டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கிட்டத்தட்ட பாதி நாடுகள் தனது 15 பேர் குழாத்தை அறிவித்து விட்டன. நியூசிலாந்து அணி முதல் நாடாக தனது அணியை அறிவித்திருப்பதோடு, நடப்புச் சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவும் தமது அணியை அறிவித்துவிட்டன.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் எதிர்வரும் ஜூன் 1 தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறப்போகும் இந்த உலகக் கிண்ணத்திற்கு 15 பேர் கொண்ட அணிகளை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் மே 1 ஆம் திகதி வரை கெடு விதித்திருந்தது. அப்போது கட்டாயம் அணிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டபோதும், அது பேச்சளவிலேயே இருந்தது.
ஏனென்றால் அறிவிக்கப்படும் அணிகளில் மாற்றம் செய்ய மே 25 ஆம் திகதி வரை வாய்ப்பு வழக்கப்பட்டது. எனவே, ஐ.சி.சியின் கெடுவை இலங்கை உட்பட பல நாடுகள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றனர். ஆனால் ஐ.சி.சி. விதித்த மே 1 ஆம் திகதி கெடுவில் ஒன்பது அணிகள் வரையே தமது 15 பேர் குழாத்தை வெளியிட்டிருந்தன. அதாவது பல நாடுகள் தமது டி20 உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.
பாகிஸ்தான் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று டி20 போட்டிகளில் ஆடவிருக்கிறது. பங்களாதேஷ் சொந்த மண்ணில் சிம்பாப்வேயுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. பின்னர் அந்த அணி சமயோசிதமாக உலகக் கிண்ணத்திற்கு முன் அமெரிக்கா சென்று அந்நாட்டு அணியுடன் டி20 போட்டிகளில் ஆட திட்டமிட்டிருக்கிறது.
நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மோதும் முக்கோணத் தொடர் ஒன்று நெதர்லாந்தில் நடக்கப்போகிறது. உலகக் கிண்ணத்திற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாதபோதும், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுவது தெரிகிறது.
இந்தியாவில் இந்திய பிரீமியர் லீக் முடிந்தபாடில்லை. என்றாலும் இந்தியா அந்தப் போட்டியை மையப்படுத்தி அணியை தேர்வு செய்யவில்லை என்பது தெரிகிறது. அதனாலேயே அந்த அணி முன்கூட்டி 15 பேர் குழாத்தை வெளியிட்டு விட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஏப்ரல் கடைசியில் ஐந்து டி20 தொடர் ஒன்றில் ஆடிய நியூசிலாந்து அந்தத் தொடரை 2–2 என சமநிலை செய்த நிலையில் தனது உலகக் கிண்ண குழாத்தை அறிவித்து விட்டது. அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகள் இல்லாதபோதே உலகக் கிண்ணத்திற்கு தயாராகி விட்டன.
ஆனால் இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்திற்கு முன் இனியும் சர்வதேச டி20 போட்டிகள் இல்லாத நிலையில் அது குறித்த காலக்கெடுவில் இறுதி அணியை அறிவிக்கவில்லை. அந்த அணியை உறுதி செய்வதில் இன்னும் குழப்பம் இருக்கிறது. ஏற்கனவே 25 பேர் கொண்ட ஆரம்ப அணியை இலங்கை தேர்வு செய்தது. அதில் இருந்தே இறுதி அணியை தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்த ஆரம்ப அணி கொழும்பில் பயிற்சிகளை பெற்று வந்த நிலையில் தமக்குள் மூன்று அணிகளாக பிரிந்து தற்போது முக்கோண டி20 தொடர் ஒன்றில் ஆடி வருகிறது. ஆர். பிரேமதாச மைதானத்தில் கடந்த மே 2 ஆம் திகதி ஆரம்பமான இந்த முக்கோணத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதியே முடிவடைகிறது. இதற்குள் 15 பேர் குழாத்தை இலங்கை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது.
மறுபக்கம் இலங்கையின் ஐந்து வீரர்கள் தற்போது ஐ.பி.எல். தொடரில் ஆடுகிறார்கள். இவர்களும் அணித் தேர்வில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதில் விஜயகாந்த வியாஸ்காந்தை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் மதீஷ பதிரண, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார, துஷ்மன்த சமீர ஆகியோர் முக்கியமானவர்கள்.
இலங்கை அணி எதிர்வரும் மே 14 ஆம் திகதி உலகக் கிண்ணத்திற்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் அதற்குள் அணியை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் ஐ.பி.எல். ஆடி வரும் வீரர்கள் அங்கிருந்து அப்படியே அமெரிக்கா சென்று இலங்கை அணியுடன் சேர்வது தான் திட்டம். ஏனென்றால் ஐ.பி.எல். தொடர் மே கடைசிவரை நீடிக்கிறது.
உண்மையில் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனை சராசரி ஒருவருக்கும் ஊகிக்க முடியுமாகவே இருக்கிறது. ஆனால் சில இடங்களை நிரப்புவதில் போட்டியும், பொருத்தமான வீரர்களை தேர்வு செய்வதில் சவாலையும் இலங்கை தேர்வுக் குழு சந்தித்து வருகிறது. இதுவே தற்போதைய இழுபறிக்குக் காரணம்.
என்றாலும் இம்முறை டி20 உலகக் கிண்ணத்திற்கு இலங்கையால் வனிந்து ஹசரங்க தலைமையில் வலுவான அணி ஒன்றை அனுப்புவதற்கு வாய்ப்புக் கூடி வந்திருக்கிறது.
என்றாலும் பழக்கமில்லாத அமெரிக்கா ஆடுகளங்கள் உலகக் கிண்ணத்தில் எப்படித் தாக்கம் செலுத்தும் என்பது பற்றியே பல அணிகளும் அவதானம் செலுத்துகின்றன. அதனாலேயே இலங்கை உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னராக அமெரிக்கா செல்கிறது.
இதற்கிடையே உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அணியின் சமநிலைக்கு முக்கியம்.
டி20 உலகக் கிண்ணம் என்பது குறுகிய போட்டியாக இருப்பதாலோ என்னவோ, கிண்ணத்தை வெல்வதற்காக வாய்ப்பும் அனைத்து அணிகளுக்கும் திறந்தே இருக்கும். அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.