'கலோவில பேசி ஓடர் பண்ணினால் ஸ்லோவிலதான் வரும்’ | தினகரன் வாரமஞ்சரி

'கலோவில பேசி ஓடர் பண்ணினால் ஸ்லோவிலதான் வரும்’

பல வருடங்களாக அதாவது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மின்சாரமில்லாத வாழ்க்கை நடத்திய மக்கள் நாங்கள். உலகின் விஞ்ஞான வளர்ச்சியை கண்ணாலும் காணாமல் வாழ்ந்த மக்கள் அதிகம். சினிமாப் படங்கள் பலவருடங்களாகத் தடை. இந்திய சஞ்சிகைகள் தடை. வெறுமனே வானொலியில் தபாலில் சொல்லவேண்டிய விடயங்களை குறுஞ்செய்திகளாக அனுப்பி ஏங்கியவர்கள் நாம்.

உதாரணமாக "வவுனியாவுக்குப் போன மாமா வைத்தியசாலையில் இருக்கிறாராம் என்ற செய்தியை விசுவமடுவிலுள்ள அக்கா வதனிக்கு தெரியப்படுத்துகிறோம். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் யாராவது தயவுசெய்து அவவுக்கு தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்பதை பண்பலை வரிசையில் ஒலிபரப்பி உதவின வானொலிகள். தபால் சேவையை நாம் மெயில் என்று சொல்வதை விடுத்து ஸ்னெயில் என்று சொல்லப் பழகினோம்.

தபால் பொதிகள் மலையளவு குவிந்தன. எல்லைப்புற தபாலகங்களில். போர் நடந்த இடங்களில் செல்போன் பாவிப்பது தடை மட்டுமல்ல குற்றமாகவும் இருந்தது.

காலம் மாறியது போர் ஓய்ந்தது. மக்கள் முட்கம்பிவேலிகளிலிருந்து வெளியே வந்தனர். அவர்களுடைய முதல் தேவை செல்பேசிகளாகவே இருந்தது. நவீன செல்பேசிகளில் தொலைக்காட்சி நாடகங்களையும் படங்களையும் பார்க்க இளைஞர்கள் அறிந்துகொண்டனர். புதியதோர் கவர்ச்சியான உலகம் அவர்களுக்காக திறந்து விடப்பட்டது.

விஞ்ஞான உலகம் எதை எதற்காக கண்டுபிடித்ததோ அது அதற்காகவா பயன்படுகிறது. இல்லையே. சூரிய சக்தி மின்கலங்களை அவசரமாக ஒவ்வொரு வீட்டிலும் வாங்க வேண்டியதாயிற்று. அப்போதே “அடே... வன்னிப் பகுதி முழுவதும் மின்சாரம் வருதாம். யப்பான் அரசாங்கம் உதவி செய்யப்போகு தாம்” பரவலாக இதே பேச்சு.

மின்கம்பங்கள் வீதி வீதியாகப் போடப்பட்டு மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. வடக்கின் வசந்தம் திட்டத்தில் அனைவருக்கும் மின்சாரம். ஆறு மாதங்களுக்கு இலவசம். ‘கலோவில பேசி ஓடர் பண்ணினால் வரும் ஆனா ஸ்லோவிலதான் வரும்’

இரு நூறு கோடி ரூபாசெலவில் மின்சாரம் வழங்கிய நாட்டின். மின்சாரம் பொருத்த வசதியாக அனைவருக்கும் கல்வீடு உருவானது. அந்தநாட்டின் உற்பத்திப் பொருட்களை இரண்டாயிரம் கோடி ரூபாக்களுக்கு மேல் மக்கள் கொள்வனவு செய்தார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, மிக்சி, கிரைண்டர், விசிறி, நீர் இறைக்கும் யந்திரம், சவுண்ட் பொக்ஸ் பாட்டுப் பெட்டி, தமது பணத்தின் வலுவை எப்படி எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் சிலர் காட்டினர். பக்கத்து வீட்டுக்காரர். சும்மாவா கடன்பட்டும் இவற்றை வாங்கிதன் வீட்டை உயர்த்திக் காட்டினார். உற்பத்தியைப் பெருக்கவும் பொருளாதாரத்தை வளர்க்கவுமாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி. விதவைகளுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் விசேட கடன் வசதிகள் மானியங்கள் என பெண்களை இலக்கு வைத்தன வங்கிகள்.

