வம்சாவளித் தமிழரின் தோற்றமும் வரலாற்று பின்னணியும் | தினகரன் வாரமஞ்சரி

வம்சாவளித் தமிழரின் தோற்றமும் வரலாற்று பின்னணியும்

பி. பி. தேவராஜ்   

 (​சென்றவார தொடர்...)

பொது நிர்வாக அமைச்சு கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை மாற்றம் சீரமைப்பு பற்றி ஆலோசனைகள் தெரிவிக்கும்படி பொது வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது மலையகத்தைச் சேர்ந்த 8 பிரதான அமைப்புகள் ஒன்றாக இணைந்து சில ஆலோசனைகளைச் சமர்ப்பித்திருந்தன. இதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைகளைப் பரிசீலிப்பதற்காக ஒரு உள்ளூராட்சி தேர்தல் மீளமைப்பு குழுவும் நியமிக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உள்ளூராட்சி சபைகளில் கலந்து கொள்வது இனங்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். சில உள்ளூராட்சி சபைகளிலே பெரும்பான்மை அல்லது கணிசமான தொகை அங்கத்தவர்களை மலையக தமிழ் மக்கள் பெறுவதன் மூலம் தீர்மானங்கள் செய்வதிலே சிறந்த பங்களிப்பை செய்ய முடியும். மேலும் சில உள்ளூராட்சி சபைகளின் தலைமைப் பதவியையும் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பல மாகாணங்களில் இந்திய வம்சாவளியினருக்கு இது நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயம் செய்யும்போது பல குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதால் இது மீள் பரிசீலணை செய்யும்படி அமைச்சர் கட்டளையிட்டுள்ளார். புதிய அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அறிக்கை வந்த பின்னர்தான் இது பற்றிக் கருத்து கூறமுடியும்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் – அடையாளம்

மக்கள் தொகை மதிப்பீடு திணைக்கள புள்ளிவிபரக் கணக்குபடி இலங்கையில் பல இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளுள் நான்கு பிரதானமானவை.

01. சிங்களவர்

02. இலங்கை தமிழர்

03. முஸ்லிம்கள்

04. இந்திய வம்சாவளி தமிழர்கள்

இந்த நான்கு பிரிவினரைத் தவிர வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் நாட்டின் 0.54 சதவிகிதமே உள்ளனர்.

பேராசிரியர திஸ்ஸ விதாரண தலைமையில் நடந்த சர்வகட்சி மாநாடு இன அடையாளங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்தது. எவ்வாறு இனங்களின் அடையாளம் யாப்பிலே இடம்பெற வேண்டும் என்பதில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியவர்கள் ஒருமைப்பாட்டை எட்டினார்கள். சர்வ கட்சி மாநாட்டுக்கு தலைமை வகித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். “இலங்கை அரசியல் யாப்பில் இலங்கை நாடு சிங்களவர், இலங்கை தமிழர், இஸ்லமியர், இந்திய தமிழர் மற்றும் இதர மக்கள் பிரிவினர்களை கொண்டமைந்த நாடு என வர்ணிக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு மக்ட் பிரிவினருக்கும் தங்கள் மொழியை அபிவிருத்தி செய்யவும், தங்கள் கலாசாரத்தை மேம்படுத்தவும், தங்கள் வரலாற்றைப் பாதுகாத்துப் பேணவும் உரிமையுண்டு. அத்துடன் அரச அதிகாரத்தில் பங்குபற்றவும், தகுந்த பிரதிநிதித்துவம் பெறவும் உரிமையுண்டு. இவையாவும் உறுதிப்படுத்தப்படும் போது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கப்படும்...”

சர்வ கட்சி மகா நாட்டிற்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் இந்த விடயம் சம்பந்தமாக தனது ஆதரவைத் தெரிவித்து சிபாரிசுகளைச் செய்துள்ளது. அனைத்து கட்சிகளுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளன.

வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள இந்திய வம்சாவளி மக்களால் இலகுவில் முடியாதிருக்கிறது. இந்திய வம்சாவளி தமிழர் இலங்கையின் சில மாவட்டங்களில் செறிவாகவும், மற்றும் சில மாவட்டங்களில் செறிவு குறைவாகவும் உள்ளனர். என்ற போதிலும் இவர்கள் ஒரே அடையாளத்தை தான் கொண்டிருக்கிறார்கள். செறிவாக வாழ்கின்ற நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களிலும் இந்திய வம்சாவளி தமிழர் வாழ்கின்றார்கள். பல மாவட்டங்களில் உரிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெறுவதிலும், வாக்காளர்களாகப் பதிவு செய்வதிலும் பெரும் சோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி உள்ளது. இத்தகைய மாவட்டங்களிலே வாக்காளர் பதிவு மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெற்றுள்ளது.

2007ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது மே தின அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளது. “இலங்கையின் ஒற்றை ஆட்சியை உறுதி செய்யும் அதேவேளை ஒவ்வொரு இனத்தவரும் அவர்களுக்கே உரிய அடையாளத்தோடு உள்ளனர். என்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படும்”. அவர்கள் இந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் சில சிறுபான்மை இனத்தவர் தாங்கள் வாழுகின்ற வட்டாரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தங்களுடைய விடங்களை தாங்களாகவே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி மலையகக் கட்சிகள் விரிவான சிபாரிசுகள் செய்துள்ளன. கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்தோ அல்லது மாற்றியமைத்தோ இதுவே ஒரு வட்டாரமாக பிரகடனப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர் பிரிவுகளுடைய எல்லைகள் எவ்வாறு மாற்றப்படும் என்பது பற்றி இதுவரை தெளிவான விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இது பற்றி பொது நிர்வாக அமைச்சோ அல்லது உள்ளூராட்சி அமைச்சோ மக்கள் பிரதிநிதிகளுடன் தெளிவான முறையில் கலந்தாலோசிக்கவில்லை.

இதர நாடுகளில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர்தான் வட்டாரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இந்த முறை தெளிவாக கடைப்பிடிக்கப்படவில்லை.

(தொடரும்...)

Comments