Home » மாகாண எழுத்துகள் அகற்றப்படுவது ஏன்?
வாகன இலக்கத் தகடுகளில்

மாகாண எழுத்துகள் அகற்றப்படுவது ஏன்?

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

உலகின் எந்த ஒரு நாட்டிலும் பயன்பாட்டிலுள்ள வாகனங்களை இனங்கண்டு கொள்ளும் இலக்கம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஒவ்வொரு நாடுகளும் அந்தந்த நாடுகளுக்குப் பொருந்தும் வகையில் அந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில், அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான இலக்க கட்டமைப்புள்ளது. இன்னும் சில நாடுகளில், வாகனத்தின் வகைகளுக்கு அமைய இலக்கங்கள் வேறுபடும். இன்னும் சில நாடுகளில் மாநிலம் அல்லது மாகாணங்களுக்கு அமைய இலக்கங்கள் வழங்கப்படுகின்றன.

எமது நாட்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து ஒவ்வொரு வாகனத்துக்கும் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாகக் குறிப்பிடும் போது கார்களுக்கு EN, மற்றும் கனரக வாகனங்களுக்கு IC போன்ற இரட்டை எழுத்துக்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் இந்த நடைமுறை மாற்றப்பட்டு கார்களுக்கு 1, 2 போன்ற எழுத்துக்களும், கனரக வாகனங்களுக்கு 22 போன்ற எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த நடைமுறையில் எழுத்துக்கு பதிலாக (-) என்ற எழுத்தைப் பயன்படுத்துவது எண்பதாம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் அனைத்து வாகனங்களுக்காகவும் குறித்த பதிவு இலக்கத்தை வழங்கியதன் பின்னர், அதற்குரிய இரண்டு இலக்கத்தகடுகள் வாகனத்தின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் தெளிவாகத் தெரியும் வண்ணம் பொருத்தப்பட வேண்டும். இந்த இலக்கத்தகட்டை தமக்கு வசதியான நிறத்தில் அச்சிட்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் தெளிவாகத் தெரியும் வகையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் பொலிஸாரினால் தொடர்ச்சியாக செய்யப்பட்ட முறைப்பாட்டால் இரவு நேரங்களில் சில வாகனங்களின் இலக்கங்களை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. எனவே பின்னைய காலத்தில் மஞ்சள் நிற பலகையில் கறுப்பு நிறத்தில் இலக்கம் அச்சிடப்பட்ட இலக்கத் தகடு பின்புறத்தில் பொருத்தப்பட வேண்டும் என்றும், முன்பக்கத்தில் கறுப்பு பலகையில் வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்ட இலக்கத்தகடு பொருத்தப்பட வேண்டும் என்றிம் உத்தரவு 35 வருடங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டது. இலக்கத்தகடு இவ்வாறு பயன்படுத்தப்பட்ட போதிலும், போலி இலக்கத்தகட்டுப் பயன்பாட்டின் காரணமாக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக தரமான இலக்கத்தகட்டின் தேவை ஏற்பட்டது. குறிப்பாக ஒரே இலக்கத்தில் இரண்டு அல்லது பல வாகனங்கள் இருக்கும் நிலை காணப்பட்டது.

எனவே இது தொடர்பில் கவனத்தைச் செலுத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட இலக்கத்தகட்டினை விநியோகிக்கும் நடைமுறையை 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரைக்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இலக்கத் தகடு விநியோகிக்கப்பட்டதோடு, புதிய வாகனம் ஒன்றைப் பதிவு செய்து ஓரிரு தினங்களில் அந்த வாகனத்திற்கான இலக்கத்தகடு திணைக்களத்தினாலேயே வழங்கப்பட்டது. இதன்போது, ஒவ்வொரு வாகன வகையின் அளவைப் பொறுத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கத் தகடு தயாரிக்கப்பட்டது. அந்த இலக்கத் தகட்டின் ஊடாக குறித்த வாகன உரிமையாளர் வசிக்கும் மாகாணம், வாகனத்தின் எரிபொருள் வகை, அது வெளிநாட்டு தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனமா அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனமா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

