச் சந்திப்பதற்கு கொழும்புக்குப் போகவேண்டும். சம்பந்தன் ஐயாவைச் சந்திப்பதற்கு அவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது, சைக்கிளில் வருபவரைச் சந்திப்பது கடினம். ஆனால் நான் இந்த மாவட்டத்திலேயே இருக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டும். அதற்குரிய அத்திவாரத் தேர்தல்தான் இது. இதில் நாங்கள் தவறுவிட்டோமாக இருந்தால், கிழக்கு மாகாணம் மீண்டும் முஸ்லிம்களின் கையில்தான் போகும். இதனைத் தடுக்க வேண்டும். கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்தால் 12 ஆசனங்கள் எடுக்கலாம், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் வாக்களித்தால் கிட்டத்தட்ட 9 ஆசனங்கள் எடுக்கலாம், அதுபோல் சிங்கள மக்கள் வாக்களித்தால் 8 ஆசனங்களை எடுக்கலாம். முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் அகமட் 4500 இற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பக்களை வழங்கியிருந்தார். அதில் தமிழர்கள் உள்வாங்கப்பட்டது மிக மிகக் குறைவு.

அபிவிருத்திகள் அனைத்தும், ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில்தான் இடம்பெற்றுள்ளன. மேலும் வாழைச்சேனை பிரதேச சபையிலிருந்த 60 இலட்சம் ரூபாய் காசை எடுத்துக் கொண்டுதான் ஏறாவூர் நகர சபைக் கட்டடத்தைக் அவர் கட்டியுள்ளார். இவ்வாறான வேலைத்திட்டங்களைச் செய்துவிட்டுத்தான் அவர் சென்றுள்ளார். எனவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இவற்றைச் சிந்தித்து நடக்க வேண்டும்.

-ஆரம்பத்தில் நீங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் உறவாக இருந்தீர்களா?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எனது அண்ணாதான் அப்பெயரைச் சூட்டினார். ஆனால் அக்கட்சியில் நான் ஒரு நாளும் அங்கத்தவராக இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்தவுடன் நான் வேறொரு நாட்டில் இருந்தேன். அது உண்மையான விடயம். அக்காலக்கட்டத்தில் எனது அண்ணா இங்கிருந்து ஒரு கட்சியை ஆரம்பித்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என அதற்குப் பெயரும் வைத்தார்.

 

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் எனது அண்ணா படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலைக்குப் பின்னர் பிள்ளையான் அதனைப் பொறுப்பெடுத்து நடாத்தி வருகின்றார்.

போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் வன்முறையை நான் ஒருபோதும் விரும்பவில்லை, வன்முறையை விரும்பியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நானே அடித்து ஒழித்திருப்பேன்.

