அநுராதபுர நகர சபைத் தலைவராக ஒரு தமிழர்! | தினகரன் வாரமஞ்சரி

அநுராதபுர நகர சபைத் தலைவராக ஒரு தமிழர்!

1933ஆம் ஆண்டு நகரசபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நகரசபைத் தலைவர்களின் புகைப்படங்கள்தான் இவை.

குருணாகல் நகரசபைக்கு அப்போது பி. தம்பிராஜா என்பவர் தவைராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இப்போது இதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? பதுளை நகரசபைக்கு எம்.ஐ.சாயிபு, ஹட்டனுக்கு மென்டிஸ், திருகோணமலைக்கு டி. ராஜரட்ணம், டி. பாலசுப்பிரமணியும், கொலன நகரசபைக்கு விஜயசிங்க மற்றும் பெரேரா, கம்பளைக்கு பி.டி. பெல்லாவ, புத்தளத்துக்கு இஸ்மாயில், கேகாலைக்கு இ.ஏ.பீரிஸ், மாத்தறைக்கு ஜி.விஜயசிங்க, அம்பலாதோட்டைக்கு டி.சி. பெர்ணான்டோ, அனுராதபுரம் நகரசபைக்கு எஸ். நடராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக 1933 ஜனவரி தினகரன் இதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகி இருக்கிறது. அனுராபதபுரத்தில் ஒரு தமிழர் நகரசபைத் தலைவராக வர முடியும் என்ற சூழல் அக்காலத்தில் நிலவி வந்திருக்கிறது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

(HIS MASTER’S VOICE)

1933 காலப்பகுதியில் இலங்கையில் வானொலி வசதி இல்லை. திரைப்படங்கள் தென்னிந்தியாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் தருவிக்கப்பட்டு காட்டப்பட்டன. இது தவிர கிராமபோன் வசதி இருந்தது.

பண வசதி உள்ளவர்கள் கிராம போன் பெட்டியை வாங்கி வீடுகளில் வைத்துக் கொண்டு பாட்டு கேட்பார்கள். கிராமபோனில் ரெக்கார்ட் வைத்து பாட்டு கேட்பது அக்காலத்தில் கௌரவமான ஒரு பொழுதுபோக்கு.

1933 இல் கார்கிள்ஸ் நிறுவனம் கிராமபோனை இறக்குமதி செய்து 75 ரூபாவுக்கும் 80 ரூபாவுக்கும் விற்பனை செய்திருக்கிறது. ஒரு ரெக்கோர்ட் அல்லது தட்டு 2.25முதல் 3.50வரை விற்பனையாகி இருக்கிறது.

அக்காலத்தில் HIS MASTER’S VOICE என்ற கிராமபோன்களும், தட்டுகளும் பிரசித்தி பெற்றிருந்தன. கொலம்பியா தட்டுகளும் பிரசித்தம். இன்றைக்கு சோனி ரெக்கோர்டிங்குக்கு எவ்வளவு கௌரவமோ அவ்வளவு கௌரவம் அக்காலத்தில் கொலம்பிய, ஹிஸ் மாஸ்டார்ஸ் வொயிஸ் (HMV) ரெக்கோர்டுகளுக்கும் இருந்தது. ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் என்பது நிறுவன வர்த்தக நாமம். அந்தப் பெயர் வந்ததற்கு ஒரு சுவையான கதை உண்டு.

அந் நிறுவன அதிபர் வேறு பெயரில் பாடல்கள், பேச்சுகளை ரெக்கோர்டுகளில் பதிவு செய்து விற்று வந்தார். ஒரு நாள் அவர்காலமானார். இறுதிக் கிரியைகள் முடிந்த பின்ன, ஒரு நாள் அவரது குடும்பத்தினருக்கு இறந்தவரின் குரலைக் கேட்க வேண்டுமென்று தோன்றியிருக்கிறது. அவரது பேச்சுகளை ஏற்கனவே அவர் ரெக்கோர்டுகளில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அந்தத் தட்டுகளில் ஒன்றை எடுத்து கிராமபோனில் சுழல விட்டார்கள். அவரது பேச்சு கிராம போன் குழல் வழியாக கேட்கத் தொடங்கியது. அவர் ஒரு நாயை அன்பாக வளர்த்து வந்தார். தன் எஜமானின் பிரிவால் வாடிப்போயிருந்த அந்த நாய், திடீரெனத் தன் எஜமானின் குரல் கேட்கத் தொடங்கியதும் சிலிர்த்துப் போய் கிராமபோன் பெட்டியருகே ஓடி வந்தது. குழல் அருகே முகத்தை வைத்துக் கொண்டு அமைதியாக மாஸ்டரின் குரலை கேட்கத் தொடங்கியது. இது, குடும்பத்தாருக்கு வியப்பூட்டியது.

அதன் பின்னர் வீட்டுக்காரரின் ரெக்கோர்டை சுழல விடும் போதெல்லாம் கிராம போன் பெட்டியருகே வந்து ‘மாஸ்டரின் வொயி’சை அந்த நாய் கேட்கத் தொடங்கிவிடுமாம்!

பின்னர் அக்குடும்பம் அந்த நிகழ்வையே தமது நிறுவனத்தின் வர்த்தக நாமமாக சூட்டி, தமது வீட்டு நன்றியுள்ள நாயைப் பெருமைப்படுத்தினார்கள். இதுதான் His Master’s Voice என்ற பெயர் சூட்டப்பட்டதற்கான பின்னணிக் காரணம். 

 

Comments