உதாரணமாக, மேல் மாகாணத்தைச் சேர்ந்த வாகனமாக இருந்தால் WP என்ற எழுத்துக்களும், தென் மாகாணத்தைச் சேர்ந்த வாகனமாக இருந்தால் SP என்ற எழுத்துக்களும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த வாகனமாக இருந்தால் UP என்றவாறு ஒன்பது மாகாணங்களுக்கும் குறித்த ஆங்கில இரண்டு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. வடமேற்கிற்கு NW என்றும், சப்ரகமுவிற்கு SG என்றும் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டுத் தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்குரிய வாகனங்களாக இருந்தால் DL என்ற எழுத்துக்களும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்குரிய வாகனங்களாக இருந்தால் UN என்றவாறும் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில் ஒரு மாகாணத்திற்குரிய வாகனத்தை வேறு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கும் போது, கண்டிப்பாக அந்த வாகனத்தின் இலக்கத் தகட்டினையும் புதிய உரிமையாளரின் மாகாணத்திற்கு அமைய மாற்றிக் கொள்ள வேண்டும். இலக்கத் தகட்டினை மாற்றும் போது மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு புதிய உரிமையாளரால் மீண்டும் மேலதிகமான கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதற்காக தற்போதைய கட்டணங்களின் பிரகாரம் மோட்டார் வாகனங்களுக்கு 4500 ரூபாவும், மோட்டார் சைக்கிளுக்கு 3500 ரூபாயும் இலக்கத் தகட்டிற்காகச் செலுத்த வேண்டியிருந்தது. பணத்தைச் செலுத்துவதை விடவும் புதிய உரிமையாளருக்கு இலக்கத் தகட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு மீண்டும் ஒரு நாளில் மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு அல்லது மாவட்டச் செயலகத்திற்குச் செல்ல வேண்டியேற்படும்.

இதனால் வாகனத்தை உரிமை மாற்றிக் கொண்ட புதிய உரிமையாளருக்கு புதிய இலக்கத் தகட்டினைப் பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டன.

அதற்காகவே செய்ய வேண்டிய பணியாக இருந்ததால், தொலைதூரத்தில் உள்ள ஒருவர், மாவட்ட செயலக அலுவலகங்களுக்கோ, மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாவட்ட அலுவலகங்களுக்கோ சென்று அவற்றை பெறுவதில், நாளுக்கு நாள் தாமதம் ஏற்பட்டது. அதேபோன்று, மாகாணம் மாறும் போது, ​​புதியஇலக்கத் தகட்டைப் பொருத்தாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் இல்லையென்பதிலால், அது புதிய உரிமையாளர்களுக்கு பிரச்சினையாகவும் இருக்காது. இந்த பிரச்சினை காரணமாக சிலர் பழைய இலக்கத் தகடுகளையே பயன்படுத்துகின்றனர் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். இதன்போது ஒவ்வொரு மாகாண சபைக்கும் தனித்தனியாகச் சேர வேண்டிய வருமானம், முறையாகக் கிடைப்பதில்லை. அத்துடன் சில நேரங்களில் பழைய வாகன உரிமையாளரின் பெயரிலேயே வாகனங்களை வைத்திருப்பதும் வழக்கமாகியது. நாடளாவிய ரீதியில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டன.

“இந்த நிலையின் காரணமாக அனேகமானோர் கட்டணத்தைச் செலுத்தியிருந்த போதிலும் இலக்கத்தகட்டினைப் பெற்றுக் கொள்ளவில்லை. அந்த இலக்கத்தகடுகள் திணைக்களத்திலும், மாவட்டச் செயலகங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. எண்ணிக்கையைக் கூறுவதாயின் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக இலக்கத்தகடுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கடமைகளுக்கும் தடங்கல்கள் ஏற்படுகின்றன. எனவேதான் இது தொடர்பில் நாம் விசேட கவனத்தைச் செலுத்தினோம்” என்றார்.

இந்த இலக்கத் தகடு இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதன் ஊடாக தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இலக்கத்தை அச்சிடுவது மாத்திரமே திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதாகவும் உதவி மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் டி.எம்.சுஜீவ தென்னகோன் தெரிவித்தார்.

