ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “சின்னராசு ஸ்கூலுக்கு போற பெடியளை பார்த்தனியே. உசரத்துக்கு ஏத்த உடம்பில்ல”

“வாட்டசாட்டமில்ல வத்தல் மாதிரி இருக்கினம் என்ன?”

“ஓமப்பா எங்கட காலத்தில பெடியள் எப்பிடி இருந்தவை. ஏன்ட வகுப்பில இருந்தவையில முக்கால்வாசிப்பேர் ஆறடி உசரம்.”

“ஏனண்ண உங்கட வகுப்பில தான கடவுள் என்டவன்?”

“சிவனைச் சொல்லுறனீயோ. அவன் ஆறரை அடி. நல்ல வாட்ட சாட்டம். அவன்ட பெயர் சிவபெருமான் ஆனா சிவன் என்டுதான் சொல்லுவினம். எங்கட வகுப்போட எவரும் வாலாட்ட வரமாட்டினம். வந்தவையன்டா சிவன் தாட்டிப்போடுவான் ஆனால் இப்பத்தைய பெடியள் வயசுக்கேத்த நிறையில்ல கண்டியோ.”

“எங்கட காலத்தில சாப்பாடு எப்படியிருந்ததென்ன?”

இந்தக் காலத்தில பிள்ளையள் சரியா சாப்பிடமாட்டாடினம். பாடசாலை பிள்ளைகளில 30 சதவீதம் எதுவும் சாப்பிடாம ஸ்கூலுக்கு வருகினம் என்டு தேசிய மருத்துவ நிறுவன அறிக்கையொன்றில பார்த்தனான்”

“அப்பிடி பழகிட்டினம் அண்ண”

“கொழும்பு பகுதியிலதான் உப்பிடிசரியான காலைச்சாப்பாடு சாப்பிடாத பிள்ளையள் அதிகமா இருக்கினமாம் அது மட்டுமில்ல தேவையான நீரையும் பிள்ளையள் குடிக்கமாட்டினம் என்டும் ஆய்வில தெரிய வந்திருக்குது”.

“ஏனண்ண அப்பிடி”

“ஏனோ... பெற்றௌருக்கும் பிள்ளையளுக்கும் உள்ள புரிந்துணர்வு சரியா இல்லையென்டதுதான் உதுக்கு காரணம் என்டும் கூறியிருக்கினம்”.

“உது உண்மைதானண்ண. காலை சாப்பாடு வேணுமென்டு ஸ்கூல் பிள்ளையள் அம்மா மாரிட்ட கேட்கிறதும் இல்ல. அவை குடுக்குறதும் இல்ல. இருந்தா சாப்பிடுவினம் இல்லையென்டா கேட்காம கொள்ளாம புறப்பட்டு போவினம். நாட்டின்ட நிலை தானண்ண இதற்கு சரியான காரணம்.”

“நீ சொல்லுறதும் பிழையென்டு சொல்லேலாது. வடக்கு, கிழக்கு பகுதியில உள்ள ஸ்கூல் பிள்ளைகளில மூன்றில் ஒரு பிள்ளை அவையின்ட உயரத்திற்கு ஏற்ற பருனோடு இல்லையென்டு உலக உணவு திட்டம் கூறுது. வடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலை பிள்ளைகளின்ட ஆய்வொன்றை உலக உணவு திட்ட அதிகாரியள் நடத்திருக்கினம். ஒன்றாம் இரண்டாம் வகுப்பிலுள்ள ஐந்து வயசுக்கும், பத்து வயசுக்கும் இடைப்பட்ட நூற்றுக் கணக்கான பிள்ளைகளிட்ட நடத்திய ஆய்வில”

“என்ணண்ணே தெரிஞ்சுது”

கொஞ்சம் பொறன். பிள்ளைகளின்ட நிறையையும், உயரத்தையும் கணக்கிட்டிருக்கினம். இரும்புச்சத்து எவ்வளவு இருக்குதென்டு இரத்தத்தை சோதிச்சியிருக்கினம். அவையளின்ட சாப்பாட்டை பரிசோதிச்சிருக்கினம்”.

“உது எப்பண்ண நடத்தினம்?”

“உந்த ஆய்வோ. இந்த வருசம் ஆகஸ்ட் மாதத்திலதான் நடத்தியிருக்கினம். உதிலதான் 30 சதவீத பாடசாலை பிள்ளையள் அவையின்ட உயரத்துக்கு தகுந்த நிறையோட இல்லையென்டு தெரிய வந்திருக்குது. உதோட வடக்கு, கிழக்கில் உள்ள பிள்ளையளில 40 சதவீதம் இரத்த சோகையால பாதிச்சிருக்கினமாம் ஆனா தேசிய அளவில பாடசாலை பிள்ளைகளில 16 சதவீதம் இரத்த சோகையால பாதிச்சிக் கிடக்குது”

“ஆய்வில வேறென்ன தெரிஞ்சுது”

“எங்கட சுகாதார அமைச்சின்ட சிபாரிசின் படி பாடசாலைக்கு போற பெடியளுக்கு 1850 கிலோ கலோரி தேவை. பெட்டையளுக்கு 1750 கிலோ கலோரி தேவை. ஆனா வடக்கு கிழக்கில உள்ள பெடியளுக்கு உதில 71 சதவீதமும் பெட்டையளுக்கு 69 சதவீதமும்தான் கிடைக்குது.”

