இதுபகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அன்புமொழி! மனிதசமுதாயத்துக்கு, தன்னலமற்ற சேவையுடன், அன்பை வழங்கும் ஒரே நோக்கத்துடன் அவதரித்தவர்தான் மகான் ஸ்ரீ சத்யசாயிபாபா. அவரது மகா சமாதி தினத்தை,“ஆராதனா மகோற்சவம்”என்ற பெயரில் வழிபடுவதுண்டு.
“ஆராதனா மகோற்சவம்” கொழும்பு புதுச்செட்டித் தெருவிலுள்ள, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா மத்திய நிலையத்தில், ஏப்ரல் 24ஆம் திகதி, புதன் கிழமை, காலை “மகாரூத்ரா” யாகத்துடன் ஆரம்பமாகி புட்டபர்த்தி மகாசமாதியில் வைத்து பூஜித்து எடுத்துவரப்பட்ட, பாபாவின் ஐம்பொன் திருவுருவச் சிலைக்கு, நவ அபிஷேகம் போன்ற நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது. எங்கும் நிறைந்த இறைவன் ஜோதி வடிவானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. ஜோதிவடிவானவரை திடமான கல்லில், அல்லது ஐம்பொன்னில் வடிப்பது வழக்கம். சாயி நிலையத்தில், வருடாவருடம் ரூத்ரா ஹோமத்தில் ஜோதி வளர்க்கப்பட்டு, அந்த ஜோதியை அருகே வைக்கப்பட்ட ஒருகும்பத்துக்குள் குறிப்பிட்ட தெய்வத்தை எழுந்தருளச் செய்து, அந்தக் கும்பத்தில் இருக்கும் புனிதநீரை, விம்பமாகிய திருவுருவச் சிலைக்கு அபிஷேகம் செய்து,தெய்வ ஆற்றலை ஏற்றுவதே, ஆராதனா மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாகும். இப்படியொரு நிகழ்வு சாயி நிலையத்தில் மட்டுமே நடக்கும்.
பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா ,“தனது வாழ்க்கை முறை தனது செய்தியாக” அமைய வேண்டும் என்பதை விரும்பினார். பகவான் முதன்முதலில், தன்னை அவதாரமாக அறிமுகப்படுத்தியபோது, போதித்த முதல் செய்தி “மானச பஜரே குரு சரணம்” என்பது. அதாவது முதலில் உலக வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் நீ இருப்பதை தெரிந்துகொள்! அடுத்து அதைக் கடக்க முயற்சிசெய்!! அதற்கு அடுத்து ஒரு குருவை தெரிவுசெய்!!! என்பதாகும்.
பகவான் மகாசமாதி அடைவதற்கு,ஒருசில தினங்களுக்கு முன், இறுதி செய்தியோன்றை வெளிப்படுத்தினார்.
அதாவது என்றுமில்லாதபடி தனது இரு கரங்களை ஒன்று குவித்து பக்தர்களை நோக்கியபடி, வணக்கம் செலுத்தினார். அதன் அர்த்தம். “எல்லோருக்குள்ளும் வாசம் செய்யும் இறைவனுக்கு வணக்கம் செய்யுங்கள்” என்பதாகும்.
அவர் இறுதியாக போதித்த தத்துவம், அவர் எவ்வாறு எல்லோரிலும் தம்மைக் கண்டாரோ, அதேபோன்று நாம் பார்க்கும் எல்லாவற்றிலும் அவரைக் காணவேண்டும். அதாவது அவர் எவ்வாறு பார்த்த எல்லோர் மீதும் தனக்கு வணக்கத்தை தெரிவித்தாரோ, அதேபோன்று நாமும் பார்க்கும் எல்லாவற்றிலும் அவருக்கு வணக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்பதாகும். அனைவரையும் நேசிப்பதும் சேவைபுரிவதும் தான் சாயிமார்க்கம்.
எஸ். என். உதயநாயகம் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா மத்திய (கொழும்பு) நிலையம்