அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மீட்பது யார் பொறுப்பு? | தினகரன் வாரமஞ்சரி

அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மீட்பது யார் பொறுப்பு?

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கட்டட சரிவு அனர்த்தம் மாடிக்குடியிருப்பு வாழ் மக்களை மாத்திரமன்றி, நிர்மாணப் பணியாளர்கள் உள்ளிட்ட சகலரையும் திகைப்படையச் செய்திருக்கிறது.

நகரங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அத்தனைபேரையும் உள்வாங்குவதற்கு மாடிக் கட்டடங்கள் இன்றியமையாததாகிறது. பிரத்தியேகச் சூழலில், தனிவீட்டுத் தொகுதியில் மனங்கவர் மாற்றங்களுடன் வாழ்பவர்களையும் மாடி மனை நிர்ப்பந்த வாழ்வுக்குள் இழுத்து விடுகிறது.

குடியிருப்புகள் ஒரு புறமிருந்தாலும், வர்த்தக நோக்கத்திலான கட்டடங்கள் கண்கள் தரிசித்துக்ெகாண்டிருக்கும்போதே வானளாவ உயர்ந்து விடுகின்றன. அவ்வாறு உயரும் கட்டடங்களின் உறுதிப்பாடுகள், உத்தரவாதங்கள் வலுவாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர்தான் அவை மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படல் வேண்டும். அந்த நம்பிக்ைகயில்தான் இலட்சோப இலட்ச மக்கள் மாடிக்குடியிருப்புகளில் வாழ்க்ைகயை நகர்த்தி வருகின்றனர்.

ஆனால், இந்த நம்பிக்ைகயை சற்றே உரசிப்பார்க்கும் அளவிற்குக் கடந்த வாரம் வெள்ளவத்தைப் பகுதியில் ஓர் ஐந்து மாடிக்கட்டடம் சரிந்து வீழ்ந்து வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாகக் கட்டடங்கள் சரிவதென்பது பயங்கரவாதத் தாக்குதல்கள், மண் சரிவுகள், பூகம்பங்கள் ​போன்றவற்றினால்தான் ஏற்படும் என்பது பரவலான எதிர்பார்ப்பும் நம்பிக்ைகயுமாக உள்ளது. எனினும், நிர்மாணப்பணிகளின்போது கட்டடங்கள் சரிந்து வீழ்ந்தமை மிக மிக அரிதாகவே நிகழும் சம்பவங்களாகக் காணப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதாக செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். மாறாக அந்த அனர்த்தங்கள் ஏற்படும்போது, அவை தனியார் கட்டடமா அரசுக்குச் சொந்தமான கட்டடமா என்று ஆய்ந்தறிவதைவிடுத்து அரசு நிர்வாக இயந்திரம் உடனடியாக மீட்புப் பணியை மேற்கொள்ளும். இதுவே நடைமுறை யதார்த்தம்.

இலங்கையிலும் இவ்வாறுதான் அரச நிர்வாகப் பொறிமுயை செயற்பட்டுக்ெகாண்டிருக்கின்றது. அஃது அனர்த்த முகாமைத்துவத்திலிருந்து முப்படையினர், பொலிஸார் என விரிந்து செல்கிறது. உத்தியோகபூர்வ மீட்புக் குழுவினர் விரைவதற்கு முன்னர், பிரதேசத்தின் பொது மக்கள் திரண்டு உயிர்களைக் காப்பாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படத் தொடங்கிவிடுவர்.

