பன்முகத்தன்மையை நிராகரிக்கும் இனவாதிகளை அனுமதிக்கலாமா? | தினகரன் வாரமஞ்சரி

பன்முகத்தன்மையை நிராகரிக்கும் இனவாதிகளை அனுமதிக்கலாமா?

தலைமறைவு வாழ்க்கையில் சிக்குவேன் என்று ஞானசார தேரர் எப்போதாவது எண்ணியிருந்திருப்பாரா? ஆனால், அப்படியான ஒரு விதி ஞானசாரருக்கு நேர்ந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரைத் தேடிப் பொலிஸ் வலை விரித்துள்ளது. ஞானசார தேரர் தலைமறைவாகியிருக்கிறார். ஞானசார தேரருக்குப் பாதுகாப்பில்லை என்று சொல்கிறது அவரின் அமைப்பான பொதுபல சேனா. யாரிடமிருந்து பாதுகாப்பில்லை என்று அந்த அமைப்புச் சொல்லவில்லை. ஆனால், ஒரு உண்மை தெளிவாகியுள்ளது.

தமிழ், முஸ்லிம் சமூகங்களை அச்சுறுத்தும் வகையில் சவால் விட்டவர், அந்தச் சமூகங்களை மிரட்டியவர் இப்போது தனக்குப் பாதுகாப்பில்லை என்கிறார். அதிலும் அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் நுழைந்து, அமைச்சரின் சேர்ட் கொலரைப் பிடிக்காத குறையாக நின்று கர்ஜித்த சிங்கம் இப்போது தலையை வெளியே காட்ட முடியாமல் கலங்கி ஓடியுள்ளது.

இது வேடிக்கையாக இல்லையா!

இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக உங்களுக்குச் சிரிப்பு வரலாம். ஏனென்றால், திடீரென ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த ஒருவர் சட்டத்தின் முன்னும் நீதியின் முன்னும் சமூகத்தின் முன்பும் முகம் காட்ட முடியாமல் ஓடி ஒளிந்திருக்கிறார் என்றால், இது கோமாளித்தனமில்லாமல் வேறு எப்படி இருக்கும். இதுவா வீரம்? இதுவா விவேகம்? இதுவா சாணக்கியம்? இதுவா கெட்டித்தனம்?

கோமாளித்தனமான வேலைகள் எப்போதும் யாருக்கும் சிரிப்பையே உண்டாக்கும். ஞானசார தேரரின் வேலைகள் (விளையாட்டுகள் ) பெரும்பாலும் அப்படித்தான் உள்ளன, கோமாளித்தனமாக. ஆனால், இது வெறும் கோமாளித்தனம் அல்ல. இதன் பின்னே மிக அபாயகரமான நச்சு விதைகளும் முட்களும் உள்ளன. ஏனென்றால் மிகப் பச்சையாகவே இனவாதத்தைக் கக்கும் விசப்பாம்பாக ஞானசாரர் இருக்கிறார். இதனால்தான் நாம் இதையிட்டு மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அத்துடன் இந்த விடயங்களை எதிர்க்கவும் வேண்டியிருக்கிறது.

ஆனால், அதிதீவிர நிலைப்பாட்டை எடுக்கும் எவருக்கும் ஞானசார தேரர் சந்தித்திருப்பதைப் போன்றதொரு நிலை அல்லது விதி ஏற்படுவதுண்டு. தீவிர நிலைப்பாடுடைய இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஏற்படும் நிலைமையும் இதுதான். இதனால்தான் இந்த மாதிரியான ஆட்களும் இந்த மாதிரியான அமைப்புகள், இயக்கங்களும் எப்போதும் இவ்வாறான நெருக்கடிக்கும் தலைமறைவு நிலைக்கும் உள்ளாக வேண்டியிருக்கிறது.

இதற்குக் காரணம், இவர்களுடைய அல்லது இந்த அமைப்புகளின் அதிதீவிரநிலை சமூகத்தில் உண்டாக்கும் நெருக்கடியே ஆகும். சமூகத்தை அமைதியிழக்கச் செய்யும் வகையில் அதிதீவிர நிலைப்பட்டுச் செயற்படும்போது குறித்த சமூகம் அச்சமடைகிறது. பாதுகாப்பின்மையில் இருப்பதாக உணர்கிறது. இது அந்தச் சமூகத்தை அல்லது அந்தச் சமூகங்களைப் பதட்டமடைய வைக்கிறது. இப்போது நடந்திருப்பதும் இதுதான்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களை அச்சுறுத்தும் வகையிலும், அவற்றை நெருக்கடிக்குள்ளாக்கும் விதமாகவும் ஞானசார தேரர் அதிரடியாகச் செயற்பட்டு இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீதும் பள்ளிவாசல்களின் மீதும் அவர் தொடங்கிய தாக்குதல்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தை மிகப்பதற்றமடையச் செய்திருக்கிறது.

