ராஜபக் ஷக்களுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்; குற்றவாளிக்கூண்டில் அமைச்சர் விஜேதாஸ | தினகரன் வாரமஞ்சரி

ராஜபக் ஷக்களுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்; குற்றவாளிக்கூண்டில் அமைச்சர் விஜேதாஸ

 இப்னு ஷம்ஸ்

ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியல் அரங்கில் மிக முக்கியமான மாதம். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆகஸ்ட் 17 உடன் இரு வருடங்கள் நிறைவடைகின்றது. அது மட்டுமல்ல 2017 ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை அரசியலில் முக்கிய பல எதிர்பாராத திருப்பங்கள் நிகழப்போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கெனவே ஆருடம் கூறியிருந்தார். அவரின் சாஸ்திரம் இன்னும் பலிக்காவிட்டாலும் ஓகஸ்ட் முடிவுக்குள் பல திருப்புமுனைகளை எதிர்பார்க்கலாம் என அவர் உறுதிப்பட சொல்லியிருக்கிறார்.

ராஜபக் ஷ குடும்பத்தில் முக்கிய புள்ளிகளே ஒன்றிணைந்த எதிரணியில் முக்கியமானவர்களோ கைதாகலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் நடந்த மோசடிக்காக கடந்த ஆட்சியாளர்கள் கைதாவது ஒருபுறமிருக்க முக்கிய அமைச்சரான ரவி கருணாநாயக்க இந்த ஓகஸ்டில்தான் பதவி விலகினார். ஓகஸ்ட் என்பது நல்லாட்சிக்குத்தான் பாதகமாக அமையப் போகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அடுத்து ஆளும் தரப்பினரே ஐ.தே.க. அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ராஜபக் ஷவினரை பாதுகாக்க முயல்வதாகவும் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிலையிலேயே கடந்த வார அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நில்வளா திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன இங்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான காசோலை ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் 2015 ஜனவரி 07 ஆம் திகதி திரைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கொமிஸ் குறித்த கம்பனியினால் கடந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அவர்களின் டுபாய் மற்றும் ஹொங்கொங் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாதது பற்றி அமைச்சர் ராஜித அமைச்சரவையில் கேள்வி எழுப்பியிருந்தாராம்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், கொலைகள் தொடர்பான விசாரணைகள் தாமதமாவது பற்றிய விடயம் முக்கியமாக ஆராயப்பட்டது. இது தொடர்பான பேச்சை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராதான் ஆரம்பித்து வைத்திருக்கிறார். மோசடி விசாரணைகள் தாமதமாகவும் இதனால் பல சிக்கல்கள் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் சற்று சூடாக கூறினாராம்.

சில மோசடி விசாரணைகளுக்கு நீண்டகாலம் செல்கிறது. கொலைகள் தொடர்பில் சி.ஐ.டி. மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் தலைமறைவாகியுள்ளன. அதனால் ஆரம்பத்திலிருந்தே விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கதான் இவ்வாறு கூறியிருக்கிறார். நிதி மோசடி பிரிவிலிருந்த ஆவணங்களும் காணாமலாகியுள்ளன. இதுவும் விசாரணைகள் தாமதமாக காரணம் என அவர் விளக்கியிருந்தார்.

விசாரணைகளை துரித்தப்பட்டுத்த உகந்த முறையொன்றை தயாரிக்க வேண்டும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பில் மலிக் சமர விக்ரம, மங்கள சமரவீர ஆகியோரும் ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டதால் கடந்த ஆட்சியாளர்கள் அச்சமடைந்திருந்தார்கள். ஆனால் விசாரணைகள் தாமதமடைவதோடு மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் முன்னிலையில் செயற்பட துவங்கியுள்ளார்கள். எஸ்.பி. திசாநாயக்கவின் கருத்து இது. ராஜபக் ஷ ஆட்சியில் நடந்த மோசடிகள் தாமதமாவது குறித்து அடிக்கடி குற்றஞ்சாட்டி வரும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கடுமையாகவே இங்கு பேசியதாக தெரியவருகிறது.

எனக்கு இது பற்றி பேசி போதுமாகிவிட்டது. தினமும் பேசினாலும் எதுவும் நடந்ததாக இல்லை என்று ஆரம்பித்த அவர், குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை தொடர்பிலும் முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் முன்வர வேண்டும். தினமும் வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியான நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என அடுக்கிக் கொண்டே போனாராம் ராஜித.

பேசிப் பேசி காலங்கடத்தாமல் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூறினாராம். அரசியலமைப்பு வேறு விடயங்கள் பற்றி பேசுவதை விட இதுதான் முக்கியம் என அவரும் சுட்டிக்காட்டினார்.

