கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றார். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது. தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் திகதி தீபாவளி வந்தது.
தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது. தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதுதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டுக்குச் செல்கிறார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. எங்கள் நாட்டைப் போன்றே, இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம்உள்ளது.
தீபாவளி, ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்துப் பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கிய பண்டிகையாக
கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
பெயர்க் காரணம்
‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு ‘ஆவளி’ என்றால் வரிசை, வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.
இந்துக்களின் தீபாவளி
இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
புராணக் கதைகளின் படி
நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமித் தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி கொளுத்திக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் இராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மிகி இராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
தீபாவளியின் பெருமை:
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.
1577- இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.
வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துத் தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
சகோதரிகளுக்கு பரிசு:
தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.
தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள்.
அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப் புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும்.
அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்துப் பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.
அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.