தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக சம்பள நிர்ணய சபையுடன் நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததை அடுத்து, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தோட்ட முதலாளிமார் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் முறையாக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இரண்டாவது தடவையாக கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் முதலாளிமார் சம்மேள உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அதுவும் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்பேச்சுவார்த்தையின் தோல்வி பற்றி பெறப்பட்ட கருத்துகள்….
வேலுசாமி இராதாகிருஸ்ணன்
பாராளுமன்ற உறுப்பினர்,
தலைவர் மலையக மக்கள் முன்னணி
சம்பள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்பதைவிட, இதனை தொழிற்சங்கங்கள் முறையாக அணுகவில்லை என்பதே உண்மை. ஏனெனில் இதனை ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாக அல்லாமல், மக்களின் பக்கம் இருந்து பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே, நான் பாரக்கின்றேன்.
நியாயமான சம்பள உயர்வுக்காக முன்னெடுக்கப்படும் எந்த ஒரு போராட்டத்திற்கும் மலையக மக்கள் முன்னணி, தனது முழுமையான ஆதரவை பெற்றுக் கொடுக்கும். மேலும் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற பொழுது, அனைத்துத் தரப்பையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். தங்களுடைய அரசியல் முன்னெடுப்பிற்காகவும், தங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் முன்னெடுக்கப்படுகின்ற எந்த ஒரு விடயத்திற்கும் நாம் ஒத்துழைப்பதற்கு தயாராக இல்லை.
கடந்த காலங்களிலும் இவ்வாறான தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியமை காரணமாகவே கடந்த கால சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை வெறுமனே 1000 ரூபா 1700 ரூபா என்று சொல்வதில் அர்த்தமில்லை. அனைத்துத் தரப்பும் எற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொகையை தீர்மானிப்பதே அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும்.
ஏ.பி.சக்திவேல்
இ.தொ.கா தேசிய அமைப்பாளர்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்
நாங்கள் இன்றைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்திருந்தோம். ஏற்கனவே 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொண்ட வேளையிலும் நாம் முன்வைத்த கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் ஒத்துக் கொள்ளாமையின் காரணமாக அது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் ஊடாக தீர்வை பெற்றுக் கொண்டே, 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்தோம்.
இந்த முறை இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அதற்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் வருகை தரவில்லை. சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாத நிலைமை இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால் நாங்கள் சட்ட ஆலோசனை பெற்றபோது வழக்கு ஒரு தடையல்ல என்பதை சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் முதலாளிமார் சம்மேளனம் இயன்றவரை கூட்டு ஒப்பந்தத்தை தட்டிக் கழிப்பதிலே குறியாக இருக்கின்றது.
கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சங்கம், முதலாளிமார் சம்மேளனம், சம்பள நிர்ணய சபை, அரசாங்கம் என அனைத்து தரப்பும் அமர்ந்து பேச வேண்டிய ஒரு விடயமாகும். எனவே இதில் முதலாளிமார் சம்மேளனம் வருகை தரவில்லை என்பது பேச்சுவார்த்தையை முன்கொண்டு செல்ல முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாம் அரசாங்கத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து முழு தொழிற்சங்க பலத்தையும் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிப்போம்.
அ.அரவிந்தகுமார்
கல்வி இராஜாங்க அமைச்சர்
தலைவர் ஜக்கிய தொழிலாளர் முன்னணி
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்களுடைய தொழிலாளர்களுக்கு குறைவான சம்பளத்தை வழங்குவது தொடர்பாக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
அன்று அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவாக இருந்த பொழுதும் நஷ்டம் என்று கூறினார்கள். இன்று டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. ஆனால் இன்றும் நஷ்டம் என்று கூறுகின்றார்கள். கடந்த 32 வருடங்களாக இவர்கள் ஏன் நஷ்டமடைந்த ஒரு வியாபாரத்தை செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது. தாங்கள் இதனை விட்டு வெளியேறுவதாக இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறமாட்டார்கள். அப்படியானால் இவர்கள் நல்ல இலாபம் பெறுகின்றார்கள்.
எனவே பெருந்தோட்ட கம்பனிகள் எந்தக் காரணம் கொண்டும் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்று கூற முடியாது. இது மனித உரிமை மீறலாகும். இந்தளவு குறைந்த சம்பளத்திற்கு தொழில் செய்கின்றவர்கள் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமே.
சங்கரன் விஜயசந்திரன்
பொருளியல் துறை பேராசிரியர்
செயலாளர் நாயகம் மலையக மக்கள் முன்னணி
தற்பொழுது மீண்டும் பெருந்தொட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சூடு பிடித்துள்ளது.
இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அது தோல்வியடைந்ததாகவே தெரிகின்றது.
பெருந்தோட்ட கம்பனிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தங்களுடைய தரப்பு நியாயங்களை முன்வைக்கின்றன. ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தொழிற்சங்கங்களில் ஒரு சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. ஒரு சில பாரிய தொழிற்சங்கங்கள் வெளியில் இருக்கின்றன. இது பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது.
உண்மையில் இந்த சம்பளப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமாயின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே மேடையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்திற்கு வந்து பின்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த சம்பள பிரச்சினையை ஒரு சில தொழிற்சங்கங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக கருதி செயற்படுவதன் காணரமாக தொழிலாளர்களின் ஒற்றுமை கேள்விக்குறியாகின்றது.
இன்றைய சம்பள உயர்வு என்பது தனியே இன்றைய நிலைமையை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட முடியாது. தேர்தலின் பின்பு விலைவாசி அதிகரிப்பதற்கான நிலைமை இருக்கின்றது. எனவே இரண்டு வருடங்களுக்கு ஏற்றாற் போல இந்த சம்பள உயர்வு அமைய வேண்டும்.
தனித்தனியான பேச்சுவார்ததைகள், தனித்தனியான போராட்டங்கள், தனித்தனியான ஏனைய எந்த செயற்பாடுகளும் சம்பள பேச்சுவார்த்தையை வெற்றி பெற செய்ய முடியாது. சம்பள பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமாயின் அனைத்து தொழிற்சங்கங்கங்ளும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அது சாத்தியமாகும்.
நுவரெலியா தினகரன் நிருபர்