கேரளா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 26ஆம் திகதி காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தன. அந்த வகையில் வாக்களிக்க சென்ற ‘பிரேமலு’ நடிகைக்கு மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் திகதி நடந்தது. இதையடுத்து கேரளா உட்பட சில மாநிலங்களில் கடந்த 26ஆம் திகதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் அங்கு போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் அன்று பகத் பாசில், டொவினோ தாமஸ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ‘பிரேமலு’ நாயகி மமிதா பாஜூ வாக்களிக்க வாக்கு சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்த தகவல் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நடிகை மமிதா பாஜு கடந்த சில மாதங்களாக சினிமாவில் பிஸியாக இருப்பதால் வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவில்லை என அவரது தந்தை கூறினார். அதுமட்டுமின்றி கேரளாவில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் மமிதாவை பயன்படுத்தியது என்றும் ஆனால் அவருக்கே வாக்காளர் பட்டியலில் இடமில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது என்றும் அவரது தந்தை கூறியுள்ளார்.