வழக்குகளை தாமதப்படுத்துவது தொடர்பில் குற்றச்சாட்டுள்ள அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவும் இந்த பேச்சில் இணைந்து தனது பக்க நியாயத்தை கூறினாராம். முடியுமானவற்றை விடுத்து முடியாதவை பற்றித்தான் அவர் பேசியதாக சில அமைச்சர்கள் கடுப்பாக தெரிவித்துள்ளனர். விசேட நீதிமன்றம் அமைப்பதற்கு யாப்பு மாற்றம் தேவை நான் வேறொருவரை சட்டமா அதிபராக நியமிக்க முயன்றேன். இப்பொழுது நியமிக்கப்பட்டிருப்பர் பலவீனமானவர் என தன் மீதான குற்றச்சாட்டை வேறொருவர் மீது தப்ப முயன்றாராம் விஜேதாஸ.

இந்த உரையாடல்களை அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி, முன்னாள் சட்ட மா அதிபரான அமைச்சர் திலக்க மாரபனவின் கருத்தை வினவினார். விசேட நீதிமன்றம் அமைக்க யாப்பு திருத்தம் தேவை. ஆனால் உயர் நீதிமன்றமொன்றை அமைத்து நாளாந்தம் வழக்கு விசாரணை செய்யலாம் என்பது திலக்க மாரபனவின் கருத்து. இதனை அமைச்சர்கள் பலரும் ஆமோதித்துள்ளனர்.

2 1/2 வருடங்களாக பாரிய மோசடிகள் முடங்கிக்கிடக்க அமைச்சர் விஜேதாஸதான் காரணம் என்ற கருத்து பெரும்பாலான அமைச்சர்கள் மத்தியில் காணப்படும் நிலையில் அவரை ஒதுக்கி திலக் மாரப்பனவிடம் இது தொடர்பான பொறுப்பை வழங்க வேண்டும் என சில அமைச்சர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

"வழக்கு கோப்புகளிடையே தேவையில்லாத வழக்குகளும் இருக்கின்றன. இதனால் முக்கியமான வழக்குகளும் தாமதமாகின்றன. பிரியங்கர ஜெயரத்ன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் பசில் ராஜபக் ஷவின் கலண்டர் சில துணி வழக்குகள் எல்லாம் சிறிய விடயங்கள் என நீண்ட விளக்கமொன்றை கொடுத்தாராம் திலக் மாரபன. இவற்றிடையே முக்கியமான வழக்குகளை மட்டும் தெரிவு செய்து துரிதமாக விசாரணை செய்வோம். எல்லா வழக்குகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டிரையல் அட்பார் நீதிமன்றம் மற்றும் மேலதிக மேல் நீதிமன்றங்கள் அமைக்க இங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதால் அமைச்சர் ராஜித கூறியுள்ளது போல ராஜபக் ஷ கும்பலுக்கு எதிரான 'ஆட்டம் ஆகஸ்ட் முதல் ஆரம்பம்' இனி எதிரணியின் வயிற்றில் புளியை கரைக்கும் என ஆளும் தரப்பில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.

தியானம் கலைந்த

பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, இடைக்கிடை ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வார். அவரை காப்பாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள் முயன்று வாங்கிக் கட்டிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் வைபவமொன்றில் பேசிக் கொண்டிருந்தவர் அமைச்சர் ஒருவரின் தொலைபேசி அழைப்பிற்கு கொடுத்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஸேர்’ என பல தடவை அடக்கமாக கூறி சந்தேக நபர் ஒருவரை கைது செய்யாதிருக்க பொலிஸ் மா அதிபர் சம்மதிப்பது வைரலாக எங்கும் பரவியது.

ஆனால் அவர் இம்முறை அதனை விட பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் கடந்த வாரம் தான் ஊடகங்களில் அம்பலமாகி ஐ.ஜீ.பியை நாரடித்துள்ளது.

லிப்ட் இயக்கும் ஊழியரை கழுத்தினால் பிடித்து தாக்க முற்பட்ட அவர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் கண்டபடி ஏசியுள்ளார். சி.ஐ.டி.யில் இருந்த இந்த வீடியோ எப்படி கசிந்தது என குழம்பிப் போயிருக்கிறார் பூஜித ஜெயசுந்தர.

இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவப்பட்டது. பொலிஸ் மா அதிபரை காப்பாற்ற முயன்று நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். “ஏசினார் தான் ஆனால் அடிக்கவில்லையாம். பெண் பொலிஸுக்கு சத்தம் போட்டாலும் பாலியல் துஷ்பிரயோம் செய்வதாக கெட்ட வார்த்தையில் திட்டவில்லையாம்.

இந்த சம்பவம் ஏன் நடந்தது?