“போசாக்குப் போதாதென்ன”

“உது மட்டுமில்ல சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விட்டமின் யூ தேவையில வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைப் பிள்ளைகளுக்கு 16 சதவீதம்தான் கிடைக்குது. என்டபடியா அவையள் போசாக்கின்மையால ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கினம”.

“உண்மைதான் பார்த்தாலே தெரியுதென்ன”

“வடக்கு, கிழக்கு யுத்தத்தால கல்வி மட்டும் பாழாப் போட்டுது என்டில்ல பிள்ளையளின்ட வளர்ச்சியும் பாதிச்சுப் போட்டுது. ஆனா பாடசாலை நேரத்தில நல்ல சத்துணவு கொடுத்து நிலமையை சீராக்கலாம் என்டு உலக உணவுத் திட்ட அதிகாரியொருவர் சொன்னவர். ஒரு பிள்ளை பிறந்த முதல் 1000 நாட்களில தேவையான போசாக்கு கிடைக்கல்லயென்டா அந்தப் பிள்ளையளின்ட மூளை போதியளவில வளர்ச்சியடையாது மூளையின்ட வளர்ச்சி குன்றிப் போகுமாம். உதால படிப்பில போதிய கவனம் செலுத்த முடியாமற் போகும்”

“போசாக்கான சாப்பாட்டிலதான் எல்லாம் இருக்குதென்ன?”

“ஓம் சின்னராசு. எங்கட நாட்டைப் பொறுத்தவரையில் மூன்று நேரமும் சாப்பிட முடியாதவை 10 லட்சம் பேர் வரையில இருக்கினமாம். உதில 35 சதவீதமானவை வயசு போனவை. உவையளையும் சேர்த்து சுமார் 40 லட்சம் இல்லையென்டா 20 சதவீத மக்கள் போசாக்கின்மையினால பிடிக்கப்பட்டிருக்கினம் என்டு சுகாதார அதிகாரியள் கூறுகினம். என்டாலும் தெற்காசியவை பொறுத்தவரையில எங்கட நாட்டின் போசாக்குவீதம் மற்ற நாடுகளை விட நல்லாக் கிடக்குதென்டு தெரிய வருகுது. உது சந்தோசமான விஷயம் தான்”.

“பின்ன”

“இன்னொன்டு சின்னராசு அபிவிருத்தியடைஞ்சி கொண்டு வருகிற நாடுகளில இருக்கிற பட்டினி பிரச்சினை இன்னும் தீர்த்த பாடில்ல. உலகத்தில சொன்னா நம்பமாட்டனீ 700 மில்லியன் பேருக்கு மேல பாதிப்பட்டினியில தான் இருக்கினம்”.

“அப்பிடியே?”

“உலகத்தில உள்ள நாடுகளின்ட பட்டினி பிரச்சினை தொடர்பான பட்டியலில இலங்கை எத்தினையாவது இடத்தில இருக்குதென்டு தெரியுமோ?”

“தெரியேல்லயே?”

இலங்கை உந்தப் பட்டியலில 39 ஆவது இடத்தில இருக்குது. ஆனா தெற்காசியாவில உள்ள இந்தியாஇ பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம் ஆகிய நாடுகள விட நாங்க முன்னணியில இருக்கிறனாங்கள் என்பது சந்தோசமான விடயம். ஆனா எங்கள விட வருமானம் குறைஞ்ச மாலி 28 ஆவது இடத்திலயும்இ இந்தோனீசியா 22 ஆவது இடத்திலயும், செனகல் 37 ஆவது இடத்திலயும், லெசோதா 29 ஆவது இடத்திலயும் இருக்குது.”

“உதை எப்பிடியண்ண கணிப்பினம்?”

சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனம் என்டு ஒன்டு இருக்குது. உந்த நிறுவனம்தான் வருடாந்தம் உந்த புள்ளிப்பட்டியலை தயாரிக்குது. உந்த விபரத்தை கணக்கெடுக்க மூன்று விஷயங்களை அந்த நிறுவனம் பின்பற்றுது. அதுல முதலாவது போசாக்கின்மை. அதாவது மொத்த சனத்தொகையில போசாக்கின்மையால பாதிக்கப்பட்டவை எத்தனை வீதம் என்பதை கணக்கெடுப்பினம். அடுத்தது சிறுவர்கள் போதிய நிறையில்லாமல் இருக்குறது, அதாவது 5 வயசுக்கு குறைந்த எத்தனை வீத சிறுவர்கள் அவையின்ட உயரத்துக்கு ஏத்த நிறையோட இருக்கினம் என்டு பார்ப்பினம். மூன்டாவது சிறுவர் மரணவீதம். அதாவது 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின்ட மரண வீதம் எப்படியிருக்குதென்டு பார்ப்பினம். உதுகளை வச்சித்தான் கணிப்பினம்.

Comments