Home » அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ள காஸா மீதான யுத்தம்!

அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ள காஸா மீதான யுத்தம்!

by Damith Pushpika
April 7, 2024 6:39 am 0 comment

காஸா மீது முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் இன்றுடன் (07.4.2024) ஆறாவது மாதத்தை எட்டியிருக்கிறது. காஸாவை சுடுகாடாக்கியுள்ள இப்போர், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களின் உயிர்களைக் காவு கொண்டுள்ளது. அதேநேரம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காஸாவில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை இழந்து, தற்காலிக கூடாரங்களிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர்.

இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு முழுஉலகமுமே கோரி வருகிறது. யுத்தத்தை முன்னெடுக்கும் இஸ்ரேலிலும் கூட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக் கோராத தேசமே கிடையாது.

ஐ.நா பொதுச்சபை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில், சர்வதேச நீதிமன்றம் என உலகளாவிய கட்டமைப்பு நிறுவனங்கள் மாத்திரமல்லாமல், இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கிய நாடுகளும் கூட தற்போது யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. யுத்தநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளும் தொடருகின்றன. இருந்தும் யுத்தம் இன்னும் நிறுத்தப்படவில்லை. உயிரிழப்புக்கள் நீடிக்கின்றன. பட்டினியும், வறுமையும் தலைவிரித்தாடுகின்றன.

இவ்வாறான நிலையில் காஸா யுத்தமானது அமெரிக்காவிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. இப்போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம்அமெரிக்காவின் விமானப்படை வீரரொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு விமானப்படை வீரரொருவர் வெள்ளை மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். அத்தோடு அமெரிக்க வெளிவிவகார துறையின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் அதிகாரி, கல்வித்துறை அதிகாரி என உயர் பதவிகளை வகிப்பவர்களும் தம் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்த யுத்தம் ஆரம்பமான சொற்ப காலத்தில் அதாவது கடந்த நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளுக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. அத்தோடு நின்றுவிடாது இஸ்ரேலுக்குத் தேவையான இராணுவ உதவிகளை வழங்கவும் அமெரிக்கா தவறவில்லை.

அதாவது வருடா வருடம் 3.8 பில்லியன் டொலர்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவியாக வழங்கி வருகிறது. இது இஸ்ரேல் வரவு செலவுதிட்டத்தில் 16 சதவீதமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கிய இந்த உதவி தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இதற்கு மேலதிகமாகவே காஸா மீதான யுத்தம் ஆரம்பித்த பின்னர் இராணுவ தளபாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா முன்னெடுக்கிறது.

இந்த யுத்தத்திற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி, ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு ஆரம்பம் முதல் அமெரிக்காவில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களாக ஆரம்பமான இந்த எதிர்ப்புக்கள் அமெரிக்காவில் உயர்பதவி வகித்த பல உயரதிகாரிகள் பதவி விலகவும் வழிவகுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க வெளிவிவகார துறையின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான பணியகப் பணிப்பாளர் ஜோஷ் போல் (Josh Paul) கடந்தாண்டு (2023) ஒக்டோபரில் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து 2024 ஜனவரியில் கல்வித்துறை அதிகாரியான பலஸ்தீனிய அமெரிக்கர் தாரிக் ஹபாஷ் (Tariq Habash) தமது பதவியை இராஜினாமா செய்தார். வெளியுறவுத்துறையின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் அதிகாரி அனெல் ஷெலின் (Annelle Sheline) கடந்த வாரம் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை இப்போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க விமானப்படை வீரரான (வயது 25) ஆரோன் புஷ்னெல் (Aaron Bushnell) வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இராணுவ உடையுடன் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். காஸா மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கப் படைவீரரே தீக்குளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொள்ள முன்னரும், தீ மூட்டிக் கொண்ட பின்னரும் ‘பலஸ்தீனுக்கு விடுதலை… பலஸ்தீனுக்கு விடுதலை’ என்று குரல் எழுப்பியுள்ளார். பலஸ்தீன மக்களின் அவலம் அவரைப் பாதித்துள்ளது.

மேலும் அமெரிக்க விமானப்படையின் மற்றொரு சிரேஷ்ட வீரரான (வயது 26) லாரி ஹெபர்ட் (Larry Hebert) வெள்ளைமாளிகைக்கு முன்பாக காஸா மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்களன்று (01.04.2024) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். காஸா மக்களைப் பட்டினி போட்டும் குண்டுகளைப் பொழிந்தும் கூட்டாகத் தண்டிப்பதை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர், காஸாவில் நிரந்தர யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படுவதோடு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இவை இவ்வாறிருக்க, அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இப்போது காஸாவில் இஸ்ரேலின் போரை எதிர்க்கின்றனர். கல்லப் (gallup) என்ற நிறுவனம் நடத்திய இக்கருத்துக் கணிப்பில் 55 வீதமான அமெரிக்கர்கள் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்தை அங்கீகரிக்க மறுத்துள்ளனர். வெறும் 36 சதவீதத்தினர்தான் இப்போருக்கு ஆதரவளிப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஆதரவு நவம்பரில் 71 சதவீதமாகக் காணப்பட்ட போதிலும் அது மார்ச்சில் 64 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது. ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு 36 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் கல்லப் நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க செனட்டர்கள் பலரும் காஸா மீதான யுத்தத்திற்கு ஆதரவு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காஸாவில் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி, பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்கி வந்த அமெரிக்கா, கடந்த 25 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்காது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வொஷிங்க்டன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மைக்கல் சிங்க் (Michael Singh) ‘காஸா யுத்தத்திற்கு எதிரான உள்நாட்டு அழுத்தம், நேசநாடுகளின் வேண்டுகோள்கள் என்பவற்றின் காரணமாகவே அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்காது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை’ என்றுள்ளார்.

இந்நிலையில், 2.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அனுமதியளித்துள்ளது. 2000 இறாத்தல் கொண்ட குண்டுகள் 1000 அடிகளுக்கு (300 மீற்றர்) அப்பால் உள்ளவர்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இச்செயலை உலகின் பல தலைவர்களும் அமெரிக்காவின் செனட்டர்களும் புத்திஜீவிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ரபா மீது தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது யுத்தத்தை முன்னெடுக்க உதவுவதாகவே அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கு உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டும் அமெரிக்க நிர்வாகம் ஆதரவளிப்பது அனைத்து மக்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி பிரித்தானியாவின் அன்றைய வெளிவிவகார அமைச்சர், பலஸ்தீனில் யூதர்களின் தனிநாட்டு திட்டத்தை பல்ஃபோர் பிரகடனமாக அறிவித்தார். அதனை 1919 மார்ச் 03 ஆம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் நேசநாடுகளின் சார்பாக யூதர்களின் தாயகத்திற்கான கோரிக்கையை ஆதரித்தார்.

பின்னர் 1922 மற்றும் 1944 இல், அமெரிக்க பாராளுமன்றம் பால்ஃபோர் பிரகடனத்திற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றியது. 1948 இல் இஸ்ரேல் உருவானவுடன், அதை முதலில் அமெரிக்கா அங்கீகரித்தது. இவ்வாறு இஸ்ரேலுடன் நீண்ட நட்புக் கொண்டுள்ள அமெரிக்கா, 1972 முதல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 50 தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் ஊடாக செல்லுபடியற்றதாக்கி உள்ளது.

அந்த வகையில் காஸா மீதான யுத்தநிறுத்தத்திற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட நான்கு தீர்மானங்களில் மூன்றை அமெரிக்கா செல்லுபடியற்றதாக்கியும் உள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் தனது குடிமக்களதும் உலக நாடுகளதும் எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது அமெரிக்கா.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division