“மாகாணம் மாறும்போது திணைக்களத்திடமிருந்து புதிய இலக்கத் தகட்டைப் பெறுவது இலகுவான பணியாக இருந்தாலும், வாகனத்தின் உரிமை மாற்றப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு தினத்தில் திணைக்களத்திற்கோ அல்லது மாவட்ட அலுவலகங்களுக்கோ சென்று இலக்கத்தகட்டினைப் பெற்றுக் கொள்வது அனேகமானோருக்கு சிரமமாகவே உள்ளது. அத்தியவசியமான விடயங்களைச் செய்து கொண்டதன் பின்னர், இலக்கத்தகடு தொடர்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. சில நேரங்களில் அந்த வாகனத்தை வாங்கியவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் எழும் சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக, மேல் மாகாண இலக்கத்தைக் கொண்ட வாகனத்தை வாங்குபவர் தனது மாகாணத்திற்குரிய இலக்கத் தகட்டை மாற்றிக் கொள்வதற்கு வரும்போது, ​​அந்த இலக்கத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்யும் போது, அதற்கு முன்னர் அந்த வாகனத்திற்கு தென் மாகாணத்திற்குரிய இலக்கத்தகடு வழங்கப்பட்டுள்ளமை கணனித் தரவுகள் மூலம் இனம்காணப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த வாகன உரிமையாளருக்கு தென் மாகாண, மாவட்ட அலுவலகத்தில் இருக்கும் இலக்கத் தகட்டினை எடுத்துச் சென்று வழங்க வேண்டியேற்படும். வாகனங்களுக்காக இலக்கத் தகடுகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களும் 2013ஆம் ஆண்டின் பின்னர் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே இந்தக் கட்டணங்களை மீண்டும் மீளாய்வு செய்து நிதி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட புதிய கட்டணங்களை அறிவிப்பதற்கான தேவை ஏற்பட்டது. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத்தகடு வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகளின் பின்னர், குறித்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் RFID தொழில்நுட்பத்துடன் கூடிய (ரேடியோ அலையை இனங்காணும் லேபள்) ஸ்டிக்கரை வழங்கும் பணிகள் 2019.12.02ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இது உண்மையிலேயே தனியாக வழங்கப்படும் ஒரு ஸ்டிக்கர் அல்லாமல், இலக்கத் தகட்டிலேயே ரேடியோ அலையின் ஊடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறிய சிப்புடனான ஸ்டிகராகும். இந்த RFID ஸ்டிக்கருக்கான செலவினை அறிவித்து கட்டணங்களை நிர்ணயிக்கும் தேவையும் ஏற்பட்டது. அத்துடன் 14.12.2020 திகதியிட்ட 20/1921/312/021ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத் தீர்மானத்திற்கு அமைவாக மாகாணங்களை இனங்கண்டு கொள்ளும் எழுத்துக்கள் இன்றி வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதற்குத் தேவையான விதிகளை உருவாக்குவதற்காகவும் மோட்டார் வாகனங்கள் (இதர) சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான தேவை ஏற்பட்டது. அதன்பிரகாரம் 2352/29ஆம் இலக்க 2023.10.05ஆம் திகதியன்றைய அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன (இதர) விதிகள் திருத்தப்பட்டன. திருத்தம் செய்யப்பட்ட அந்த உத்தரவுகளின் பிரகாரம், வழக்கமாக ஒவ்வொரு வாகன வகுப்பிற்கும் வழங்கப்படும் இலக்கத் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் அகற்றப்பட்டுள்ளதோடு, இலங்கையின் இராஜதந்திர பணிகளுக்குரிய வாகனங்களுக்கு DP என்ற எழுத்துக்களும், ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனங்களுக்கு UN என்ற எழுத்துகளுடனான இலக்கத் தகடுகளும் தொடர்ந்தும் வழங்கப்படும்.

அதன்பிரகாரம், 2023 ஜனவரி 1ஆம் திகதி முதல், வாகன இலக்கத்தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் அகற்றப்படுவதோடு, கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கரும் அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடு, பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

தாரக விக்ரமசேகர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division