மட்டுமல்ல, இதை முஸ்லிம்களிடத்திலிருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்விலிருந்தும் கவலைகளிலிருந்தும் உணர்ந்து கொள்ள முடியும்? இதை ஒத்த ஒரு தோற்றப்பாடு, முன்னாள் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இன்று அணி திரண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியைக் குறித்தும் உண்டு. சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி செயற்படுகிறது என்ற உணர்வே சிறுபான்மையின மக்களிடம் உள்ளது.

இதையிட்டெல்லாம் இந்த நாட்டிலிருக்கும் பெரும்பான்மைச் சமூகமான சிங்களத்தரப்பினர் பெரிய அளவில் எந்தவிதமான எதிர்வினைகளையும் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பில் ஒரு தேரர், ஒரு கிராம அலுவலரை அச்சுறுத்தி, சட்டத்துக்கும் சமூக வரன்முறைக்கும் மாறாக நடந்தார்.

அதையிட்டும் பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்தினர் தமது கவலைகளை வெளிப்படுத்தவில்லை. குறைந்த பட்சம் இந்த நாட்டிலே அமைதியை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கும், மெய்யாகவே விரும்புகின்ற சிங்களச் சமூகச் செயற்பாட்டியக்கங்கள் கூட வாய் திறக்கவே இல்லை. நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவோரும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தவில்லை.

இதனால், இந்தச் சம்பவங்கள் சிறுபான்மைச் சமூகங்களின் மனதில் ஆழமான பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. இந்த நாடு அமைதிக்குத் திரும்புமா? நீதியுள்ள நாடாக இருக்குமா? புதிய அரசியலமைப்புச் சட்டம் நியாயத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுமா? நல்லிணக்கமும் நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளும் நிறைவேறுமா? பகை மறக்கப்படுமா? அல்லது இந்த மாதிரி எதிர் நிலை எண்ணத்தின் வழியாக வளர்க்கப்படுமா? என ஆயிரம் கேள்விகள் உருவாகியுள்ளன. இந்தக் கேள்விகள் எல்லாம் மலையக, முஸ்லிம், தமிழ் மக்களிடம் அரசாங்கத்தின் மீதும் சிங்களச் சமூகத்தின் மீதும் ஐயங்களை உருவாக்கியுள்ளன.

ஏனென்றால், இனமுரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அரசியலமைப்பை நாடு உருவாக்கி வரும் நிலையில் ஞானசாரா தேரர் போன்றவர்களின் அதிதீவிரவாத நிலைப்பாடு எல்லாவற்றையும் நெருக்கடிக்குள்ளாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துமே என்ற ஐயம். இதனால்தான் தமிழ் ஊடகங்களும் முஸ்லிம்களும் ஞானசார தேரரின் அடாவடித்தனங்களை முன்னிலைப்படுத்தி பொதுவெளியில் உரையாடல்களைச் செய்கின்றன. நாட்டின் அமைதிச் சூழலைக் கெடுக்கக்கூடாது என்ற நோக்கில். இல்லையென்றால், ஞானசார தேரருக்கும் பொதுபல சேனாவுக்கும் இந்தளவுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், பொதுபல சேனா பெரும்பான்மைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்புக் கிடையாது. ஆகவே அவரை பெரிதாகப் பொருட்படுத்தவும் வேண்டியதில்லை.

ஆனால், ஒரு பானை சோற்றை ஒரு துளி விசம் கெடுத்துப் பாழாக்கி விடும் என்பதைப்போல, மிகக் கடினமாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு அமைதிச் சூழலை இந்த மாதிரியான அதிதீவிரவாதிகள் கெடுத்துப் பாழாக்கி விடுவார்கள்.

இதனால்தான் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய போன்ற சக்திகளையிட்டுக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இந்தச் சக்திகள் பச்சையாக இனவாதத்தைப் பேசுகின்றன. இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது. மற்றவர்களெல்லாம் வந்தேறிகள். அவர்கள் எங்காவது சென்று விடவேண்டியதுதான். அல்லது அடங்கியிருக்க வேண்டியதே” என்று சொல்கின்றன.

இப்படிச் சொல்வதன் மூலமாக இலங்கையின் பன்முகத்தன்மையை நிராகரிக்கின்றன. பன்முகத்தன்மையை நிராகரித்தால், அது இந்த நாட்டைப் பாதுகாப்பின்மைக்கும் நீதியின்மைக்குமே கொண்டு செல்லும். சரியாகச் சொன்னால், இந்த நாட்டை அழிவுக்கே கொண்டு போகும்.

கடந்த காலத்தின் படிப்பினைகளுக்கு மாறான ஒரு நிலை இது. இதை இவ்வளவு பட்டறிவுக்குப் பிறகும் நாம் அனுமதிக்கலாமா?

