கார் பந்தயம் என்றா லே சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு விளையாட்டாகும். எனினும் ஆபத்துகளும் சவால்களும் இப்போட்டியில் அதிகமாகவே காணப்படுகின்றன.
தொழில்முறை ரேஸ் கார் ஓட்டுதல் என்பது ஒரு பயங்கரமான விளையாட்டு. பந்தய கார்களை ஓட்டும் எவருக்கும் அதன் ஆபத்து தெரிந்தேதான் இருக்கும். பந்தயக் கார் ஓட்டுநர் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக அல்லது திறமையானவராக இருந்தாலும் கூட, பந்தயக் கார் ஓட்டத்தின் ஆபத்துகளில் இருந்து தப்புவதென்பது கத்தியின் மீது நடப்பது போலத்தான். கார்ப் பந்தய விளையாட்டில் ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு இது தெரிந்திருக்கும். ஏனெனில் பல பிரபல சர்வதேச கார்ப் பந்தய வீரர்கள் பந்தயங்களின் போது கொல்லப்பட்ட சம்பவங்களை நாம் அறிந்திருக்கின்றோம்.
எனவே தான் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல் இதில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறினால் மோசமான விபத்துகளுக்கும் காரணமாகிவிடுகின்றது. அப்படியொரு சம்பவம் தான் கடந்த 21ஆம் திகதி தியத்தலாவையில் இடம்பெற்றது. அவ்வாறான கார்ப் பந்தய விபத்து இலங்கைக்குப் புதியது.
ஒரு விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மலைப்பாங்கான தியத்தலாவ பகுதிகளில் மோட்டார் பந்தயப் போட்டி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதமளவில் நடைபெறுவது வழமை. 1993 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டிகள் நடைபெற்றுவருவதாக தெரியவருகின்றது. எனினும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என ஐந்துவருடங்கள் மோட்டார் பந்தயப் போட்டி தடைப்பட்டிருந்தது.
இறுதியாக 2019ஆம் ஆண்டு இப்போட்டி நடைபெற்ற போதும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாக இடைநடுவே போட்டி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஐந்துவருடங்களின் பின்னர் பெரும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் அச்சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவத்திற்கு சொந்தமான ஃபாக்ஸ் ஹில் பந்தய திடலில் கடந்த 21 ஆம் திகதி மோட்டார் பந்தயப் போட்டி ஆரம்பமானது.
இந்த ஆண்டு ஃபாக்ஸ் ஹில் போட்டியை ஏற்பாட்டாளர்கள் ‘விறுவிறுப்பு – பிரமிப்பு’ என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். போட்டியைப் பார்வையிட ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். எனினும் மோட்டார் பந்தயப் போட்டி பெரும் சோகத்துடனே முடிவடைந்தது.
மின்னல் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் கூடியிருந்த கூட்டத்துக்குள் பாய்ந்ததில் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பில் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் பிரதானமாக மோட்டார் பந்தயப் போட்டி ஏற்பாடு தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஒருசிலர் விபத்தை ஏற்படுத்திய சாரதிகள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.
விளையாட்டுச் சங்கத்தினரின் கருத்துபடி பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்ட ஆபத்து நிறைந்த வலயத்துக்குள் பிரவேசித்தமையே மரணங்களுக்குக் காரணமெனத் தெரிவிக்கின்றனர்.
கயிற்றினால் ஆபத்தான பகுதியென அடையாளப்படுத்திய பகுதிக்குள் பார்வையாளர்கள் பிரவேசித்ததாக கூறப்படுகின்றது.
எனினும் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல் அந்த நேரத்தில் பணியில் இருந்த இரண்டு போட்டி மேற்பார்வையாளர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு கார்ப் பந்தயமும் தொடங்குவதற்கு முன்னர், அதற்கான பாதை முற்றிலும் தெளிவாக இருப்பதை உறுதி செய்வது தலைமை மார்ஷலின் பொறுப்பாகும், இதனை பாதையைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள மேற்பார்வையாளர்கள் உறுதிப்படுத்தி பச்சைக் கொடியை உயர்த்த வேண்டும்.