விளைவுகள் மட்டும் மீளாக் கடனாளிகளாக மக்களை மாற்றியது. வங்கிகளைத் தேடி மக்கள் கடனுக்காக அலைந்து திரிந்தது ஒருகாலம். வங்கிகள் வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு எந்தப் பிணையுமில்லாமல் (மூன்று பெண்கள் இணைந்தால்) கூட்டுக்கடன் கொடுத்தன. கோழிவளர்க்க, ஆடு வளர்க்க, மாடு வாங்க, சிறுகைத்தொழில்,வியாபாரம் என எதற்கும் கடன் கிடைத்தது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வங்கியில் வெய்யில் கொழுத்தும் போது குடையை கொடுப்பார்கள். மழை பெய்யும் போது திருப்பிக் கேட்பார்கள்.என்று வீடுவீடாக அலுவலகம் வைத்திருக்கும் இந்த வங்கிகள் விளையும் வரை காத்திருப் பதில்லை. கடன் வாங்கிய அடுத்த மாதமே திருப்பிக்கட்டத் தொடங்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய்கள் பெறும் கடனாளிகள் அதைத்திருப்பி செலுத்தி முடிக்கும்போது முப்பத்தேழாயிரம் ரூபாக்களை வட்டியாகச் செலுத்துகிறார்களாம்.

கோழி வளர்ப்பதற்காக வழங்கப்படும் கடன் கூடு போடவே போதாது. இதில் குஞ்சுகளை வாங்கி அவை வளரும்வரை தீன் வாங்கவும், மருந்துகளுக்கு செலவிடவும். புதிதாக வேறு பெயரில் கடன் வாங்க வேண்டும். இரண்டு கடன்களையும் வாங்கி வீட்டுக்கு கொண்டு போனால் அதற்கு நடப்பதென்ன?

அப்பணத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, ஸ்மார்ட்போன், ஐபாட். என செலவிட மகன் விரும்புகிறான். வீட்டுச் செலவையும் தனது மதுவிற்கும் செலவிட தந்தை விரும்புகிறான். நல்ல ஜிகினா வைத்த ஆடையை மகள் விரும்புகிறாள். எது எப்படியோ அவர்கள் தான் கடனை திருப்பிச் செலுத்தவும் பணம் தரவேண்டும். எனவே, பெண்ணானவள் அவர்களின் தேவையைத்தான் நிறைவேற்றுகிறாள்.

அந்தக் கடன் கட்டமுடிவதில்லை கடன் எடுக்கும் போது நட்பாக இருந்த மூன்று பெண்களும் கடன் கட்ட ஆரம்பித்ததுமே பகையாளியாக மாறிவிடுகின்றனர். வாய்த்தர்க்கம் கைகலப்பு என இவர்களுடைய பிரச்சினை பெரிதாகப் போகிறது. இது காவற்றுறைக்கும் தலையிடியாக மாறிவருகிறது. கடன் கட்டவும் வட்டி கட்டவுமே உழைக்கின்ற பணம் முழுதும் செலவாகிறது. பேருந்தில் புதிதாக கடன் வாங்கச் சென்ற பெண்கள் இருவர் பேசிக் கொண்டதாவது, “நாப்பதாயிரம் ரூபாவாகையில் வாங்கினதுதான்... நாலாயிரம் ரூவாத்தான் வீட்டகொண்டு போறன்”

“ஓ மப்பா மனசில சந்தோசமே இல்லை.. ஆனா பழைய கடனெல்லாங் கட்டியாச்சு இனி இதுமட்டும் தான் அ... கட்டிப்போடலாம்” வறுமை வளர்கிறது எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் பற்றாக் குறையாகவே இருப்பதால் கணவன் மனைவிக் கிடையிலும் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