வெள்ளவத்தையிலும் அவ்வாறுதான் மீட்பு பணி தொடங்கப்பட்டது. இடிந்து வீழ்ந்தது ஓர் ஐந்து மாடிக்கட்டடம். அதில் புதிய இணைப்புப் பகுதி நிர்மாணிக்கப்பட்டபோதுதான் திடீரென முழுக்கட்டடத் தொகுதியும் வீழ்ந்திருக்கிறது. சம்பவம் நிகழ்வதற்கு அடுத்த வாரம் ஒரு திருமண வைபவத்திற்காகக் கட்டடம் திருத்தியமைக்கப்பட்டபோது அனர்த்தம் நடந்ததாகவே சொல்லப்படுகிறது. இதில், மூவர் உயிரிந்ததுடன் 20இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களுள் பத்தனை கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த ஓர் 22 வயது இளைஞனும் அடங்குவார். இவரும் இன்னொருவரும் காணாமற்போய்விட்டதாகவே முன்னர் கூறப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து மூன்று தினங்களாகியும் இவ்விருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்றாவது நாள், கட்டட இடிபாடுகளுக்குள் இனியும் எவரும் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி, மீட்புப் பணிகளை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆனால், திருமண மண்டப வரவேற்பாளராகக் கடமையாற்றிய தமது பிள்ளையை மீட்டுத்தருமாறு கோரி நிரோஷனின் தந்தையார் சம்பவ இடத்தில் கண்ணீர் விட்டுக் கதறி மன்றாட்டமாகக் கேட்டுக்ெகாண்டிருந்தார். போதாக்குறைக்கு இளைஞனின் பிறந்த ஊரில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும், மீட்புப் பணி நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளை முற்றாக அகற்ற வேண்டியது கட்டட உரிமையாளரின் பொறுப்பாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளும் கையை விரித்துவிட்டனர். என்றாலும், அவர்கள் இனியும் எவரும் சிக்கியிருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த அதே இடத்தில் இடிபாடுகளுக்குள்ளிருந்து இருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டெடுத்தனர்.

இந்தச் சம்பவம் கட்டடம் சரிந்து வீழ்ந்தபோது ஏற்படுத்திய அதிர்ச்சிக்கும் இரு மடங்கு அதிர்ச்சியையே மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்த அலட்சிய போக்கிற்கான காரணம் என்ன என்பதை அறிவதற்கு மக்கள் பெரும் பிரயத்தனப்படவேண்டியிருந்திருக்காது என்றே சொல்ல வேண்டும். காரணம் கட்டடத்தின் உரிமையாளர் ஒரு சிறுபான்மை. காணாமற்போனதும் சிறுபான்மை. இந்தக் காரணங்கள் மீட்புப் பணியை நிறுத்துவதற்கான காரணங்களாக இல்லாதிருந்து வேறு நியாயமான காரணங்கள் இருந்திருந்தாலும்கூட, மக்களுக்கு ஒரு சந்தேகத்தைத் தோற்றுவித்துவிட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மையே.

ஒரு புறத்தில் மீட்புப் பணிகள் தாமதமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதுகுறித்து இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரட்னவை வினவிய போது, கட்டட இடிபாடுகளுக்குள் இனியாரும் இல்லையென்று தீயணைப்பு பிரிவினர் தமக்கு உறுதி செய்ததையடுத்தே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலியும் அனர்த்தம் ஏற்பட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வேறு எவறும் இல்லாததால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அனர்த்தங்கள் ஏற்பட்டவுடன் அவ்வனர்த்தத்தில் அகப்பட்டுள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளார்களா? அவர்களின் குடும்பத்தினரின் நிலை என்ன? அவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை அளிக்கப்படுகின்றதா என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்? ஆனால் அரச அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணமே தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது, இக்கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும் மூன்று மாடிக்கே அனுமதி பெறப்பட்டு, அனுமதியின்றி அவர்களின் விருப்புக்கேற்றப்படியே கட்டியதாலேயே இக்கட்டடம் இடிந்து விழுந்ததாகவும் குற்றம் சாட்டினர் அவ்விடத்திற்கு விரைந்த அரச அதிகாரிகள். கட்டிட நிபுணர்கள், நகர அபிவிருத்தி அதிகாரிகள் உட்பட உயர்மட்ட குழுவினர். அத்துடன் இக்கட்டடம் விழுந்தற்கான விசாரணையை உடனடியாக ஆரம்பித்தனர்.

