அமெரிக்காவிலுள்ள மொனார்ச் பட்டாம்பூச்சிகள் ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில், வெப்பத்தைத் தேடி கிட்டத்தட்ட 2500 மைல்கள் பறந்து செல்கின்றன.
வட அமெரிக்காவிலிருக்கும் குளிர் நிறைந்த பகுதிகளிலிருந்து கலிஃபோர்னியா, மெக்சிகோ நோக்கி பயணிக்கும் இந்தப் பட்டாம்பூச்சிகள் வருடத்திற்கு 4 தலைமுறைகளை உருவாக்குகின்றன. இவற்றில், நான்காவது தலைமுறை பட்டாம்பூச்சிகள் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றன. முதல் மூன்று தலைமுறை பட்டாம்பூச்சிகளின் ஆயுட்காலம் ஆறு வாரங்கள் மட்டுமே. ஆனால், நான்காவது தலைமுறை பட்டாம்பூச்சிகள் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை உயிர்வாழ்கின்றன. இதனாலேயே இவற்றால் நீண்ட தூரப்பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள முடிகிறது.
இப்பட்டாம்பூச்சிகள் புழுவாக இருக்கும் காலத்தில், வெள்ளை எருக்கை (milk weed) விரும்பிச் சாப்பிடுகின்றன. இந்த உணவிலிருக்கும் பொருட்கள், நாளடைவில் விஷமாக மாறி தவளை, எலி போன்ற எதிரிகளிடமிருந்து இவற்றைக் காப்பாற்ற உதவுகின்றன.