இன்றைய உலகம் பன்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. நவீனத்துவத்தின் அடிப்படையே அனைத்துத் தரப்புகளுக்கும் இடமளித்தல் என்பதாகும். குரல் மறுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உறுதிப்படுத்துதல், ஒலிக்க வைத்தல் என்பதாகும். ஏனென்றால், இது நவீனத்துவ உலகத்தின் காலகட்டம். விழிப்புணர்வும், உரையாடல்களும் உரிமைக் கோரிக்கைகளும் வலுப்பெற்று உருவாகிய நவீனத்துவ காலகட்டம். எல்லோருடைய உழைப்புக்கும் இந்த உலகத்தில் இடமிருப்பதைப்போல, எல்லோருடைய உரிமைக்கும் எல்லோருடைய அடையாளத்துக்கும் இடமளித்தலைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை உடைய காலகட்டம்.

ஆகவே, இந்தக் காலகட்டத்துக்குரிய அரசியல் சிந்தனையும் அரசியல் நடைமுறைகளுமே அவசியமானது. அப்படியான ஒரு நிலையில்தான் இன்று ஒரு கூட்டரசாங்கத்துக்கு, பன்மைத்துவ ஆட்சிக்கு இலங்கை மக்கள் இடமளித்திருக்கின்றனர்.

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து உருவாக்கிய ஒன்று. எனவேதான் இந்த அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வும் பன்மைத்துவத்துக்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சிந்திக்கப்படுகிறது. இதைக் குழப்பும் தீவிரவாதச் சக்திகள் எங்கே மேற்கிளம்பினாலும் அதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் இந்த மாதிரியான சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுக்கும்பொழுது சிங்களப் பௌத்த பேரினவாதச் சக்திகள் அதைக் குழப்புகின்ற விதமாகச் செயற்பட்டிருக்கின்றன. அதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு தான் வழங்கிய வாக்குறுதிகளையும் செய்த உடன்படிக்கைகளையும் கைவிட்டிருக்கிறது அரசாங்கம். அப்படியான ஒரு நிலை இப்போதும் வரலாம் என்ற கவலையே தமிழர்களில் பெரும்பான்மையானவர்களுக்குண்டு. ஏன் முஸ்லிம் மக்களுக்கும் கூடத்தான். ஆகவே அந்த வகையில் இப்போதும் கடும்போக்காளர்களைத் தூண்டி விட்டு நிலைமையை மாற்றியமைக்க முற்படுவதாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், இந்த இடத்தில் ஒரு கேள்வியுண்டு. இது கூட்டரசாங்கம். ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதைப்போல, தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள சமூகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டரசாங்கம். ஆகவே இந்த அரசாங்கம் முன்னரைப்போல சிங்களக் கடும்போக்காளர்களின் பின்னால் பதுங்க முடியாது. அல்லது சிங்களக் கடும்போக்காளர்களை முன்னணிப்படையாகக் கொண்டிருக்க முடியாது.

எனவேதான் இன்று ஞானசார தேரரைப் பொலிஸ் தேடவேண்டி வந்திருக்கிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதிகள் கொடுத்திருக்கும் அழுத்தத்துக்கு பிரதமரும் ஜனாதிபதியும் பணிந்திருப்பது ஓரளவு ஆரோக்கியமானதே. ஆனால், இதை மெய்யாகவே ஒரு நிலையாக வளர்த்தெடுக்க வேணும். அதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளில் உள்ள தீவிரநிலையாளர்களைக் குறித்தும் நாம் கவனத்திற் கொள்ள வேணும்.

மட்டக்களப்பு தேரர் செய்த அட்டகாசத்தைப்போல, தானும் ஒரு மதம் கொண்ட யானையாக பொதுமையத்தில் நின்று பிளிறலாம் என்று ஞானசாரர் சிந்தித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது என்பதை இப்போது ஞானசார தேரர் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது இன்னும் சில காலம் கழித்தாவது உணரலாம்.

இதேவேளை இங்கே நாம் இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் அஸ்கிரிய பீடம், மல்வத்தை பீடம் ஆகிய இரண்டுமே செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கின்றன.இவை மறைவான நிலையில் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துபவை. பொதுபலசேனாவும் ஞானசார தேரரும் இதற்குப் புறத்தியான மூன்றாவது நிலையைச் சேர்ந்தவை. இந்த அணியும் இப்போது பௌத்த விரிவாக்கத்தையே கொண்டிருக்கிறது.

ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் இவையெல்லாம் இன்று உள்ளே கொதித்துக் கொண்டிருந்தாலும் வெளியே இறங்கிச் செயற்பட முடியாத நிலையே உள்ளது. இது ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கக்கூடியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு நிரந்தரமான தீர்வு என்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமான – பன்முகத்தன்மையைக் கொண்ட அரசியல் யாப்பும் ஆட்சிமுறையுமாகும். அதை உருவாக்குவதற்கு இனியும் தாமங்களைச் செய்யக்கூடாது. 

Comments