இவ்விடத்தில் கருத்து கூறிய, நகர அபிவிருத்தி பொறியியலாளர் இக்கட்டிடத்தில் பாவிக்கப்பட்ட சில இரும்பு கம்பிகளில் SLS அடையாளமின்றி இருப்பதையும் சுற்றிக்காட்டி, இரும்பு கம்பிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த கம்பிகளாகயிருக்கலாம் என்றார்.

இக்கட்டடத்தின் பின்புறத்திலுள்ள ஓடையிலிருந்து 21 அடிவிடாமல் அவ்விடத்தையும் வளைத்துபிடித்து இக்கட்டடம் கட்டப்பட்டிருப்பது சட்டவிரோதமான செயல் என மேல் மாகாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குநகர் நாயகம் எஸ். எஸ். பி. இரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 2200 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டவையாகும். அதாவது அக்கட்டடங்கள் சட்டரீதியிலான கட்டிடவரைப்படத்துடன் அங்கீகாரம் பெற்று, கட்டடம் கட்டும்போது இவ்வரைப்படத்தை கருத்தில் கொள்ளாமல் அவைகளில் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டாலே அவை சட்டவிரோதமான கட்டடங்களாகவே கணிக்கப்படுகிறது. இக்கட்டங்களில் 210 கட்டிடங்களுக்கான மீளனுமதி வழங்கப்படவுள்ளதுடன், அவைகள் குறித்தான சீரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், இக்கட்டடங்களின் நிலைகுறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அத்துடன், 2017 பெப்பரவரி மாதத்திலிருந்து 4000 சதுர அடி கட்டடம் உட்பட ஐந்து மாடி கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இக்கட்டங்களுக்கான செயற்பாடுகள் கண்காணிக்கப்படும். கட்டடம் கட்டும் முன் மண்வளத்தின் தன்மையும் பூமியின் மண் அடுக்கு நிலையையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார் இரத்நாயக்க.

கொழும்பு மாநகர ஆணையாளர் வீ. கே. ஏ. அனுர கருத்து தெரிவிக்கையில், சட்டவிரோதம் என்பது வீட்டுக்கான வரைப்படம், வீட்டின் குடியிருப்புக்கான அனுமதி என்பது முக்கியமானது. இவைகள் குறித்து குடியிருப்பாளர் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை. கொழும்பு மாநகரிற்குள் ஐந்து மாடிகளுக்குட்பட்ட கட்டிடங்களுக்கான அனுமதியை மாநகர சபையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவர் புதிய வீட்டிக்குள் குடிபுகும் முன்பு அல்லது ஒரு வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டிற்கான குடியிருப்பாக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக என்பதை கட்டாயம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது குடியிருப்பாளருக்கும் பாதுகாப்பானதும் உத்தரவாதமுள்ளதுமாகும் என்றார் அனுர.

அத்துடன், ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டுவதற்கான வரைப்படக்கலைஞரால் வரையப்பட்ட கட்டிட வரைப்படத்துக்கான

வரைப்படத்தில் கையெழுத்து இடுவதுடன், கட்டிடப் பொறியியலாளரும் அதற்கு உறுதிவழங்கி கைச்சாதிடப்பட்டாலே அக்கட்டடத்துக்கான ஆரம்ப கட்ட செயற்பாடாகும்.

அத்துடன், அக்கட்டத்தில் இணைக்கப்படும் இரும்பு கம்புகள், சிமெந்து கலவைகள், கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் கற்கள் கூட கட்டட பொறியலாளரின் கண்காணிப்பு இருக்க வேண்டும். அதற்கான தராதரத்தையும் வழங்க வேண்டும் என்பதை குறித்த கொழும்பு ஆணையாளரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குநர் நாயகமும் கருத்து கூறினர்.