சமுர்த்தி வங்கியில் ஒரு லட்சம் ரூபா கடன் வாங்கி மகளுக்கு ஒரு ‘சூட்டிபப்’ எடுக்கிறாள். தாய் கடனுக்கு காரணமாக கணவனின் கைத்தொழில் கடையை காட்டுகிறாள். அவனோ அந்தப் பணத்தில் கடையை விரிவுபடுத்தினால் நல்ல வருமானம் வருமே என ஆவலுடன் காத்திருக்க தாய் மிக்சர் கொம்பனியில் பைக்கற் அடைக்கும் தொழிலுக்குப் போகும் மகளை உந்துருளியில் அனுப்பவே விரும்பினாள் விளைவு கைத்திறமையுள்ள அந்த குடும்பத் தலைவன் கொழும்பில் எங்கோ கூலியாகப் போய்விட்டான்.

வாராந்தம் மாதாந்தம். வீடுவீடாகச் சென்று கூட்டுக்கடன் வழங்கும் வங்கிகளின் கடன் பணம் எதற்காகப் பெறப்பட்டதோ அதற்காக செலவிடப்பட்டு அதன் மூலம் வளமாக வாழ்கிறார்கள் என்று கை நீட்டி சொல்லக் கூடிய ஒரு நூறு குடும்பம்... வேண்டாம் பத்துக் குடும்பத்தைக் காட்டக் கூட என்னால் முடியாது வேண்டுமானால் அந்தக் கடனுக்கு கட்டிய வட்டிக்காக இருந்த நகைகளையும் ஈடு வைத்தோ, விற்றோ தொடர்ந்து வறுமையில் வாடும் குடும்பங்களே அதிகம்.

ஆனாலுமென்ன வீட்டுக்கு வீடு விளக்குமாறுகிடந்த மாதிரி தொலைக்காட்சிப் பெட்டி, சின்னதோ பெரிதோ ஒரு மோட்டார் சைக்கிள், இவை இல்லாத வீடுகள் குறைவு. நான்கு கடைகளுக்கு ஒரு கடை மிதிவண்டி திருத்தகமாக இருந்த ஊரில் இப்போது மிதிவண்டி திருத்தும் கடைகள் இல்லை. திருத்துனர்களும் காணப்படவில்லை அருமையாக மிதிவண்டி பாவிப்பவர் வீடுகளிலேயே அவற்றை பராமரிக்கப் பழக வேண்டியுள்ளது.

மின்சாரம் நகரத்தில் மட்டுமல்ல குக்கிராமங்களின் சந்து பொந்தெங்கும் புகுந்து செல்கிறது ஆயினுமென்ன மின்மானி வாசிப்பவர்கள் மாதாந்தம் வருவதில்லை. எங்கள் வீட்டுக்கு எதிரில் இரு வீடுகளுக்கு நெடு நாட்கள் கழித்து வந்த மின்சார கட்டணச் சீட்டு முறையே இருபத்தெட்டாயிரம் இருபத்து நாலாயிரம். ரூபாக்கள் பாவம் விழுந்தடித்துக் கொண்டு மின்சாரசபைக்கு ஓடினார்கள் எங்கோ தவறு நேர்ந்துவிட்டது என்று.

பல வருடங்களாகக் காணாத வாழ்வு வந்தபோது கண்மண் தெரியாமல் அனுபவிக்கப் புகுந்த தன் விளைவு என்று சொல்வதா? வலிந்து விளம்பரங் கூடாகத் திணிக்கப்படும் மாயைக்குள் மக்கள் சிக்கித்தவிக்கிறார்களா? தேவையோ தேவையில்லையோ அடுத்தவர்கள் வாங்கு வதை நாமும் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வாழ்வை சீரழிக்கிறது. இவர்கள் தமது மாயைக் குள்ளிருந்து வெளிவருதல் இனி சாத்தியமேயில்லை. ஓட்டைப் பானைக்குள் நீர்விட்டது போலத் தான் அபிவிருத்தித் திட்டங்கள் போய் விழுகின்றன. உலகச் சந்தையின் பிடி இறுகி வருகிறது. விழிப்புணர்ச்சியை யார் கொடுப்பது? பார்க்கலாம்.

தமிழ்க் கவி

Comments