Home » தமிழகத்தில் பா.ஜ.க-தி.மு.க இடையே தீவிரமடையும் மோதல்

தமிழகத்தில் பா.ஜ.க-தி.மு.க இடையே தீவிரமடையும் மோதல்

by Damith Pushpika
April 7, 2024 6:32 am 0 comment

பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல்வாதிகள் தேசத்தின் நீண்டகால நலன்கள், பிறநாடுகளுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் நெறிமுறைக் கோட்பாடுகளை மறந்துவிட்டு முற்றுமுழுதாக வாக்குகளைச் சேகரிப்பதையே அடிப்படையாகக் கொண்டு களத்தில் இறங்குவது தெற்காசிய நாடுகளில் நிலவுகின்ற பாரம்பரியம் ஆகும். தெற்காசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என வர்ணிக்கப்படும் இந்தியாவும் இப்பாரம்பரியத்துக்கு விதிவிலக்கல்ல.

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் தற்போதைய நிலையில், வழமைபோன்று இலங்கை விவகாரம் அந்நாட்டின் பிரசார மேடைகளை சூடாக்கத் தொடங்கியுள்ளது.

அண்மையில் அரசியல் பிரசார மேடையொன்றில் உரையாற்றியிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 1974 இல் ஆட்சியில் இருந்தபோது தற்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

‘எங்களால் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதுதான் காங்கிரஸின் 75 ஆண்டுகால உழைப்பு, இது இன்னமும் தொடர்கின்றது’ என நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதேபோல, தமிழகத்தில் மாநில அரசை அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) ஒப்புதலுடன் கச்சதீவு இலங்கைக்கு விடுவிக்கப்பட்டதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடுகையில், “1976 இல் கச்சதீவு மீன்பிடி உரிமையுடன் பறிக்கப்பட்டு விட்டது” என்றும், “மீன்பிடிக்கும் உரிமையைப் பெற வேண்டும். நாம் இலங்கை அதிகாரிகளுடன் அமர்ந்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்றும் எமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகுகள் கைப்பற்றப்படுகின்றன” என்றும் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் தற்பொழுது அரசியல் பிரசார மேடைகளில் குறிப்பாக தமிழகத்தில் பிரதான இடம்பிடித்திருப்பதைக் காணக்கூடிதாகவுள்ளது. கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பப்பெறப்பட வேண்டும் என 2022 இல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை அப்போது அலட்சியப் படுத்தியிருந்த இந்தியப் பிரதமர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது நிலைப்பாட்டை முற்றாக மாற்றியுள்ளார்.

தமிழகத்தில் சரிந்திருக்கும் தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான ஒரு யுக்தியாக இது பயன்படுத்தப்படுகின்றது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் காணப்படுகின்றது. அருகில் உள்ள நாடுகளுக்கே முதலிடம் என்ற கொள்கையை எப்போதும் வலியுறுத்தும் மோடி, தமிழகத்தில் தமக்கான வாக்கு வங்கியை சீர்செய்வதற்காக காங்கிரஸையும், தி.மு.கவையும் இழிவுபடுத்தி தமிழக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று கணிப்பிட்டிருக்கலாம்.

அதேசமயம் இது வெறும் தேர்தல் வித்தை என்று இலங்கை புரிந்து கொள்ளும் என்பதையும், தேர்தலுக்குப் பிறகு கொழும்புடன் வேலியை எளிதில் சரி செய்துவிட முடியும் என்பதையும் அவர் அறிந்திருக்கலாம்.

உண்மை என்னவென்றால், 163 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மக்கள் வசிக்காத கச்சதீவில் இந்தியாவுக்கு எந்த மூலோபாய அக்கறையும் இல்லை. மேலும் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தங்கள் கடல் எல்லையை வரையறுக்கும் போது, இலங்கையின் இறையாண்மையை புதுடில்லி அங்கீகரித்தது. இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்துவதற்காக கச்சதீவில் இறங்குவதற்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டது, ஆனால் அவர்களுக்கு மீன்பிடி உரிமை வழங்கப்படவில்லை.

நரேந்திர மோடிக்கு முன்னர் பிரதமர்களாக இருந்த மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜனதா கட்சியின் சந்திரசேகர், பா.ஜ.கவின் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் கடந்த 50 வருட ஆட்சியில் ஒவ்வொரு பிரதமர் தலைமையிலான அரசாங்கங்களும் ‘கச்சதீவு பிரச்சினைக்கு 1974 இல் ஒருமுறை தீர்வு காணப்பட்டது’ என்ற முடிவை ஏற்றுக்கொண்டிருந்தன.

2008 இல் கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், இந்தியாவுக்கு சொந்தமான எந்தப் பகுதியையும் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்றும் இந்திய அரசாங்கம் நீதித்துறைக்கு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் மீனவ சமூகத்தின் வாக்கு வங்கிகளில் தங்கியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) போன்ற தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் கச்சதீவுப் பிரச்சினையை ஒவ்வொரு தேர்தலின் போதும் கையில் எடுத்துக் கொள்வது வழமையான நிகழ்வாகும்.

இருந்தபோதும் இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து அதாவது கச்சதீவையும் தாண்டி கரையோரத்துக்கு மிகவும் அண்மைவரை சென்று மீன்பிடியில் ஈடுபடுவதும், இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்வதும் பின்னர் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் அவர்கள் விடுவிக்கப்படும் மாறிமாறி நிகழ்கின்ற காட்சிகளாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் தமிழக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே பாரதிய ஜனதாக் கட்சி கச்சதீவு விவகாரத்தை எடுத்திருப்பதாக இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கச்சதீவை மீண்டும் பெற்றுக் கொள்வது தேர்தலுக்குப் பின்னர் இந்திய அரசாங்கத்துக்கு இலகுவான விடயமாக அமைந்துவிடாது என இந்திய ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கம் சர்வதேச கடல் எல்லையை மீறினால் அது இலங்கையின் இறைமையை மீறியதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூறிய கருத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கச்சதீவு விவகாரம் அரசியல் ரீதியாக இவ்வாறு பேசப்பட்டாலும், நடைமுறையில் இலங்கை மீனவர்களுக்கு குறிப்பாக வடபகுதி மீனவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது அதிகரித்திருக்கும் நிலையில், கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் அவர்கள் மீன்பிடித் தொழிலை முற்றாக மறக்க வேண்டியதாகவே இருக்கும்.

இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பொட்டம் ட்ரோலிங் முறை கடல் வளத்தை முற்றாக அழித்துவிடும் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமது கடல் வளத்தை அழித்துள்ள இந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தையும் அழித்து வருவதாக வடபகுதி மீனவர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே தேர்தலை மையமாகக் கொண்டு கச்சதீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division