அத்துடன் கொழும்பு மாநகரில் வானளவு உயர்கட்டிடங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, இக்கட்டிடங்களின் மூலமாக எதிர்காலத்தில் பாதிப்பு உண்டா என்ற கேள்விக்கு, கொழும்பு பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்படும் இடமில்லை.

ஆனாலும், ஏதோ ஒரு கட்டடம் கட்டப்படும் போது, அருகிலுருக்கு கட்டடத்திற்கு அல்லது வீட்டுக்கு சேதம் ஏற்பட்டால் அல்லது அக்கட்டடம் கட்டுவதற்கு பாவிக்கப்படும் இயந்திர சாதனங்களினால் கட்டடங்களில் வெடிப்பு ஏற்பட்டாலும் நகர அபிவிருத்தி அமைச்சில் இயக்கும் இதற்கான பிரிவில் முறையிடலாம். இதனை குறித்தான விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்று இரட்நாயக்க குறிப்பிட்டார்.

கட்டடங்கள் நிர்மாணம் செய்யும் போது மேற்பார்வை முக்கியமானது. அத்துடன் நிர்மாணத்துக்காக தகுதி வாய்ந்த ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட வேண்டும். கட்டடங்கள் அமைக்கும் போது, செயன்முறையிலும் தரத்தைப் பேண வேண்டும். அடுக்கு மாடி கட்டடத் தூண்களின் பலம், பரிமாணம், தூண்களின் கம்பிகளின் அளவு, அந்த பூமியால் எவ்வளவு பாரத்தை தாங்க முடியுமா?, மாடிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறார் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன.

எந்தவொரு கட்டடத்திற்கும் அத்திபாரம் முக்கியத்துவம் பெருகிறது. அத்திவாரக்கல் சிறிய கல்லாயிருந்தாலும் முழு கட்டடத்திற்கும் மூலைக்கல்லாகவே காணப்படுகின்றது. அக்கட்டடம் வனளவுயர்ந்த கட்டடமாகயிருக்கலாம் அல்லாது சிறிய கட்டடமாகவும் இருக்கலாம் ஆனால் அத்திவாரக்கல்லும் அத்திவார மதில்களும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அத்திவாரத்திற்கு ஏற்றவாறே கட்டடம் அமைய வேண்டும்.

இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அல்லது ஏதேனும் கட்டடங்கள் கட்டுவதற்கு தவறான அனுமதி வழங்கியவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகரத்தில் கட்டப்படும் அடுக்குமாடிகள் திட்டப்படி சீராகவும், நேர்த்தியாகவும் கட்டப்படுகிறதா அல்லது தனக்கேற்றப்படி திட்டங்களை மாற்றி, பணத்தை மட்டும் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கட்டப்படுகிறதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் கட்டடம் சம்பந்தமாக செயற்படும் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கும், ஊழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

சில குடியிருப்பு கட்டடங்களுக்கு தண்ணீர், மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டு, அவை சட்டவிரோதமான கட்டடங்கள் என்று சில அதிகாரிகள் சில சந்தர்ப்பங்களில் கொக்கரிப்பதைவிட்டுவிட்டு அக்கட்டடத்திற்கு முழுமையான அந்தஸ்தை உருவாக்கும் விதத்தில் நீர், மின்சாரம், வீட்டு வரி குறித்து விசாரித்து அவை சட்டவிரோதமானால் அதற்கெதிராகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சித்திரை புதுவருடத்தில் மீதொட்டமுல்லை குப்பை சரிவில் அகப்பட்ட வீடுகள் கூட சட்டவிரோதமான வீடுகள் என்று சில அதிகாரிகள் குறிப்பிட்டதை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்காலங்களில் இலங்கையில் கட்டிட பாதுகாப்பு நவீன பொறியியல் தொழில்நுட்பத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. கட்டடங்களைவிட அதில் வாழும் அல்லது தொழில் செய்யும் மக்களின் உயிர்களின் பெறுமதி அதிகம் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். 

Comments