பார்வையாளர்கள் பாதையின் அருகில் நின்றுக்கொண்டிருந்தால் இதுதொடர்பில் தலைமை மார்ஷலுக்கு அறிவிப்பது மேற்பார்வையாளரின் பொறுப்பாகும். எனவே இத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் சம்பவ இடத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மேற்பார்வையாளரான 20 வயது இளைஞன் மோட்டார் பந்தய மேற்பார்வையாளராக செயற்படுவதற்கான பயிற்சி மற்றும் அனுபவத்தை முறையாக பெற்றிருந்தாரா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
விளையாட்டு சங்கத்தினர் இளம் மேற்பார்வையாளர்கள் குழுவை உருவாக்கும் நோக்கத்துடன், அந்த பதவிக்கு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது பாராட்டுக்குரிய விடயமாக இருந்தாலும் அதற்கான முறையான பயிற்சியைப் வழங்கியிருந்தால், ஆபத்தான வலயத்துக்குள் பார்வையாளர்கள் வருகையை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுத்திருந்திருப்பார் என்றும் கூறப்படுகின்றது.
மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகளில் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவில் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
அதுமட்டுமின்றி கவிழ்ந்த காரைப் பார்க்க பார்வையாளர்கள் வந்ததாகவும் சிலர் கவிழ்ந்த காரின் அருகிலிருந்து’செல்பி’ போட்டோ எடுத்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி எங்கும் புழுதி நிறைந்திருந்தமையால் இரண்டாவது விபத்து நடந்ததை யாரும் பார்க்கவில்லை. அதாவது கார்ப் பந்தய போட்டியில் கார் ஓன்று விபத்துக்குள்ளாகிவிட்டால் அதை மற்ற போட்டியாளர்களுக்கு தெரிவிப்பதற்காக மஞ்சள் கொடியை உயர்த்தி சமிக்ஞை வழங்குவர். அதன்பின்னர் எந்த போட்டியாளரும் வேகத்தை அதிகரித்து முந்திக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் இச்சம்பவத்தில் புழுதி அதிகமாகவிருந்தமையால் எவராலும் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லையெனக் கூறப்படுகின்றது. புழுதி நிறைந்திருந்தமையால் தான் பந்தய மேற்பார்வையாளர்களால் கூட தங்களை நோக்கி வரும் கார்களை கண்டுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
அதன்படி, புழுதி நிறைந்த சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, போதுமான தண்ணீர் கொண்டு பாதையை ஈரலிப்பாக்க ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. கார்ப் பந்தயப்போட்டிகளில் போட்டியாளர்கள் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
இதற்கு முன்னர் பெரோஸ் ஓமல், ரோஹித் டி சில்வா, ரிஸ்வி பாரூக், பசிந்து பீரிஸ், துமிந்த ஜயசிங்க போன்ற பல கார்ப் பந்தய போட்டியாளர்கள் இதே இடத்தில் விபத்துகளை சந்தித்துள்ளதாக தெரியவருகின்றது. இருப்பினும் பார்வையாளர்களுக்கு ஆபத்து விளைந்த முதலாவது சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி விபத்து நடந்த மலைப்பாங்கான இடத்தில் போட்டியாளர்கள் தங்கள் காரின் வேகத்தை அதிகரித்து சக போட்டியாளர்களை முந்திக் கொண்டு செல்வதற்கு முறையான பயிற்சிகளை பெற்றிருப்பது அவசியம். போட்டியாளர்களுக்கு கார்ப் பந்தயத்துக்கு முன்னர் இதுபோன்ற உரிய பயிற்சிகள் நடத்துவதில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இன்றைய இக்கட்டான பொருளாதார நெருக்கடி மிக்க சூழ்நிலையில் கார்ப் பந்தயம் போன்ற போட்டிகளை நடத்துவது சாதாரணமான விடயமல்ல. இரண்டு விளையாட்டுச் சங்கங்கள் இணைந்து இத்தகைய பாரிய பணியை மேற்கொண்டுள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சோகத்தில் முடிந்தது.
இந்த ஆண்டு நடந்த ஃபாக்ஸ்ஹில் போட்டியில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் வெளிநாட்டவர்களும் அடங்கும்.
ஆனால் இலங்கையின் கார்ப் பந்தய திடல்களில் தியத்தலாவ பகுதி 90% சதவீதம் பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் இப்போட்டிகளில் போட்டியாளர் ஒருவர் பங்கேற்க கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபா செலவாகுமாம். அதுமட்டுமின்றி இத்தகைய போட்டிகள் மூலம் தியத்தலாவ பகுதிகளில் அதிக வருமானம் கிடைக்கின்றது.
எனவே உரிய விதிமுறைகளை பின்பற்றினால் இத்தய விபத்துகளை தவிர்க்கலாம்.
கார்ப்பந்தயம் என்பது முற்றிலும் பாதுகாப்பாக இருக்காது. ஆனால் அதன் அபாயங்கள் அறியப்பட்டவையாக இருப்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவது அவசியமானது.
வசந்தா அருள்ரட்ணம்