சகல பொலிஸாரும் தேசிய கீதம் இயற்றிய பின்னர் சில நிமிடங்கள் உளவளத்தை மேம்படுத்த தியானத்திலே மத அனுஷ்டானத்திலோ ஈடுபடுவது கட்டாயம். இந்த இருவரும் அதனை செய்யவில்லையாம் அதுதான் ஐ.ஜீ.பி. இப்படி திட்டியுள்ளாராம். இதுவும் தியானத்தின் ஒரு அங்கமா அவர் தியானம் செய்துவிட்டு வந்து இப்படி செய்தாரா என்றெல்லாம் ஊடகப் பேச்சாளரிடம் கேட்க அவர் திக்குமுக்காடிப் போனார்.

ராஜபக் ஷ ஊடக கண்காட்சி

அடுத்து ஆட்சிக்கு வர இருக்கும் கட்சியை தான் எதிர்க்கட்சியாக குறிப்பிடுவதுண்டு. ஆட்சிக்கு வருவதற்காக தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்யத் தயங்குவதில்லை. இதற்காக ஊடக கண்காட்சிகளும் அரங்கேற்றப்படும்.

ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு எதிரான முறைப்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் மஹிந்த ராஜபக் ஷவின் பாரியாரான சிரந்தி ராஜபக் ஷ மற்றும் அவரின் புதல்வர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றன. இவர்கள் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி கூட லேசாக பரவியிருந்தது. இந்த நிலையில் பொலிஸ் தலைமையத்திற்கு அருகில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கூட்டம் குவிந்திருந்ததோடு முன்னாள் ஜனாதிபதி. ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் போன்றோரும் வந்திருந்தனர்.

வந்திருந்த கூட்டத்தை பார்த்தால் யாரும் மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். அப்படியொரு கூட்டம். ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தி காண்பித்தன.

ஆனால் இதற்கு பஸ்களில் கூட்டம் அழைத்து வரப்பட்ட விடயம் பின்னர் அம்பலமாகியுள்ளது. பஸ்கள் அருகில் ஔடத கூட்டுத்தாபனத்திற்கருகில் நிறுத்தப்பட்டிருந்ததோடு வந்தவர்களுக்கு உணவுப் பார்சல், தண்ணீர் போத்தல்கள் என்பன வழங்கப்பட்டதாம். இது தானாக சேர்ந்த கூட்டமல்ல, நானாக சேர்த்த கூட்டம் என்று தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சொல்ல வேண்டியிருக்கும்.

இதேவேளை தாஜுதீன் கொலை விசாரணையில் சிரந்தி ராஜபக் ஷவிடம் பொலிஸார் அபூர்வமான கேள்வியொன்றை கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. திருமணததுக்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷவை எங்கு சந்தித்தீர்கள்? நீங்கள் மஹிந்த ராஜபக் ஷவை திருமணம் முடித்துள்ளீர்களா? என்றெல்லாம் வினவியதாக தெரிய வருகிறது.

இதனை அவர் (சிரந்தி ராஷபக்‌ஷ) தனது கணவர் மற்றும் பிள்ளைகளிடம் கூறியுள்ளார். பெரிய மகனுக்கு 31 வயதாகிறது. இப்பொழுதுதான் அப்பாவும் அம்மாவும் திருமணம் முடித்திருக்கிறார்களா என சி.ஐ.டி. கேட்டிருப்பதாக நாமல் ராஜபக் ஷ நக்கலாக கூறியுள்ளார்.

குற்றவாளிக் கூண்டில் ராஜபக் ஷ

அண்மைக்காலமாக ராஜபக் ஷவினர் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. அதில் மஹிந்த ராஜ பக் ஷ குடும்ப மட்டுமன்றி விஜேதாஸ ராஜபக் ஷவும் அடங்குகிறார். கட்சிக்குள்ளே இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி நடந்த ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் விஜேதாஸ ராஜப க் ஷ குறித்த சுமார் 2 மணி நேரம் பேசப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறி அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சொன்ன கூற்று பற்றி இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது. தான் அவ்வாறு கூறவில்லை என அமைச்சர் சமாளித்தாராம்.

ராஜபக் ஷ குடும்ப மோசடிகள் குறித்த வழக்குகள் தாமதமாவதற்கு தான் பொறுப்பல்ல என்று கைவிரித்துள்ள அவர் வழக்குகளை துரிதப்படுத்த தன்னால் எதுவும் செய்வதற்கு இல்லை எனவும் அவர் சமாளித்துள்ளதோடு இதனை அங்கு யாருமே ஏற்கவில்லை என தெரிகிறது.

பலரும் அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருந்த நிலையில் நம்பிக்ைகயில்லா பிரேரணை குறித்து ஆராய மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. கூட்ட முடிவில் பிரதமரும் அமைச்சர் விஜேதாஸவும் வேறு இடத்திற்கு சென்று இரகசியமாக பேசியதாகவும் தெரிய வருகிறது.

Comments