ஏனெனில் என்னிடம் 6000 துணிந்த போராளிகள் இருந்தார்கள். அதனை நான் விரும்பவில்லை. 1989 ஆம் ஆண்டு, இந்தியப்படைகள் வெளியேறிய காலத்தில் தமிழ்த்தேசிய இராணுவத்துடன் இயக்கம் மோதியது. இதன்போது பல ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இது ஒரு சகோதரப் படுகொலை. இது வேதனையான விடயமாகும். அதுமாதிரியான ஒரு படுகொலையை நான் பிரிந்ததன் பின்னர் ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு போராளிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன். கொலைக்களங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றுதான் எமது போராளிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விட்ட தவறு ஒரு காலகட்டத்தில் அவர்கள் இராணுவம் சார்ந்து இயங்கினார்கள். அதனை இராணுவமும் பயன்படுத்தியது. இதன்போது படுகொலைச் சம்பவங்கள் ஏற்பட்டன. இவ்வாறான சம்பவங்களை நிறுத்தச் சொன்னேன். அவர்கள் அன்று அதனை நிறுத்தியிருந்தால் இப்போதைக்கு அக்கட்சி ஒரு வளர்ச்சிக்கு வந்திருக்கும். அக்கட்சிக்கு வளர்ச்சியும், முதிர்ச்சியும் இருக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன். அதில் பெற்ற அனுபவத்தினூடாகத்தான் தற்போது எனது கட்சியை மேற்கொண்டு செல்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவு தற்போது உங்களுக்கு எப்படி இருக்கின்றது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் சிறந்த நட்போடு இருக்கின்றேன். அவரை சில விடயங்களில் மதிக்க வேண்டும், மக்களுக்கு அபிவிருத்தி என்பதை வழிகாட்டியவர் அவர்தான். தற்போது தேங்காய் ஒன்று 130 ரூபா, அரிசி ஒரு கிலோ 160 ரூபா. இந்நிலைமை மஹிந்த அரசாங்கத்தில் வரவில்லை. மஹிந்த ராஜபக்ஷ விவசாயத்தை முன்னேற்றினார். பல வளமான நாடுகளை நன்கு பயன்படுத்தினார். பல வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தினார். இதனால் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. இதற்காக வேண்டி மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்ட வேண்டும். ஆனால் தற்போது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல், கடன் தொல்லை, தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பல தவறுகளையும் விட்டுள்ளார். யுத்தம் முடிந்தவுடனே நாடாளுமன்றில் அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. அப்போதே அவர் வடக்கு கிழக்கில் ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அவர் உலகத்தில் மற்றுமொரு நெல்சன் மண்டேலாவாக போற்றப்பட்டிருப்பார்.

நீங்களும் அவருடன் பிரதியமைச்சராக இருந்தீர்கள் தானே ஏன் இதனை அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாமே?

நாங்களும் அவருக்கு பாரிய அழுத்தம் கொடுத்தோம், அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவரைச் சுற்றியிருந்த நபர்கள் அந்த சாதகமான சூழலை உருவாக்க விரும்பாதவர்களாக இருந்தார்கள். சில இனத்துவேஷம் பிடித்தவர்களும் அவருடன் இருந்தார்கள். இவற்றைத் தகர்த்து மஹிந்தராஜபக்ஷ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்திருந்தால் தமிழ் மக்கள் அவரைத் தோளில் சுமந்திருப்பார்கள். ஆனாலும் தற்போதைக்கும் அவரைப் பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவரின் சேவைகள் மீண்டும் தேவை என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். அதுபோலதொரு வாய்ப்பு இனிவரும் என நான் நினைக்கவில்லை.

அடுத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு மேலும் 2 வருடங்கள் இருக்கும்போது அதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலை வைத்தது மஹிந்த ராஜபக்ஷ விட்ட அடுத்த தவறாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கினார்கள். இந்தா வருகின்றது தமிழ் மக்களுக்குத் தீர்வு என சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றினார். ஆனால் அவ்வாறு வரவில்லை. தற்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை.

- தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கலாசராங்கள், அதிகளவு பேணப்பட்டன. தற்போது கொலைகள், தற்கொலைகள், கலாசார சீர்கேடுகள் என்பன அதிகரித்துள்ளதாக பலராலும் பேசப்படுகின்றதே இதற்கு என்ன காரணம்?

போராட்ட காலத்தில் பல அமைப்புக்களை வைத்திருந்த நாங்கள், கலை, கலசார பிரிவு, நிதிப்பிரிவு, காவல்துறை, பொருண்மீய மேம்பாடு, கல்வி போன்ற துறைகள் இருந்தன. யுத்த காலத்தில் கல்வி தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியில்தான் இருந்தது. இத்துறைகளினூடாக இவைகளும் பேணப்பட்டு வந்தன. ஆனால் கிழக்கில் மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்திலும் பல சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. சில திட்டமிட்ட சதிமுயற்சிகளினாலும் இவை இடம்பெறுகின்றன. கேரளா கஞ்சா யாழ்ப்பாணத்தில் வந்திறங்குகின்றன. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றைப் பிடித்த இலங்கைக் கடற்படையினருக்கு , கடல் வழியே வரும் கஞ்சாவைப் பிடிக்க முடியாதா?

அதுபோல் மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் இருக்கின்றன. வறுமையைக் குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றோம். வறுமையின் காரணமாகத்தான் பல இளைஞர்கள் அரபு நாடுகளுக்கு வேலைகளுக்குப் போகின்றார்கள். இதனால் நுண்கடன்கள் அதிகரிக்கின்றன. இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இவ்வாறான விடயங்களை நான் அமைச்சராக இருக்கும்போது கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். 23, 21, 18, என பல வட்டி வீதங்களில் கடன் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இயக்கம் இருந்த காலத்தில் ஒரு இறுக்கமாக கட்டமைப்பு இருந்தது. மரணதண்டனை வரைக்கும் செயற்பாடுகள் இருந்தன். தற்போது அவை இல்லை என்கின்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கின்றன. தற்போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டதிட்டங்களுக்கூடாகத்தான் தற்காலத்தில் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

- இது ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்த தேர்தலில் பலகட்சிகள் போட்டியிடுகின்றன. அதனை நாம் வரவேற்கின்றோம். சிறந்த ஜனநாயகத் தலைவர்களை உருவாக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் யார் எவர் போட்டியிடுகின்றார்கள் என்று கடந்த காலத்தில் மக்கள் பார்த்தது கிடையாது. எந்தக்கட்சியில் எவர் வாக்குக் கேட்டாலும் மக்கள் வாக்களித்துத்தான் வந்தார்கள்.

போராட்டம் நடைபெற்றபோது யுத்தத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தான் உள்ளார்கள். இவ்வாறானவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் போய்க் கொண்டு தற்போது மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுகின்றார்கள்.

இவ்வாறானவற்றை விற்றுப் பிழைத்துதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது ஒன்றும் கிடையாது. கிழக்கு மாகாணத்தைத் தூக்கி முஸ்லிம் தலைவரிடம் கொடுத்த செயற்பாட்டைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மன்னிக்க முடியாத குற்றமாகும். இவ்வாறானவர்கள் எவ்வாறு தேசியம் கதைக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வரவு செலவுத் திட்டத்திற்கும், அரசாங்கம் என்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும் ஆதரவு வழங்குகின்றார்கள். இந்நிலையிலுள்ளவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு நல்ல அபிவிருத்திகளைச் செய்யலாம். உலக வரலாற்றில் நாராளுமன்றில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது சம்பந்தன் ஐயாவின் தலைமையிலான எதிர்க்கட்சிதான். இதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

அபிவிருத்திக்கு யார் உதவுவார்கள், உரிமைகளுக்கும், விடுதலைக்கும் யார் உதவுவார்கள் என்பதை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களை இதுவரைக்கும் யார் குட்டிச்சுவராக்கியது என்பதை அறிந்து கொண்டுதான் எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

30 வருட போராட்ட அனுபவமும், உலகம் முழுக்கச் சென்று தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை யில் பங்கெடுத்துக்கொண்ட ஒரே ஒரு தமிழன் நான் மாத்திரம்தான் உள்ளேன். சம்பந்தன் ஐயாவோ, மாவை சேனாதிராஜாவோ போகவில்லை. சர்வதேச அனுபவம் எனக்கிருக்கிறது.

10 வருடங்கள் நாடாளுமன்றத்திலே அமைச்சராக இருந்துள்ளேன், பாரியதொரு கட்சியின் உப தலைவராக இருந்துள்ளேன். இவ்வாறு பல அனுபவங்களைக் கொண்டுதான் நாம் தேர்தலில் குதித்துள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். எவ்வளவு ஆதரவுகளை மக்கள் எமக்கு வழங்குகின்றார்களோ, அந்தளவுக்கு அபிவிருத்திகளையும், ஆதரவுகளையும் நாம் கொண்டு வருவோம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

நேர்காணல் -:  வ. சக்திவேல்

 

 

Comments